|
|
|
|
எல்லாக் கவிஞர்களின் வாழ்க்கையிலும் ஒரு காலகட்டம் வரும். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில், அவனுடைய படைப்பாற்றல் எங்கோ பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும். 'தான் ஒரு கவிதானா, எழுத்தன்தானா' என்ற ஐயமே அவனுக்கு ஏற்படும் அளவுக்கு மனம் படைப்புமுகத்தில் (creativeness) நில்லாமல், எங்கெங்கோ சஞ்சலிக்கும். Mind goes into a blank mode. இன்ன காரணத்தால்தான் இப்படி நேருகிறது என்பதை நிச்சயிக்க முடியாது. ஆனால் கவிதை, எழுத்து, கலை என்று எந்தத் துறையில் இருப்பவர்களானாலும் தங்கள் வாழ்வில் இப்படி ஒரு வறண்ட காலத்தைக் கடந்தே வந்திருப்பார்கள்; இதுவரை கடக்காதவர்கள், இனிமேல் கடப்பார்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
பாரதிக்கும் அப்படிப்பட்ட கவிவறட்சிக் காலகட்டம் ஒன்றிருந்தது. பாரதி 'காந்திமதி நாதனைப் பார்; அதி சின்னப் பயல்' என்று 13-15 வயதில் பாடிய பாடலைக்கூடத் தேடி எடுத்துவிட்டார்கள்; அதன் பிறகு பதினைந்து வயதில் (1897) எட்டயபுரம் ஜமீந்தாரருக்கு எழுதிய விண்ணப்பக் கவிதையையும் தேடிப் பதிப்பித்துவிட்டார்கள். இந்த 1897ல் இயற்றப்பட்ட கவிதைக்குப் பிறகு நமக்குக் கிட்டியிருக்கும் பாரதியின் முதல் கவிதை (1898ல் இயற்றப்பட்ட இளசை ஒருபா ஒரு பஃது நீங்கலாக) 'தனிமை இரக்கம்' என்ற தலைப்பில் விவேகபாநுவில் வெளியிடப்பட்ட கவிதைதான். வெளியிடப்பட்ட ஆண்டு 1904. இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் என்ன எழுதினான் என்பது தெரியவில்லை; கிடைக்கவில்லை. 1898ல் தந்தையார் மறைவு; 1902ல் எட்டயபுரம் ஜமீந்தாரருக்குப் 'பத்திரிகை வாசித்துக் காட்டும்' பணி. அந்தச் சமயத்தில் ஏதோ ஒரு கசப்பான சம்பவம் நடந்திருக்கிறது. இந்த அனுமானத்துக்கான பிரமாணத்தை சற்றுப் பொறுத்து தருகிறேன். 1903ல் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர். 1904ல் சுதேசமித்திரனில் பணி. தந்தையின் மரணத்துக்குப் பிறகோ, அல்லது அதற்கு முன்னமேயோ, கவிதை இயற்றுவது என்பதையே பாரதி மறந்திருந்தான்; 'இனி தனக்குக் கவிதை இயற்றும் ஆற்றல் இல்லை' என்ற மனோபாவத்துக்கு வந்துவிட்டிருந்தான். பாரதியின் கவிதைகளே இதற்குச் சான்றளிக்கின்றன.
விவேகபாநுவில் 1904ம் ஆண்டு வெளிவந்த தனிமை இரக்கம் என்ற சானெட் வடிவப் பாடல் எதைப் பற்றியது? 'தனிமை இரக்கம்'. காதலனையோ காதலியையோ பிரிய நேர்ந்தால் ஏற்படும் தனிமையும்; அது குறித்த தன்னிரக்கமும். தனிமை என்றால், காதலியைப் பிரிந்த தனிமை என்று நான் சொல்லவில்லை. பாரதியின் கவிதை சொல்கிறது. கடுமையான புலவர் நடையில் இருப்பதால் அந்தப் பாடலின் பொருளை உரைநடையில் சொல்கிறேன். “என் அன்புக்கினியவளே! உன்னோடு நான் குலவியும், கலவியும் எவ்வளவு நாள் கழித்திருப்பேன்! (இன்று உன்னை விட்டுப் பிரிந்து உனக்கும் எனக்கும் இடையே) எண்ணற்ற யோசனைத் தொலைவு வந்துவிட்டேன். நமக்கிடையே இன்று, (கடக்க அரிதாகிய) குன்றங்களையும், பரந்து விரிந்த நீர்த்தடங்களையும் உண்டாக்கி வைத்திருக்கிற விதியை நினைத்தால், பாவியாகிய என் மனம் பகீரெனப் பதைப்படைவது என்ன அரிதான ஒன்றா? (கடலில் மிதக்கின்ற) சிறிய மரக்கலத்துக்குக் கலங்கரை விளக்கம் கண்ணில் தென்பட்டாலும், அந்தக் கலங்கரை விளக்கத்துக்கும் இந்த மரக்கலத்துக்கும் ஆயிரங்கோடி காதம் தொலைவு இருக்குமானால் (எப்போது கரையைப் போய் அடைவோம் என்பது தெரியாமல் துடித்துப் போகின்ற படகோட்டியைப் போன்ற மனநிலையிலல்லவா) நான் துடித்துக் கொண்டிருக்கிறேன்! என்னுடைய காதற்பேட்டைப் பிரிந்து நான் இங்கே மலைபோல அசைவற்றுக் கிடக்கின்ற நிலையை, ஐயா சிவபெருமானே, அவளுக்கு என் மனத்தில் உண்டாகியிருக்கின்ற இந்த மயக்கத்தையும் (துயரத்தையும்) யாரால் எடுத்துச் சொல்ல முடியும்?”
கவிதையைத் தொலைத்த நாட்களை 'முடம்படு தினங்காள்' என்ற அரிய ஆட்சி, அடிக்கடிப் பலரால் மேடைகளில் மேற்கோள் காட்டப்பட்டு, இடம் பொருள் ஏவல் அறியாத காரணத்தால், பொருளை உணர்ந்தும் உணரமாட்டாத நிலையில் பாரதி வாசகன் இருக்கிறான். தனக்கும் கவிதா தேவிக்கும் இருந்த உறவை 'முன்னர் யான், அவளுடன் உடம்பொடும் உயிரென உற்று வாழ்ந்த நாட்களைக் காற்றெனப் பறக்க விட்டுவிட்டீர்களே!' என்று பெருந்துயரத்துடன் குறிப்பிடுகிறான் என்பது கவனிக்கத்தக்கது. ஆக, நெடுநாள் பிரிந்த காதலியின் பிரிவை ஆற்றமுடியாத காதலனுடைய மனநிலையே, தனிமை இரக்கம் என்று வெளிப்பட்டிருக்கிறது. கவிதா தேவியைத் தன்னுடைய உயிர்க் காதலியாகத்தான் கவி தரிசித்திருக்கிறான் என்பதற்கு முதற்சான்று இந்தப் பாடல். பல ஆண்டுகள் தொடர்ந்து கவிதை இயற்றாமல் கிடந்த துன்பத்தை மனத்தில் சுமக்கும் ஒரு 'தேவதாஸ்' என்று வைத்துக்கொள்ளுங்களேன்! அது இருக்கட்டும். பாடல் எப்படித் தொடங்குகிறது? என்ன பெயர் சொல்லித் தன்னுடைய கவிதைக் காதலியை அழைக்கிறான் கவி? 'குயிலனாய்'. குயிலைப் போன்றவளே! கவிதாதேவி, பாரதிக்குக் காதலியாகவே தென்பட்டிருக்கிறாள்--இந்த ஒரு கவிதையிலல்லாமல், எங்கெல்லாம் கவிதைக்கும் தனக்கும் உள்ள உறவைப் பேசும்போதெல்லாம் இந்தக் குறியீடு தென்படுவதைக் காணலாம். நாடு அவனுக்குத் தாயாகத் தென்பட்டால், கவிதை, காதலியாகவே தென்பட்டிருக்கிறாள். |
|
இதற்குப் பிற்பட்ட காலங்களில், தான் கவிதை இயற்ற வல்லவன் என்பதையே மனம் பற்றாமல் இருந்த காரணத்தால் அல்லவோ, பாரதி, சுதேசமித்திரனில், 1906ம் ஆண்டு 'எமது தாய்நாடாகிய பாரதாம்பிகையின் பெருமையை வருணித்து ஆங்கிலத்தினும், தமிழினும் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற செய்யுள் மணிகளை ஓர் மாலையாகப் புனைந்து பதிப்பிக்க இருக்கின்றேன்; ஆதலின்....' என்று தொடங்கி, பாரத நாட்டைப் பற்றி 'தற்காலத்தே தமிழ்ப் புலமையிற் சான்று விளங்கும் புலவர் பெருமக்கள் புதியனவாகத் தேசபக்தி'ப் பாக்கள்' புனைந்தனுப்புமாறு விண்ணப்பிததிருக்கிறான்! நம்முடைய நல்லகாலம், அப்படி எந்தப் 'புலவர் பெருமகனும்' பாரதி விரும்பிய 'தேசபக்திப்' பாக்களை இயற்றி அனுப்பி வைக்கவில்லை. பிறகு, தானே இயற்றிப் பார்க்கலாம் என்ற சிந்தனை உண்டாகியிருக்கிறது; அதற்கு ஆரம்ப அடையாளமாகத்தான் பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் இயற்றிய ஸுஜலாம், ஸுபலாம் மலயஜ சீதளாம்' பாடலை 'இனிய நீர்ப் பெருக்கினை' என்று மொழிபெயர்த்திருக்கிறான். 'காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' தொகுதிகளில் தலா ஆயிரம் ஆயிரம் பக்கங்களை உடைய முதல் மூன்று தொகுதிகளில் பாரதி எழுதியிருப்பனவற்றில் 99 சதமும் உரைநடை மட்டுமே. கவிதை என்று பார்த்தால் நான்கைந்து தேறினால் அதிகம். பிறகு உந்துசக்தி மெல்லமெல்ல அவனை ஆட்கொண்டிருக்கிறது. 'ஓ! கவிதா தேவியின் ஆற்றலும் காதலும் என்னைவிட்டு இன்னமும் விலகியதில்லையோ! நான் அப்படியேதான் இருக்கிறேனோ!' என்ற புதிய உற்சாகம் தோன்ற விறுவிறுவென்று தேசபக்திப் பாடல்களாகவே தொடர்ந்து எழுதியிருக்கிறான். இவற்றை 1909 ஜனவரி முதல் ஜூன் வரையிலான நான்காம் தொகுதியிலிருந்தே காணமுடிகிறது. புதுவைக்குச் சென்ற பிறகு, கவிதா உல்லாசம் மீண்டும் திரும்பியிருக்கிறது. அவனுடைய தன்னம்பிக்கை அசாத்தியமான விரிவு கண்டு, 'தமிழ்மொழியைப் புகழில் ஏற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லை என்றவசை என்னாற் கழிந்ததன்றே!' என்று எட்டபுர மஹராஜாவுக்கு இயற்றிய சீட்டுக் கவியில் விம்மிதமுறுகின்றது. 'இவனா 'தேவதாஸ்'வேடம் புனைந்து, தனிமை இரக்கம் பாடலை இயற்றியவன்'என்று பாரதி படைப்புகளைக் கால வரிசைப்படுத்திப் பார்க்கும்போதுதான் அவனுடைய மனோபாவத்தின் ஏற்ற இறக்கங்களைக் கணிக்க முடிகிறது.
இனி, கவிதாதேவியின் அருள்வேட்டல் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள பாடலை எடுத்துக் கொள்ளலாம். ஒன்று குறிப்பாகச் சொல்லித்தான் ஆகவேண்டும். இது மிக நீண்டதொரு பாடல். இதுவரையில் வெளியாகியுள்ள எல்லாப் பதிப்புகளிலும் வெளியாகியிருப்பது வெறும் முதல் பாதி மட்டுமே. தஞ்சைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வுப் பதிப்பில்தான் இதன் தொடர்ச்சியான பிற்பகுதியும் வெளிவந்திருக்கிறது. மொத்தப் பாடலையும் படித்தால்தான் கவிஞன் என்ன சொல்ல வருகிறான் என்பது தெளிவுறும். நம்முடைய துரதிருஷ்டம், இந்த ஒரேயொரு பதிப்பில் மட்டும்தான் பாடலின் முழுவடிவம் கிடைத்திருக்கிறது. (பிறகு சீனி. விசுவநாதன் தனியாக வெளியிட்ட பதிப்பிலும் முழுதாகத் தரப்பட்டுள்ளது.) மற்ற எல்லாப் பதிப்புகளிலும் பாடல் கழுத்தை நெறித்ததுபோல் 'படக்'கென்று பொருள் விளங்காமல் முடிந்துவிடுகிறது. பாடல் எப்படித் தொடங்குகிறது? 'வாராய் கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!'
இந்தப் பாடலில் உள்ள அகச்சான்றைச் சற்றே விரிவாக அலசிவிட்டு மற்ற பாடல்களில் உள்ளனவற்றை இட, கால நெருக்கடிகளின் காரணமாகச் சுருக்கமாகச் சுட்டிவிட்டு முடித்துக் கொள்கிறேன். குயில் பாட்டில் உள்ள குயில் என்பது, கவிதையையே, அதுவும் பாரதி பார்வையில் தமிழ்க் கவிதையையே குறிக்கிறது என்பதை நிலைநாட்ட இவை தேவைப்படுகின்றன.
குயில், காதலி என்ற இரண்டு அடையாளங்களும் இந்தப் பாடலில் மட்டுமா தென்படுகின்றன?
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|