|
|
|
ஆங்கிலமூலம்: சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.) தமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ. பிச்சை
ஜம்முவிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ள கத்ரா நகருக்கு அருகில் ஒரு குன்றின் உச்சியில் வைஷ்ணோ தேவி ஆலயம் அமைந்துள்ளது. பேருந்து, கார் ஆகியவற்றில் செல்லலாம். கண்ணைக் கவரும் காட்சிகள் நிறைந்த பள்ளத்தாக்கு, குன்றுகள் வழியே இரண்டு மணி நேரத்திற்குள் கத்ரா போய்ச் சேர்ந்து விடலாம். அங்குள்ள கடைத்தெருவில் பூஜைக்கு வேண்டிய பொருட்கள் கிடைக்கின்றன. மேலும் அங்கே கம்பளி ஆடைகள், கித்தான் செருப்பு, குடைகளும் கிடைக்கிறது. நிறைய ஹோட்டல்களும், விடுதிகளும் உள்ளன. கோவிலின் நிர்வாகக் குழுவும் உணவு விடுதிகளையும் விருந்தினர் இல்லங்களையும் நிர்வகித்து வருகிறது. பெரும்பாலான யாத்ரிகர்கள் மாட்டு வண்டியில் செல்கின்றனர். மூட்டை முடிச்சுகளையோ குழந்தைகளையோ தூக்கிச் செல்ல சுமை தூக்கிகளையோ அல்லது குதிரைகளையோ அமர்த்திக் கொள்ளலாம். வயோதிகர்களுக்காக டோலியும் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
நாங்கள் மாலை சுமார் 4.30 மணி அளவில் ஜம்முவிலிருந்து புறப்பட்டோம். கத்ரா சென்ற பிறகு விருந்தினர் இல்லத்தில் குளித்துவிட்டு கடைக்குச் சென்றோம். அங்கேயே வழிபாட்டுப் பொருட்களையும் வாங்க முடிந்தது. என் உறவினர்கள் சிலர் என்னுடன் வந்திருந்தனர். உறவினர் குழந்தையைத் தூக்கி வர ஒருவரை அமர்த்திக் கொண்டோம். அவரது பெயர் அன்வர். இருபது வயது முஸ்லீம் இளைஞர். ஒரு தடவைக்கு கூலி ரூ. 200 என்று சொன்னான். கிராமத்திலுள்ள அவரது குடும்பத்துக்கு இந்த வருமானம் உதவுகிறது. அவர் ஓட்டமும் நடையுமாக விரைவிலேயே மேலே சென்றுவிட்டார். எங்களுக்குத்தான் மேலே செல்வது மிகச் சிரமமாக இருந்தது.
| வைஷ்ணோ தேவி கோவிலுக்குப் பாதி தூரத்தில் அர்த்-க்வாரி கோவில் உள்ளது. அங்கு குகையின் பாறையில் உள்ள குறுகிய பிளவின் வழியாக பக்தர்கள் மார்பால் ஊர்ந்து செல்கிறார்கள். இது தாயின் கர்ப்பப்பை வழியாகச் செல்வதற்கு சமமானது. | |
காலஞ்சென்ற குல்ஷன் குமாரின் சங்கீதக் காசட் நிறுவனம் நாட்டின் முதல்தரமான ஒலி-ஒளி நாடா உற்பத்தி மையமாகும். தனக்கு இந்த வெற்றி தேவியின் அருளால் கிடைத்தது என்பதனால் யாத்ரீகர்களுக்கு 24 மணி நேரமும் இலவச உணவு வழங்க அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். உணவை முடித்துவிட்டு யாத்ரீகர்கள் கிளம்பும்போது அசல் நெய்யில் தயாரிக்கப்பட்ட சுவைமிக்க கோதுமை அல்வா வழங்கப்படுகிறது. அங்கு தேவியின் புகழ்பாடும் பக்திப் பாடல் ஒலி நாடாக்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன.
பாதை முழுக்கத் தளம் பாவப்பட்டுள்ளதால் நடக்க வசதியாக இருக்கிறது. இளைஞர்கள், ஓட்டமும் நடையுமாகப் படிக்கட்டு வழியே மேலேறிச் செல்கின்றனர். மற்றவர்கள் தளம் பாவிய பாதையில் செல்கின்றனர். பாதையில் எப்போதும் வெளிச்சம் இருப்பதாலும், குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருப்பதாலும் இரவில் நடந்து செல்வதை மக்கள் விரும்புகின்றனர். சாலை நெடுகிலும் சுத்தமான நவீன குளியலறை, கழிப்பறை, குடிநீர் வசதி, தொலைபேசி வசதி, மருத்துவ வசதி உள்ளது. அழகான ஹோட்டல்களிலிருந்து கீழே உள்ள பள்ளத்தாக்கின் அழகைக் கண்டு ரசிக்கலாம். மக்கள் பாண தீர்த்தம் என்ற பெயர் கொண்ட விரைந்தோடும் நதியில் குளிக்கிறார்கள்.
சிறிது தூரத்தில் 'மாஸ்டர்ஜி'யால் அமைக்கப்பட்டுள்ள கவர்ச்சிகரமான சிலைகள் நிறைந்த தோட்டம் உள்ளது. அவர் பக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருந்துகொண்டு பொழுதுபோக்காகச் சிலைகள் செய்வதையும் வர்ணம் தீட்டுவதையும் கைக்கொண்டுள்ளார். நாங்கள் மறுநாள் காலை அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்து கொண்டோம்.
சாலை நெடுகிலும் ‘சுற்றுச்சூழலுக்கு அபாயம் விளைவிக்காதீர்’ என்று கேட்டுக்கொள்ளும் பலகைகள் இருந்தன. கோவிலுக்குப் பாதி தூரத்தில் அர்த்-க்வாரி கோவில் உள்ளது. அங்கு குகையின் பாறையில் உள்ள குறுகிய பிளவின் வழியாக பக்தர்கள் மார்பால் ஊர்ந்து செல்கிறார்கள். இது தாயின் கர்ப்பப்பை வழியாகச் செல்வதற்கு சமமானது. |
|
அர்த்-க்வாரி மருத்துவமனை, ஹோட்டல்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட மையமான இடம். இங்குள்ள தர்மசாலைகளில் யாத்ரீகர்களுக்கு இலவசமாக அறைகளும் போர்வைகளும் கிடைக்கிறது. பெரியதோர் உணவகமும் உள்ளது. அது வைஷ்ணோ தேவி கோவிலின் நிர்வாக சபையினால் நடத்தப்படுகிறது. அர்த்-க்வாரியில் இருந்து தேவி ஆலயம் மேலும் ஆறு கி.மீ. தொலைவில் உள்ளது. வழியில் சிலர் மேளதாளத்துடன் பஜனைப் பாடல்கள் பாடுவதைக் காண முடிந்தது.
கோவிலுக்கு இப்பால் மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்து கோவில்வரை நாரிழைக் கண்ணாடிக்கூரை (Fibre glass) அமைக்கப்பட்டுள்ளது. அடிக்கடி பெய்யும் மழையின்போது யாத்ரிகர்கள் தங்க இது உதவுகிறது. நிலச்சரிவைத் தடுக்ககவும்தான்.
நாங்கள் விருந்தினர் இல்லம் சென்று அதிகாலை வரை தூங்கினோம். பின்னர் குளித்துவிட்டு ஆலயம் சென்றோம். கருவறைக்குச் செல்லும் பாதை சுலபமானதாக இல்லை. குகை வழியாகத் தண்ணீரில் ஊர்ந்து செல்ல வேண்டும். முதலில் மார்பாலும் பிறகு கால்களுடன் கைகளையும் ஊன்றி நகர்ந்து சென்றதுமே தேவியின் பாதத்தை அடைந்து விடுகிறோம். உண்மையில் சிலைகள் குறியீடுகள் மட்டும்தான். அவைகள் செதுக்கப்படாத மூன்று கல் துண்டுகள்தாம். ஒன்று கறுப்பு, ஒன்று வெள்ளை, ஒன்று சாம்பல் நிறம். கறுப்புக்கல் காளி மாதா, வெள்ளைக்கல் சரஸ்வதி தேவி, மூன்றாவது வைஷ்ணவி தேவி துர்க்கை உருவில். இவை சுயம்புவாக உண்டானவை. இவை நினைவுக்கெட்டாத பண்டைக் காலத்திலிருந்தே இருந்து வருகின்றன. சமீபகாலமாக இங்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகக் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரும் சோதனைக்கு உள்ளாகிறார்கள். தேங்காய்கள் உள்ளே கொண்டுபோக அனுமதி இல்லை.
| மாஸ்டர்ஜீயும் அவரது மாணவர்களும் பள்ளியின் சுவரெங்கும் பல வண்ணச் சித்திரங்களைத் தீட்டி இருந்தனர். புத்தர் வரலாறு உட்படப் பல விஷயங்களும் சித்திரங்களில் காட்டப்பட்டிருந்தன. | |
இங்கும் தென்னிந்தியாவில் சப்த கன்னிகைகள் வழிபாடுபோல கன்னிப் பெண்களை வழிபடும் பழக்கம் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. நாங்கள் இருபத்தியோரு பெண்களுக்குப் பரிசுகள் கொடுத்துவிட்டு காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு, திரும்ப கீழ்நோக்கிப் பதினான்கு கி.மீ. பயணம் புறப்படத் தயாரானோம். பகலானதால் இயற்கைக் காட்சியை ரசித்துக் கொண்டே நடந்தோம்.
வழியில் குஜராத்தி, தமிழ் யாத்ரிகர்களைச் சந்தித்தோம். ஒரு தோளில் குழந்தையுடனும் இன்னொரு தோளில் சுமைகளுடனும் சுறுசுறுப்பாகப் பெண்கள் நடந்துவரும் அதேவேளையில், ஆடவர்கள் பின்னால் கைகளை வீசிக் கொண்டு சுகமாக நடக்கிறார்கள். இந்தியாவின் பல பாகங்களில் பெண்கள் மட்டுமே பாரத்தைச் சுமப்பவர்களாகக் கருதப்படும் நிலை எப்போது மாறும் என்பது தெரியவில்லை.
அரசு மத்தியப் பள்ளி வழியாக வந்தபோது அங்கே சிற்பி 'மாஸ்டர்ஜி' இருப்பதை அறிந்தோம். அவரைச் சந்தித்தோம். மாஸ்டர்ஜீயும் அவரது மாணவர்களும் பள்ளியின் சுவரெங்கும் பல வண்ணச் சித்திரங்களைத் தீட்டி இருந்தனர். புத்தர் வரலாறு உட்படப் பல விஷயங்களும் சித்திரங்களில் காட்டப்பட்டிருந்தன. மாணவர்கள் செய்த சிற்பங்களையும், கைவினைப் பொருள்களையும் பார்த்தோம். ஓர் எளிய பள்ளி ஆசிரியர் இந்த ஏழைக் குழந்தைகளுக்கிடையில் மிக உயர்வான படைப்புத் திறமையை வளர்த்து வருவதைக் கண்டு நான் நெஞ்சம் நெகிழ்ந்தேன். மகாபலிபுரத்தில் நடைபெறும் எங்களது அடுத்த சிற்பிகள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் தமிழ்நாட்டில் எங்கள் விருந்தினராக வேண்டியும் மாஸ்டர்ஜிக்கு நான் அழைப்பு விடுத்தேன்.
அங்கிருந்து ஒரே நீண்ட நடையில் கீழே வந்து சேர்ந்தோம். பயணத்தைத் தொடர்ந்து மதியச் சாப்பாட்டு நேரத்திற்குப் போய்ச் சேர்ந்தோம்.
(தொடரும்)
ஆங்கிலமூலம்: சி.கே. கரியாலி (முன்னாள் ஐ.ஏ.எஸ்.) தமிழ் வடிவம்: திருவைகாவூர் கோ. பிச்சை |
|
|
|
|
|
|
|