|
|
|
|
பாண்டவர்களில் பீமனை மட்டுமே கொல்வது என்றுதான் முதலில் தீர்மானித்தார்கள். அதாவது பாண்டு இறந்து, பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தை வந்தடைந்த ஆரம்ப காலத்திலேயே அளவற்ற வலிமையும் ஏராளமான விளையாட்டுத்தனமும் நிறைந்த பீமனைக் கொல்ல ரகசியமாகத் திட்டமிட்டார்கள். துரியோதனனுடைய தம்பியர் மரங்களில் ஏறும்போது, மரங்களை உலுக்கி, அவர்களைக் கீழே விழச்செய்வது, நதியில் நீந்தும்போது பத்துப்பேரைக் கொத்தாகப் பிடித்து நீருக்கடியில் அமுக்கி, அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போது விடுவது என்றெல்லாம் பீமன் செய்த சிறுவயது விளையாட்டுகள் (அப்போது பீமனுக்கு வயது 15) துரியோதனனுக்கு எரிச்சலையும், பீமனுடைய வலிமையின்மேல் பொறாமையையும் ஏற்படுத்திய காரணத்தால் இந்தச் சதித்திட்டம் வடிவெடுத்தது. பீமனுடைய விளையாட்டுகளைப் பார்த்த துரியோதனன் நினைக்கிறான்: "இந்தக் குந்தியின் புத்ரனான வ்ருகோதரன் பலவான்களுள் மிகச்சிறந்தவன்; குந்தியின் புத்ரர்களின் நடுவாம் இவனை மோசத்தினால் ஜயிக்க வேண்டும். இவன் பலசாலி; அதிக சக்தியுள்ளவன்; மிகுந்த சூரத்தன்மையுள்ளவன். பீமன் ஒருவனாக நம் அனைவரையும் விரோதிக்கிறான். அவனை நகரத்தின் தோட்டத்தில் தூங்கும்போது கங்கையில் தள்ளிவிடுவோம். அதன்பிறகு, அவன் தமையனான யுதிஷ்டிரனையும் பிடித்துச் சிறையிற் போட்டு, நான் பூமியை ஆள்வேன் என்று நிச்சயம் செய்துகொண்டு, அந்தப் பாவியான துரியோதனன், அப்போது எந்தவேளையும் மஹாத்மாவான பீமனுக்காக ஸமயம் பார்த்துக் கொண்டிருந்தான்." (ஆதிபர்வம், ஸம்பவபர்வம்; அத்: 137; பக்: 510). துரியோதனன் இப்படியெல்லாம் ஆட்சியைப்பற்றி எண்ணமிடும்போது அவனுக்கும் பதினைந்து, பதினாறு வயதுதான்.
விஷ மோதகம் எனப்படும் இந்தச் சம்பவம் பிரமாணகோடி (Pramanakoti) என்ற இடத்தில் நடைபெறுகிறது. இந்தச் சம்பவம்பற்றி பலருக்கும் தெரியும், அப்படித் தெரிந்திருக்கும் சம்பவங்களுக்கும், வியாச பாரதம் சொல்லும் சம்பவங்களுக்கும் அதிக வேறுபாடு இல்லாததால் அந்த விவரங்களைத் தவிர்க்கிறேன். இதிலே பலருக்குத் தெரியாத ஒரேயொரு விவரத்தைமட்டும் இங்கே சுட்டுகிறேன். இந்தச் சதித்திட்டத்தை தீட்டியவர்கள் யார்யார் என்று இதே அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது: "ராஜரே! மற்றொருநாள், துரியோதனன் பீமஸேனனைக் கொல்லக் கருதி மந்திரியாகிய சகுனியுடன் ஆலோசனை செய்தான். இரவும் பகலும் ஓயாமல் சிந்தித்துக்கொண்டு தூங்காமலிருந்தான். இவ்வாறு துரியோதனனும், கர்ணனும், ஸுபலன் புத்திரனான சகுனியும் அனேக உபாயங்களினால் அந்தப் பாண்டவர்களைக் கொல்லக் கருதினர்."
சற்றுப் பொறுங்கள். அங்கே துரியோதனனுக்கு அடுத்ததாக ஒரு பெயர் சொல்லப்படுகிறதே, யார் அது? கர்ணன்! கர்ணன் தர்மபுத்திரனைவிட 16 வயது பெரியவன். தர்மபுத்திரனுக்கு முப்பத்தைந்து வயதில் அரக்குமாளிகைத் திட்டத்தைத் தீட்டும்போது கர்ணன் பக்கத்திலிருந்தான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தர்மனுக்கும் துரியோதனனுக்கும் பதினாறு, பதினைந்து வயதான காலகட்டத்திலேயே பீமனைக் கொல்லவும், தர்மனை சிறையிலடைத்து ஆட்சியை வசப்படுத்திக்கொள்ளவும் தீட்டப்பட்ட சதித்திட்டத்தில் கர்ணனுடைய பெயர் தென்படுகின்றது என்றால், எங்கோ தவறிருக்கின்றதோ? துரோணரிடம் பெற்ற பயிற்சிகளை பாண்டவர்களும் கௌரவர்களும் மக்கள் முன்னிலையில் செய்துகாட்டிய சந்தர்ப்பத்தில்தானே கதைக்குள் கர்ணனுடைய பிரவேசம் நடப்பதாக அறிந்திருக்கிறோம்? கர்ணன் திரைப்படம் அப்படித்தானே சித்திரிக்கிறது? எனவே, இங்கே கர்ணனுடைய பெயர் காணப்படுவது சரியா, தவறா?
இந்தக் கேள்விக்குள் போவதற்கு முன்னால் ஒன்று சொல்லிவிடுகிறேன். கர்ணனுக்குக் கர்ணன் என்ற பெயர் வந்தது எப்படி? பாண்டவர்களுடைய வனவாச காலத்தின் சுமார் 12ம் ஆண்டில் இந்திரன் கர்ணனிடம் அவனுடைய கவசகுண்டலங்களைப் பெற்றபோது (இதைக் கொடுத்ததற்காக இந்திரனிடமிருந்து சக்தியாயயுதத்தைக் கர்ணன் பெற்றான். விவரங்களுக்குச் சற்றுப் பொறுத்துப் போவோம்.) அப்படிக் கொடுத்ததால் அவனுக்குக் கர்ணன் என்ற பெயர் ஏற்பட்டது. (கர்ணன் என்ற பெயருக்குப் பலவிதமான விளக்கங்கள் இருந்தாலும், இதுதான் வியாச பாரதம் சொல்லும் விளக்கம்.) "கர்ணனுக்கு வஸுஷேணனென்ற பெயர் முன்னே சொல்லப்பட்டது. கவசகுண்டலங்களை அறுத்ததனால் கர்ணன் என்றும் வைகர்த்தனனென்றும் அவன் பெயர் பெற்றான்" என்று ஆதிபர்வம், 120வது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. இதன் அடிக்குறிப்பில், 'க்ருணு, க்ரதீ என்ற இரண்டு பகுதிகளும் சேதிப்பது (அறுப்பது) என்ற பொருளுள்ளவை. அவற்றிலிருந்து கர்ணன், வைகர்த்தனன் என்ற பெயர்கள் முறையே வந்தன' என்று சொல்லப்படுகிறது. வனபர்வம் (பாகம் 2ல்) 311ம் அத்தியாயமான குண்டலாஹரண பர்வத்தில், 'அங்கத்தினின்று திவ்யகவசத்தை அறுத்து (ரத்தத்தால்) நனைந்திருந்த அந்தக் கவசத்தை அப்படியே இந்திரனுக்குக் கொடுத்தான். அப்படியே அந்தக் குண்டலங்களையும் அந்தக் காதினின்று அறுத்துக் கொடுத்தான்; அந்தச் செய்கையினால் கர்ணன் ஆனான்" என்று இது இன்னொருமுறையும் சொல்லப்படுகிறது. இப்படி வேறுசில இடங்களிலும், கர்ணன் என்பதற்குப் பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது. |
|
இந்தச் சம்பவம் நிகழ்ந்தது பாண்டவர்களுடைய வனவாச காலத்தில் 12ம் ஆண்டு முடியப்போகும் தருணத்தில். பாண்டவர் வனவாசம் தொடங்கியபோது தர்மபுத்திரனுக்கு வயது 76 ஆண்டுகள், 10 மாதம் 18 நாள் என்று கணக்கிடுகிறார் டாக்டர் K.N.S. பட்நாயக். அப்படியானால் வனவாசத்தின் 12ம் ஆண்டில் தருமருக்கு 88 வயது. அவரைவிட 16 ஆண்டுகள் பெரியவனான வஸுஷேனனாகிய கர்ணனுக்கு 104 வயது! கர்ணன் என்ற பெயர் ஏற்பட்டதே இவ்வளவு காலம் கழித்து என்றாலும், பாரதத்தில் ஆரம்பத்திலிருந்தே அவன் கர்ணன், வஸுஷேனன், வைகர்த்தனன், ராதேயன் என்று பலவிதமான பெயர்களால் குறிக்கப்படுகிறான். இந்தக் காலக்கிரமப் பிழைக்குக் காரணம், பாரதம் ராமாயணத்தைப் போல நாயகனின் சமகாலத்தில் சொல்லப்படவில்லை. அர்ச்சுனனுடைய கொள்ளுப் பேரனான ஜனமேஜயர் காலத்தில் (அர்ச்சுனன், அபிமன்யு, பரீட்சித்து, ஜனமேஜயர்). அதாவது பாரதமெல்லாம் முடிந்து நூறாண்டுகளுக்கும் பிறகு. ஆகவே பெயர்களிலும், கதையோட்டத்திலும் சம்பவங்கள் முன்னும் பின்னுமாக வந்து விழுந்திருக்கும். இவற்றைக் காலக் கண்ணோட்டத்தோடு மிக எச்சரிக்கையாக எடுத்துப் பொருத்திப் பார்த்தால்தான் சரியாக விளங்கிக்கொள்ள இயலும்.
இப்போது, பீமனுக்கு பிரமாணகோடியில் நஞ்சு கொடுக்கப்பட்ட (அதையடுத்து, தருமனைச் சிறையடைப்பதாகத் தொடர இருந்த) சதித்திட்டத்தில் கர்ணனின் (அதாவது இந்தச் சமயத்தில் ராதேயன், வஸுஷேனன் என்றறியப்பட்டவனின்) பங்கு எவ்வாறு இடம்பெற்றது என்று தேடினால், யுத்த களத்தில் தேர்ச்சக்கரம் பூமியில் புதைந்துகொண்ட சமயத்தில், தான் வேறொரு செயலில் ஈடுபட்டிருக்கும்போது தன்னோடு போர் தொடுப்பது தர்மமன்று என்று கர்ணன் பேசியதும் இடைமறித்து, 'இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த தர்மம் எங்கே போனது, அந்தச் சமயத்தில் இந்த தர்மம் எங்கே போனது' என்று வரிசையாகக் கேட்கும் கேள்விகளிலும் பீமனுக்கு நஞ்சு கொடுத்ததில் கர்ணனுடைய பங்கைக் கண்ணன் சுட்டிக் காட்டுகிறான். கண்ணனுடைய நீளமான குற்றச்சாட்டுப் பட்டியலில் இந்தக் குறிப்பிட்ட இடத்தைப்பற்றி இப்படி வருகிறது: "அரசனான துரியோதனன் உன்னுடைய ஸம்மதத்தின்மேல் பீமசேனனை ஸர்ப்பங்களாலும், விஷங்கலந்த போஜனங்களாலும் கொல்லமுயன்றான் அன்றோ? அப்போது உனக்குத் தர்மம் எங்கே போய்விட்டது?" (கர்ண பர்வம், அத்: 98; பக்: 442) கிஸாரி மோஹன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு இது: When the Kuru king (Duryodhana), acting under thy counsels, treated Bhimasena in that way with the aid of snakes and poisoned food, whither had this virtue of thine then gone?
அப்படியானால், கர்ணன் நாம் நினைக்கும் காலத்துக்கு வெகுமுன்னதாகவே துரியோதனனுடைய துணைவனாக இருந்திருக்கிறான், பாண்டவர்களைக் கொல்லத் தீட்டப்பட்ட பலவிதமான சதித்திட்டங்களின் அடிப்படை வரைபடத்தையே போட்டுக் கொடுத்திருக்கிறான் என்பதுதான் உண்மையான நிலை. கர்ணனைப்பற்றி இன்று நிலவிவரும் பெரும்பாலான அபிப்பிராயங்களில் பல வில்லி பாரதத்திலிருந்து உருவானவை. வில்லியின் பாத்திரப் படைப்பு, வியாசரின் பாத்திரப் படைப்பிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. வால்மீகியிலிருந்து கம்பன் பற்பல சம்பவக் கோவைகளில் மாறுபட்டிருந்தாலும், பாத்திரப் படைப்பில்—கும்பகர்ணன் ஒருவனைத் தவிர—வேறு யாரையும் மூலத்திலிருந்து அவன் வேறுபடுத்திக் காட்டவில்லை. வில்லி அடிப்படையையே மாற்றியிருக்கிறார். (சில இடங்களை சம்பந்தமேயில்லாமல் தேவி பாகவதத்திலிருந்து எடுத்தும் ஆண்டிருக்கிறார்!) வியாச பாரதமில்லாமல் ஜைமினி பாரதத்தில் உள்ள சித்திரிப்புகள் கர்ணனைக் கொடையாளியாகக் காட்டுகின்றன. வியாச பாரதத்தில் இவ்வாறு காட்டப்படவில்லை. கர்ணனுடைய கொடைக்கு வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றையெல்லாம் கர்ணனுடைய பாத்திரப் படைப்பைப் பார்க்கும்போது பார்க்கலாம்.
இப்போது, இந்தச் சமயத்தில் கர்ணன் இங்கே எப்படி வந்தான் என்ற கேள்விக்கு விடை காண்போம்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|
|