போர்க்களத்தில் நுழைவதற்கு முன்பாக அர்ஜுனன், தன்னுடைய ஆயுதங்கள் இருந்த இடத்திலிருந்து அனுமக்கொடியைத் தேரில் பறக்கவிட்டவாறுதான் களத்துக்கு வந்தான். போரைத் தொடங்குவதற்கு முன்னால் தேரிலிருந்து குதித்தான். தேவர்களுக்கு வணக்கம் செலுத்தினான். காண்டீபத்தை எடுத்துக்கொண்டான். கையுறைகளை மாட்டிக்கொண்டான். இந்திரன் கொடுத்த குண்டலங்களை அணிந்துகொண்டான். பேடிக் கோலத்தில் இருக்கும் தன்னுடைய நீண்ட முடியை வெண்மையான துணியால் தூக்கிக் கட்டிக்கொண்டான். கிழக்குமுகமாக நின்று அஸ்திரங்களை வணங்கினான். அந்த அஸ்திரங்கள் 'அர்ஜுனா! நாங்கள் உனக்குப் பணியாற்றுவதற்காகக் காத்திருக்கிறோம்' என்றன. அந்த அஸ்திரங்களை எடுத்துக் கொண்டான்.
காண்டீபத்தின் நாண் கயிற்றை இழுத்துப் பேரொலி எழுப்பினான். அந்த ஓசையைக் கேட்ட கௌரவர்கள் நடுக்கம் அடைந்தனர். அச்சமடைந்த உத்தரன், 'பாண்டவரே! நீங்கள் தனியாக இருக்கின்றீர்கள். அவர்களோ, பெரும் படையோடு இருக்கிறார்கள். அச்சம் கொண்ட நான் உங்களுக்கு எந்தவகையிலும் பயன்படமாட்டேன்' என்று சொன்னான். அர்ஜுனன் அவனை ஊக்கப்படுத்தும் வார்த்தைளைச் சொன்னான். உத்தரன் தேரை ஓட்டினான். அர்ஜுனன் தன்னுடைய தேவதத்தம் என்ற சங்கத்தை ஊதினான். அந்த ஒலியைக் கேட்டு குதிரைகள் நடுங்கின. (இவை உத்தரனின் தேர்க் குதிரைகள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.) தேவதத்தத்தின் பேரொலியைக் கேட்டு உத்தரன் கதிகலங்கிப்போய் தேர்த்தட்டில் உட்கார்ந்துவிட்டான். மூர்ச்சையடைந்தான். சற்றும் பதறாத அர்ஜுனன் கடிவாளங்களை இழுத்துப் பிடித்துத் தேரை அங்கேயே நிறுத்தினான். உத்தரனைத் தழுவியெடுத்து அவன் மூர்ச்சையைத் தெளிவித்து அவனைத் தேற்றினான். 'உத்தரா! இரண்டு கால்களையும் தேர்த்தட்டில் அழுத்திக்கொள். கடிவாளத்தை உறுதியாகப் பிடி. நான் மறுபடியும் சங்கநாதம் செய்யப் போகிறேன்' என்றான்.
துரோணர், துரியோதனனைப் பார்த்து, 'துரியோதனா! தேரின் பேரொலி கேட்கிறது. சங்கம் ஊதப்படுகிறது. பூமி நடுங்குகிறது. இது அர்ஜுனன் வருவதற்கு அறிகுறி' என்றார். அவரை வணங்கிய துரியோதனன், 'பெரியோர்களே! நானும் கர்ணனும் பலமுறை சொன்னதுதான். பேச்சுப்படி அவர்கள் பன்னிரண்டாண்டுகள் காட்டிலும், ஓராண்டு தலைமறைவாகவும் வசிக்க வேண்டும். அதற்கு முன்னால் அர்ஜுனன் பார்க்கப்படுவானேயாகில், அவர்கள் மீண்டும் காட்டுக்குப் போக வேண்டியதுதான்' என்றான். அவனுடைய சொற்களைத் தொடர்ந்த கர்ணன், 'எல்லோரும் பயப்படுகிறீர்கள். வருவது இந்திரனாக இருந்தாலும், பரசுராமராகவே இருந்தாலும், நான் ஒருவனாகவே எதிர்கொள்வேன்' என்றான்.
துரோணர் பயப்படுகிறார் என்ற வார்த்தைகளைக் கேட்ட கிருபர், கர்ணனைக் கண்டித்தார். 'அர்ஜுனனைக் குறைத்து மதிப்பிடாதே. அவனைத் தனியாக எதிர்கொள்வது, உன்னால் முடியாத ஒன்று. நாம் அனைவரும் சேர்ந்து அவனை எதிர்ப்போம்' என்றார். இதைக் கேட்ட கர்ணனுக்குக் கோபம் வந்தது. 'ஆசாரியர் பயத்தினால் அர்ஜுனனிடம் அன்பு பாராட்டுகிறார்' என்றான். 'பாண்டவர்கள் தர்ம சாஸ்திரங்களை அறிந்தவர்கள். சூதினால் நாட்டைப் பிடுங்கிக் கொள்ளலாம்' என்று எந்த தர்ம சாஸ்திரம் சொல்கிறது?' என்று கோபப்பட்டார். 'நாம் இன்னும் பசுக் கூட்டங்களையே மீட்கவில்லை என்பது நினைவிருக்கட்டும்' என்று கர்ணனுக்குச் சொன்னார் கிருபர். கேட்டுக்கொண்டிருந்த அஸ்வத்தாமனுக்குக் கோபம் வந்தது. பின்னால், குருக்ஷேத்திரப் போரின்போது 'நாக்கை அறுப்பேன்' என்று கண்டிக்கப் போகிறான் அஸ்வத்தாமன். துரியோதனன், கூப்பிய கைகளுடன் அனைவரையும் சமாதானப்படுத்தினான். கர்ணன் சொன்னதைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்' என்று கேட்டுக்கொண்டன். கர்ணன் சார்பில் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.
துரோணர், பீஷ்மருடைய வார்த்தைகளால் சமாதானமடைந்தார். 'பீஷ்மரே! காலச் செலவைப் பற்றி உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டார். 'காலகதியின் கணக்கைப் பார்த்தால், பதின்மூன்று ஆண்டுகளுக்குச் சில மாதங்களுக்கு மேல் கழிந்துவிட்டன. அதனால்தான் அர்ஜுனன் இப்போது வந்திருக்க வேண்டும்' என்றார் பீஷ்மர். 'பிதாமகரே! நான் ஏற்கெனவே சொன்னதுதான். நான் அவர்களுக்கு நாட்டையோ, கிராமத்தையோ, பணியாட்களையோ, சேனையையோ, சிறிது பொருளையோ, எதையும் கொடுக்க மாட்டேன். எனவே, போருக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்' என்றான். இதைக் கேட்ட துரோணர் பேசினார். 'துரியோதனா! எப்போதும் உன்னுடைய நன்மையை நாடுபவன் நான். நாம் இன்னமும் பசுக் கூட்டங்ளை மீட்கவில்லை. எனவே, நாலில் ஒரு பங்கு படையை அழைத்துகொண்டு நீ பசுக் கூட்டங்களை ஓட்டிக்கொண்டு செல். நானும், பீஷ்மரும், கிருபரும், அஸ்வத்தாமனும், கர்ணனும் பாதிப் படைகளுடன் அர்ஜுனனை எதிர்கொள்கிறோம்' என்றார். துரோணரின் இந்தச் சொற்களை அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். நாலில் ஒரு பங்கு சேனையுடன் துரியோதனன் பசுக் கூட்டங்களை ஓட்டிச் சென்றான் மீதம் உள்ளவர்கள் போருக்குத் தயாரானார்கள்.
அப்போது பீஷ்மர், துரோணரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார். 'ஆசாரியாரே! நீர் மத்தியில் நில்லும். அஸ்வத்தாமா இடது பக்கத்தில் நிற்கட்டும். கிருபர் வலது பக்கத்தைப் பாதுகாக்கட்டும். துர்முகன், துச்சாதனன், சகுனி போன்றோர் துரோணரைப் பாதுகாக்கட்டும். கர்ணன் படையின் முன்வரிசையில் நிற்கட்டும். நான், முழுவதையும் பாதுகாத்துக்கொண்டு பின்புறம் நிற்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்துகொண்டு அர்ஜுனனை எதிர்த்துக் கடுமையாகப் போர் புரிவோம்' என்றார்.
அதன்பின்னர் பீஷ்மர் எதிரிகளால் உடைக்க முடியாதபடி வஜ்ரகர்ப்பம், விரீகிமுகம், பத்மம், சந்திரார்த்த மண்டலம் என்ற வியூகங்களை ஏற்படுத்தினார். படைவகுப்பின் பின்புறத்தில் ஆயுதங்களுடன் தேரில் நின்றுகொண்டார். அவர் தேரில் பனைமரக்கொடி பறந்தது.
போர் தொடங்கப் போகிறது என்றதும் இந்திரன் முதலான தேவர்கள் வானில் வந்து குழுமினர். ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், அஸ்வினி தேவர்கள் போன்றோர் அங்குவந்து சேர்ந்தனர். கௌரவர் படைகள் அணிவகுத்து நின்றபோது, அர்ஜுனன் விரைவாக அங்கே வந்தான். கௌரவ சேனை, அர்ஜுனனின் அனுமக் கொடியைக் கண்டது. காண்டீபத்தின் நாணோசையைக் கேட்டது. ஒலிப்பது தேவதத்தம் என்ற அர்ஜுனனுடை சங்கம்தான் என்று தெரிந்துகொண்டார்கள். வந்திருப்பவன் அர்ஜுனன்தான் என்பதை உணர்ந்துகொண்டார்கள்.
அர்ஜுனன், கௌரவப் படையை நோட்டம் விட்டான். துரியோதனனைக் காணவில்லை என்பதை உணர்ந்தான். 'உத்தரா! இங்கே துரியோதனனைக் காணவில்லை. அவன் தன்னைக் காத்துக்கொள்ளும் பொருட்டு ஓடிவிட்டிருப்பான். அனேகமாகத் தென்புறம்தான் சென்றிருக்கவேண்டும். தேரை அந்தப் பக்கமாகத் திருப்பு. அவனை வென்று பசுக் கூட்டங்களை மீட்போம்' என்றான். தேரை, முதலில் கௌரவர் படை நிற்கும் பக்கத்துக்கு ஓட்டச் செய்தான். இரண்டிரண்டு பாணங்களை விட்டு துரோணரையும், பீஷ்மரையும், கிருபரையும் வணங்கினான். இப்படிச் செய்வதை, 'நமஸ்கார பாணம்' என்பார்கள். இதைக் கண்ட துரோணர், 'வந்திருப்பவன் அர்ஜுனன்தான். அவனை எதிர்த்து ஒருவராலும் போர்புரிய முடியாது. எதிர்ப்பவர் உயிரிழப்பர். இந்தச் சேனை முழுவதையும் அவனே அழித்துவிடுவான்.' என்றார். நெய்யால் கொழுந்துவிட்டெரியும் அக்கினியைப் போல அர்ஜுனன் விளங்கினான். அவன் தோற்றத்தைக் கண்ட கௌரவ சேனை நடுங்கியது.
உத்தரனை நோக்கி அர்ஜுனன், 'உத்தரா! இங்கே துரியோதனனைக் காணவில்லை. அவனைக் கண்டால், சிங்கம், சிறிய விலங்கைக் கொல்வதைப் போல அவன்மீது பாய்ந்து, கொன்றுவிடுவேன். ஆசாரியர், அஸ்வத்தாமன், கிருபர், கர்ணன், பீஷ்மர் போன்றோர் மட்டும் தென்படுகின்றனர். துரியோதனனை மட்டும் காணவில்லை. அவன் இருக்கும் இடத்தை நோக்கித் தேரைச் செலுத்து' என்றான். அர்ஜுனனுடைய உத்தரவை ஏற்ற உத்தரகுமாரன், பசுக் கூட்டங்கள் போகும் திசையில் தேரைச் செலுத்தினான்.
பீஷ்மருக்கு அர்ஜுனனுடைய நோக்கம் புரிந்தது. 'வீரர்களே! நீண்ட காலத்துக்குப் பிறகு அர்ஜுனனைக் காண்கிறேன். அவன் துரியோதனன் செய்த வஞ்சனைகளை எண்ணிக்கொண்டிருப்பதாய் ஊகிக்கிறேன். அவனைத்தான் இவன் தேடிக்கொண்டிருக்கிறான். அவனைக் கண்டுவிட்டால், கொல்லாமல் விடமாட்டான். எனவே, விரைந்துபோகிற அர்ஜுனனை நாம் பின்தொடர வேண்டும். கோபம்கொண்ட அர்ஜுனனுக்கு முன்னால் மகாதேவரும் நிற்க முடியாது. துரியோதனன் அகப்பட்டுக்கொண்டால், உயிரை இழந்துவிடுவான்' என்றார். இப்படிச் சொன்ன பீஷ்மர், சேனையுடன் அர்ஜுனனைப் பின்தொடர்ந்தார்.
(தொடரும்) |