|
|
|
அபிமன்யுவுக்கும் உத்தரகுமாரிக்கும் திருமணம் நடந்ததன் பிறகு, மணமக்களும் பாண்டவர்களும், விராட நாட்டைச் சேர்ந்த உபப்பிலாவியத்தில் ஒருவருடம், இரண்டு மாதம், 17 நாட்கள் தங்கியிருந்தார்கள் என்று டாக்டர் KNS பட்நாயக் சொல்வதைச் சுட்டியிருந்தோம். மகாபாரதத்தின் இந்த இடத்திலிருந்து உத்தியோக பர்வம் தொடங்குகிறது. இது
(1) ஸேனோத்யோக பர்வம் (2) சஞ்சயயான பர்வம் (3) பிரஜாகர பர்வம் (4) சனத்சுஜாத பர்வம் (5) யானசந்தி பர்வம் (6) பகவத்யான பர்வம் (7) சைன்ய நிர்யாண பர்வம் (8) உலூக தூதாகமன பர்வம் (9) ரதாதிரத சங்கியான பர்வம் (10) அம்போபாக்யான பர்வம்
என்று பத்துப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
தன் தம்பி விசித்திரவீர்யனுக்காக பீஷ்மர் காசிராஜனின் மகள்களான அம்பா, அம்பிகா, அம்பாலிகா ஆகிய மூவரையும் கவர்ந்துகொண்டு வந்ததும், அதன்பின் நடந்தவையும் மிகவிரிவாக இந்த இடத்தில் சொல்லப்படுகின்றன. இது ஒரு முக்கியமான பகுதி. சேனோத்யோக என்றால் ஆலோசனை என்று பொருள்.
படை திரட்டுவதில் யுதிஷ்டிரருக்கு ஆலோசனை வழங்கும் முகமாக அந்தச் சபையில் கண்ணபெருமான் பேசத் தொடங்கினார். 'யுதிஷ்டிரரின் நாடு, சகுனியின் துணையோடு வஞ்சகமாகக் கவரப்பட்டது. அதன் காரணமாக பாண்டவர்கள் பன்னிரண்டாண்டுகள் காட்டிலும் ஓராண்டு யாருக்கும் தெரியாமல் விராடதேசத்திலும் கழித்தார்கள். பூமி முழுவதையும் ஒரு நொடிப்போதில் வெல்லும் திறமைபெற்ற அவர்கள், சத்தியத்தின் காரணமாக இத்துன்பங்களை அனுபவித்தனர். எதையும் அவர்கள் அதர்ம வழியில் பெறுவதை விரும்பவில்லை. எனவே பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எது நன்மையைப் பயக்குமோ, அந்த வழியைச் சிந்தியுங்கள். திருதராஷ்டிரனின் புதல்வர்கள், சூதாட்டச் சமயத்தில் கொடுத்த நிபந்தனையின்படி, பாண்டவர்களுக்கு அவர்கள் தேசத்தைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் நடந்துகொள்ளாவிடில், யுத்தத்தில் தங்கள் உயிரை இழப்பார்கள். பாண்டவர்கள், எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் அவர்களை வென்றுவிடலாம் என்ற எண்ணம் கௌரவர்களுக்கு ஏற்பட வாய்ப்புண்டு. பாண்டவர்கள் தங்கள் நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு போரிடுவர். ஆயினும் இந்த விஷயத்தில் துரியோதனன் என்ன நினைக்கிறான் என்பது நமக்குத் தெரியாததால், அவன் இன்னதுதான் நினைக்கிறான் என்று நாமே ஒரு அனுமானத்துக்கு வரமுடியாது.
'தருமம் தெரிந்தவனும், திறமையுள்ளவனுமான ஒருவனைத் தூதாக அனுப்பி உண்மையைத் தெரிந்துவரச் சொல்லலாம். கௌரவர்களைச் சமாதானம் செய்து, பாண்டவர்களுடைய நாட்டை அவர்களிடத்தில் ஒப்படைக்குமாறு சொல்லச் செய்யலாம்' என்றார். கண்ணனைத் தொடர்ந்து அவருடைய அண்ணனான பலராமர் பேசினார். வனவாச சமயத்தில் பாண்டவர்களைச் சந்திக்கக் கிருஷ்ணரும் பலராமரும் வந்திருந்தபோது அவர் சொன்னதை மீண்டும் நினைவூட்டுகிறேன். (தீர்த்த யாத்திரையும் கந்தமாதனமும் என்ற தலைப்பில் ஃபிப்ரவரி 2020ல் எழுதியது. அதை இங்கே பார்க்கவும்) அதில், பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறோம். எப்போதும் துரியோதனன் பக்கமாகவே பேசுபவரான பலராமருக்கே அந்த நிலை பொறுக்கவில்லை. அவர் அழுதது மட்டுமல்லாமல், கண்ணனைப் பார்த்து, 'பாண்டவர்கள் இருக்கும் நிலையைப் பார்த்தால் எனக்கு தர்மத்தின் மீதுள்ள நம்பிக்கையே போய்விட்டது' என்று சொல்லி, 'தர்மத்தையே கடைப்பிடிக்கும் இவர்கள் இந்த நிலையில் இருக்கும்போது, துரியோதனன் அவ்வளவு செழிப்பாக இருப்பதை நினைத்து வருந்துகிறேன். இந்த பூமி இன்னமும் பிளந்து அவனை விழுங்காமல் இருக்கிறதே. ஒருபாவமும் அறியாதவர்களான பாண்டவர்களை இவ்வாறு துன்பப்படுத்துகிற திருதராஷ்டிரன், பாண்டவர்களைத் தன் மக்களைப்போல நடத்தியவனாக எவ்வாறு ஆவான்? பீஷ்மர், கிருபர், துரோணர் போன்றவர்களெல்லாம் என்ன செய்துவிட்டார்கள்!' என்றெல்லாம் மிக வருந்தினார்.
அன்று அப்படிப் பேசிய பலராமர், இன்று, தான் பேசியதை மறந்தார். 'சபையோர்களே! சூதாடும்போது அதில் ஏற்பட்ட ஆர்வத்தால் மனம் கெட்டுப்போன யுதிஷ்டிரன், இந்த நிலையைத் தானே தேடிக்கொண்டான். வீரர்களான பாண்டவர்கள் தங்கள் நாட்டைத் திரும்பப்பெற எண்ணம் கொண்டுள்ளனர் அவர்கள் தங்களுக்குரிய பாதி நாடு கிடைக்குமானால் அதில் அவர்கள் சந்தோஷமடைந்து திருப்தியுடன் வாழ்வார்கள். துரியோதியனாதியரும் மக்களும் மகிழ்வுடன் இருக்கலாம். அதனால், தருமன் எண்ணத்தைத் தெரிவிக்க ஒருவன் தூது போவானாகில், அது எனக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கும். அப்படிச் செல்பவன், பீஷ்மரையும் திருதராஷ்டிரரையும் துரோணரையும் அஸ்வத்தாமாவையும் விதுரரையும் கிருபரையும் கலந்தாலோசிக்க வேண்டும். துரியோதனனிடம் நல்ல வார்த்தை பேசி, நயமுடன் நாட்டைத் திரும்பப்பெற வேண்டும். என்னுடன் கோபம் கொள்ளக்கூடாது. யுதிஷ்டிரரின் நாடு கவர்ந்து கொள்ளப்பட்டது. எல்லா நண்பர்களும் தடுத்தும் சகுனியுடன் இவர் சூதாடியுள்ளார். சூதாட்டத்தில் வல்லவரான சகுனியுடன் இவர் சூதாடியது தவறு. திருதாஷ்டிரரை வணங்கியே நாட்டைத் திரும்பப் பெறவேண்டும். துரியோதனனை நல்ல வார்த்தைகளாலேயே சமாதானம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் போரில் பல விபரீதங்கள் விளையும்' என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஷினி வம்சத்தவனான சாத்யகியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவன் பலராமரைக் கண்டித்துப் பேசினான் இதில் என்ன ஆச்சரியம் என்றால், சூதாட்டத்தில் தோற்பவர் பன்னிரண்டாண்டுகள் காட்டுக்குப் போகவேண்டும். ஓராண்டு யாருக்கும் தெரியாமல் மறைவாக வாழவேண்டும். அப்படி வெற்றிகரமாக இந்த நிபந்தனையை நிறைவேற்றினால்,தோற்றவர் 'நாட்டை', இந்த நிபந்தனையில் வெல்பவருக்குத் திரும்ப அளிக்கவேண்டும் என்பதுதான் பந்தயம். பலராமர் ஏனோ இப்போது 'பாதி ராஜ்ஜியம்' என்கிறார். சூதாட்ட சமயத்தில் இவரோ கிருஷ்ணனோ சபையில் இல்லை என்பதுதான் உண்மை. இவருக்குத் துரியோதனன்பால் இருந்த ஈடுபாட்டால் இவ்வாறு பேசுகிறார் என்பது வெளிப்படை. இதைத்தான் சாத்யகி கண்டித்தான்.
'எண்ணிறந்த வீரர்கள், பாண்டவர்கள் பக்கத்திலும் உண்டு. அவர்களைக் கொண்டு நாம் போரிடுவோம் துரியோதனன் நாட்டைத் தரமாட்டான். துரியோதனன், தூதர்களை அனுப்பிப் படை திரட்டுவான். நாம் அவனுக்கு முன்னதாக படைகளைத் திரட்டவேண்டும்' என்றான். சல்லியன், பகதத்தன், கிருதவர்மன், அந்தகன் போன்றோருக்குத் தூதர்களை அனுப்பவேண்டும்' என்றான்.
கடைசியில், துருபதனுடைய புரோகிதரைத் தூதனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. துருபதனும் அவரைத் தூதராக அனுப்பினான்.
இதற்கு அடுத்ததாக, அர்ஜுனன், கண்ணபெருமானைத் தன் சாரதியாகப் பெறுகிறான். நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான அந்தச் சம்பவத்தை அடுத்த இதழில் காண்போம்.
(தொடரும்) |
|
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|