Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அமங்கலமான மங்கலம்
- ஹரி கிருஷ்ணன்|ஜூலை 2015||(4 Comments)
Share:
வாரணாவதத்துக்குப் புறப்பட்ட பாண்டவர்களிடம் மகிழ்ச்சி தென்படவில்லை என்பதைப் பார்த்தோம். மாறாக 'துக்கத்துடனேயே' போனார்கள் என்ற குறிப்பு கிடைக்கிறது. இங்கே ஹஸ்தினாபுரத்து மக்களிடமும் தாயர் முதலானவர்களிடமும் விடைபெறும்போது தர்மபுத்திரன் சொல்கிறான்: "த்ருதிராஷ்டிரர் கட்டளையினால், நாங்கள் இனத்தாருடன்கூட, அழகியதும் ஜனங்கள் நிரம்பியதுமாகிய அந்த வாரணாவதத்துக்குப் போகிறோம். நீங்களெல்லோரும் உள்ளமகிழ்ந்து எங்களுக்கு நல்ல சொற்களைச் சொல்லுங்கள். உங்கள் ஆசீர்வாதங்களினால் காப்பாற்றப்பட்ட எங்களைத் துன்பம் பீடிக்காது,' (ஆதி பர்வம், ஜதுக்ருஹ பர்வம், அத்: 155, பக்: 567) 'துக்கத்துடன் புறப்பட்டார்கள்' என்ற குறிப்போடு, இந்த வார்த்தைகளையும் இணைத்துப் பார்த்தால், தர்மபுத்திரன் ஏதோ ஆபத்தை எதிர்பார்த்தே கிளம்பியிருக்கிறான் என்பது தெளிவாகிறது. 'திருதிராஷ்டிரனுடைய கட்டளையால்' என்று அவன் சொல்வதால், 'எங்களால் இந்தக் கட்டளையை மீறமுடியவில்லை' என்ற குறிப்பும் கிடைக்கிறது. இதை அடுத்ததாக விரிப்போம். இதற்குமேல் இந்த அத்தியாயத்தின் முடிவு வாக்கியமாக வைஸம்பாயனர் இவ்விதம் சொல்கிறார்: "ராஜ்யம் திரும்பவும் கிடைக்கும்படி ஆசீர்வாதம் செய்யப்பட்ட பாண்டவர்கள் உடனே எல்லாக் காரியங்களையும் முடித்துக்கொண்டு வாராணாவதத்துக்குப் புறப்பட்டார்கள்". (The Pandavas, having performed propitiatory rites for obtaining (their share of) the kingdom, and finishing their preparations, set out for Varanavata. கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்ப்பு.). இந்த மிகமுக்கியமான குறிப்பு, 'தமக்கு இப்போது (தருமனுக்கு இளவரசு பட்டம் சூட்டப்பட்டுள்ளதால்) கிடைத்துள்ள அரசுரிமைக்கு ஏதோ ஒருவகையில் பாதிப்பு ஏற்படப் போகிறது' என்ற எண்ண ஓட்டம் பாண்டவர்களுக்கு இருந்திருக்கிறது என்ற கருத்துக்கு வலுவூட்டுகிறது. இதுவரையிலும் 'தாங்கள் அங்கே கொல்லப்படவிருக்கிறோம்' என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அரசுரிமைக்கு ஏதோ தடையேற்படப் போகிறது என்று மட்டுமே நினைத்திருக்கலாம்.

இவர்கள் இங்கே கிளம்பிக் கொண்டிருக்கும்போது, துரியோதனன், புரோசனன் என்னும் தன்னுடைய அமைச்சனைத் தனியாக அழைத்து, அரக்கு மாளிகையை நிர்மாணிக்க உத்தரவிடுகிறான். "புரோசனா! உன்னைக்காட்டிலும் நம்பகமானவர்கள் எனக்கு யாருமில்லை. திருதிராஷ்டிரர் கட்டளையினால் பாண்டவர்கள் வாராணாவதத்துக்குக் கிளம்புகிறார்கள். அவர்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியோடும் இருப்பார்கள். நீ இப்போதே தேரேறி வாரணாவதத்துக்குப் போ. என் எதிரிகளைக் களைவதற்கான உபாயங்களை மேற்கொள்" என்று சொல்கிறான். அதாவது, பாண்டவர்கள் துக்கத்துடன், ஆனால் அதை மறைத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார்கள் என்பது அவனுக்கோ மற்றவர்களுக்கோ தெரியாது. மாளிகையைக் கட்டும்போது பயன்படுத்த வேண்டிய இடுபொருள்களையும் துரியோதனன் விவரிக்கிறான். 'சணல், குங்கிலியம் முதலான தீப்பிடிக்கத்தக்க சரக்குகள் இவ்வுலகத்தில் என்னென்ன உண்டோ அவற்றையெல்லாம் அதில் சேர்ப்பிக்கக் கடவாய். விழல், மெழுகு, நெய், எண்ணெய், கொழுப்பு, மிகுதியான அரக்கு, மரங்கள் இவற்றையெல்லாம் அந்தக் கட்டிடத்தில் எல்லாப்புறங்களிலும் சேர்ப்பிக்கக் கடவாய். இவற்றைப் பூசிய (உத்தரங்கள் முதலிய) பெருமரச் சாமான்களைப் பாண்டவர்களும் மற்ற மனிதர்களும் பரிசோதித்துப் பார்த்தபோதிலும் அஃது அக்கினிக்காகச் செய்த காரியமென்று கண்டுபிடிக்காமலிருக்கும்படி அந்தக் கட்டிடத்தில் சீக்கிரம் சேர்ப்பிக்கக் கடவாய்.' (மேற்படி, அத்: 156; பக்: 588). அதாவது, எளிதில் தீப்பிடிக்கும் எல்லாவற்றையும் மண்ணோடு கலந்து சுவர்களை அமைத்து, உத்தரம் முதலான மரச்சாமன்களுக்கும் இந்தப் பூச்சைக் கொடுக்கவேண்டும். பார்க்கும்போது அது யாராலும் உணரமுடியாததாக இருக்கவேண்டும். துரியோதனன் அமைச்சன் புரோசனன் மூலமாக இதைச் செய்விக்கிறான்--பாண்டவர்கள் வாராணாவதத்தை அடைவதற்கு முன்பாகவே. தீயிட்டு எரிக்க அனுமதி வாங்கியாயிற்று அல்லவா, எனவே இந்தத் திட்டத்தைப்பற்றி திருதிராஷ்டிரனிடம் துரியோதனன் சொல்லவில்லை. திருதிராஷ்டிரனுக்கு, இது தெரியும். எப்படிச் செய்யப்போகிறான் என்பதுதான் தெரியாது.
பாண்டவர்கள் ஒவ்வொருவரிடமாக விடைபெற்றுக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வோரிடத்திலும் 'துக்கத்தோடிருந்தனர்' என்ற குறிப்பு தவறாமல் இடம்பெறுகிறது. இது துரியோதனன் கண்ணுக்குத்தான் தெரியவில்லையே தவிர, இப்போது நகரமாந்தர்கள் உணரத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்குள்ளே, "இந்தப் பாண்டவர்கள் என்ன தீங்கு செய்தார்கள்? இவர்கள்மேல் என்ன தவறிருக்கிறது?" என்று பேசிக்கொள்கிறார்கள். "அவர்கள் தந்தையின் ராஜ்யத்தை அடைந்திருப்பதை த்ருதராஷ்டிரன் பொறுக்கவில்லை. மிக்க பாபமான இந்தச் செய்கையை பீஷ்மர் எவ்வாறு ஒப்புக்கொள்கிறார்? அவர்களை நிஷ்காரணமாக நகரத்தைவிட்டு வெளிப்படுத்துவதை (வெளியேற்றுவதை) அவர் அங்கீகரிக்கிறாரே" என்றெல்லாம் பேசத் தொடங்கினார்கள். இவர்களை நகரத்தைவிட்டு வெளியேற்றுவதை பீஷ்மரும் அங்கீகரிக்கிறாரே' என்று மக்கள் பேசுவதால், இது ஏதோ ஒரு சிறிய உல்லாசப்பயணம் என்று அவர்கள் நினைக்கவில்லை, நாடுகடத்தல் என்றே உணர்ந்திருந்தார்கள் என்பது தெளிவாகிறது. தருமபுத்திரர் அவர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் சொன்னார்: "பிதாவும் பூஜிக்கத்தக்கவரும் பெரியவரும் சிறந்தவருமாகிய ராஜா என்ன சொல்லுகிறாரோ அதை நாங்கள் சங்கிக்காமல் (சந்தேகப்படாமல்) செய்யவேண்டுமென்பது எங்களுடைய விரதம். எங்களுக்கு வேண்டியவர்களான உங்களை வலம்வந்து நமஸ்கரிக்கிறோம். எங்களை ஆசீர்வதித்துவிட்டு அவரவர் வீடுகளுக்குச் செல்லுங்கள். (அத்: 157; பக். 599). பாண்டவர்கள் தமது 'எங்கள் தந்தை எங்களுக்கு என்ன சொல்கிறாரோ அதைச் செய்யவேண்டியது எங்கள் கடமை' என்று சமாதானமாகச் சொல்லிவிட்டுத்தான் புறப்பட்டார்களே தவிர, தங்கள் உள்ளத்தில் இருந்த ஐயத்தை வெளியிடவில்லை. இதை ஏனோ நாடுகடத்தல் என்று எந்தப் பதிப்பிலும் குறிப்பிடுவதில்லை. மேற்படிக் குறிப்புகளாலும், இதை exile என்று கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்த்திருப்பதாலும் மட்டுமே அறியமுடிகிறது. அதாவது வெளிப்படையாக அறிவிக்கப்படாத நாடுகடத்தல்.

இப்படி விடைபெற்றுக்கொள்ள விதுரனிடம் போகிறார்கள். அவருக்கு நடக்கப்போவது நன்றாகவே தெரிந்திருந்தது. மற்றவர்கள் உணர்ந்துகொள்ளாத வகையில், "எதிரியின் புத்தியை எவன் அறிகிறானோ அவன் அதனை அறிந்து, ஆபத்தைத் தாண்டத்தக்க உபாயத்தைச் செய்யவேண்டும். உலோகத்தால் செய்யப்படாமலேயே தேகத்தைச் சேதப்படுத்தும் கூர்மையான ஆயுதத்தை அறிந்து, அதைத் தடுக்கும் உபாயத்தையும் அறிந்த ஒருவனைப் பகைவர்களால் கொல்லமுடியாது. குளிரைப் போக்கக்கூடிய ஒன்று (நெருப்பு என்பது குறிப்பு) காடுகளில் வளைகளுக்குள் பதுங்கியிருக்கும் எலி முதலானவற்றை அழிக்காது. முள்ளம்பன்றி, சுரங்கத்தில் புகுந்துகொண்டு தீயிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும். நடந்து போகிறவன் வழிகளை அறிந்துகொள்வான்; நட்சத்திரங்களால் திசைகளை அறிவான்" என்றெல்லாம் சொல்லி (இது 157ம் அத்தியாயத்திலுள்ள விதுரர் பேச்சின் சுருக்கம்.) பாண்டவர்களுக்குத் தீயால் ஆபத்து நேரப்போவதையும், சுரங்கப்பாதையால் அந்த ஆபத்தைக் கடக்க முடியுமென்பதையும், தப்பித்துப் போனால், மறைந்து வாழவேண்டியிருக்கும் என்பதையும், நட்சத்திரங்களின் மூலமாக திசைகளை இரவிலும் அறியமுடியுமென்பதையும் சொல்லி, இரவுபகலாகப் பாண்டவர்கள் மறைந்து வாழநேரும் என்பதையும் குறிப்பால்உணர்த்தினார். இப்போதுதான் தமக்கு வரவிருக்கும் ஆபத்தின் தன்மையைப் பாண்டவர்கள்--குறிப்பாக தர்மபுத்திரன்--உணர்கிறான், உணர்கிறார்கள்.

தீப்பற்றிக் கொள்ளும் என்பது பார்வைக்குத் தெரியாதவண்ணம் கெட்டிக்காரத்தனமாக மாளிகையைக் கட்டிய துரியோதனன், வாசனையால் எரிபொருள்களை உணரமுடியும் என்பதை கவனிக்கத் தவறிவிட்டான். ஜதுக்ருஹம் 'மங்களம்' என்று பெயரிடப்பட்டிருந்தது. மங்களமென்ற பெயரையுடைய அமங்கலமான வீட்டை புரோசனன் அவர்களுக்குக் காட்டினான் என்று வைசம்பாயனர் சொல்கிறார். இதைத்தான் மங்களம் பாடுதல் என்று தற்காலத்தில் சொல்கிறார்கள் போலிருக்கிறது!

அடுத்து அரக்குமாளிகை வாசம், புரோசனனுக்குத் தெரியாமல் சுரங்கம் வெட்டியது எல்லாவற்றையும் பார்ப்போம். துரியோதனன் எத்தனை வகைகளில் பாண்டவர்களை அழிக்க இளமையிலேயே முயன்றிருக்கிறான் என்பதையும் பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline