|
|
|
பத்ம விருதுகள் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ.ஹானர்ஸ் பட்டமும், மும்பையிலுள்ள டாடா அடிப்படை ஆய்வகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர் சி.எஸ்.சேஷாத்ரி. கணிதவியலாளர். இவருக்கு இந்த ஆண்டு பத்மபூஷண் விருது கொடுத்து நடுவண் அரசு கௌரவித்துள்ளது. சென்னை கணிதவியல் பயிலகம் தொடங்கக் காரணமாக இருந்ததுடன் அதன் இயக்குனராகவும் பணியாற்றி வருபவர். அல்ஜிப்ரா கணித ஆராய்ச்சியில் உலக அளவில் சாதனை நிகழ்த்தியவர். பாரிஸ், ஹார்வர்ட், கலிஃபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ், போன்ற பல்கலைக் கழகங்களில் வருகைப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். கணிதமேதை ராமானுஜத்துக்குப் பிறகு ராயல் சொசைட்டியின் ஃபெல்லோ விருது பெற்றவர். ஸ்ரீனிவாஸ ராமனுஜம் விருது, சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது போன்ற பல விருதுகள் பெற்றவர் இவர்.
தவிர, கல்வெட்டு ஆராய்ச்சியாளர், மொழியியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் (பத்மஸ்ரீ), நடனக் கலைஞர்கள் தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன் (பத்மபூஷண்), சமூக சேவகர் சரோஜினி வரதப்பன் (பத்மபூஷன்) உட்பட பல கலைஞர்களுக்கும் இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கியுள்ளது. சாதனையாளர்களுக்கு தென்றலின் வாழ்த்துகள்.
பீம்சேன் ஜோஷிக்கு பாரத ரத்னா இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா பிரபல இந்துஸ்தானி இசைக் கலைஞர் பண்டித பீம்சேன் ஜோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசியல் சர்ச்சை காரணமாக இவ்விருது வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் ஜோஷியின் பெயர் 2008ம் ஆண்டு விருதுக்காக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜோஷிக்கு உடல்நலம் இல்லாததால் அவரால் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க இயலவில்லை. அதனால் ஜோஷி வசித்த புனே இல்லத்திற்கே நேரடியாக விஜயம் செய்த மத்திய உள்துறை கூடுதல் செயலாளர், இவ்விருதை அவரிடம் வழங்கினார். குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட சான்றிதழ், பதக்கம் ஆகியவை கொண்டது இவ்விருது. ஜோஷியை தென்றல் வாழ்த்துகிறது. |
|
71 பேருக்குக் கலைமாமணி விருதுகள் கலைத்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களை பாராட்டி ஆண்டு தோறும் கலைமாமணி விருதுகளைத் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இசைத்துறைக்காக மகாராஜபுரம் சீனிவாசன், ஏ.வி.எஸ். சிவகுமார், எம்பார் கண்ணன், வழுவூர் ரவி, டிரம்ஸ் சிவமணி ஆகியோர் விருது பெறுகின்றனர். இலக்கியம் மற்றும் எழுத்திற்காக அ.மாதவன், கவிஞர் சிற்பி, முனைவர் சரளா ராஜகோபாலன், அவ்வை நடராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். சொற்பொழிவாளர் சுகி சிவம், பாடகர் வீரமணி ராஜூ ஆகியோர் சமயம் சார்பாக விருது பெறுகின்றனர். நாடகத் துறைக்கான விருதை கூத்துப்பட்டறை முத்துசாமி, மு. ராமசாமி, புதுக்கோட்டை ச. அர்ச்சுனன் ஆகியோர் பெற உள்ளனர்.
திரைப்படத்துறையில் தயாரிப்பாளர், தொழிலதிபர் அபிராமி ராமநாதன், இயக்குநர்-நடிகர் சேரன், சுந்தர் சி, நடிகைகள் சரோஜாதேவி, ஷோபனா, மீரா ஜாஸ்மின், நயன்தாரா, அசின், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எழுத்தாளர் நவீனன், நகைச்சுவை நடிகர் வையாபுரி, வசனகர்த்தா வேதம் புதிது கண்ணன் இவர்களுடன் அறிவிப்பாளர் சரோஜ் நாராயண்சுவாமி, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி உட்பட 71 கலைஞர்கள் பெற இருக்கின்றனர்.
தொகுப்பு: அரவிந்த் |
|
|
|
|
|
|
|