|
|
|
பாண்டவர் ஐவரும் தனித்தனியாக விராட மன்னனிடம் வேலைக்குச் சேர்ந்தார்கள். தனித்தனியாக வந்தபோதிலும், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது, தாங்கள் ஐவரும் பாண்டவர்களிடத்தில், குறிப்பாக யுதிஷ்டிரரிடத்தில் பணியாற்றியவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். ஆடவர்கள் விராட மன்னனிடத்தில் பணிக்குச் சேர்ந்தார்கள். அவர்கள் விஷயத்தில் ஏதும் பிரச்சனை இருக்கவில்லை. பெண்ணான பாஞ்சாலி அரசி சுதேஷ்ணையிடத்தில் பணிக்குச் சேரவேண்டும். அங்கேதான் சிரமம் ஏற்பட்டது. பாஞ்சாலி, அழுக்கடைந்த ஒற்றை ஆடையை அணிந்துகொண்டு, கூந்தலை வலப்புறமாகத் தூக்கிக் கட்டியபடி நுழைந்தாள். திகைப்பூட்டும் அவளுடைய பேரழகைக் கண்ட சுதேஷ்ணை, பணிப்பெண்களை அனுப்பி அவளை அழைத்துவரச் செய்தாள். 'சிறந்த அழகுள்ளவளே! நீ யார்? எங்கிருந்து வருகிறாய்? உனக்கு நான் என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டாள். பாஞ்சாலி, தன்னை 'சைரந்திரி' என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். சைரந்திரி என்ற பெயருக்கு 'வண்ணமகள்' என்று பொருள். Chambermaid என்று சொல்லலாம்.
'சத்யபாமை, திரௌபதி போன்ற ராணிகளிடத்தில் பணிபுரிந்தவள்' என்று சொல்லிக்கொண்டாள். கூந்தலை அழகழகாகப் பின்னுவதில் வல்லவள் என்றும் திரௌபதிக்கு சந்தனம் முதலானவற்றை அரைத்துக் கொடுக்கும் பணியில் இருந்தவள் என்றும் சொல்லிக்கொண்டாள்.
சுதேஷ்ணைக்கு அவளைப் பணியமர்த்திக் கொள்ள விருப்பம் உண்டாயிற்று. அவளுடைய அழகை நினைத்தால் அச்சமும் ஏற்பட்டது. விராட மன்னன் இவளைப் பார்த்தால், இவளையே விரும்புவான் என்ற அச்சம்தான் என்பது குறிப்பிடத் தக்கது.. பாஞ்சாலி, தனக்கு ஐந்து கந்தர்வர்கள் கணவர்களாக இருக்கின்றனர். அவர்கள் எல்லா இடங்களிலும் தன்னைக் காக்கின்றனர். தீய எண்ணத்தோடு என்னைத் தொடுபவன், அன்றிரவே உலக்கையால் அடிபட்டு விழுவான். நான் எந்த இடத்திலும் அதிக நாள் தங்குவதில்லை' என்றெல்லாம் சொன்னதன் பிறகு, அவளை சுதேஷ்ணை தன்னுடைய பணிப்பெண்ணாக ஏற்றுக்கொண்டாள். 'நீ ஒழுக்கம் நிறைந்தவளானால், என்னுடன் இங்கே தங்கலாம். உனக்கு யாதொரு தீங்கும் இங்கே நேராது. சகல வசதிகளுடன் இங்கே வாழ்வாயாக' என்று சொன்னாள். பாஞ்சாலி, அரசி சுதேஷ்ணைக்கு சந்தனம் முதலானவற்றை அரைத்துக் கொடுக்கும் வண்ணப்பெண்ணாகப் பணியில் சேர்ந்தாள்.
அரசி சொன்னதைப்போல் பாஞ்சாலிக்கு எந்தவொரு தீங்கும் நேரவில்லைதான். அதாவது முதல் பத்து மாதங்களுக்கு. சுதேஷ்ணைக்குக் கீசகன் என்றொரு சகோதரன் இருந்தான். இவன் விராட தேசத்தின் சேனாதிபதி. மிகுந்த பலம் பொருந்தியவன். விராட தேசத்தின் பாதுகாப்பே கீசகனுடைய பலத்தைச் சார்ந்திருந்தது. கீசகனுக்கு 105 சகோதரர்கள் இருந்தனர். இவர்களுக்கு உபகீசகர்கள் என்று பெயர். இவர்களும் மிகுந்த பலம் பொருந்தியவர்கள். பகைவர்களை எதிர்ப்பதில் கீசகனுக்குத் துணையிருந்தார்கள்.
ஒருநாள், சகோதரி சுதேஷ்ணையைப் பார்ப்பதற்காக அவளுடைய அரண்மனைக்கு வந்திருந்தான் கீசகன். அப்போது அங்கே இருந்த பாஞ்சாலியைப் பார்த்துவிட்டான். பேரழகியான பாஞ்சாலியைப் பார்த்த மாத்திரத்தில் அவன் காமவசப்பட்டான். தன் சகோதரியிடம் சென்று, 'உன்னிடம் பணிப்பெண்ணாக இருக்கும் இந்தப் பெண் யார்? இவள் இனிமேல் என்னுடன் இருக்கட்டும். ஆடை, அணிகலன், சுவையான உணவு போன்றவற்றை இவளுக்கு நான் கொடுத்து, இவளை ஆதரிக்கிறேன். இவள் என்னோடு இருந்து என்னை மகிழ்ச்சி அடையச் செய்யட்டும்' என்றான். சுதேஷ்ணையால் எதுவும் சொல்ல முடியவில்லை. கீசகன், தன்னுடைய சகோதரன் என்பது மட்டுமல்லாமல், நாட்டின் பாதுகாப்புக்கு வலுவான துணையாகவும் இருப்பவன். எனவே அவளால் அவனை மறுத்துப் பேசமுடியவில்லை. இருந்தாலும், சைரந்திரியின் 'கந்தர்வக் கணவர்களைப்' பற்றியும், அவள் தன்னிடத்தில் பணிக்குச் சேரும்போது சொன்னவற்றையும் மிகுந்த அச்சத்துடன் எடுத்துச் சொன்னாள். அலட்சியமாகச் சிரித்தான் கீசகன். 'எத்தனை கந்தர்வர்களானாலும் என் பலத்துக்கு முன்னால் அவர்கள் எம்மாத்திரம்? அவர்களை நான் கொன்றுவிடுவேன்' என்று பதில் சொன்னான் கீசகன். சுதேஷ்ணையால் மறுக்க முடியவில்லை. அவளுடைய நல்லுபதேசங்கள் பயனற்றுப் போயின. இறுதியில், 'நீ உன் மாளிகைக்குப் போ. நான் இந்தச் சைரந்திரியை உன் மாளிகைக்கு வந்து மது வாங்கி வருவதற்காக அனுப்புகிறேன்.' என்று சொன்னாள். |
|
'கீசகனுடைய மாளிகையில் மது காய்ச்சியிருக்கிறார்கள். போய் ஒரு கலசம் நிறைய வாங்கி வா' என்றுசொல்லி பாஞ்சாலியை அனுப்பினாள் சுதேஷ்ணை. 'இந்த வேலைக்கெல்லாம் என்னை அனுப்பாதே' என்று பாஞ்சாலி சொல்லிப் பயனில்லை. பாஞ்சாலியின் மறுப்பு அங்கே எடுபடவில்லை. பாஞ்சாலி நடுக்கம் அடைந்தாள். கண்ணீர் சொரிந்தபடி கீசகனுடைய அரண்மணைக்குச் சென்றாள். தன்னைக் காக்கும்படி தன்னுடைய மாமனாரான பாண்டுவிடமும் தனக்கு எப்போதும் துணையிருக்கும் சூரியனிடமும் நீண்டநேரம் துதித்தாள். சூரியனும் அவள்மேல் இரக்கம் கொண்டான். அவளைக் காப்பதற்காக ஒரு அரக்கனை அவளுக்குத் துணையாக அனுப்பி வைத்தான். பாஞ்சாலியைக் கண்ட கீசகன் துள்ளி எழுந்து அவளை வரவேற்றான். 'சுதேஷ்ணை, மது வாங்கி வருவதற்காக என்னை அனுப்பியிருக்கிறாள். இந்தக் கலசத்தில் மதுவைக் கொடுத்து என்னைச் சீக்கிரம் அனுப்பு' என்று கெஞ்சினாள், சைரந்தரியாக இருந்த பாஞ்சாலி.
'அதை இங்குள்ள பணிப்பெண்கள் செய்வார்கள். நீ இதையெல்லாம் செய்யவேண்டாம்’ என்று மறுத்தான் கீசகன். இப்படிச் சொன்னபடி பாஞ்சாலியின் கையைப் பற்றி இழுத்தான். வேறு வழியில்லாத பாஞ்சாலி விராடனுடைய அரண்மணைக்கு ஓடினாள். துரத்தி வந்த கீசகன், அங்கே விராட மன்னன், யுதிஷ்டிரர் இருவரின் முன்னிலையிலும் பாஞ்சாலியை எட்டி உதைத்தான். அவள் முகத்தில் காயம் பட்டு ரத்தம் கொட்டியது. அப்போது, சூரியனால் அனுப்பப்பட்ட அசுரன் கீசகனைத் தூக்கி எறிந்தான். அந்தச் சபையில் விராட மன்னனும் தர்மபுத்திரரும் பீமனும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வருத்தமடைந்த போதிலும், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. பீமன் யுதிஷ்டிரரைப் பார்த்தான். நிலைமையின் விபரீதத்தை அறிந்த யுதிஷ்டிரர், பீமனைப் பார்வையாலேயே அடக்கினார். உண்மை வெளிப்பட்டால் மீண்டும் வனவாசமும் அக்ஞாத வாசமுமாக 13 ஆண்டுகளைக் கழிக்க வேண்டி நேரும். விராட மன்னனுக்கோ, தன்னுடைய பலமான கீசகனைத் தடுக்க முடியவில்லை. அங்கே இருந்த விராடனாலோ தர்மபுத்திரராலோ பீமனாலோ கீசகனைத் தடுக்க முடியவில்லை. நிலைமை அவ்வாறு இருந்தது.
பாஞ்சாலி விராடனைப் பார்த்து, 'அரசே! நீர் கீசகனிடத்தில் மன்னனாக நடந்துகொள்ளவில்லை. உங்கள் சபையில் அநாதையாக நிற்கும் எனக்கு நீர்தான் கதி. உம்மை நம்பிய என்னை நீரும் கைவிட்டுவிட்டீர். என் நிலைமையைப் பாரும்!' என்று சொல்லிப் புலம்பினாள். விராடனோ, தன்னுடைய சேனாதிபதியும் மைத்துனனுமான கீசகனை எதிர்த்துப் பேச அஞ்சினான். 'உங்கள் இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என்பதை நான் அறியேன். கீசகனிடத்தில் நீ என்ன சொன்னாய் அல்லது கீசகன் உன்னிடத்தில் என்ன சொன்னான் என்பதை நான் அறியேன். ஆகவே இந்த விஷயத்தில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை' என்றான் விராடன். சபையில் இருந்தவர்களில் சிலர் சைரந்திரியிடம் இரக்கம் கொண்டு விராடனையும் சுதேஷ்ணையையும் கீசகனையும் நிந்தித்தார்கள். அவர்களாலும் கீசகனை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை.
தர்மபுத்திரர், நடந்தவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார். சின மிகுதியால் அவருக்கு வேர்த்துக் கொட்டியது. திரௌபதியைப் பார்த்து, 'சைரந்திரி! நீ அஞ்ச வேண்டாம். கந்தர்வர்களாகிய உன் கணவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது தக்க தருணம் இல்லை என்று அவர்கள் கருதியிருக்கலாம். நீ பொறுமையைக் கைக்கொள். உன் கணவர்கள் தக்க சமயத்தில் உன் துணைக்கு வருவார்கள். இப்பொழுது இங்கிருந்து போ! சபையில் சூதாட்டம் நடந்துகொண்டிருக்கிறது. எங்களுக்கு இடையூறு செய்யாமல் இங்கிருந்து போ!' என்றார். இதைக் கேட்ட பாஞ்சாலி, ரத்தம் வடியும் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். 'அறிஞரே! தாங்கள் சொன்னவற்றை ஏற்றுக் கொள்கிறேன். இங்கிருந்து போகிறேன்' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுதேஷ்ணை, கபடத்துடன் பேசத் தொடங்கினாள். எதுவுமே தெரியாதவள் போல, 'சைரந்திரி! ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது? யார் என்ன செய்தார்கள் என்று சொல். நான் அவர்களைத் தண்டிக்கிறேன்' என்று சொன்னாள்.
காலமல்லாம், மானமே பெரிது என்று வாழ்ந்துகொண்டிருந்த பாஞ்சாலியால் நடந்த அவமானங்களைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இவை அனைத்தையும் தீர்த்துக் கொள்ள பீமன் ஒருவனால்தான் முடியும் என்று உணர்ந்தாள். அன்றிரவு பீமன் இருந்த சமையற்கட்டுக்குச் சென்று அவனை எழுப்பினாள்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|