Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பொது | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | ஹரிமொழி
Tamil Unicode / English Search
ஹரிமொழி
தோற்றுக் களத்தை விட்டோடிய கர்ணன்
- ஹரி கிருஷ்ணன்|மே 2022|
Share:
உத்தரகுமாரன் ஓட்டிய அர்ஜுனனது தேர் மூன்று குரோச தூரம் சென்றது. ஒரு குரோசம் என்பது இரண்டு மைல் தொலைவு என்று முன்னர் குறித்திருக்கிறோம். அதாவது உத்தரகுமாரன் ஓட்டிய தேர் ஆறு மைல் சென்றதும், அர்ஜுனன் உத்தர குமாரனைப் பார்த்து, 'உத்தரா! தேரை கௌரவசேனைக்கு ஓர் அம்பு விழும் தொலைவில் நிறுத்து' என்று கட்டளையிட்டான். அதன்பிறகு, கூர்மையும், கொடுமையும் உள்ள அம்புகளைத் தேர்ந்தெடுத்து கௌரவ சேனையின் மீது இறைத்தான். விட்டில்பூச்சிகள் நிறைந்த ஆகாயத்தைப் போலவும், புகையால் சூழப்பட்ட பூமி போலவும் போர்க்களம் காட்சியளித்தது. அர்ஜுனன் மேலும் மேலும் மகிழ்ச்சியடைந்து கௌரவ சேனையைத் துன்புறுத்தினான். அவனுடைய பேராற்றலைக் கண்ட கௌரவ சேனை வியப்படைந்தது. அர்ஜுனன் கௌரவ சேனையின்மீது தொடுக்கும் முதல் போர் இது என்பதும், இந்தச் சேனைக்கு பீஷ்மர் தலைமை தாங்கிக்கொண்டிருக்கிறார் என்பதும் நினைவிருக்கும். அர்ஜுனன் மகிழ்ச்சியடைந்து தன்னுடைய தேவதத்தம் என்ற சங்கத்தை எடுத்து ஊதினான். பசுக்கூட்டங்கள் அவ்வொலியைக் கேட்டுக் கலங்கின. கன்றுகளுடன், வாலை உயர்த்திக்கொண்டு தெற்கு நோக்கித் திரும்பின. அர்ஜுனன் அங்கிருந்த இடையர்களைப் பார்த்து, 'இனி பசுக்கூட்டங்களை ஓட்டிக்கொண்டு நகரத்துக்குச் செல்லுங்கள்' என்று உத்தரவிட்டான்.

பார்த்தன், தனது பாணங்களால் தொடர்ந்து கௌரவ சேனையை அடித்தவாறு இருந்தான். அவனை எதிர்க்கும் திறனின்றிப் பகைவர்கள் கலங்கினர். பகைவர் படையை வில்லினான் விலக்கிவிட்டு, இடையர்கள் பசுக்கூட்டங்களை ஓட்டிக்கொண்டு நகரத்தை நோக்கிச் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தான். அவர்கள் மந்தைகளை ஓட்டிக்கொண்டு, விராட நகரத்தை அடைந்தனர். அர்ஜுனன் மீண்டும் துரியோதனன் இருக்கும் இடத்துக்குத் தேரைச் செலுத்துமாறு உத்தரனுக்குச் சொன்னான். இதைக் கேட்ட கௌரவ சேனை, நான்கு புறங்களிலும் அர்ஜுனனையும் அவனுடன் வந்திருக்கும் விராட தேசத்து சேனையையும் சுற்றி வளைத்துக் கொண்டது. இதைக் கண்ட கர்ணன் ஆயிரம் படைவீரர்களுடன் அர்ஜுனனை எதிர்த்தான். பீஷ்மர், ஆயிரம் ரதிகர்களுடன் தாக்கினார். துரியோதனன், தன் தம்பிகள் புடைசூழ அர்ஜுனனைத் தாக்கினான். கர்ணன், துரியோதனன், பீஷ்மர் ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் அர்ஜுனனைத் தாக்கினர். அவர்களை ஒருசேரப் பார்த்த அர்ஜுனனுக்கு உற்சாகம் கரைபுரண்டது. உத்தரனிடம், 'அதோபார்! பொன் யாகவேதிக் கொடியுள்ள தேரில் இருப்பவர் துரோணர். அவர் சிறந்த அறிவுள்ளவர். வேதங்களை அறிந்தவர். என்மீது மிகுந்த அன்புடையவர். இவரை வலம் வந்து வணங்கு' என்றான். உத்தரன் அப்படியே செய்தான்.

துரோணர் அர்ஜுனனுக்கு பிரமசிரஸாஸ்திரப் பயிற்சி கொடுத்தபோது, 'பின்னால் எப்போதேனும் நான் உன்னுடன் போர் புரிய நேர்ந்தால், நீ என்னை எதிர்த்துத் தாக்கவேண்டும். இதை உன்னிடம் குருதட்சிணையாகக் கேட்கிறேன்' என்று சொல்லியிருந்தார். அதை நினைத்துககொண்ட அர்ஜுனன், உத்தரகுமாரனிடத்தில், 'அவர் என்மீது அம்புபோட்டுப் போரைத் தொடங்குவாரானால், நான் திருப்பித் தாக்குவேன். நான் போரிடும்போது, தேரை மெதுவாக நடத்து' என்று கூறினான். தேரிலிருந்தவண்ணம் அர்ஜுனன் கௌரவசேனையைச் சேர்ந்தவர்களை உத்தரனுக்கு அறிமுகப்படுத்தினான். 'அங்கே சிங்கத்தின் வாலை உடைய கொடி பறக்கும் தேரில் இருப்பவர் அஸ்வத்தாமர். இவர் துரோணரின் புதல்வர். நான் இவருடன் போரிடும்போது தேரை மெதுவாகவே ஓட்டு' என்றான். 'காளைக்கொடி பறக்கும் தேரில் இருப்பவர் என்னுடைய முதன்மையான ஆசார்யர்களுள் ஒருவரான கிருபர். துரோணரின் மைத்துனர். என் தந்தையின் நண்பர். இவருடன் போரிடும் போது, தேரை மெதுவாகச் செலுத்து' என்றான். 'யானையைக் கட்டும் சங்கிலியைக் கொடியாக உடையவன் கர்ணன். இவன் சிறந்த வில்லாளி. கடுமையாகப் பேசுபவன். பரசுராமருடைய சீடன். அஸ்திரப் பயிற்சியில் வல்லவன். இப்போது இவனை எதிர்க்கப் போகிறேன். புலிக்கும் இந்திரனுக்கும் போர் நடந்ததுபோல நாங்கள் போரிடப் போகிறோம். இவனுடன் நான் போர்புரியும்போது, தேரை விரைவாகச் செலுத்து' என்றான்.

'அதோ, அரவக்கொடி பறக்கும் தேரில் இருப்பவன் துரியோதனன். சிறந்த வீரன். தான் கொண்ட கொள்கையை விடாதவன் இவனுடன் போர்புரியும்போது தேரை விரைவாக ஓட்டு'. 'இதோ பனைமரக்கொடி பறக்கும் தேரில் இருப்பவர் பீஷ்மர். கௌரவர்களுக்கும் எனக்கும் பிதாமகர். ஆயுதம் பிடித்தவர்களில் சிறந்தவர். தன் குருவான பரசுராமருடன் போரிட்டும் தோல்வி காணாதவர். துரியோதனனை அனுசரித்து வாழ்பவர். இருப்பினும், எனக்கு எந்த இடையூறையும் ஏற்படுத்தமாட்டார்' என்று இவ்வாறு அங்கே இருந்த வீரர்கள் அனைவரைப் பற்றியும் உத்தரனுக்குச் சொன்னான்

அர்ஜுனன். போருக்குத் தயாரானான். அப்போது அஸ்வத்தாமர் கர்ணனைப் பார்த்து, 'கர்ணா! போர் செய்வதில் உனக்கு ஒப்பானவன் எவனுமில்லை என்று சபையில் அடிக்கடி சொல்லி வந்தாயே. இதோபார் அதற்குரிய நேரம் வந்துவிட்டது. அர்ஜுனன் அங்கே கோபத்துடன், யமனைப் போல நிற்கிறான். நீ சூரனாய் இருந்தால அவனுடன் போர்புரிந்து உன்னுடைய திறமையைக் காட்டு. முடியாவிட்டால் துரியோதனனுடன் மீண்டும் சபைக்கு ஓடிப்போய் அவனுடன் ஆலோசனை நடத்து' என்றார். அஸ்வத்தாமரின் இந்த வார்த்தை கர்ணனுக்குப் பெருங்கோபத்தை உண்டாக்கியது. கோபத்துடன் அஸ்வத்தாமாவைப் பார்த்து, 'நான் அர்ஜுனனுக்கோ, கிருஷ்ணனுக்கோ மற்ற பாண்டவர்களுக்கா அஞ்சுபவன் அல்லன். க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்பவன். நான் அர்ஜுனனை எதிர்த்துப் போர் புரிவதை இனி காணலாம்' என்றான். இவ்வளவு பேசினாலும். வழக்கம்போல் அன்றைய போரிலும் தோற்று, முதலில் களத்தைவிட்டு ஓடியவன் கர்ணன்தான்.

அர்ஜுனன் கர்ணனை எதிர்த்துப் போரிடத் தொடங்கினான். அப்போது துரியோதனன் கர்ணனிடம் வந்து, 'கர்ணா! மச்ச நாட்டு அரண்மணையில் பாண்டவர்கள் வாழ்ந்தது நமக்குத் தெரியாமல் போய்விட்டது. சந்தேகப்பட்டு, விராடநாட்டுப் பசுக்கூட்டங்களைக் கவர்ந்தோம். இப்போது அவையும் பறிபோயின. இனி, போரைத் தவிர வேறு வழியில்லை. அர்ஜுனனோடு போரிடுவோம். திரும்பவேண்டாம்' என்று கூறினான். இவன் இவ்வாறு சொன்னபோதிலும் இந்தப் போரிலும் கர்ணன் தோற்றுக் களத்தைவிட்டே ஓடப் போகிறான் என்பதை துரியோதனன் அப்போது அறிந்திருக்கவில்லை.

துரியாதனனுடைய கட்டளையின் பேரில், பதினாயிரம் வில்லாளிகள் அர்ஜுனனை எதிர்க்கச் சென்றனர். நால்வகைப் படைகளும் அவனை நோக்கிப் பாய்ந்தன. பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன், அஸ்வத்தாமா ஆகிய ஐவரும் அர்ஜுனனை சூழ்ந்துகொண்டு போரிடத் தொடங்கினர். அவன்மீது அம்புகளை மழையாகப் பொழிந்து தாக்கினர். இவர்களுக்குச் சற்றும் அஞ்சாத அர்ஜுனன் சிங்கநாதம் செய்துகொண்டு அவர்களை எதிர்க்கத் தொடங்கினான். சூரியனின் கிரணங்களை பூமி மறைப்பதுபோல,, ஆகாயத்தைத் தன் அம்புகளால் மறைத்தான். கொடி, காண்டீபம் இவற்றில் திவ்யமான மாய சக்தியின் காரணமாக அர்ஜுனன் மீது ஓர் அம்புகூட படவில்லை இரதம் சிரமமின்றி எங்கும் சஞ்சரித்து, திசைகளைத் தன் அம்புகளால் மூடியதைக் கண்ட கௌரவ சேனை பயந்தது. அவர்கள் தங்கள் தேரைத் திருப்பிக்கொண்டு ஓடத் தொடங்கினர்.

அந்தப் படைகளுக்கு நடுவில் புகுந்தான் அர்ஜுனன். ஏற்கெனவே கலங்கிப் போயிருந்த வீரர்களைத் தன் வில்லாற்றலால் மேலும் கலங்கடித்தான். துரோணர் மீது எழுபத்து மூன்று பாணங்களை எய்தான். சகுனியை எண்பது பாணங்களால் துளைத்தான். அஸ்வத்தாமாவை ஏழு பாணங்களால் தாக்கினான். துச்சாதனன் மீது பன்னிரண்டு அம்புகளை எய்தான். கிருபரை மூன்று பாணங்களால் அடித்தான். பீஷ்மர் மீது அறுபது பாணங்களைச் செலுத்தினான்.

தன்னுடைய நேரடிப் பகைவனான கர்ணனை, கூர்மையான 'கர்ணி' என்ற பாணத்தால் அடித்தான். அது, கர்ணனைத் தாக்கிவிட்டு, பூமியையும் பிளந்துகொண்டு சென்றது கர்ணனுடை தேரில் கட்டப்பட்ட நான்கு குதிரைகளையும் தேர்ச் சாரதியையும் கொன்றான். கர்ணன் தோல்வியடைந்து ரத்தத்துடன் நின்றபோது, அவனுடைய படையும் படுதோல்வி அடைந்து ஓடியது. இவ்வாறு அர்ஜுனனால் வெற்றிகொள்ளப்பட்ட அந்தப் படை சிதறியோடி பீஷ்மரைச் சரண்புகுந்தது. பீஷ்மர் அந்தப் படைக்கு ஆறுதல் கூறித் தேற்றி, படையை மீண்டும் ஒழுங்குபடுத்தி நிற்கச் செய்தார். படை மீண்டும் அணிவகுத்தபோது கர்ணன், கிருபர் போன்றோர் மீண்டும் படை திரட்டிக்கொண்டு அர்ஜுனனைத் தாக்கினர்.

அர்ஜுனன் உத்தரனைப் பார்த்து, 'உத்தரா! நீ கடிவாளத்தை இழுத்துப் பிடித்துத் தேரைச் செலுத்து. கர்ணன் எப்போதும் என்மீது போர்புரியும் எண்ணம் கொண்டவனாய்க் காணப்படுகிறான். இவனை நம்பிக்கொண்டிருக்கும் துரியோதனன் இவனுக்கு நெருங்கிய நண்பனனாதலால் இறுமாப்படைந்துள்ளான். தேரை அவர்களை நெருங்கி ஓட்டு. இந்திரன் விருத்தாசுரனைக் கொன்றதைப் போல நான் இவர்களைக் கொல்கிறேன்' என்றான். உத்தரன் உடனே தேரைக் கர்ணனை நோக்கித் திருப்பினான். போர் வீரர்கள் கர்ணனைச் சுற்றிப் பாதுகாப்பாக நின்றனர். அர்ஜுனன் கர்ணனை எதிர்த்துப் போர்புரியப் போகிறான் என்பதை துரியோதனன் தெரிந்துகொண்டான். உடனே, கர்ணனுக்குத் துணைபுரிய அவனுக்குப் பக்கத்தில் வந்து நின்றான். அவர்களுக்குத் துணையாக மற்ற கௌரவ வீரர்களும் வந்து நின்றனர்.

அப்போது 'சத்ருபந்தன்' என்பவன் 'கூர்மநகம்' என்ற பாணத்தால் அர்ஜுனனைத் தாக்கினான். அர்ஜுனன் அவனுடைய தேர்ப்பாகனை முதலில் கொன்றுவிட்டு, அவனை ஐந்து பாணங்களால் அடித்தான். காற்றினால் தாக்கப்பட்ட மரத்தைப் போல சத்ருபந்தன் கீழே விழுந்தான். கர்ணனுக்குச் சகோதரன் போன்ற உறவுமுறை கொண்ட சங்க்ராமஜித்தை அர்ஜுனன் கொன்றான். அதன் பின்னர் அர்ஜுனனை எதிர்க்க முடியாமல் கௌரவப் படை சிதறியோடியது, இதைக் கண்டு கோபங்கொண்ட கர்ணன் அர்ஜுனனை எதிர்த்தான். இருவருக்கும் நேரடிப் போர் தொடங்கியது. கர்ணன், அர்ஜுனனைப் பன்னிரண்டு பாணங்களால் அடித்தான். அவனுடைய சாரதியான உத்தரகுமாரனையும் அடித்தான். இவற்றையெல்லாம் அர்ஜுனன் தன்னுடைய எதிர் அம்புகளால் தடுத்தான்.

பின்னர், கர்ணனைக் கோபத்துடன் பார்த்து, அவன் தேரை பாணங்களால் மூடினான். அவற்றைக் கர்ணன் சிரமப்பட்டு தன்னுடைய பாணங்களால் விலக்கினான். அர்ஜுனன் கர்ணனைப் பார்த்து, 'கர்ணா! நீ சபையில் அடிக்கடி தற்புகழ்ச்சி செய்துகொள்வாயே. இப்போது உன் சகோதரனுக்கு இணையான சங்க்ராமஜித்தைக் கொன்றுவிட்டேன். நீ உயிர் வாழ்வதால் என்ன பயன்?' என்றான். கர்ணன் 'அர்ஜுனா! வீண்பேச்சு வேண்டாம். அதைச் செயலில் காட்டு. வாக்குறுதிப்படி அக்ஞாதவாச காலம் இன்னும் முடியவில்லை. அதற்குள் வெளிப்பட்டுவிட்டாய். உனக்காக இந்திரனே வந்து போர் புரிந்தாலும் இனி விடமாட்டேன். எங்கே, உன் பலத்தைக் காட்டு பார்ப்போம்' என்றான். மீண்டும் போர் தொடங்கியது. அர்ஜுனன் அம்புகளை மழைபோலச் சொரிந்தான். கர்ணனும் எதிர்த்தாக்குதல் நடத்தினான். ஆனால், அவனால் நீண்டநேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கர்ணன் போர்க்களத்தைவிட்டு ஓடத் தொடங்கினான்.
அதற்குள் அர்ஜுனன் உத்தர குமாரனைப் பார்த்து, 'இளவரசே! நான் வெற்றிச் சங்கை ஊதப் போகிறேன். அதற்கு முன்னர் தேரை துரோணருக்கு எதிரில் ஓட்டு' என்றான். அன்றையே போரில் அர்ஜுனன் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டான். அவனுக்கு மகிழ்ச்சியும் சுறுசுறுப்பும் பெருகின. அவனுடைய துடிப்பைக் கண்ட உத்தரன் பயந்து போனான். அர்ஜுனனைப் பார்த்து, 'வீரரே! உம் அம்பு தொடுக்கும் திறம் என்னை பயப்படச் செய்கிறது. நீங்கள் நாணேற்றுகிற காட்சியானது, திரிவிக்ரம காலத்தில் திருமாலின் தோற்றத்தை நினைவூட்டுகிறது' என்றான். அர்ஜுனன் சிரித்தான். 'வீரனே! நீ அஞ்ச வேண்டாம். நான் உனக்குத் துணையிருக்கும்போது அச்சம் ஏன்? நான் துரோணரை எதிர்த்துப் போர்புரிய வேண்டும். தேரை அவருக்கருகில் செலுத்து' என்றான். தேர் துரோணருக்கு எதிரில் நின்றது. அர்ஜுனன் இரண்டு கைகளாலும் அவரை வணங்கினான். 'பெருமானே! காட்டில் வாசத்தை முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறோம். எங்கள் மீது கோபம் கொள்ள வேண்டாம். நீங்கள் என்னைத் தாக்கிய பிறகே நான் உங்களைத் தாக்குவேன்' என்றான். பேரிகைகளும் படகங்களும் முழங்கின. அர்ஜுனன் தன் சங்கத்தை முழங்கினான்.

துரோணர் அர்ஜுனன் மீது இருபது பாணங்களை வரிசையாக எய்தார். அவை தன்னை நெருங்கும் முன்னமே அர்ஜுனன் அவற்றைத் தன் பாணங்களால் துண்டித்தான். இருவரும் கடுமையாகப் போரிட்டனர். அப்போரைப் பார்த்த பல அரசகுலத்தவர் மயக்கம் அடைந்தனர். 'அர்ஜுனனைத் தவிர வேறு யாரால் துரோணரை எதிர்க்க முடியும்? அர்ஜுனன் தன் குருவையே எதிர்க்க நேர்ந்திருக்கிற இந்த அரச தர்மம் கொடியது' என்று பேசிக்கொண்டனர். போர் நீண்ட நேரம் நடந்தது. அர்ஜுனனுடைய வில்லாற்றலைக் கண்ட துரோணர் ஆச்சரியம் அடைந்தார். அவனுடைய ஆயிரக்கணக்கான அம்புகள் துரோணருடைய தேரில் வந்து விழுந்தன. இதைக் கண்ட அஸ்வத்தாமா தன் தந்தைக்குப் பாதுகாப்பாய் அவரருகில் நின்றுகொண்டு அர்ஜுனனின் அம்புகளை முறையாகத் தடுத்தான். பின்னர், கோபம் கொண்ட அஸ்வத்தாமா அர்ஜுனன்மேல் ஆயிரக்கணக்கான பாணங்களை எய்தான். அர்ஜுனன் அவற்றையெல்லாம் பயனற்றதாகச் செய்துவிட்டான. துரோணருடைய கவசத்தையும் கொடியையும் தேரையும் அர்ஜுனனின் அம்புகள் சிதைத்தன.

அதன்பினனர் அஸ்வத்தாமா காலதண்டத்தை ஏந்தியபடி அர்ஜுனனை எதிர்த்தான். இருவருக்கும் போர் நெடுநேரம் நடந்தது. அர்ஜுனனுடைய அம்புகளோ எடுக்க எடுக்கக் குறையாத தேவ சம்பந்தம் உடையவை. ஆனால் அஸ்வத்தாமாவின் அம்புகளோ விரைவில் குறைந்தன. பீஷ்மர், துரோணரைப் பார்த்து, 'ஆசாரியரே! அர்ஜுனன் நம் இருவரையும் தனித் தனியாக வென்றுவிட்டான். எனவே, நாம் இருவரும் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் அர்ஜுனனோடு போர் புரிவோம்' என்றார். அதன்படியே பீஷ்மரும் துரோணரும் மற்றவர்களும் ஒன்று சேர்ந்து அர்ஜுனனைத் தாக்கினர். அர்ஜுனன் அவர்களோடு மிகக் கடுமையாகப் போரிட்டான். மலை, பனியால் மூடப்படுவதைப் போல, கௌரவர்கள் அனைவரும் அர்ஜுனனின் அம்புகளால் மூடப்பட்டனர். தலைகள் பூமியில் உருண்டன. யுத்தகளம் முழுவதும் ரத்தச் சேறால் நிரம்பியது. போர்க்களம் முழுவதும் உடைந்துபோன விற்களும் முண்டங்களும் துண்டிக்கப்பட்ட கால்களும் கைகளும் நிறைந்தன. தாங்கள் பதின்மூன்று ஆண்டுக்காலம் பட்ட துன்பங்களுக்கு அர்ஜுனன் பழிவாங்குவதைப்போல அது இருந்தது.

குந்திபுத்திரனான அர்ஜுனன் கொளரவப் படைகளை அழித்து அங்கே ரத்த ஆறு ஓடச் செய்தான். பின்னர் அர்ஜுனன் பீஷ்மரை நெருங்கினான். நாண், அம்புகளை வில்லில் பூட்டி, பயந்தவாறே அவர்மீது எய்தான். இரண்டு அம்புகளை அவர்மீது எய்து வணங்கினான். காதோரம் இரண்டு அம்புகளை எய்து அவரை நலம் விசாரித்தான். அதைக் கண்ட பீஷ்மர் 'அர்ஜுனன் வெற்றி பெறட்டும்' என்று முழங்கினார் அப்போது விருஷசேனன் என்பவனும் அவனுக்குத் துணையாக விகர்ணனும் சகுனியும் வந்தனர். அவர்களை அர்ஜுனன் மிக எளிதாக அடித்துத் துரத்திவிட்டான். அர்ஜுனன், உத்தரகுமாரனைப் பார்த்து, 'வீரனே! சந்தனு குமாரராகிய பீஷ்மரிடம் தேரை ஓட்டு. இவர் இளமைமுதல் எங்களை எடுத்து வளர்த்தவர். எங்களிடம் அன்புள்ளவர். இளமையில் இவர் மடியில் நான் விளையாடியிருக்கிறேன். இவருடன் முறையாகப் போர் புரியப் போகிறேன்' என்றான். உத்தரகுமாரனும் தேரை பீஷ்மருக்கு எதிரில் நிறுத்தினான். இருவருக்கும் போர் மூண்டது.

அர்ஜுனன் தன்னுடைய தேவதத்தத்தை முழங்கினான். இருவரும் கடுமையாக்ப போர்புரிந்தனர். அப்போது ஆகாயத்தில் திரண்டு நின்ற தேவர்கள் ஆச்சரியப் பட்டனர். 'அஸ்திரப் பிரயோகத்தில் தேர்ந்த இருவரும் சளைக்காது போரிட்டது தேவர்களை வியப்பில் ஆழ்த்தியது. பீஷ்மர் எட்டு பாணங்களால் அர்ஜுனனுடைய அனுமக் கொடியை அடித்தார். தேர்ப்பானையும் குதிரைகளையும் பத்து பாணங்களால் அடித்தார். அர்ஜுனன் அவற்றையெல்லாம் அலட்சியமாகத் தடுத்தான். அர்ஜுனனிடம் அன்புடைய பீஷ்மர் அவனை எதிர்க்கச் சக்தியற்று அவனிடம் தோல்வியடைந்தார். அவனிடம் கொண்ட அன்பால் அடைந்த தோல்வியைப் போலிருந்தது அது. கௌரவ சேனை பயங்கொண்டு சிதறியோடியது.

போர் இன்னமும் முடியவில்லை. குருக்ஷேத்திரப் போரின் தொடக்கமான விராடநகரத்துப் போரை தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline