|
|
மார்ச் 2000 - மின் வலை (internet) மோகம் மின் வேகத்தில் முன் பாய்ந்து கொண்டிருந்த நேரம். எதுவும் மின்வலை, எங்கும் மின்வலை! மின்வலையால் முடியாததில்லை என்ற கோஷம் எங்கும் ஒலித்தது. மின்வலை வாணிகம் (ecommerce) நிஜ உலகின் கடைகளை எல்லாம் சிதறடித்துவிடும் என்று கனவு கண்டு கொண்டிருந்த காலம். கலி·போர்னியாவில் stock option பலத்தில் வீட்டு விலைகளும், வாடகைகளும் வானளாவி சென்று, இதற்கு ஒரு அளவும் உண்டா என்று யாவரும் வியப்பு ஒரு புறம் (options பெற்றிருந்தவர்கள்), விரக்தி ஒரு புறம் (options இல்லாதவர்கள்) அடையும் நிலைமைக்கு போய்ச் சேர்ந்திருந்தது.
மார்ச் 2001 - எல்லாம் தலை கீழ்! நிலைமையை நான் விவரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டியதில்லை.
இப்படி எல்லாமே எதிர்மாறாக மாறுவதற்கு காரணம் என்னவாக இருந்திருக்கும்? சிலர் ஆலன் க்ரீன்ஸ்பேன் என்னும் கொடியவருடைய வட்டி உயர்வு நடவடிக்கை என்று கருது கிறார்கள். சிலர் மின்வலையைச் சார்ந்த எதுவுமே வெற்றி பெற்றுவிடும் என்று நிறைய பேர் தப்புக் கணக்கு போட்டதனால் வந்த வினை என்று கருதுகிறார்கள். அப்படியே இருந்தாலும், தப்புக் கணக்குக் போட்டவர்களில் பலர் மிகச் சிறந்த புத்திமான்கள் அல்லவா? அவர்கள் யாவரும் சேர்ந்து திசை தவறி நடந்தது ஏன்?! அப்படி நடந்தது யாவையுமே ஒரு மாயை யினால்தானோ? மாயை அவர்களின்
கண்ணை மறைத்து, புத்தியையும் தடுமாற வைத்துவிட்டதோ? இருக்கலாம்., இருக்கலாம்! என்னோடு நம் கற்பனை உலகுக்கு வாருங் களேன், பார்ப்போம்!
"நாராயண, நாராயண!"
நாரதரின் குரல் பாற்கடலில் எதோ சிந்தனையில் ஆனந்தமாகத் திளைத்திருந்த மஹாவிஷ்ணுவை திடுக்கிட்டு எழச் செய்தது.
"என்ன நாரதா, விசேஷ விஜயம்? கொஞ்ச நாளாக நீ ஆளே காணவில்லையே? கலகம் செய்ய வேண்டிய இடங்களையெல்லாம் கவனித்துவிட்டு இப்போதுதான் என் தலை மேலேயே கையை வைக்கலாம் என்று வந்திருக்கிறாயா?!" மஹாவிஷ்ணுவிற்கு நாரத விஜயம் என்றாலே கொஞ்சம் கலக்கம்தான்.
நாரதர் ஒன்றுமே தெரியாத அப்பாவி போல் கூறினார், "அய்யய்யோ, பிரபோ, தங்களிடமே என் வேலையைக் காட்ட முடியுமா என்ன, அபச்சாரம், அபச்சாரம்! ஏதோ, பூலோகத்தில் வெகு நாட்களாய் பல ஊர்களையும் சென்று பார்த்தேன்.
அங்கே நடக்கும் பல விசித்திரங்களையும் பற்றி, உங்களிடம் கூறிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். ஹ¥ம், வேளை சரியில்லை போலிருக்கிறது, என்ன ஏதாவது மேலிடத்துடன் தகராறா? அய்யோ, எனக்கு ஏன் வம்பு? நான் ஏதோ சொல்வானேன், மாட்டிக்கொள் வானேன்?! நான் பிரம்ம லோகத்துக்கே போய் சொல்லிக் கொள்கிறேன்!" நாரதர் திரும்ப யத்தனித்தார்.
லஷ்மியின் குரல் அவரைத் தடுத்தது. "நாரதா, கொஞ்சம் நில். நீ சொல்வது போல் எந்த தகராறும் இல்லை. இவருக்குத்தான் பாவம் நீ வந்தாலே பயம், எங்காவது அந்த சத்தியபாமா கதை போல கலக்கி விடுவாயோ என்று.
போகட்டும் விடு. எனக்கு அந்த பூலோக விஜயம் பற்றி கேட்க ரொம்ப ஆவலாக உள்ளது, கொஞ்சம் சொல்லேன்!"
நாரதருக்கு குஷி பிறந்தது. ஆஹா, இந்த வாய்ப்பை விட முடியுமா?! "அன்னையே, தாங்கள் கேட்டால், மறுக்கமுடியுமா? கூறு கிறேன். பூலோகத்தில் என்னென்னவோ அற்புதங்கள் உண்டு. ஆனால் இந்த மின்வலை, மின்வலை என்று புதிதாக வந்திருக்கிறது பாருங்கள், அட, அட, அடா, என்னே அதன் பெருமை! ஒரு இடத்தில் உட்கார்ந்தபடி இருந்து கொண்டு யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம், எதை வேண்டுமானாலும் வாங்கலாம் - இருந்த இடத்துக்கு வந்து சேர்கிறது, கடைக்குப் போக வேண்டிய தொல்லையே இல்லை!"
லஷ்மிக்கு ஆச்சர்யந்தான்! "அப்படியா, கேட்கவே பிரமாதமாக இருக்கிறதே?! ஆமாம், ஆமாம், இந்த தேவலோக லல்லி'ஸ் புடவைக் கடைக்குப் போய் ஒரு புடவை வாங்குவதற்குள் ஏன்தான் போனோமோ என்று ஆகி விடுகிறது. என்ன நெரிசல், என்ன நெரிசல்! அந்த மின்வலை இங்கே வந்தால் நன்றாகத்தான் இருக்கும்!"
நாரதர் மேலும் தொடர்ந்தார். "ஆஹா அதற்கென்ன ரொம்ப நன்றாகவே இருக்கும். ஆனால் பரந்தாமன் மனது வைக்க வேண்டுமே?! அவர் போய் பார்த்து விட்டு வந்தால் இங்கும் அந்த மாதிரி ஜாம் ஜாமென்று தாராளமாக வைத்துக் கொள்ளலாம்!"
விஷ்ணு நாரதரை எரித்து விடுவது போல பார்த்தார். "என்ன நாரதா, அப்படி இப்படி வளைத்து என் தலை மேலேயே கை வைத்து விட்டாயே?"
நாரதர் புன்னகைத்தார். "வாமனா, வானளாவி நின்ற உன் தலை மேல் நான் கை வைக்க முடியுமா?! ஒன்றுமில்லை, பூலோகத்தில் லஷ்மி கடாட்சத்தால் எல்லோரும் ஒஹோவென்று செல்வத்தில் திளைத்திருப்பதைப் போய் பார்ப்பதற்கு உனக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது! ஹ¥ம் என்ன செய்வது பரம்பொருளுக்கே பொறாமையென்றால் ... ஹ¥ம் ... " மேலும் பேசாமல் நாரதர் லஷ்மியைப் பார்த்தார்.
லஷ்மி தேவி உடனே பிடித்துக் கொண்டாள்! "அதானே?! என் அருளால் ஏதாவது நடந்து விட்டது என்றால் அதை ஏற்றுக்கொள்ளவே மாட்டீர்களே" என்று முகத்தைத் தூக்கிக் கொண்டு திரும்பிக் கொண்டாள்.
விஷ்ணு நாரதரை மூக்கின் மேல் வந்துவிட்ட கோபத்துடன் பார்த்தார். "திருப்திதானே நாரதா?! கலகம் நிறைவு பெற்று விட்டதா?"
நாரதர் கன்னத்தில் போட்டுக் கொண்டார். "ஆபத்பாந்தவா, மன்னிக்க வேண்டும். இந்த மாதிரி நடக்கும் என்று நான் நிச்சயமாக எண்ணவே இல்லை. இப்போது தான் என்ன, பூலோகத்துக்கு என்னோடு நீயும் வந்து தேவியின் அருளை பார்த்து விட்டு வந்து ஒப்புக் கொண்டு விட்டால் முடிந்தது அவ்வளவுதானே?!" என்றார்.
மஹாவிஷ்ணு பெருமூச்செறிந்தார். "இதற்குத் தானா உன் கலகம். சரி சரி வந்து தொலைக் கிறேன்" என்றார்.
"ஆனால் ஒரு விதியுண்டு. பூலோகத்தில் யாருக்கும் வந்திருப்பது மஹாவிஷ்ணு என்று தெரியக் கூடாது. தெரிந்தால், எல்லோரும் தேவியின் மகிமையை மறந்துவிட்டு உன்னைத் துதிக்க தொடங்கி விடுவார்கள்.
அதனால், ஒரு சராசரி மனிதனாகத்தான் நடந்து கொள்ள வேண்டும், சக்தியைக் காட்டக் கூடாது" என்றார் நாரதர். |
|
"ஆனால் நாரதா ..." என்று எதையோ சொல்ல ஆரம்பித்த விஷ்ணு, லஷ்மியின் கடும் பார்வையைப் பார்த்து விட்டு, "ஹ¥ம் ... நன்றாக ஆபத்தில் மாட்டி விடுவது என்று தீர்மானித்து விட்டாய், அப்படியே ஆகட்டும். சரி கிளம்பு" என்று பெருமூச்சுடன் அவசரமாக மாற்றிக் கொண்டார்.
நாரதர் முடியாது என்று சோகமாக தலையசைத்தார். "அதெப்படி, திடீர் என்று அப்படி போய் விட முடியுமா என்ன?! போவது அமெரிக்கா அல்லவா! அங்கே வெளியூர் ஆசாமிகள் எவரும் சாதாரணமாகப் போய் விட முடியாதே! உள்ளே புக விசா வேண்டுமே!" என்றார்.
விஷ்ணு கேட்டார், "அதற்கென்ன, ஒரு விசா வாங்கிக் கொண்டுவிட்டால் போகிறது?"
நாரதர் விஷ்ணுவின் வெகுளித் தனத்தைப் பார்த்து இன்னும் சோகமாக சிரித்தார். "கோவிந்தா, அது என்ன அவ்வளவு எளிதா என்ன? நீ விசிட்டர் விசா கேட்டால் potential immigrant என்று உடனே மறுத்து விடுவார்களே! என்ன செய்யலாம்..." என்று சற்று நேரம் யோசித்தார்.
விஷ்ணுவுக்கு கவலையாகி விட்டது. "அப்படியானால் போவதற்கு ரொம்ப நாளாகுமோ - சீக்கிரம் போய் பார்த்து விட்டு வராவிட்டால், வைகுண்டத்தில் என் கதி அதோ கதிதான். நாரதா சீக்கிரம் எதாவது ஒரு வழி சொல்லேன்" என்று கெஞ்சினார்.
நாரதருக்கு திடீரெனெ ஒரு யுக்தி உதித்தது. "ஆஹா, இப்படி செய்தால் என்ன?!" என்று சொல்லி விட்டு மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தார். விஷ்ணுவுக்கு மேலும் பொறுக்க முடியவில்லை. "அதென்ன, உடனே சொல்லித் தொலையேன்!" என்றார் அவசரத்துடன். நாரதர் கூறினார், "பொறுக்க வேண்டும் ஸ்வாமி! அந்த வழி உனக்கு சரிப் பட்டு வருமா யோசிக்க வேண்டி இருக்கிறது. சரி, முடியும் என்றுதான் நினைக்கிறேன். பாரதத்தில் தெருவுக்குத் தெரு நடப்பதுதானே இது!", என்றார்.
விஷ்ணு விழித்தார். "என்னாலேயே முடியுமா என்று யோசிக்கிறாய். ஆனால் பாரதத்தில் பலப் பலரும் செய்வதுதானே என்றும் சொல்கிறாய்! விளங்கும் படி தான் சொல்லேன்" என்றார்.
நாரதர் விளக்கினார். "வேங்கடவா, உன்னால் முடியாதது என்ன? ஆனால், என் எண்ணம் என்னவென்றால், இப்போதெல்லாம் silicon valley-க்கு சுலபமாகப் போக வேண்டும் என்றால், HTML-ம், ஜாவாவும் தெரிந்திருந்தால் போதும், உடனே, ஒரு H1 விசா வாங்கிக் கொடுத்து அடுத்த விமானத்தில் ஏற்றி அனுப்பி விடுவார்கள். அதுதான் பார்த்தேன், இந்த வயதில் உன்னால் அவற்றை கற்றுக் கொள்ள முடியுமா என்று. பாரதத்திலாவது மூலைக்கு மூலை ஒரு ஓலைக் கொட்டகை வைத்தாவது இவற்றைக் கற்றுக் கொடுத்து விடுகிறார்கள். இங்கே எப்படி கற்றுக் கொள்வது என்று யோசித்தேன்..." என்றவர், சில நொடியில் "ஆஹா, தெரிந்து விட்டது. அன்னை சரஸ்வதியிடமே சென்று, அவள் ஆசியில் ஒரு நொடியில் கற்றுக் கொண்டு விடலாம். வா என்னோடு!" என்றார்.
இப்படியாக, ஜாவாவும், HTML-ம் கற்றுக் கொண்ட விஷ்ணு, பாரதத்துக்கு வந்து ஒரு IT நிறுவனத்தில் சேர்ந்து, ஒரு வார பயிற்சி பெற்று, ஒரு முழ நீள resume-வுடனும், விசாவுடனும் silicon valley வந்து சேர்ந்தார். அவருடன் நாரதரும், தன்னுடைய globe trotter multiple entry விசாவுடன் வந்தார். விஷ்ணுவுக்கு தன்னுடைய resume-வைப் பார்த்து ஒரே சந்தேகம். "என்ன நாரதா, இதில் ஏதேதோ போட்டிருக்கிறதே, அந்த வேலை எல்லாம் நான் ஒன்றுமே செய்ய வில்லையே?!" என்று கேட்டார்.
நாரதர் தலையில் அடித்துக் கொண்டார். "பார்த்த சாரதி, இப்படி பட்டிக் காடு போல கேட்கிறாயே?! செய்தால் என்ன செய்திருக் காவிட்டால் என்ன? ஒரு நூறுக்குப் பத்து விகிதம் செய்யப் போகும் வேலையை செய்ய முடிந்தால் போதாதா?! இப்போ திருக்கும் டாட்-காம் நெரிசலுக்கு ஜாவா என்று சொல்லத் தெரிந்தாலே போதும் வளைத்துப் போட்டு விடுவார்களே! உனக்குத் தான் நிஜமாகவே program எழுதத் தெரியுமே! கவலைப் படாதே, ஜமாய்ச்சுடலாம்!" என்று தேற்றினார். விஷ்ணுவும் நிம்மதியானார்.
அடுத்த நாளே விஷ்ணு ஒரு டாட்-காம் project-க்கு சேர்க்கப்பட்டார். நாரதரும் சேர்க்கப் பட்டார். இருவரும் தட்டுத் தடுமாறிக் கொண்டு சில மணி நேரத்திலேயே HTML-ம், ஜாவாவும் எழுதித் தள்ள ஆரம்பித்தனர்.
மறு நாளே இருவரும் அபார்ட்மென்ட் தேடும் படலத்தில் இறங்கினர். ஆனால், அது கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது! எந்கு போனாலும் வெயிட்டிங் லிஸ்ட்தான்! இரண்டு மாதம் கழித்துதான் கிடைக்கும் என்றனர். ஆனால், வரவழைத்த நிறுவனத்தார் கெஸ்ட் ஹவுஸில் இருந்து இரண்டு வாரங்களுக் குள்ளேயே வெளியே சென்றாக வேண்டும் என்றனர். அடுத்த விமானம் முழுவதும் வரும் programmer-களுக்கு இடம் வேண்டும் அல்லவா?! விஷ்ணுவுக்கு மீண்டும் கவலையாகி விட்டது. "என்ன நாரதா, நடுத்தெருவில் படுக்க வேண்டிய நிலை வந்து விடும் போலிருக் கிறதே?!" என்றார்.
நாரதர் கவலை வேண்டாம் என்று உறுதி அளித்துவிட்டு எங்கேயோ மறைந்தார். சிறிது நேரத்தில் யாரோ ஒருவனுடன் திரும்பினார். அவன் மிக ரகசியமாக, "ஒரு ரூம் அபார்ட்மென்ட் ஒண்ணு புடிச்சி வச்சிருக்கேன். மாசம் $2000 வாடகை, மூணு மாசம் அட்வான்ஸ் கட்டணும். ஆனா உங்களுக்கு டாட்-காம் ஸ்டாக் ஆப்ஷன்ஸ் இருந்தால், அதில் கொஞ்சம் ஷேர் குடுத்து, ஒரு மாச அட்வான்ஸில் முடிச்சிடலாம்" என்றான்.
விஷ்ணு stock options இல்லை என்றதும், அலட்சியமான ஒரு பார்வையை வீசிவிட்டு , "ஹ¥ம்...சரி, அப்போ மூணு மாசம் கட்டியாகணும் போகலாம் வாங்க" என்றான். விஷ்ணு "இப்பவே முடியாது, எங்க மேனேஜர் கிட்ட அட்வான்ஸ் கேட்டு அவங்க கொடுத்தவுடன் கொடுக்கிறேன்" என்று சொல்லவும் அந்த ஆசாமியின் முகத்தில் ஏளனம் படர்ந்தது. "என்ன நாரதரே, படா பேஜாராப் போச்சே?! நீ கில்லாடியா கீறேன்னு பாத்து வந்தா, இந்த ஆளு சரியான பேக்கு போல இக்கீது?! இதை இன்னிக்கு விட்டா, போச்சு! இப்பவே எவ்வளவு பேர் லைன்ல நிக்கறானுங்க தெரியுமா? நான் திருப்பதி டிக்கட் கணக்கா உங்கள முன்னால இஸ்த்துக்குனு போலாம்னு பாத்தா, எதோ ராங்கு காட்டிக்கறயே?!" என்றான்.
திடீரென்று பலமாக வீசிய மெட்றாஸ் பாஷை வாடையாலும், திருப்பதியில் லைனுக்கு டிக்கட் விற்பது பற்றிய ஊழல் விவகாரத்தாலும் விஷ்ணு அதிர்ந்து நின்றார். நாரதர் அபார்ட்மென்ட் ஆசாமியை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று ஏதோ கிசு கிசுத்தார். அவனும் திரும்ப வந்து, "சரி ஏதோ பாக்கறத்துக்கு நல்ல புள்ள மாதிரி கீறே, நாரதர்
சொல்றாருன்னு எடுத்துக்கறேன்" என்று அவர்களை அழைத்துச் சென்றான். அபார்ட் மென்டும் நன்றாக இல்லை, இருந்த இடமும் ஒரு மாதிரிதான். இருந்தாலும் என்ன செய்வது? தேடிக் களைத்த விஷ்ணு கிடைத்தால் போதும் என்று எடுத்துக் கொண்டார்.
அடுத்து கார் வாங்கப் போனால் அங்கும் அதே கதிதான். புது வாகனம் வாங்க வேண்டும் என்றால் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். நாரதர் எங்கோ பார்த்து கப்பல் போன்ற ஒரு பிரம்மாண்டமான ஒரு மிகப் பழைய கார் வாங்கி வந்தார். அதைக் கண்டு விஷ்ணு மலைத்துப் போகவே, நாரதர் "கண்ணா, தேரோட்டிய உனக்கு, இந்த கப்பல் காரோட்டுவது ஒன்றும் கஷ்டம் இல்லை சமாளிக்கலாம் வா" என்று சமாதானம் செய்தார்.
சில நாள் கழித்து இருவரும் அபார்ட் மென்டுக்கு வெளியில் நடந்து கொண்டிருந்த போது ஒரு கார் கிறீச்சென்ற சப்தத்துடன் வந்து அருகில் நின்றது. உள்ளிருந்து ஒருவர் சரேல் என இறங்கி "உங்கள் ரெண்டு பேருக்கும் HTML, ஜாவா தெரியும் இல்லையா?" என்றார். நாரதர் "அதற்கென்ன, இன்னும் perl, sql, தேவ பாஷை எல்லாமே தெரியும்" என்றார். விஷ்ணு இந்த அண்டப் புளுகைக் கேட்டு வாயைப் பிளந்தார். ஆனால் அவர் ஆட்சேபிப்பதற்குள் விஷ்ணு, நாரதர் இருவரும் வண்டிக்குள் இழுக்கப் பட்டனர். வண்டி படு வேகமாகக் கிளம்பியது.
கதிரவன் எழில்மன்னன்
(தொடரும்) |
|
|
|
|
|
|
|
|