Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | குறுநாவல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
பேராசிரியர் நினைவுகள்: கையிலே உள்ளது வெண்ணெய்
- ஹரி கிருஷ்ணன்|மார்ச் 2012||(2 Comments)
Share:
பாரதியின் குயில் பாட்டில் வரும் குயில், தமிழ்க் கவிதையின் குறியீடே என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்; பாரதியின் வேறு பாடல்களிலும் எழுத்துகளிலும் 'நாம் மேற்கொண்டுள்ள இந்த முடிவுக்கு ஆதாரம் இருக்கிறதா' என்று பார்த்துக் கொண்டிருந்தோம். சென்றமுறை 'தனிமை இரக்கம்' என்ற பாரதி பாடலைச் சற்றே விரிவாகப் பார்த்தோம். இப்போது 'கவிதா தேவி' என்ற தலைப்பையும் 'அருள் வேண்டல்' என்ற உபதலைப்பையும் கொண்ட பாரதியின் பாடலை எடுத்துக் கொள்வோம்.

முதலில், இந்தப் பாடலைப் பற்றிய சில செய்திகளை அறிந்துகொள்ள வேண்டும். பாரதி, 172 அடிகள் கொண்ட (நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சேர்ந்த) இந்தக் கவிதையை இந்தியா பத்திரிகையின் 1909ம் வருட ஜனவரி இதழ்களில் 16ம் தேதி வெளியான பகுதியில் 'கதையின் முனிபோல் வாழ்க்கை' என்று முடியும் 84ம் அடியுடன் நிறுத்தியிருந்தான்; 85 தொடங்கி 172ம் அடிவரையிலான பகுதி அதற்கடுத்த வாரம் (அதாவது 23ம் தேதி) வெளியாகியிருக்கிறது. ஆனால், பதிப்பாளர்கள் எல்லோருமே இந்தக் கவிதை, 'முதற் பகுதியுடன் முடிந்துவிட்டது போலிருக்கிறது' என்று நினைத்துக் கொண்டு, முதற்பகுதியை மட்டுமே பதிப்பித்து வருகிறார்கள். இதற்கு ஆதிகாரணம் 1937ல் பாரதி பிரசுராலயம் வெளியிட்ட பதிப்பு. அவர்கள் 'ஸ்வசரிதையும் பிற பாடல்களும்' என்ற பிரிவின்கீழ் இந்த முதல் 84 அடிகளைப் பதிப்பித்திருக்கிறார்கள். அதையே மற்ற பதிப்பாளர்களும் அடிப்படையாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தஞ்சைப் பல்கலைக் கழக வெளியீட்டிலேயே *முதன்முறையாக* பாடலின் மொத்த வடிவமும் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. இதன் முழு வடிவத்தையும் தேடி எடுத்துத் தொகுத்துத் தந்த சீனி. விசுவநாதன் அவர்களுக்கு, பாரதி அன்பர் திருக்கூட்டத்தோடு பாரதி இயலும் பெரிய அளவில் கடன்பட்டிருக்கின்றது.

வெளியிடப்படாத பகுதியில் கிடைக்கும் செய்திகள் ஒருபக்கம் இருக்கட்டும். வெளியிடப்பட்ட பகுதியில் (நாகரிகம் கருதியோ என்னவோ) அச்சிடப்படாமல் விடுபட்டுப் போன இரண்டடிகள் உண்டு. 'திமிங்கில உடலும் சிறுநாய் அறிவும்; ஓர்ஏழ் பெண்டிரும் உடையதோர் அலிமகன்' என்ற (81, 82ம்) அடிகளே அவை. 'என்சொல்வேன் மாயையின் எண்ணரும் வஞ்சம்' என்ற 80ம் அடிக்குப் பிறகு, 'தன்பணிக் கிசைந்து என் தருக்கெலாம் அழிந்து வாழ்ந்தனன்' என்று அச்சிடப்பட்டிருப்பதால், 'தன் பணிக்கு இசைந்து' என்பது யாரைக் குறிக்கின்றது என்பது விளங்காமல் நான் மயங்கிய நாட்கள் உண்டு. 'என்னவோ குறைகிறது' என்று தெரியும். என்ன குறைகிறது என்பது தெரியாது. தஞ்சைப் பல்கலைக் கழகமும் சீனி விசுவநாதனும் புண்ணியம் கட்டிக் கொண்டார்கள். பாரதி வாழ்க்கையில் இடம் பெற்ற மிக முக்கியமான திருப்பத்துக்கு விதையாக அமைந்திருந்த சம்பவம், விடுபட்ட இந்த இரண்டடிகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றது. மிகக் காட்டமான, கசப்பான, கோபத்தின் வீர்யம் நிறைந்த இந்த அடிகள் எட்டயபுரத்து ஜமீந்தாரரைப் பற்றிய குறிப்பு என்பதைச் சொல்லவே தேவையில்லை. இதன் அடிப்படையிலேயே சென்ற முறை '1902ல் எட்டயபுரம் ஜமீந்தாரருக்குப் 'பத்திரிகை வாசித்துக் காட்டும்' பணி. அந்தச் சமயத்தில் ஏதோ ஒரு கசப்பான சம்பவம் நடந்திருக்கிறது. இந்த அனுமானத்துக்கான பிரமாணத்தை சற்றுப் பொறுத்து தருகிறேன்' என்று குறிப்பிட்டிருந்தேன்.

இந்த அடிகளை, வெளியிடப்படாத இரண்டாம் பகுதியிலுள்ள 'கவிதை தேவி,நின் காதலை மறந்தேன்' என்ற 86ம் அடியோடு கொண்டுகூட்டிக் கொள்ள வேண்டும். 'இப்படிப்பட்ட உடலையும், இப்படிப்பட்ட அறிவையும், பற்பல பெண்களைத் தன் அந்தப்புரத்தில் வைத்திருந்த ஓர் 'அர்ஜுன'னிடம் வேலைக்குச் சேர்ந்தேன். அவ்வளவுதான். அதன் பிறகு என்னருமைக் காதலியே, கவிதாதேவியே, உன்னுடைய நினைப்பே எனக்கு மறந்துபோய்விட்டிருந்தது' என்று வாக்கியத்தை மாற்றியமைத்துக் கொண்டால்தான் பாரதி என்ன சொல்ல வந்தான் என்பது விளங்கும். எட்டயபுரத்தில் நடந்த அந்தக் கசப்பான அனுபவமே கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு நீடித்திருந்திருக்கிறது.

இந்தப் பகுதி மற்ற பதிப்புகளில் இடம்பெறாத காரணத்தால், நமக்கு வேண்டிய ஆதாரங்களை இங்கே இடவேண்டியிருக்கிறது. பாரதி பாடலில் இன்ன அடியைப் பார்க்கவும் என்ற குறிப்போடு நகரமுடியாமல், நாம் குறிப்பிட வேண்டிய பகுதியை மட்டும் குறிப்பாகக் காட்ட வேண்டிய நிலையிலிருக்கிறோம். இந்த இரண்டாம் பகுதியில் பாரதிக்கும் கவிதாதேவிக்கும் நிலவிவந்த நெஞ்சார்ந்த காதலுக்கான குறிப்புகள் இறைந்து கிடக்கின்றன. சுருக்கமாக, 'என் இளம் பிராயத்தில் நீயும் நானும் ஒருவர் துணையில் மற்றவராகத் தனித்துக் கலந்திருந்தோம். 'நீயே உயிர் என, தெய்வமும் நீ என, நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன்'; பிறகு என் வாழ்க்கையில் வறுமை சூழ்ந்து கொண்டது. தொண்டைக்குள் குத்திய முள்ளைப் போல் என்னை இந்தத் துன்பம் வருத்தியது. உன்னைச் சற்றே பிரிந்து, என் வாழ்வில் நேர்ந்திருக்கும் இந்த மிடிமைத் துன்பத்தை, 'அடிநா முள்ளினை அயல் சிறிது ஏகிக், களைந்து பின் வந்து காண் பொழுது, ஐயகோ! மறைந்ததே தெய்வ மருந்துடைப் பொற்குடம்' என்று முதல் பகுதியிலேயே பாடல் நெடுகிலும் பயின்று வரும் கருத்தின் அடிநாதம் தொனிக்கத் தொடங்கிவிட்டது. 'என் வறுமையை நீக்கி்க்கொள்வதற்காக, நான் 'இப்படியொரு பணியில் அமர்ந்தேன். தொண்டைக்கு உள்ளே குத்திய அந்த முள்ளை நீக்கிக்கொண்டு திரும்பி வந்து பார்த்தால் அமுதத்தால் நிரப்பப்பட்ட பொற்குடமாகிய நீ என்னைத் தனியனாக விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டிருந்தாய், என்று தொடங்குவதன் விரிவுதான் பாடல் முழுமையும். மிக முக்கியமான முடிச்சான பகுதியை அப்படியே மேற்கோளாகத் தருகிறேன்:

வெம்போர் விழையும் வீரன்இங்கு ஒருவன்
சிறையிடை நெடுநாட் சிறுமை பெற்றிருந்தபின்
வெளியுறப் பெற்றுஅவ் வேளையே தனக்கோர்
அறப்போர் கிடைப்பின் அவன்எது படுவன்?
அஃதியான் பட்டனன், அணியியற் குயிலே!
(அடிகள் 135-139)
பாரதியுடைய பிற்காலப் பாடல்களோடு ஒப்பிட்டால், இந்த நடை, இந்நாள் வாசகருக்குப் புலவர் நடையாகப் படுவதில் வியப்பில்லை. வாக்கியத்தைப் பகுதி பகுதியாக உடைத்து, மறுகட்டமைப்பு செய்துகொண்டுதான் விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. 'போருக்குக் கிளம்பிய வீரன், பற்பல ஆண்டுகள் சிறைப்பட்டுக் கிடந்து, பிறகு சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வந்த அதே தருணத்திலே, தன்னை முற்ற முழுக்க ஈடுபடுத்திக் கொள்வதற்கான காரணத்துடன் கூடிய 'அறப்போர்' கிடைத்தால், அவன் மனம் எப்படியெல்லாம் மகிழும்! அப்படிப்பட்ட நிலைக்கு நான் இப்போது வந்திருக்கிறேன்' என்று சொல்கிறான். யாருக்கு? தன் காதலியான கவிதா தேவிக்கு. அங்கே அவளை என்னவென்று சொல்கிறான் கவனியுங்கள்: “அணி இயல் குயிலே!”

இந்தப் பாடலைப் பற்றி நிறைய பேசவேண்டியிருக்கிறது. அதை இன்னொரு சமயத்தில் செய்துகொள்ளலாம். இப்போது ஷெர்லக்ஹோம்ஸ் தான் தேடியலைந்த துப்பைத் துலக்கியது போல நமக்கு வேண்டிய ஆதாரத்தை அடைந்ததுடன் நிறுத்திக் கொள்வோம். ஆக, கவிதைதான் பாரதியின் காதலி; கவிதையாகிய பாரதியின் காதலிக்கு அவன் சொல்லிச் சொல்லி ஆராதித்த வடிவம் 'குயில், குயில், குயிலே' என்பதற்கான துப்பு துலங்கியது.

பாரதி, கவிமகளைத் தன் காதலியாகக் குறிப்பிடும் வேறு சில இடங்களும் உண்டு. சுயசரிதை என்று தற்போது அறியப்படும் 'கனவு' என்ற நெடுங்கவிதையில், தன்னுடைய வாழ்க்கைச் சம்பவங்களைக் குறிப்பிட்டுக் கொண்டே வரும்போது, 'ஆதிரைத் திருநாள் ஒன்றினில்' என்று தொடங்கும் எண்சீர் விருத்தத்தில் 'தனியான மண்டபம் தன்னில் யான் சோதி மானொடு தன்னந் தனியனாய்ச் சொற்களாடி இருப்ப, மற்று அங்கு அவள்...... .... ஒருசேதி, நெற்றியில் பொட்டுவைப்பேன் என்றாள்; திலத மிட்டனள் செய்கை அழிந்தனன்' என்று பிள்ளைக் காதலைக் குறிப்பிடுகிறான். இந்தப் பாடலோடு, பாரதி தன்னுடைய சிறுவயதுச் செய்திகளைச் சொல்வது பட்டென்று நின்றுவிடுகிறது. தனியான மண்டபமீதில் எந்தப் பெண்ணோடு இவன் காதலித்துக் களித்தான்?

இன்னொன்று. சின்ன சங்கரன் கதையில் பாரதி குறிப்பிடுவது எல்லாமே எட்டயபுர சமஸ்தானத்தில் நடந்த சம்பவங்கள் என்பது வெளிப்படை. சின்ன சங்கரன் (பாரதியேதான்!) 'கவுண்டனூர்' (எட்டயபுரத்து) ஜமீனில் இருந்த முத்திருளுக் கவுண்டனிடம் கம்பராமாயணம் கற்ற கதையை விவரிக்கிறான். இந்த கம்பராமாயணக் 'கவுண்டருக்கு' ஒரு மகள். அந்த வர்ணனையைக் கொஞ்சம் கேளுங்கள். 'நிறம் கருப்பு; நேர்த்தியான மைக் கருப்பு. பெரிய கண்கள். வெட்டுகிற புருவம். அதிக ஸ்தூலமுமில்லாமல் மெலிந்து ஏணி போலவுமில்லாமல் லேசாக உருண்டு நடுத்தரமான உயரத்துடன் ஒழுங்காக அமைந்திருந்த சரீரம். படபடப்பான பேச்சு. எடுத்த வார்த்தைக்கெல்லாம் கலீரெனச் சிரிக்கும் சிரிப்பு. மதுரைச் சீட்டிச் சேலை; டோரியா ரவிக்கை, நீலக் குங்குமப் பொட்டு.காதிலே வயிரத் தோடு. கழுத்திலே வயிர அட்டிகை, கையிலே வயிரக் காப்பு. நகையெல்லாம் வயிரத்திலே. மாணிக்கம் ஒன்றுகூடக் கிடையாது. மேனி முழுதுமே நீலமணி.....' விவரிப்பு போய்க்கொண்டே இருக்கிறது. உங்களுக்கு மனத்திரையில் காளி தோற்றமளிக்கிறாளோ? பாரதியுடைய காளிப் பாடல்கள் அனைத்திலும் இந்த வர்ணனை அப்படியே பயில்கிறது. அதென்ன நீலக் குங்குமப் பொட்டு! அப்புறம் கேளுங்கள்: 'இவ்வளவு ஷோக்கான குட்டிக்குப் பெயர் அத்தனை நயமாக வைக்கவில்லை. 'இருளாயி' என்று பெயர் வைத்திருந்தார்கள்..... இவள் மேலே சங்கரனுக்குக் காதல் பிறந்து விட்டது.' கதை விறுவிறுப்பாக நகர்கிறது. வரிக்கு வரி (வ.ரா. சொல்வதைப் போல்) குடல் அறுந்துவிடும்படி குலுங்கச் சிரிக்க வைக்கும் நடை. கேலியும் கிண்டலுமாக கதை நகர்ந்துகொண்டே போகிறது.

'இப்படியிருக்கையில் இவ்விருவரின் சுகத்துக்கு இடையூறான ஒரு செய்தி வந்துவிட்டது. இவர்களுடைய காதலாகிய மரத்திலே இடிபோல் விழுந்த செய்தி'. அவ்வளவுதான். சின்ன சங்கரன் கதையின் கடைசி வாக்கியம் இதுதான். ஒரு ஒற்றுமையைக் கவனியுங்கள். பாட்டிலே தன்னுடைய இளமைப் பருவத்துச் செய்திகளை எந்த இடத்திலே நிறுத்தியிருக்கிறானோ, அதே இடத்தில் சின்ன சங்கரன் கதையும் வந்து, முட்டுச் சந்தில் சிக்கிக் கொண்டதுபோல் அடுத்து என்ன நடந்தது என்று ஊகிக்கவும் இடம் கொடாமல்--இந்த இரண்டு இடங்களுமே--திருகப்பட்ட கோழிக் கழுத்தைப் போல் திடுமென முடிந்து விடுகின்றன.

இந்தப் பிள்ளைக் காதலைப் பலர் பல கோணங்களில் ஆய்ந்திருக்கிறார்கள். என் சுப்பிரமணியம் என்பவர் Psycho-biography of C. Subramania Bharati என்ற தலைப்பில் ஃப்ராய்டின் ஸைக்கோ அனாலிஸிஸ் அடிப்படையில் ஆய்ந்து, பாரதிக்கு வள்ளிக் கண்ணம்மா என்ற இளம்பருவத்துக் காதலி இருந்திருக்கிறாள் என்றெல்லாமும் எழுதியிருக்கிறார். அவர் கொடுக்கிற ஆதாரங்கள் நம்பும்படியாக இருந்தாலும் எளிதில் ஒப்பிட்டுச் சரிபார்த்துக் கொள்ளக்கூடிய சான்றாக இல்லை. It's all unverifiable. 'நம்பத் தகுந்த வட்டாரங்களில் பேசிக் கொள்வதாகச் சொல்லப்படுகிறது என்று தெரியவருகிறது' என்பது போன்ற சான்றுகளும், உடைந்து போய்விட்ட ஃப்ராய்டியன் தியரியுடைய அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட உளவியல் ஆய்வுகளும் நிறைய அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கின்றன. இளம்பருவத்துக் காதல் முறிந்ததால் ஏற்பட்ட ஏமாற்றம், காதலற்ற மணவாழ்க்கை இரண்டும் (பாரதியைப் போன்ற ஒரு உணர்ச்சிப் பிழம்புக்கு) அபாயகரமானவை என்ற முடிவுக்கு வருகிறார் ஆய்வாளர். ("Frustrated love followed by loveless marriage is a deadly situation for an emotionally strung up personality" N Subramanian in the above book, page 195.) இளம்பருவத்துக் காதல், காதல் தோல்வி இரண்டையும்கூட ஏற்றுக் கொள்ளலாம். பாரதி-செல்லம்மாவின் மணவாழ்க்கையில் காதல் இருந்திருக்கவில்லை என்பது பெரும்பான்மையான ஆய்வாளர்களின் அவசர முடிவு!

'நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி' என்ற பாடலுக்கு பாரதி தந்திருந்த தலைப்பு 'செல்லம்மா பாட்டு'. பாரதி ஆச்ரமமும், பாரதி பிரசுராலயமும் இந்தக் கவிதையை வெளியிடும்போது, இந்தத் தலைப்பில் அவர்களுக்குக் கூச்சம் இருந்திருக்கிறது. பாரதி-செல்லம்மாவின் அந்தரங்கத்துள் யாரும் பிரவேசிக்க வேண்டாம் என்று கருதினார்களோ என்னவோ, தலைப்பை 'கண்ணம்மாவின் நினைப்பு' என்று மாற்றிவிட்டார்கள். பயன்? பாரதி-செல்லம்மா மணவாழ்க்கையைப் பற்றிய குறிப்பும், அதில் நிலவிய பரிபூரண அன்பு நிறைந்த தன்மையும் மறைக்கப்பட்டுவிட்டது! பாரதியின் மகள் சகுந்தலா பாரதி இந்தப் பாடலைப் பற்றிச் சொல்லும்போது, 'என் தந்தை சில காதல் பாட்டுகள் தாமாகவே எழுதினார். 'செல்லம்மா பாட்டுக்கள்' என்று அதில் குறிப்பிட்டிருக்கும் 'செல்லம்மா' என்பது என் தாயாரின் பெயர். தம் மனைவியையன்றி வேறொரு பெண்ணை மனத்தினாலும் நினைக்காத பரிசுத்த எண்ணமுடையவரானதால், காதல் பாட்டுக்கள் தாம் பாடுவது தம் மனைவிக்கு மட்டுமே என்று சொல்வார். 'நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி செல்லம்மா' என்று சிறிதும் சங்கோசமில்லாமல் பாடுவார் என்று குறிப்பிடுகிறார். அதாவது, சகுந்தலா பாரதி கேட்கும்படியாக இது நடந்திருக்கிறது. 'தாம் பாடுவது தம் மனைவிக்கு மட்டுமே' என்பதையும் 'என்று சொல்வார்' என்ற தொடரையும் தனித்தனியாக மனத்தில் இருத்திக் கொண்டால், இப்படிச் சொன்னது பாரதியே என்பது விளங்கும். சொன்னதோ, தன் மகளிடம்--அல்லது--அவள் காதில் விழக்கூடிய அளவுக்கு அணுக்கத்தில். 'யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம்; எனக்குன் தோற்றம் மேவுமே' என்ற இந்தப் பாடலின் அடியின் அடிப்படையில் பாரதி-செல்லம்மாவுக்கு இடையே நிலவிய அன்பைப் புரிந்துகொள்ள வேண்டும். 'சுகப்ரம்ம ரிஷிக்கோ பார்த்த இடமெல்லாம் தெய்வமே தெரிந்தது; எனக்கோ, நான் பார்க்கிற இடத்திலெல்லாம் நீதான் தெரிகிறாய்' என்று செல்லம்மாவின் பேரில் பாட்டு கட்டியிருக்கிறான் பாரதி. கவிதை இயற்றுவதில் தேர்ந்த நம்மில் எத்தனைபேர் தத்தம் மனைவியரின் பேரில் கவிதை இயற்றியிருக்கிறோம் என்று சற்றே எண்ணிப் பாருங்கள்.

நம்முடைய ஆய்வுக்குச் சற்றே விலகி வந்துவிட்டோம். ஆனால், நாம் காட்டும் சான்றுக்கு வேறுவிதமான விளக்கங்கள் இருக்கின்ற காரணத்தால் (முக்கியமாக ஸைக்கோ பயக்ரஃபி சொல்லும் விளக்கம்) இவை பொருந்தாமையைச் சுட்டுவதற்காக இப்படி விலக வேண்டி வந்தது. சின்ன சங்கரன் கதைக்குத் திரும்புவோம். அந்தப் பெண்ணின் பெயர் என்ன? இருளாயி. அவள் நிறம் என்ன? மைக்கருப்பு. அப்படியானால் குயிலின் நிறம் என்ன?

கையில் வெண்ணெய் கிட்டிவிட்டதா? நெய்க்கு அலைவானேன்! இந்த ஆதாரங்களின் அடிப்படையில் (நான் காட்டியிருப்பது வெகுசில இடங்களை மட்டுமே. மூன்று காதல் பாடலில் ஸரஸ்வதி காதலைப் பற்றி விளக்கப் புகுந்தால் இன்னொரு தவணை போய்விடும்.) குயில் தமிழ்க் கவிதையே என்ற முடிவை நிறுவுவோம். அடுத்த இதழில்.

V. ஹரி கிருஷ்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline