|
|
|
பாஞ்சாலியைக் கவர்ந்துகொண்டு சென்ற ஜயத்ரதன், அவனைத் துரத்திச் சென்ற பீம-அர்ஜுனர்களிடம் வசமாகச் சிக்கினான். ஜயத்ரதனுடைய தலைமயிரைப் பற்றிய பீமன், கோபம் தாங்காமல் அவனைத் தூக்கி வீசினான்; தூக்கிப்போட்டு மிதித்தான். மிகுந்த பலசாலியான பீமனிடம் அகப்பட்டுக்கொண்ட ஜயத்ரதன் கதறினான். இந்தச் சமயத்தில் அர்ஜுனன் குறுக்கிட்டு, 'அண்ணா, தர்மபு;ததிரர் சொன்னதை நினைவில் வைக்கவேண்டும். நம் சகோதரி துஸ்ஸலையை எண்ணி இவனை உயிரோடு விட்டுவிடுவதே செய்யத் தகுந்தது' என்று அண்ணா சொன்னாரல்லவா? இவனை விட்டுவிடுவோம்' என்று தடுத்தான். தர்மபுத்திரரிடத்திலேயேகூட கோபப்படுகிற பீமன், அர்ஜுனன் சொல்லுக்கு எப்போதும் கட்டுப்படுவான். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் 'தர்மபுத்திரர் சொல்லியிருக்கிறார்' என்ற அர்ஜுனனுடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டு, ஜயத்ரதனை அடிப்பதை நிறுத்தினாலும், அர்த்தசந்திர பாணம் எனப்படும் பிறைவடிவ அம்பு ஒன்றால், மூர்ச்சித்துக் கிடந்த ஜயத்ரதனுக்கு ஐங்குடுமி வைத்தான் என்று பார்த்தோம்.
முழுக்க மொட்டையடிக்காமல், ஐந்து இடங்களில் மயிரைச் சிரைக்காமல் விட்டுவிடுவதை ஐங்குடுமி வைத்தல் என்பார்கள். தலைமயிர், முடியப்படாத குடுமியைப் போல் ஐந்து இடங்களில் தொங்கும். யார் பார்வையில் பட்டாலும் அவர்களுக்கு, 'இவன் ஏதோ தவறு செய்திருக்கிறான். ஆகவே இவனுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது' என்பது தெரிந்துவிடும். ஜயத்ரதன் மூர்ச்சை தெளிந்து எழுந்தான். பீமனுக்கோ கோபம் அடங்கவே இல்லை. அவன் ஜயத்ரதனைப் பார்த்துச் சொன்னவற்றை, (கிஸாரி மோஹன் கங்கூலியின் ஆங்கிலப் பதிப்பைத் தமிழில் பெயர்த்திருக்கும்) அருட்செல்வப் பேரரசன் பின்வருமாறு சொல்கிறார்:
"பிறகு எதிரியிடம் பேசிய விருகோதரன் {பீமன்}, "நீ வாழ விரும்பினால், நான் சொல்வதைக் கேள். ஓ! மூடனே! உன் விருப்பத்தை நீ அடைவது குறித்து {எப்படி என்று} நான் உனக்குச் சொல்கிறேன். பொதுக்கூட்டங்களிலும், திறந்த சபைகளிலும் "நான் பாண்டவர்களின் அடிமை" என்று நீ சொல்லவேண்டும். இந்த நிபந்தனையின் பேரில் மட்டுமே நான் உனது உயிரை உனக்குக் கொடுப்பேன்! இது போர்க்களம் வென்றவர்கள் செய்யும் வழக்கமான விதியே" என்றான். இப்படி நடத்தப்பட்டும், சொல்லப்பட்டும் இருந்த மன்னன் ஜெயத்ரதன், பார்க்க எப்போதும் கடுமையாக இருந்த கடும்வலிமைமிக்க வீரனிடம் {பீமனிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்றான். அவன் {ஜெயத்ரதன்} புழுதிபடிந்த தேகத்துடன் உணர்வற்று நடுங்கிக் கொண்டிருந்தான். பிறகு அர்ஜுனனும் விருகோதரனும் {பீமனும்} சேர்ந்து அவனைச் சங்கிலியால் கட்டி தேரில் புகுத்தினார்கள். அர்ஜுனனுடன் தேரில் ஏறிய பீமன், அதை ஆசிரமத்திற்குச் செலுத்தினான்."
S., Arul Selva Perarasan; செ., அருட்செல்வப்பேரரசன். வன பர்வம்: Vana Parva (முழுமஹாபாரதம் Book 3) (Tamil Edition) . Kindle Edition.
எந்த அரசவைக்கோ, மக்கள் கூடியிருக்கும் இடத்துக்கோ சென்றாலும், 'நான் பாண்டவர்களின் அடிமை' என்று கூவவேண்டும்' என்ற நிபந்தனையை பீமன் விதித்து, ஜயத்ரதனும் அதை ஏற்றுக்கொண்டிருந்தான். தேரை யுதிஷ்டிரரும் பாஞ்சாலியும் இருந்த ஆசிரமத்துக்குச் செலுத்திய பீமன், அவர்கள் இருவரிடமும் ஜயத்ரதனை, 'நான் யுதிஷ்டிரருக்கு அடிமை' என்று சொல்ல வைத்தான். தலை, கன்னாபின்னாவென்று சிரைக்கப்பட்டு, ஐந்து இடங்களில் மட்டும் குடுமியாகக் கட்டும்படி விடப்பட்டிருந்த ஜயத்ரதனைக் கண்டதும் பாஞ்சாலிக்கும் தருமபுத்திரருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. வலுவான கயிறுகளால் கட்டப்பட்டிருந்த ஜயத்ரதனை அவர்கள் முன்னிலையில் பீமன் அவிழ்த்துவிட்டான். மிகவும் மனவருத்தம் அடைந்திருந்த ஜயத்ரதன் தருமபுத்திரரையும் அங்கிருந்த முனிவர்களையும் காலில் விழுந்து வணங்கினான். இந்த இடத்தில் கும்பகோணம் பதிப்பு சொல்கிறது: "கருணையுள்ளவரும் தர்மநந்தனனும் அரசருமான யுதிஷ்டிரர் அப்படிப்பட்ட நிலைமையிலிருப்பவனும், ஸவ்யஸாசியினால் (அர்ஜுனனால்) பிடிக்கப்பட்டடிருப்பவனுமான அந்த ஜயத்ரதனைப் பார்த்து, 'அடிமை தீர்ந்தவனாகச் செல். விடப்பட்டாய். இந்தவிதமான கெட்ட கார்யத்தை மீண்டும் ஓரிடத்திலும் செய்யாதே. ஸ்த்ரீகளிடத்தில் ஆசையுள்ள உன்னை நிந்திக்கவேண்டும். நீ அல்பன். அல்பர்களைத் துணைவர்களாக உடையவன். கெட்ட புத்தியுள்ளவனே உன்னைவிட வேறான எந்தப் புருஷ-அதமன், தர்மவிரோதமானதும் உலகத்தால் தூஷிக்கப்படுவதுமான இப்படிப்பட்ட காரியத்தைச் செய்வான்?' என்றார். பரதஸ்ரேஷ்டரான தர்மராஜர் கெட்டகாரியத்தைச் செய்தவனான அந்த ஜயத்ரதனை, மரித்தவனைப்போல எண்ணி, நன்றாக உற்றுப் பார்த்து, கருணை பாராட்டினார். ஜயத்ரத! தர்மத்தில் உன் புத்தி விருத்தி அடையட்டும். அதர்மத்தில் மனத்தைச் செலுத்தாதே. குதிரைகளோடும் ரதங்களோடும் காலாட்படைககளோடும் க்ஷேமமாகச் செல்' என்று சொன்னார்." (வனபர்வம், ஜயத்ரத விமோக்ஷண பர்வம், அத். 273, பக். 1009) |
|
தர்மபுத்திரர் அவருடைய சுபாவப்படி பகைவனுக்கு அருளிவிட்டார்.. பகைவன் நல்லவனாக இருந்தால் பிழையில்லை. தான் செய்த பிழையின் தன்மையை உணரமுடியாதவன் பகைவனாகவும் விளங்கினால்? இதனால்தான் வள்ளுவர் 'நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந்(து) ஆற்றாக் கடை' என்றார்.
தனக்கு ஏற்பட்ட அவமானத்தை ஜயத்ரதனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இத்தகைய அவமானங்கள் நேர்ந்தது, தான் செய்த கொடுமையான பிழைகளால்தான் என்ற உண்மையையும் அவ்வளவு கடுமையான பிழைகளையும் பொறுத்துக்கொண்ட தருமபுத்திரருடைய இரக்க சுபாவத்தையும் மிக எளிதாக மறந்தான். இவ்வளவு செய்த போதிலும் தன்னை தருமபுத்திரர் அடிமைத் தளையிலிருந்து விடுவித்திருக்கிறார் என்பதையும், இது அத்தனைக்கும் காரணம், அவன் கௌரவ நூற்றுவரின் ஒரே தங்கையான துஸ்ஸலையின் கணவன் என்பதையும், அவள் தமது பெரியப்பாவின் மகள் என்றாலும், பாண்டவர்கள் ஐவரும் அவளைத் தமது சொந்தத் தங்கையாகவே பாவிக்கிறார்கள் என்ற உண்மையையும் எளிதில் மறந்தான். பழிவாங்கும் எண்ணமே அவனுக்கு மிகுந்தது.
அவமானத்துடன் தலைகுனிந்து புறப்பட்ட ஜயத்ரதன், கங்கை உற்பத்தியாகும் கங்காதுவாரத்தைச் சென்றடைந்தான். அங்கே இருந்து சிவபெருமானைக் குறித்துக் கடுந்தவம் இயற்றினான். அவனுடைய தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவன்முன் தோன்றினார். "அரசனான ஜயத்ரதன், ரதங்களுடன்கூடின பாண்டவர்கள் ஐவரையும் யுத்தத்தில் ஜயிக்கக் கடவேன்' என்று மகாதேவரைப் பிரார்த்தித்தான். மகாதேவர் அவனை நோக்கி, 'அது முடியாது' என்று சொன்னார்." (மேற்படி அத்., பக். 1013). அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தைக் கொடுத்தவரே மகாதேவர்தான். அப்படியிருக்கும்போது, ஜயத்ரதனுக்கு 'அர்ஜுனனை வெல்லும் வரத்தை' எப்படிக் கொடுப்பார்? 'அர்ஜுனன் பலவகையான அஸ்திரங்களைப் பெற்றவன். விஷ்ணுவின் அம்சமான கிருஷ்ணரைத் துணையாகப் பெற்றவன். அவனை உன்னாலும் சரி, வேறு யாராலும் சரி, வெல்லமுடியாது. எனவே அந்த வரத்தைத் தரமுடியாது.
"..... எந்த மனிதன் யுத்தத்தில் பார்த்தனை ஜயிப்பான்? வேந்தனே! அவன் ஒருவனை விட்டுவிட்டு யுதிஷ்டிரனுடைய எல்லாச் சேனையையும், பகைவர்களான நான்கு பாண்டவர்களையும் ஒரு தினம் (ஒரே ஒரு நாளைக்கு மட்டும்) ஜயிப்பாய். ஆகையால், நீ, அர்ஜுனனைத் தவிர மற்ற பாண்டவர்களைத் தடுப்பாய். புருஷஸ்ரேஷ்டனே! என்னால் இந்த வரம் உனக்குக் கொடுக்கப்பட்டது' என்று சொன்னார்." (மேற்படி அத்., பக். 1014)
சிவபெருமானின் இந்த வரத்தைக்கொண்டுதான் ஜயத்ரதன் பதின்மூன்றாம் நாள் யுத்தத்தில், சக்கர வியூகத்துக்குள் நுழைந்த அபிமன்யுவைத் தொடர்ந்து சென்ற மற்ற நான்கு பாண்டவர்களையும் தடுத்தான். அந்த நேரத்தில் உதவிக்கு வரமுடியாதபடி அர்ஜுனனை வெகுதொலைவில் விலக்கி நிறுத்திய ஸம்ஸப்தகர்கள் (மகத்தான சபதத்தைச் செய்தவர்கள்) எனப்படும் திரிகர்த்தர்களும் அன்று ஜயத்ரதனுடன் வந்த அரசர்கள்தாம்.
இதைத் தொடர்ந்து அந்த வனத்துக்கு மார்க்கண்டேயர் வருகிறார். அவர்தான் பாண்டவர்களுக்கு 'ராமோபாக்கியானம்' எனப்படும் ராமாயணச் சுருக்கத்தைச் சொல்கிறார். அதைத் தொடர்ந்து 'பதிவ்ரதாமாஹாத்ம்ய பர்வம்' எனப்படும் சத்தியவான்-சாவித்திரி கதையையும் சொல்கிறார்.
பாண்டவ வனவாசத்தின் பன்னிரண்டாம் வருடம் முடியப் போகிறது. அக்ஞாதவாச காலமான ஓராண்டு தொடங்கப் போகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் கர்ணன் பிறக்கும்போது அவன் கூடவே தோன்றிய கவச குண்டலங்களை 'யாசிப்பதற்காக' இந்திரன் அவனிடத்தில் வருகிறான். வெறும் யாசகமாகத் தொடங்கிய அது, ஒரு பண்டமாற்று வியாபாரமாக முடிந்தது. அடுத்ததாக அதைப் பார்ப்போம். எல்லோரும் கர்ணன் இந்திரனால் வஞ்சிக்கப்பட்டதைப்போன்ற தோற்றத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நடந்தது என்ன?
சற்று விரிவாகப் பார்ப்போம்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|
|