|
|
(முன் சுருக்கம்: கலி (·போர்னியா) காலம் முதல் பாகத்தில் ஏப்ரல் 2000-க்கும், ஏப்ரல் 2001-க்கும் இடையில் பொருளாதார நிலையில் ஏற்பட்ட மலை உச்சிக்கும் அதல பாதாளத் துக்குமான வித்தியாசம் எதனால் ஏற்பட்டிருக் கலாம் என்று கற்பனை உலகுக்குச் சென்று பார்க்க ஆரம்பித்தோம்.
பாற்கடலில் நிம்மதியாக சயனித்துக் கொண்டிருந்த விஷ்ணுவை, நாரதர் லஷ்மி கடாட்சத்தாலேயே செல்வத்தில் புரளும் கலி·போர்னியாவை வந்து பார்த்தே தீர வேண்டும் என்று கலக மூட்டி விட்டார். அதனால், விஷ்ணுவும், ஜாவா, HTML எல்லாம் கற்றுக் கொண்டு, H1 விசா வாங்கிக் கொண்டு silicon valley வந்து சேர்ந்தார். நாரதரும், விஷ்ணுவும், உடனே ஒரு டாட்-காமில் வேலைக்கு சேர்ந்தனர். ஆனால் அபார்ட்மென்ட்டும், காரும் கிடைப் பதற்குள் மூச்சுத் திணறி விட்டது - அவ்வளவு தட்டுப் பாடு! ஒரு நாள் இருவரும் வெளியில் நடந்து கொண்டிருந்த போது ஒரு கார் வந்து சரேல் என நின்றது. அதில் இருந்து குதித்த ஒருவர் "உங்களுக்கு HTML, ஜாவா தெரியுமா?" என்று கேட்டார். நாரதர், "அதற்கென்ன, SQL, perl எல்லாம் கூட நன்றாகத் தெரியும்" என்று அளந்து விட்டார். கண் மூடித் திறப்பதற்குள் நாரதரும், விஷ்ணுவும் காருக்குள் இழுக்கப் பட்டனர். கார் கிறீச்சென்ற சப்தத்துடன் அங்கிருந்து பாய்ந்து சென்றது.)
கார் பாய்ந்து செல்ல ஆரம்பித்தவுடன் விஷ்ணுவின் முகத்தில் படர்ந்த கோபத்தைப் பார்த்த நாரதர், "சாதாரண மனிதன், ஞாபகம் இருக்கட்டும்" என்று நினைவு படுத்தியவுடன் விஷ்ணு மீண்டும் சாந்தம் அடைந்தார். சுற்றி நோட்டம் விட்டார். கார் கப்பல் போல நீண்டிருந்த லிமொஸின். அதில் இருவரே இருந்தனர். ஒருவர் ஒல்லியாக உயரமாக, தட்டினால் உடைந்து விடுவது போல இருந்தார். இன்னொருவர் செமர்த்தி குண்டு. வடிவேலு-செந்தில் போல வைத்துக் கொள்ளலாம்!
காரிலிருந்த இருவருக்கும் வாயெல்லாம் பல்! எதோ வைரச்சுரங்கத்தையே கண்டு பிடித்து விட்டது போல் வெகு குஷியாகிவிட்டார்கள்! வடிவேலு செந்திலுக்கு ஒரு ஷொட்டு விட்டார்! "நான் என்ன சொன்னேன்?! இந்தப் பக்கம் வந்தாலே, இந்த மாதிரி நிறைய பேர் புடிச்சிடலாம்னுட்டு சொன்னேனே, பாத்தீங் களா?" செந்தில் ஆனந்தமாகத் தலையாட்டி னார்.
வடிவேலு, நாரதரையும், விஷ்ணுவையும் பார்த்து புன்னகைத்து, "நாங்க இன்னிக்குத் தான் ஒரு டாட்-காம் ஆரம்பிச்சிருக்கோம், சேந்துக்கிறீங்களா? மாசம் $7000 சம்பளம், ஆளுக்கு 70,000 options." விஷ்ணுவுக்கு கிர்ரென்று கொஞ்சம் தலை சுற்றியது. அப்போது அந்தப் பக்கம் அவர்களிருந்த லிமொஸின் போலவே இன்னொன்று எதிர்ப் பக்கத்திலிருந்து மெள்ள வந்தது. அதிலிருந்து ஒருவர் எட்டிப் பார்த்து அந்தப் பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை எடை போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட செந்தில் திடுக்கிட்டார். அவசரமாக, "சரி, சரி, மாசம் $8000 சம்பளம், 1,00,000 options, அவ்வளவுதான் முடியும் உடனே சொல்லுங்க" என்றார்.
விஷ்ணு "ஆனால் உங்க கம்பனி என்ன பிஸினஸ் செய்கிறதுன்னு சொல்லவே இல்லை யே?!" என்றார். அதைக் கேட்ட வடிவேலுவுக்கு தேள் கொட்டியது போல தூக்கி வாரிப் போட்டது. "அய்யய்யோ! அதை நாங்க இப்போ சொன்னால், நாளைக்கே ஒரு நாலு web-site வந்துடுமே? எல்லாமே idea-ல தானே இருக்கு? நாங்க first movers. அவ்வளவுதான் சொல்ல முடியும். இதுவே நான் ரொம்ப அதிகமா சொல்லிட்டேன்!" என்றார், இப்படியும் அப்படியும் ஒரு சந்தேகப் பார்வை விட்டுக் கொண்டு.
நாரதர் குறுக்கிட்டு "சரி செய்யறோம், ஆனா நாங்க H1-ல இருக்கமே" என்றார். வடிவேலு ஆனந்தத்தின் எல்லையை அடைந்துவிட்டார்! "விசாவைப் பத்தி கவலையே வேண்டியதில்லை. அதை மாத்திடலாம். அதுவரை நீங்க சாயங்காலம், சனி ஞாயிறு வேலை செய்யுங்க, அட்ஜஸ் பண்ணிக்கலாம்" என்றார்.
அதன்படி அந்த வேலையை ஆரம்பித்த விஷ்ணுவும் நாரதரும் நாளுக்கு 16 மணி நேரம் வேலையிலேயே மூழ்கிவிட்டனர்.
மூன்றே மாதத்தில் கம்பெனி IPO சென்றது. கம்பெனி என்ன செய்கிறது என்று விஷ்ணுவுக்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை. ஏதோ கையில் ஆறு விரல்கள் உள்ளவர்களுக்கு community-site என்று கேள்வி. ஆயிரம் பேர் register செய்தவுடன், அது போதும் என்று IPO ஆக்கிவிட்டார்கள்! $15-க்கு அறிவித்த stock, முதல் நாளிலேயே $150-க்கு சென்று ஒரு சாதனை புரிந்து விட்டது! இரண்டு மாதத் திலேயே கொஞ்சம் lock-up-ஐயும் தளர்த்தி னார்கள்.
நாரதரும், விஷ்ணுவும் சில stock விற்று ஒரு BMW 740iL-க்கு ஆர்டர் கொடுத்து விட்டு (12 மாதம் காத்திருக்க வேண்டும்!) வீடு தேடும் படலத்தில் இறங்கினர். முதல் வீடு $7,50,000-க்கு விலை போட்டிருந்தார்கள் - மூன்று படுக்கை அறைகள்தான். விஷ்ணு விலை அதிகம், இருந்தாலும் நம்மிடம் தான் பணம் நிறைய இருக்கிறதே என்று, வீட்டுக்காரரிடம் "சரி நான் $7,50,000-க்கே எடுத்துக்கறேன்" என்றார். அவரோ விழுந்து விழுந்து சிரித்து விட்டு "நல்ல ஜோக் அடிக்கிறீங்களே, இது என்ன ஸ்கூல் டிஸ்ட்ரிக்ட் தெரியுமா? ஏற்கனவே ஒரே நாளில், 8 பேர் வந்து ஸீல் வச்சு Bid கொடுத்துட்டு போயாச்சு. நீங்க எவ்வளவு over-bid முடியுமோ, அவ்வளவு செய்யணும். நாளைக்கே எல்லா bid-ஐயும் பார்த்து விட்டு யாருக்கு குடுக்கறதுன்னு முடிவு செய்வோம்" என்றார். விஷ்ணு இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்று அசந்தே போனார். $8,00,000 விலை போட்டார். மறுநாள் தனக்குத்தான் வீடென்று குஷியுடன் போனார் - ஆனால் பாவம் வீடு $1.2 மில்லியன் டாலருக்கு போய்விட்டது! அசந்தே விட்டார் விஷ்ணு. அடுத்த வீட்டுக்கு 100% மேல் bid போட்டு வாங்கியே விட்டார்.
நாட்கள் பறந்தன. மின்வலை மாயத்தினால் Silicon Valley-இல் துள்ளி விளையாடிய செல்வத்தைப் பார்த்து விஷ்ணு வியப்பின் எல்லையைச் சென்றடைந்தார். நாரதரிடம் "சரி, இங்கு பார்த்தது போதும் நாம் வைகுண்டம் திரும்பலாம்" என்றார். இருவரும் திரும்பியதும் லஷ்மி தேவி அதி ஆவலுடன் விசாரித்தாள், "என்ன என் பெருமையை நன்றாகப் பார்த்தீர் களா? என் கடாட்சத்தையும் அனுபவித்தீர்களா?" என்று! நாரதர் முந்திக் கொண்டு "அன்னையே அதை ஏன் கேட்கிறீர்கள். பரந்தாமன் பல கோடிகள் குவித்தே விட்டார் உங்கள் அருளால்" என்றார். விஷ்ணு எதுவும் பேசவில்லை. அவர் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை, மலை முகட்டில் தவழும் வெண்மேகம் போல் படர்ந்தது. நாரதர் உடனே "பத்மநாபா, உன் புன்னகைக்கு என்ன அர்த்தம்? இதெல்லாம் அன்னையின் அருளால் இல்லை என்கிறாயா?" என்றார். லஷ்மியும் தாங்க முடியாத கோபத்துடன் விஷ்ணுவைப் பார்க்கவும், விஷ்ணு தன் நான்கு கைகளையும் எடுத்து தடுப்பது போல் காட்டி, "சாந்தம் வேண்டும் தேவி, உன்னருள் இல்லை என்று நான் சொல்லவே இல்லையே?! ஆனாலும், கலி கால மாயை சக்தி வாய்ந்ததாயிற்றே, பொறுத்திருந்து பார்க்கலாம்" என்றார். நாரதரோ, "மாதவா, அது கலி காலம் இல்லை, கலி-·போர்னியா-காலம்! அன்னை யின் அருள்தான் அங்கு வெல்லும்!" என்றார்.
லஷ்மி "ஹ¤க்கும்" என்று தோள் மேல் முகத்தை இடித்துக் கொண்டு "எப்போதும் உங்களூக்கு இந்த மாயா பிரதாபந்தான்! அது என்ன என்னை விட சக்தி வாய்ந்ததா என்ன பார்த்துவிடுவோமே" என்று வெடுக்கென கூறிவிட்டு வேகமாக விலகிச் சென்றாள். விஷ்ணுவின் புன்னகை இன்னும் பெரிதாக விரிந்தது.
"என்ன நாரதா, சந்தோஷம் தானே?" என்றார்.
நாரதரும் "சரி எனக்கேன் வம்பு, நிலைமை கொஞ்சம் இக்கட்டாகிவிட்டது, நான் அப்புறம் வருகிறேன்" என்று
வைகுண்டத்திலிருந்து வேகமாக வாபஸ் வாங்கினார்!
விஷ்ணுவின் புன்னகை மாறவே இல்லை!
ஒரு வருடம் கடந்தது. ஏப்ரல் 2001 பிறந்தது.
"நாராயண, நாராயண!" நாரதர் மீண்டும் வைகுண்டத்துக்கு விஜயம் செய்தார். "என்ன நாரதா, லஷ்மி கொஞ்சம் கோபம் தணிந்திருக் கிறாளே, ரொம்ப நாட்களாக தலை கூட காட்டவில்லையே என்று நிம்மதியாக இருந் தேன், இப்போது எந்த வம்பில் என்னை மாட்டப் போகிறாய்? மீண்டும் கலி·போர்னியாவுக்குத் தள்ளப் போகிறாயா?" என்றார் விஷ்ணு, தன் வழக்கமான வரவேற்புடன். நாரதர் சற்றும் தயங்காமல் "பிரபோ, மாட்டி விடுவது என் கடமை, நழுவிக் கொள்வது உன் திறமை! ஆனால் நான் இங்கு வந்த விஷயம் என்ன வென்றால், பூலோகத்தைப் பற்றி ஒரு சிறிய update கொடுத்து விட்டு போகலாம் என்றுதான்!" என்று கூறினார்.
விஷ்ணுவுக்கும், நாரதர் நெட்வொர்க் நியூஸ் (NNN) கேட்க மிக்க ஆவல்தான்! லஷ்மியும் தன் அருளின் மகிமையைப் பற்றி மீண்டும் கேட்க மிகவும் துடிப்பானாள். ஆனால் நாரதர் விவரித்ததோ நேருக்கு மாறாக இருந்தது. "அதை ஏன் கேட்கிறீர்கள்? எல்லாம் படு மோசம்! Dot Com-கள் எல்லாம் Dot Bomb-கள் ஆகி, இப்போது Not Com-கள் ஆகி விட்டன. எங்கே பார்த்தாலும் வேலை நீக்கங்கள் (lay-offs). C கம்பெனியிலும், I கம்பெனியிலும் கூடத்தான்!"
இதைக் கேட்ட லஷ்மி தேவி வெல வெலத்துப் போனாள். "என்ன, C கம்பெனியில் கூடவா, நம்பவே முடியவில்லையே?!"
விஷ்ணுவும், "அடப் பாவமே, லஷ்மி கடாட் சத்தால், என்றுமே வளர்ச்சியை தவிர எதையும் அறியாத கம்பெனிகளில் கூடவா
இந்த நிலை? நிச்சயமாக அசம்பாவிதந்தான். சரி மேலே சொல்" என்றார்.
நாரதர் தொடர்ந்தார், "பாரதத்திலிருந்து அமெரிக்காவுக்கு வந்த பலர் வேலையின்றி, மீண்டும் திரும்ப வேண்டியதாகிவிட்டது. கொடி கட்டிப் பறந்த பலப் பலக் கம்பனிகள் இன்று அடி பட்டு கிடக்கின்றன. லஷ்மி கடாட்சத்தால் stock market-ல் செல்வம் புரட்டிக் கொண்டிருந்த பலரும், இப்போது அடுத்த மாதம் வீட்டு வட்டிக்கும் பங்கம் வந்து விடுமோ என்ற கவலையில் மூழ்க ஆரம்பித்து விட்டார்கள். நாம் வீடு வாங்கும் போது இரண்டே நாளில் விற்றது போலில்லை இப்போது. வீடு விற்றால் போதும் என்று ஆகிவிட்டது."
லஷ்மி தேவியின் முகம் துயரத்தில் தோய்ந்தது. "அய்யய்யோ, அப்புறம்?" என வினாவினாள். நாரதரும், "ஆம் தேவி, மோசம்தான். இன்னும் கேளுங்கள். கலி ·போர்னியா காலம் போய் சனி·போர்னியா காலம் வந்து விட்டது போலிருக்கிறது. மின் சக்திக்கும் தட்டுப்பாடு வந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! சில நாட்கள் வேண்டிய அளவு மின்சக்தி கிடைக்காமல், வெட்டியே விடுகிறார்கள். விலையும் வானளாவ உயர்ந்து, மாதம் பணம் கட்டக் கூட மூச்சுத் திணறும் கதிதான்" என்றார். அவர் கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டு மேலும் பேசுவதற்கு ஆரம்பித்தார். "இன்னும் என்னவென்றால் ..."
லஷ்மி விம்மிக் கொண்டு கை காட்டி அவரை பேச்சை நிறுத்துமாறு சைகை செய்தாள். "போதும் நாரதா, போதும். நிறுத்திக் கொள். என் அருளால் என்றுமே கலி-·போர்னியா-காலமாகவே இருக்கும் என்று இறுமாந் திருந்தேன். மற்ற சக்திகளையும் மறந்திருந் தேன். இப்போதுதான் மீண்டும் புரிகிறது, என்னையும் மீறிய சக்திகள் உண்டென்று" என்றாள்.
நாரதர் "ஆமாமாம், அந்த Alan Greenspan சக்தி கொஞ்சம் அதிகம்தான். வட்டியை ஏற்றி, எல்லாவற்றையும் கவிழ்த்துவிட்டாரே" என்று முணுமுணுத்தார். லஷ்மி, "என்ன சொன்னாய் நாரதா" என்று கேட்டதும் நாரதர் சுதாரித்துக் கொண்டு, "ஒன்றுமில்லை தேவி, அது எல்லாம் அறிந்தவன் செயல் என்றேன்" எனக் கூறி, விஷ்ணுவைக் காட்டினார். |
|
விஷ்ணுவோ, ஒரு சிறு புன்னகையுடன் தியானத்தில் ஆழ்ந்து விட்டிருந்தார். லஷ்மி அவரிடம், "பிரபோ, என்னை மன்னித்து விடுங்கள். நான் மமதையினால் விளைந்த அறியாமையுடன், என்னை மீறி ஒன்றும் நடக்க முடியாது என்று கூறி விட்டேன்.
அதற்காக, இந்த பூலோக வாசிகள் இவ்வளவு வேதனைப்பட வேண்டாம். அவர்கள் கவலைகளுக்கு சீக்கிரமே நிவர்த்தி கிடைக்குமாறு தாங்கள் அருள் புரிய வேண்டும்" என்றாள்.
விஷ்ணு திருவாய் மலர்ந்தார். "தேவி, முன்பு செல்வம் பெருக்கெடுத்து விளையாடியதும் மாயைதான், இன்று தொல்லைகளில் ஆழ்ந்து அல்லல் படுவதும் மாயைதான். கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்தால் நிலைமை இன்னும் சிறிது காலத்தில் சீரடைந்து விடும். பூலோக வாசிகளும், விண்ணளாவிய அகம்பாவமும் இல்லாமல், பாதாளம் தழுவிய அய்யோ பாவமும் இல்லாமல், இடையே மிதமாக நடக்கும் நன்னிலையை அடைவார்கள்" என்றார்.
நாரதரும், "ரங்கநாதா, என் காரியம் முடிந்து விட்டது. அன்னையின் அருளுக்கும் அளவுண்டு, மாயைக்கு மேலும் பலமுண்டு என்பது தெளி வாகி விட்டது. நான் வருகிறேன். நாராயண, நாராயண" என்று, அடுத்த கலகத்துக்குக் கிளம்பினார்.
சந்தேகமே இல்லை. நாம் 2000-ம் வருட ஆரம்பத்தில் கண்ட stock விலைகளூம், அதனால் விளைந்த விளைவுகளும், ஒரு விதமான மாயைதான்! கனவுதான்! அது அதேபோல் நீடித்திருந்திருக்க முடியாது. பலவிதமான சந்தர்ப்பங்கள் சேர்ந்து, பலரையும் மின்வலை யைச் சார்ந்த எந்த நடவடிக்கையுமே பெரிதாக வெற்றி பெற்று விடும் என நினைக்க வைத்தன.
ஆனால் யாவையுமே தப்புக் கணக்கு என்று கூறி விடவும் முடியாது. முதலில் மின்வலையப் பற்றிய போதையில், ஒரு கரை கடந்த பதற்றத்துடன் (hysteria) நடந்த விஷயங்கள் உண்மை நிலைக்கு நூறு பங்கு மிஞ்சின. ஆனால் இப்போதோ, அதே போன்ற ஒரு மித மிஞ்சிய பதற்றம், அடுத்த கோடிக்குப் போய் விட்டது என்று தோன்றுகிறது. அப்போதைய நிலை அந்த அளவுக்கு உச்சமுமில்லை, இப்போதைய உண்மை நிலை, இப்போது நடக்கும் அளவுக்கு வேண்டிய படு மோசமும் இல்லை. இது அந்த "காரணமற்ற உற்சாகம்" (irrational exuberance) ஏற்படுத்திய ஒரு அளவுக்கு மீறிய விளைவு (over reaction) என்றே தோன்றுகிறது. உண்மை நிலை இரண்டுக்கும் இடையே எங்கோ புதைந்து கிடக்கிறது.
மலைச்சிகரத்துக்கும் படுபாதாளத்துகும் இடையில் இருக்கும் அந்த ஆனந்த சம வெளிக்கு நாம் விரைவிலேயெ சென்று அடைய வேண்டும் என்று நாம் எல்லோருமே விரும்புகிறோம்! அப்படியே ஆகட்டும்!
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|
|