Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் | பொது
Tamil Unicode / English Search
ஹரிமொழி
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!
- ஹரி கிருஷ்ணன்|ஜனவரி 2021|
Share:
பாண்டவர் வனவாசத்தின் பன்னிரண்டாவது ஆண்டு. துர்வாசர் வந்துபோன சம்பவத்துக்குச் சிலநாள் கழித்து, பாண்டவர்களுடைய புரோகிதரான தௌம்யருக்கு, காட்டில் தங்களுடன் வசிக்கும் அனைவருக்கும் விருந்து படைக்கும் எண்ணம் வந்தது. பாண்டவர்களைப் பார்த்து, 'நீங்கள் விருந்துக்கு வேண்டிய மான்களையும் மற்ற விலங்குகளையும் வேட்டையாடிக் கொண்டுவாருங்கள்' என்று சொன்னார். பாண்டவர்கள் ஐவரும் வேட்டைக்குப் புறப்பட்டனர். அந்தச் சமயத்தில் திரெளபதியும் தௌம்யரும் மட்டுமே ஆசிரமத்தில் இருந்தனர், வேறு யாரும் இருக்கவில்லை. பாண்டவர்கள் புறப்பட்டுச் சென்றபிறகு, சிந்து நாட்டு மன்னவனான ஜயத்ரதன், திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்தோடு, உயரிய ஆடை ஆபரணங்களை அணிந்துகொண்டு பாண்டவர்கள் தங்கியிருந்த காம்யக வனத்தின் வழியாக சால்வ நாட்டுக்குச் சென்றுகொண்டிருந்தான். விருத்தக்ஷத்திரனுடைய மகனான இவனுக்கு, சிந்து தேசத்து அரசன் என்பதால் சைந்தவன் என்ற பெயரும் உண்டு; ஸௌவீரன் என்ற பெயரும் உண்டு. இவனோடு கோடிகாஸ்யன்--அல்லது கோடிகன் (Kotikan) என்ற மன்னனும் வந்திருந்தான்.

ஜயத்ரதன் ஏற்கெனவே திருமணமானவன்தான். கௌரவ நூற்றுவர்களுடைய ஒரே சகோதரியான துஸ்ஸலையை மணந்துகொண்டிருந்தான். அந்தக் காலத்து அரசர்களின் வழக்கப்படி இப்போது இன்னொரு திருமணம் செய்துகொள்வதற்காகச் சென்றுகொண்டிருந்தான். போகிற வழியில் பாண்டவர்களுடைய ஆசிரமத்தைக் கடந்து சென்றான். அங்கே, பாஞ்சாலி ஆசிரமத்தின் வாசலில் ஒரு கடப்ப மரத்தின் கிளையைப் பற்றிக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள். பின்னால் கோடிகனுடன் பேசும்போது, 'கடப்ப மரத்தின் கிளையை விட்டுவிட்டு, மேலாடையை இழுத்துப் போர்த்துக்கொண்டு பேசினாள்' என்ற ஒரு குறிப்பு வருகின்ற காரணத்தால், அவள் குளித்துவிட்டு, சேலையின் ஒரு நுனியை மரக்கிளையில் கட்டி உலர்த்தியபடி நின்றுகொண்டிருந்தாள் என்று ஊகிக்க முடிகிறது. பேரழகியான அவளைப் பார்த்த ஜயத்ரதனுக்கு, அவளை அடைய வேண்டும் என்ற பேராவல் ஏற்பட்டது. 'இவள் பாஞ்சாலிதான்' என்று அவன் அறியாமல் இருந்திருக்க முடியாது. ஏனென்றால், 'பேரழகியான இவள் யாருடைய மகள், யாருடைய மனைவி என்று விசாரித்து வா' என்று சொல்லித்தான் கோடிகனை அனுப்பி வைக்கிறான். ஆனாலும், அவ்வாறு அனுப்பும்போது, பாஞ்சாலியை அடையாளம் தெரிந்துகொண்ட குறிப்பு எதுவும் அவன் பேச்சில் இல்லை. 'இவள் திருமணமானவள்' என்பதை அறிந்தோ, ஊகித்தோ இருந்த காரணத்தால்தான் 'இவள் யாருடைய மனைவி என்று அறிந்து வா' என்று சொல்லி கோடிகனை அனுப்புகிறான். ஜயத்ரதன் அவ்வாறு சொன்னதும் கோடிகாஸ்யன் என்ற அந்த மன்னன் தேரிலிருந்து குதித்து இறங்கி, "நரியானது பெண்புலியருகினிற் செல்வது போல, அந்தப் பெண்ணினருகிற் சென்று பின்வருமாறு வினவலானான்," (வனபர்வம், த்ரெளபதீஹரண பர்வம், அத். 265, பக். 983).

'இந்தக் காட்டில் தன்னந்தனியாக அக்னிஜ்வாலையைப் போல பிராகாசிக்கின்ற அழகுள்ள நீ யார்? கடப்ப மரத்தின் கிளையை ஏன் வணங்கிக்கொண்டிருக்கிறாய்? ஏன் இந்த ஆசிரமத்து வாயிலில் நிற்கிறாய்? இது யாருடைய ஆசிரமம்? நீ தேவஸ்த்ரீயா, தானவப் பெண்ணா, அப்ஸரஸா, இயக்கியா, அல்லது காட்டில் திரிகின்ற அரக்க குலப் பெண்ணா? நீ யாருடைய மகள், உன் கணவன் பெயர் என்ன' என்றெல்லாம் விசாரிக்கத் தொடங்கினான் கோடிகாஸ்யன் என்ற அந்த மன்னன். அவளுக்குத் தன்னைப்பற்றியும், சற்றுத் தொலைவில் நின்றுகொண்டிருந்த ஜயத்ரதனைப் பற்றியும் அறிமுகக் குறிப்புகளையும் கொடுத்தான். 'நீ யாருடைய மகள், யாருடைய மனைவி' என்று கேட்கும் இந்தக் கேள்வியை கிஸாரி மோஹன் கங்கூலி பின்வருமாறு மொழிபெயர்க்கிறார்: Respectfully do we ask thee, good lady, who is thy powerful father, and, O, do tell us truly the names of thy husband, thy relatives, and thy race, and tell us also what thou dost here. As for us, I am king Suratha's son whom people know by the name of Kotika, இங்கே தங்களுடன் வந்திருக்கும் மற்ற மன்னர்களைப் பற்றியும் மிக நீளமாக அறிமுகக் குறிப்புகளைத் தருகிறான் கோடிகன். அடுத்து அவன் கேட்ட கேள்வி இது: O fine-haired lady, do tell us that are unacquainted (with these matters), whose wife and whose daughter thou art.

இங்குதான் நாம் மேலே சொன்ன அந்தக் குறிப்பு வருகிறது: "....திரெளபதியானவள் அவனைப் பார்த்து மெதுவாகக் கிளையை விட்டுவிட்டு, வெண்பட்டினாலாகிய மேலாடையை நன்கு இழுத்துப் போர்த்துக்கொண்டு, ராஜபுத்திரனே! என்னைப் போன்றவர்கள் உன்னுடன் பேசுதற்குத் தகுதியுள்ளவள் ஆகாள் என்பதை நான் புத்தியினால் தெரிந்துகொண்டிருக்கிறேன்." (வன பர்வம், த்ரெளபதீ ஹரண பர்வம், அத். 267, பக். 988). அதாவது என்னைப்போன்ற பெண், உன்னைப் போன்றவர்களுக்கு பதில் சொல்லத் தக்கவள் இல்லை. இருந்தாலும், இங்கே ஆடவர் யாரும் இல்லாததால் நானே பதில் சொல்கிறேன்' என்று தான் திரெளபதி என்பதையும், தன் கணவர்கள் இன்னார் என்பதையும் தெரிவித்தாள். அவள் சொன்னதை கோடிகாஸ்யன் சென்று ஜயத்ரதனிடம் தெரிவித்தான். இவள் பாஞ்சாலி, பாண்டவர்களின் மனைவி, துருபதன் மகள் என்றெல்லாம் சொல்லிவிட்டு கூடவே, 'நீ அவளை ஸௌவீர தேசத்துக்கு அழைத்துச் சென்றுவிடு' என்று ஆலோசனையும் சொன்னான். ஏற்கெனவே கிறங்கிப் போயிருந்த ஜயத்ரதன் பாஞ்சாலி இருந்த ஆசிரமத்துக்குச் சென்று அவளோடு பேசினான். பாஞ்சாலியும் அவனை வரவேற்று உபசரித்தாள். 'யுதிஷ்டிரர் வந்ததும் உங்கள் அனைவருக்கும் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்கிறேன்' என்றாள். 'பெண்ணே! காலை உணவுக்கு ஒரு குறையும் இல்லை. ஆனால், ‘நீ எதைக்கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். நீ ஒன்று செய். விரைவாக வந்து என் தேரில் ஏறு. நாட்டை இழந்து காட்டில் துன்பப்படும் இந்த தரித்திரம் பிடித்த கணவர்களைக் கைவிடு. என்னோடு வந்துவிடு. நீ ஏன் இங்கே துன்பப்பட வேண்டும்? என்னோடு வா. நான் உன்னை மணந்துகொள்கிறேன். நீ அரசியாகிவிடலாம்' என்று அவளிடம் ஆசை வார்த்தைகளைப் பேசினான். தனியாக இருக்கும் பெண்களுக்கு எப்போதும் இதே துன்பம்தான். தனியாக இருந்த சீதையிடத்தில் ராவணன் பேசிய பேச்சுக்கும் அன்று ஜயத்ரதன் பேசிய பேச்சுக்கும் வேறுபாடு ஏதும் இல்லை. "வா. என் ரதத்தில் ஏறு; ஸுகத்தையே அடை, செல்வத்தை இழந்தவர்களும் ராஜ்யத்தை இழந்தவர்களும், தரித்திரர்களும், புத்தியில்லாதவர்களும் காட்டில் வஸிப்பவர்களுமான பார்த்தர்களை அனுஸரிப்பதற்கு நீ தகுதியுள்ளவள் அல்லை. கற்றறிந்த ஸ்த்ரீகள் செல்வத்தை இழந்தவனைப் பர்த்தாவாக உபயோகித்துக் கொள்ளுகிறதில்லை. செல்வத்தோடிப்பவனைச் சேர வேண்டும். செல்வத்துக்கு அழிவு வரும்பொழுது அவனிடத்தில் வஸிக்கக்கூடாது. உன்னுடைய பர்த்தாக்கள் செல்வமற்றவர்களானார்கள். அநேக வர்ஷ காலங்களாக ராஜ்யத்தினின்றும் விலகிவிட்டார்கள். பாண்டு புத்திரர்களிடத்திலுள்ள பக்தியினால் நீ கிலேசத்தை அனுபவிக்க வேண்டாம்.... எனக்கு நீ பார்யையாகிவிடு; இவர்களை விட்டுவிடு. ஸுகத்தை அடைவாயாக. நீ என்னுடன் கூடி ஸிந்து தேசத்தையும் ஸௌவீர தேசத்தையும் முழுமையாக அடைவாயாக' என்று சொன்னான். (வனபர்வம் த்ரெளபதீ ஹரண பர்வம், அத். 268, பக். 988)

இதைக் கேட்டு திரெளபதி கலங்கினாள்; அதிர்ச்சியடைந்தாள். தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு அவனுக்கு இதமான வார்த்தைகளை எடுத்துச் சொன்னாள். 'நான் உனக்குத் தங்கை முறை; நீ எனக்கு அண்ணன். என்னைப் பாதுகாக்க வேண்டியவன். இப்படியெல்லாம் பிதற்றாதே' என்று புத்திமதி சொன்னாள். அவளால் கோபத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை. 'என்னை யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்? அர்ஜுனரும் பீமசேனரும் திரும்பிவந்தால் உன் கதி என்ன ஆகும் என்பதை யோசி' என்றும் சொன்னாள். ஜயத்ரதன் கேட்டுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. 'இதுதான் தருமம். பெண்கள் இப்படித்தான் நடந்துகொள்ளவேண்டும். கஷ்டப்படும் கணவர்களைக் கைவிட்டுவிடவேண்டும். அரசியாக இருக்க வேண்டிய ஒருத்தி, ஏன் வீணே காட்டில் கிடந்து கஷ்டப்பட வேண்டும்' என்றெல்லாம் பேசினான். 'உன்னைக் கட்டாயப்படுத்த விருப்பமில்லை. நீயே வந்து தேரிலாவது யானை மீதாவது ஏறிக்கொண்டு என்னுடன் வந்துவிடு' என்றான். 'உன்னை பலாத்காரம் செய்ய எனக்கு அதிக நேரம் பிடிக்காது. நீயாகவே வந்து தேரில் ஏறிக்கொள்' என்று மிரட்டினான். அவனுடைய நோக்கத்தை உணர்ந்துகொண்ட பாஞ்சாலி, 'என்னைத் தொடாதே' என்று கத்தினாள்; தௌம்யரைக் கூவி அழைத்தாள். ஜயத்ரதன் உடனே அவளுடைய மேலாடையைப் பற்றி இழுத்தான். பாஞ்சாலி, பலங்கொண்டமட்டும் அவனைத் தள்ளிவிட்டாள். அடியற்ற மரம்போலக் கீழே விழுந்த ஜயத்ரதன் உடனே எழுந்து அவளைத் தூக்கிக்கொண்டு சென்று, தன் தேரில் ஏற்றினான். புரோகிரதரான தௌமியரால் பெரும்சேனையோடு வந்திருக்கும் மன்னனை எதிர்த்து என்ன செய்யமுடியும்! 'ஜயத்ரதா! க்ஷத்திரிய தர்மத்தைக் கைக்கொள். பாண்டவர்கள் இல்லாத நேரத்தில் திரெளபதியைத் தூக்கிக்கொண்டு போய்விடலாம் என்று மனப்பால் குடிக்காதே. பாண்டவர்கள் உன்னைச் சும்மா விடமாட்டார்கள். அவர்கள் திரும்பும் நேரம் இது. வீணாகச் சாகாதே! திரெளபதியை விட்டுவிட்டுச் செல்' என்று மன்றாடினார். ஜயத்ரதன் அவரைப் பொருட்படுத்தவில்லை. தேரைக் கிளப்பினான். திகைத்துப்போன தௌமியர் தேரைப் பின்தொடர்ந்தவாறு ஓடத்தொடங்கினார்,.
இந்த நேரத்தில், பாண்டவர்கள், மான், பன்றி, எருமை போன்ற மிருகங்களை வேட்டையாடிக்கொண்டிருந்தனர். வேட்டையை முடித்துக்கொண்டு ஓரிடத்தில் கூடினர். யுதிஷ்டிரர், தம்பியரைப் பார்த்துச் சொல்லலானார்: 'விலங்குகளும் பறவைகளும் அலறுகின்றன. நமக்குப் பெருந்துன்பமும் அவமானமும் ஏற்படப்போகின்றது என்பதற்கான அடையாளங்களைக் காண்கிறேன். இந்த விலங்குகளும் பறவைகளும் தமக்குள் குரூரமாகப் பேசிக்கொள்கின்றன. எனவே நாம் விரைவில் ஆசிரமம் திரும்ப வேண்டும்' என்றார். உடனே எல்லோரும் தேர்களைத் திருப்பிக்கொண்டு ஆசிரமம் நோக்கி விரைந்தார்கள்.

வழியில், திரெளபதியின் பணிப்பெண் ஒருத்தி, புலம்பியவாறு நின்றதைக் கண்ட இந்திரசேனன் தேரை நிறுத்திவிட்டுக் குதித்தான். 'ஏன் இப்படி அழுதுகொண்டிருக்கிறாய்' என்று விசாரித்தான். நடந்தவற்றையெல்லாம் பாண்டவர்களுக்குச் சொன்ன அந்தப் பணிப்பெண், 'ஜயத்ரதன் பாஞ்சாலியைப் பலவந்தமாகத் தூக்கிக்கொண்டு சென்றுகொண்டிருக்கிறான். அவனால் அதிக தொலைவு சென்றிருக்க முடியாது. இந்த வழியாகத்தான் சென்றான். அவனைப் பின்தொடர்ந்து சென்றால் விரைவில் பிடித்துவிடலாம். தேரைத் திருப்புங்கள். ஜயத்ரதனையும் அவனுடைய சேனையையும் பின்தொடர்ந்து சென்று, திரெளபதியை மீட்டுக்கொண்டு வாருங்கள்' என்று பதறினாள். 'கவலைப் படாதே. நீ ஆசிரமத்துக்கு பத்திரமாகப் போய்ச்சேர். பாஞ்சாலியைத் தூக்கிச் சென்றவர்களுக்கு மரணம் நிச்சயம்' என்று யுதிஷ்டிரர் அவளைத் திரும்ப அனுப்பி வைத்தார். பாண்டவர்கள் தேரில் பின்தொடர்ந்து சென்றபோது, சிறிது தொலைவில் தௌமியரைக் கண்டார்கள். 'நீங்கள் கவலைப்படாமல் இருங்கள். நாங்கள் போய்ப் பாஞ்சாலியை மீட்டு வருகிறோம்' என்று அவரைச் சமாதானப்படுத்தினார்கள்.

தேர்களை விரட்டியபடி செல்கையில் சற்றுத் தொலைவில் திரெளபதி, ஜயத்ரதனின் தேரில் இருப்பதைக் கண்டார்கள். பாண்டவர்கள் அளவற்ற கோபத்தோடு ஜயத்ரதனையும் அவனுடைய படைகளையும் துரத்தினார்கள். பாண்டவர்களுக்கும் ஜயத்ரதனுடைய வீரர்களுக்கும் கடுமையான போர் மூண்டது. பாண்டவர்கள், ஜயத்ரதனுடைய வீரர்களில் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றபடி அவனைப் பின்தொடர்ந்தார்கள். பாஞ்சாலி அவனுடைய தேரில் இருக்கிறாளல்லவா! கொஞ்ச நேரத்தில் ஜயத்ரதன், பாண்டவர்களை வெல்லமுடியாது என்பதை உணர்ந்துகொண்டான். உடனே திரெளபதியை விட்டுவிட்டு ஓடத் தொடங்கினான். யுதிஷ்டிரர், பாஞ்சாலியையும் தௌம்யரையும் நகுலனுடைய தேரில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

ஜயத்ரதனைக் கொன்றுவிட வேண்டும் என்ற வெறியோடு பீமன் தேரில் பின்தொடர்ந்தான். அப்போதே அவனைக் கொன்றிருந்தால், பிற்பாடு அபிமன்யு வதம் நடந்ததே, அதைத் தடுத்திருக்க முடியும். தர்மபுத்திரருக்கு எப்போதும்போல இரக்கம் மேலிட்டது. 'பீமா! ஜயத்ரதன் கெட்ட எண்ணத்தோடு பாஞ்சாலியைத் தூக்கிச் சென்றான் என்பது உண்மைதான். ஆனால் நம்முடைய தங்கையான துஸ்ஸலையை நினைத்துப்பார்! அவளையும் தாயார் காந்தாரியையும் நினைத்துப் பார்த்து, அவனைக் கொல்லாமல் விட்டுவிடு' என்று சொன்னார். திரெளபதியால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 'எனக்குப் பிரியமானதைச் செய்வதாக இருந்தால் அவனை இப்போதே கொன்றுவிடுங்கள். பிறன் மனைவியை அபகரித்தவனையும், பிறன் நாட்டை அபகரித்தவனையும் எந்தக் காரணத்துக்காகவும் விட்டுவிடக்கூடாது. அவனை இப்போதே கொன்றுவிடுங்கள்' என்று பீமனையும் அர்ஜுனனையும் பார்த்துச் சொன்னாள். பீமனும் அர்ஜுனனும் ஜயத்ரதனை விரட்டியபடி சென்றார்கள். யுதிஷ்டிரர், திரெளபதியோடும் தௌம்யரோடும் நகுல-சகதேவர்களோடும் ஆசிரமத்துக்குத் திரும்பினார்.

ஜயத்ரதனைத் துரத்திச் சென்ற பீமன், 'சிந்து தேசத்து அரசனே! இவ்வளவுதானா உன் வீரம்! அடுத்தவர் மனைவியை பலாத்காரமாகத் தூக்கிச் சென்றாயே, எங்கே, என்னிடம் அந்த வீரத்தைக் காட்டு பார்க்கலாம்' என்று பரிகசித்தான். ஜயத்ரதன் திரும்பிப் பார்க்காமல் ஓடினான். 'நில், நில்' என்று கத்திக்கொண்டே அவனை பீமார்ஜுனர்கள் பின் தொடர்ந்தனர். தேரைவிட்டு குதித்த ஜயத்ரதன் ஓடினான். அவனைப் பின்தொடர்ந்து வந்த பீமார்ஜுனர்களிடம் அகப்பட்டுக்கொண்டான். பீமன் அவனுடைய தலைமயிரைப் பிடித்துத் தூக்கி வீசினான். தூக்கிப் போட்டு மிதித்தான். பீமனுக்குக் கோபம் வந்தால் கேட்கவா வேண்டும்! ஜயத்ரதன் மூர்ச்சையானான்.

ஆனால், அர்ஜுனன் இருக்கிறானே! அவனுக்கு எவ்வளவு கோபம் எழுந்தாலும், அண்ணன் சொன்ன வார்த்தையை மீறமாட்டான். 'அண்ணா, இவனைக் கொல்ல வேண்டாம். அண்ணா தருமபுத்திரர் சொன்னதை எண்ணிப் பார்க்கவும்' என்று தடுத்தான். ஜயத்ரதனோ, வலி தாங்காமல் கதறுகிறான். அர்ஜுனனோ, பீமனைத் தடுக்கிறான். 'அப்பா அர்ஜுனா! அண்ணாவுக்குக் கருணை அதிகம். நீயும் அவரோடு சேர்ந்துகொள்வாய். எனக்கும் வேறுவழி தெரியவில்லை. உங்கள் இருவரையும் உத்தேசித்து இவனை விட்டுவிடுகிறேன்' என்று சமாதானமானான் பீமன். அப்படியும் கோபம் அடங்காமல், பிறைச்சந்திர வடிவம் கொண்ட ஒரு அம்பினால் மூர்ச்சையடைந்த ஜயத்ரதன் தலையைச் சிரைத்து, ஐங்குடுமிகளை உண்டாக்கினான்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline