|
|
|
நாம் தற்போது காண இருக்கும் சம்பவம் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. ஆனால் இங்கே நமது நோக்கம், இந்தச் சம்பவம் எப்படி நடந்ததென்று மூலநூல் குறிப்பிடுகிறது என்பதைக் காண்பதுதான். இப்போது அதைக் காண்போம்.
வியாச பாரதம் சொல்கிறது: விராட மன்னனின் தூதரான புரோகிதர் அஸ்தினாபுரத்துக்குச் சென்றதுமே மற்ற அரசர்களுக்குத் தூதர்களை அனுப்பினார்கள். தூதர்கள் சென்றதும், அர்ஜுனன், துவாரகைக்குத் தானே கிளம்பினான். அவன் துவாரகைக்குக் கிளம்பியதைப்பற்றி ஒற்றர்கள் மூலமாக அறிந்துகொண்ட துரியோதனன் கண்ண பெருமான் துவாரகைக்குத் திரும்பிவிட்டார் என்பதை அறிந்து, ஒரு குதிரைப் படையுடன் துவாரகா நகரத்தை அடைந்தான். அதே தினத்தில் அர்ஜுனனும் துவாரகையை அடைந்தான். அவர்கள் இருவரும் கண்ணனுடைய மாளிகையை அடைந்தபோது, பெருமான் தூங்கிக்கொண்டிருந்தார். அந்த அறைக்கு முதலில் வந்த துரியோதனன், அவருடைய தலைப்பக்கம் இருந்த ஆசனத்தில் அமர்ந்தான். அவனைத் தொடர்ந்து அந்த அறைக்குள் பிரவேசித்த அர்ஜுனன், அவருடைய காலருகே, கரம் கூப்பிக்கொண்டு நின்றான். கிருஷ்ணர் கண்விழித்ததும், கரங்கூப்பி நின்றிருந்த அர்ஜுனனை முதலில் பார்த்தார். 'என்ன அர்ஜுனா! இங்கு எதற்கு வந்திருக்கிறாய்?' என்று, அவனுக்குரிய மரியாதைகளைச் செய்துவிட்டு கேட்டார்.
பிறகு சற்றே திரும்பி, ஆசனத்தில் அமர்ந்திருந்த துரியோதனனைப் பார்த்தார். 'அடடே! நீயும் வந்திருக்கிறாயா? உங்களுக்கு நான் என்ன செய்யட்டும்' என்று கேட்டார். துரியோதனன் சிரித்தவாறே, 'மாதவரே! நாங்கள் இருவரும் உங்களிடம் சமமான அன்பு கொண்டவர்கள். நானும் உங்களுக்கு பந்து. அர்ஜுனனும் உங்களுக்கு பந்து. (கண்ண பெருமானுடைய மகனாகிய ஸாம்பன், துரியோதனனுடைய மகளைக் கவர்ந்து சென்று திருமணம் செய்துகொண்டதைக் குறிப்பிடுகிறான்). அர்ஜுனன் உங்களுக்கு அத்தை மகனென்றால், நான் உங்களுக்குச் சம்பந்தி. எனவே நீங்கள் எம் இருவரிடத்திலும் சமமான உரிமை உடையவர். தாங்கள் எனக்கு இந்த யுத்தத்ததில் உதவி செய்யவேண்டும்.' என்றான்.
'ஓஹோஹோ! யுத்தத்தில் உதவிகேட்டு வந்திருக்கிறாயா! இங்கே அர்ஜுனனும் வந்திருக்கிறான். அவனும் ஏதேனும் உதவி கேட்டுத்தான் வந்திருப்பான். நான் கண்விழித்ததும் முதலில் அவனைத்தான் பார்த்தேன். அவன் என்ன கேட்கப்போகிறான் என்று தெரியவில்லை. எனவே, முதலில் அவனிடம் கேட்டுவிட்டுப் பிறகு உன்னைக் கவனிக்கிறேன்' என்றார். துரியோதனன், 'நான்தான் முதலில் வந்தேன்' என்றான். கண்ணபெருமான் சிரித்துக்கொண்டு, 'நீ முதலில் வந்தவன். அர்ஜுனனோ முதலில் பார்க்கப்பட்டவன். எனவே அவனுடைய கோரிக்கையை முதலில் கவனிப்பதுதான் முறை. அவனே முதலில் பேசட்டும்' என்றார். பிறகு அர்ஜுனனை நோக்கி, 'ஓ பார்த்தா! உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். 'நான் போரில் ஆயுதம் எடுக்கமாட்டேன் பார்த்தா! உனக்கு, ஆயுதமெடுக்காத நான் வேண்டுமா அல்லது என் படைகள் வேண்டுமா என்று நன்கு ஆலோசித்துக் கேள்' என்றார்.
துரியோதனனுக்கோ இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. 'இவன் படைகளைக் கேட்டுவிடப் போகிறானே' என்று தவித்தான். அர்ஜுனனோ, 'ஆயுதம் எடுக்காவிட்டாலும், எனக்கு நீரே வேண்டும்' என்றான். துரியோதனனுக்கு நிம்மதி உண்டாயிற்று. கிருஷ்ணர் திரும்பி, துரியோதனனைப் பார்த்து, 'உனக்கு என்ன வேண்டும் துரியோதனா!' என்று கேட்டார். துரியோதனன் சாமர்த்தியசாலி ஆயிற்றே. அவன் கண்ணனுடைய படைகளைக் கேட்டான். பத்துலட்சம் வீரர்களைக் கொண்ட படையைக் கண்ணனிடமிருந்து பெற்றான். துரியோதனன், கண்ணனைத் தழுவிக்கொண்டு, அவரிடமிருந்து விடைபெற்றான். கண்ணனுடைய உறவினனான கிருதவர்மா, ஒரு அக்ஷௌஹினி சைனியத்தைத் துரியோதனனுக்கு அனுப்பி வைத்தான். துரியோதனன், மிகுந்த சந்தோஷத்தோடு, படைகளைப் பெற்றுக்கொண்டு, பெருமானிடமிருந்து விடைபெற்றான்.
பெருமான், பார்த்னைப் பார்த்து, 'நீ என்ன கேட்கிறாய்' என்றார். ஆயுதமெடுக்காத கண்ணனைக் கேட்டிருந்த அர்ஜுனன், பெருமானே! எனக்கு நீங்கள் தேரினை ஓட்டி உதவ வேண்டும்' என்றான்.கண்ணன் அதற்குச் சம்மதித்தான். போரில் தேரோட்டுவது என்றால் சாதாரணமில்லை. தேரோட்டியின் மீது இரண்டு கால்களையும் போட்டுக்கொள்ளவேண்டிய கட்டாயம் வில்லாளிக்கு இருந்தது. கண்ணன் புன்னகைத்தவாறே அனைத்துக்கும் சம்மதித்தான். (கண்ணன் 'ஆயுதமெடுக்கமாட்டேன்' என்று சொல்லியிருந்த போதிலும், யுத்தத்தில் சில சமயங்களில் அர்ஜுனனுக்காக ஆயுதமெடுத்தான்.)
இவை எல்லாம் நடந்துகொண்டிருந்தபோது, சல்லியன், பாண்டவர்களுக்கு உதவுவதற்காக, ஒரு அக்ஷௌஹினி சைனியத்துடன் வந்துகொண்டிருந்தான். சல்லியன், நகுல சகதேவர்களின் தாயான மாத்ரிக்கு அண்ணன். நகுல சகதேவர்களுக்கு மாமன் முறை. சல்லியன் சேனையோடு வந்து கொண்டிருப்பதை துரியோதனன், ஒற்றர்கள் மூலம் அறிந்தான். சல்லியனைத் தன்பக்கம் இழுக்க ஒரு திட்டம் தீட்டினான். சல்லியனை வரவேற்று உபசரிக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, 'யார் உபசரிக்கிறார்கள் என்பது சல்லியனுக்குத் தெரியாதவண்ணம் அவனை உபசரித்தான். இப்படித்தான் பதினேழாம் நாள் போரில் சல்லியன், கர்ணனுக்குத் தேரோட்டினான். இதில் பாண்டவர்களுக்கு ஒரு லாபமும் கிடைத்தது. 'கர்ணனுக்குத் தேரோட்டும்போது, அவனை அதைரியப்படுத்தும்படியாக நீங்கள் பேசவேண்டும்' என்று சல்லியனிடத்தில் யுதிஷ்டிரர் கேட்டுக்கொண்டார். யுதிஷ்டிரருக்கு வாக்களித்தபோதிலும் சல்லியனுக்கு அப்படியொரு சந்தப்பம் நேரவில்லை. மாறாக, கர்ணனை உற்சாகப்படுத்தியே பேசினான். வாய்க் கொழுப்பால் கண்டபடி பேசிய கர்ணன் தலையில் போடுவதற்கும் அவன் தவறவில்லை.
விவரங்களைப் போர் நிகழ்வின்போது பார்ப்போம்.
(தொடரும்) |
|
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|