|
|
|
நடந்துகொண்டிருந்த அவமதிப்புகளைப் பொறுக்கமுடியாத பீமனும் அர்ச்சுனனும் தங்களுடைய சினத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் தவித்தார்கள். பீமன் செய்த கோர சபதங்களைப் பார்த்தோம். அவனால் மட்டும் முடிந்திருந்தால் அப்போதே அங்கே பேரழிவு உண்டாகியிருந்திருக்கும். அவர்கள் இருவரையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது தருமபுத்திரன் மட்டும்தான். பாஞ்சாலி சபதம் செய்ததுமே அர்ச்சுனன் பொங்கியெழுந்தான். வியாசர் சொல்கிறார்: "அப்பொழுது திரெளபதி சொல்லியதைக் கேட்டுக் கோபமுற்ற தனஞ்சயன், கோபத்தினால் சிவந்த கண்களுடன் 'இத் தர்மராஜரான யுதிஷ்டிரர் என்னைத் தடுக்கிறார்' என்று சொன்னான். இவ்வாறு சொல்லி வீரனான ஸவ்யஸாசியானவன் (ஸவ்யஸாசி=அர்ச்சுனன்) கோபத்தாற் சிவந்த கண்களுடன் வில்லையெடுத்துக்கொண்டு எழுந்து அந்தச் சத்துருக்களைப் பார்த்தான். பிரளய காலத்தில் எல்லா லோகங்களையும் எரிக்கும் அக்னியைப் போலவும் தக்ஷ யாகத்தில் பசுக்களைக் கொல்ல யத்தனித்துக் கோபித்த ருத்திரரைப் போலவும் வில்லைக் கையில் பிடித்து, கொல்வதற்காகப் பலமுறை நோக்கிக்கொண்டு யுத்தத்திற்கு முயற்சியுள்ளவனாய் இருந்து அர்ஜுனனை அங்குள்ள அரசர்கள் அனைவரும் கண்டனர். அவ்வாறிருந்த அர்ஜுனனைக் கண்டு அங்குள்ள மனிதர்கள் விசனமுற்றனர். தனஞ்சயனுடைய பராக்கிரமத்தை அறிந்தவர் அனைவரும் அப்போது உயிரில் ஆசையை விட்டு இமைகொட்டாத கண்களோடு இறந்தவர் போலிருந்தனர். அர்ஜுனனையும் தர்மபுத்திரனையும் அரசர்கள் கண்ணெடுத்துப் பார்த்தனர்" (ஸபா பர்வம், த்யூத பர்வம், அத்: 93, பக். 303, 304) இந்தச் சமயத்தில் அர்ச்சுனனைப் பார்த்து பூமி நடுங்கியது; பறவைகள் பயந்து நடுங்கின; நட்சத்திரங்களும் திசைகளும் பிராகசிக்கவில்லை; சூரியனும் ஒளி மங்கினான் என்றெல்லாம் வியாச பாரதம் பேசுகிறது. தன்னை இதுவரையில் பலசமயங்களில் தடுத்த அர்ச்சுனனே கோபம் கொண்டதைப் பார்த்து பீமனுக்கும் மகிழ்ச்சி பொங்கியது. அவனும் யுத்தம் செய்வதில் விருப்பம் கொண்டான்.
இந்தச் சமயத்தில் தருமபுத்திரர் குறுக்கிட்டார். "எல்லை நீத்த உலகங்கள் யாவையும் என் ஒரு சொல்லினால் சுடுவேன்" என்று அனுமனிடத்திலே சொன்ன சீதாப்பிராட்டியைப் ஒத்த சொற்களைச் சொன்னார்: "தயை உள்ளவரும் மூத்தவரும் தர்மராஜாவுமான யுதிஷ்டிரர், 'அர்ஜுனா! அவசரமாகக் காரியம் செய்யாதே. கீர்த்தி அழியலாகாது. பாவஞ்செய்தவர்களாகிய இந்தச் சூதாட்டக்காரர்களை நான் எரித்துவிட முடியும். ஆனால் அசத்தியத்திற்கு அது மார்க்கம் என்று அறிந்ததனால் என் கோபம் அடங்குகிறது. பாண்டவனே! உலக நன்மைக்காக நீயும் இந்தக் கோபத்தை அடக்கு' என்று சொன்னார்." (மேற்படி, பக்: 304). பாஞ்சாலி சபதத்தைத் தொடரும் இப்பகுதி, பாஞ்சாலி சபதம் இடம்பெறாததைப் போலவே மும்பை, பெங்காலி முதலான வட இந்தியப் பதிப்புகளில் (North Indian Rescensions) இடம்பெறவில்லை. ஆகவே கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பிலும் இடம்பெறவில்லை. இதைத் தொடர்ந்து திருதிராஷ்டிரனுடைய வீட்டில் அக்கினிஹோத்ர சாலையில் நரி உரக்க ஊளையிட்டது; நாலு பக்கங்களிலும் கழுதைகளும் கொடிய பட்சிகளும் நரிகளுக்கு எதிராக ஒலித்தன. "தத்துவ ஞானியான விதுரரும் காந்தாரியும் வித்வானான வீஷ்ம துரோண கிருபர்களும் அந்த விகாரமான சப்தத்தைக் கேட்டு, 'சுபம் உண்டாக வேண்டும், சுபம் உண்டாக வேண்டும் என்று உரக்கக் கூறினர். பிறகு காந்தாரியும் எல்லாந் தெரிந்தவரான விதுரரும் அந்தக் கொடிய அபசகுனத்தைக் கண்டு துக்கத்துடன் திருதராஷ்டிர மகாராஜாவுக்குத் தெரிவித்தனர்" (மேற்படி, பக்: 305) என்ற இடத்திலிருந்து தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஒன்றுகூடுகின்றன. நடந்தது அனைத்தையும் காந்தாரியும் உடன் இருந்துதான் பார்த்திருக்கிறாள். ஆனால் அவளுக்கு (திருதிராஷ்டிரனுக்கு இருந்தைப் போல) இது எதிலும் உடன்பாடு இருந்திருக்கவில்லை. |
|
பாஞ்சாலியைப் பணயம் வைக்கும்போது மிகவும் சந்தோஷத்தோடு 'ஜயித்தாயிற்றா, ஜயித்தாயிற்றா' என்று கேட்டுக்கொண்டிருந்த, பிறகு நடந்தவற்றையெல்லாம் பிறர் கூறக் கேட்டுக்கொண்டிருந்த திருதிராஷ்டிரனுக்கு இப்போது அச்சம் உண்டாயிற்று. பீமார்ச்சுனர்களும் நகுல சகதேவர்களும் செய்த சபதங்களை அவனும் கேட்கத்தான் செய்தான். கூடவே பாஞ்சாலியும் சபதம் செய்திருக்கிறாள். போதாக்குறைக்கு இப்போது நரிகளும் கழுதைகளும் கழுகளும் பெருங்கூச்சலிடுகின்றன. இவை 'கொடிய அபசகுனங்கள்' என்பதை காந்தாரியும் அங்கிருந்த விதுர, பீஷ்ம, துரோண, கிருபர் உள்ளிட்ட அனைத்துப் பெரியோர்களும் எடுத்துச் சொல்லிவிட்டனர். இதன் பிறகு திருதராஷ்டரனுடைய பேச்சு எப்படியெல்லாம் வெளிப்படுகிறது என்பதைப் பாருங்கள்:
"அதன் பிறகு திருதராஷ்டிரன், 'புத்தியில்லாத துரியோதனா! அயோக்கியா! கௌரவர்களின் சபையில் ஒரு பெண்ணை - அதிலும் தர்மபத்தினியான திரெளபதியை - பார்த்துப் பரிகாசமாகப் பேசினாய். அதனால் கெட்டுப் போகிறாய்' என்று சொன்னான்." இவை உண்மையில் அப்படிப் பரிகாசமாகப் பேசியும் அவமதித்தும் செய்த நேரத்தில் வெளிப்பட்டிருக்க வேண்டிய சொற்கள். இப்போது வெளிப்படுகின்றன! சூதிலே பாஞ்சாலியைப் பணயம் வைத்த சமயத்திலேயே 'ஆட்டம் போதும்' என்று திருதராஷ்டிரன் அறிவித்திருந்தால்கூட அங்கேயே ஒரு முற்றுப்புள்ளி விழுந்திருக்கும். அப்போது இவன் ஆர்வம் மீதூர 'ஜயித்தாயிற்றா, ஜயித்தாயிற்றா' என்றல்லவா கேட்டுக்கொண்டிருந்தான்! அன்றைய தினத்தில் - அன்று மட்டுமல்லாமல் மிகப்பல சமயங்களில்-அவனுடைய உள்ளத்தின் போக்கை யாரேனும் graph வரைந்து பார்த்தால் அது இதயத்தை ECG எடுத்ததைப்போல ஏறியும் உடனே சரிந்தபடி இறங்கியும் மீண்டும் ஏறியும் என்று தொடர்ச்சியாகச் செல்லும் வரைபடமாகத்தான் காட்சியளிக்கும். அதுவும் இப்படிப்பட்ட தெளிவில்லாதவனின் இதயத்தை ECG எடுத்தால் எப்படி இருக்குமோ!
இத்தனைக்கும் பின்னால் இவனை 'நல்ல புத்தியுள்ளவன்' என்று வேறு வியாசர் சொல்கிறார்! அச்சத்தால் குலைந்துபோன திருதராஷ்டிரன் இப்போது பாஞ்சாலியைப் பார்த்துப் பேசுவதைப் பாருங்கள்: "நல்ல புத்தியுள்ளவனும் உண்மையை அறிந்தவனுமான திருதராஷ்டிரன் இவ்வாறு சொல்லித் தன் புத்திரர்களுக்கு அபாயம் நேர்ந்திருப்பதை புத்தியினால் ஆராய்ந்து அவர்களின் நன்மையைத் தேடி பாஞ்சால ராஜன் மகளான கிருஷ்ணையை நோக்கி, இன்சொல்லை முன்னிட்டு, 'பாஞ்சாலீ! தர்மத்தையே தலைமையாகக் கொண்டவளும் கற்புள்ளவளுமாகிய நீ என் மருமக்களுக்குள் சிறந்தவள் ஆகையால் உனக்கு என்ன வரம் வேண்டுமோ அதை என்னிடம் கேள்' என்று சொன்னான்." (மேற்படி, பக்: 305). இதை கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்போடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உள்ளர்த்தம் இன்னும் தெளிவாகப் புலப்படும்: 'Thou wicked-minded Duryodhana, thou wretch, destruction hath already overtaken thee when thou insultest in language such as this the wife of these bulls among the Kurus, especially their wedded wife Draupadi. And having spoken those words, the wise Dhritarashtra endued with knowledge, reflecting with the aid of his wisdom and desirous of saving his relatives and friends from destruction, began to console Krishna, the princess of Panchala, and addressing her, the monarch said,-'Ask of me any boon, O princess of Panchala, that thou desirest, Chaste and devoted to virtue, thou art the first of all my daughters-in-law.)
அச்சம் ஏற்பட்டபிறகு, அன்பினால் கொடுப்பதைப் போல 'வரம்' கொடுக்க முற்படுகிறான்!
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|