Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
Tamil Unicode / English Search
நேர்காணல்
"தளையற்ற, வன்முறை எழுத்துக்கள் பயன் தராது" அசோகமித்திரன்
எழுத்தாளர் இந்து சுந்தரேசன்
- காந்தி சுந்தர்|பிப்ரவரி 2009|
Share:
Click Here Enlargeசித்ரா பானர்ஜி திவாகருணி, ஜும்பா லஹரி, இந்து சுந்தரேசன் - இவர்களுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன? அனைவருமே ஆங்கிலப் புத்தக உலகைக் கலக்கிக் கொண்டிருக்கும் வட அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியப் பெண் எழுத்தாளர்கள் என்பதுதான். இவர்களுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட எழுத்தாளர் இந்து சுந்தரேசன். சியாட்டிலிலுள்ள தியேட்டர் கம்பெனி ஒன்றில் இந்து சில காலம் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றியுள்ளார். அப்போது நாடக விளம்பரங்களை வடிவமைப்பது, டிக்கெட் விற்பனையில் உதவுவது எனப் பலவிதங்களில் செயல்பட்டது மட்டுமன்றி, நாடகங்களுக்கு செட் அமைப்பதிலும், தன் தனித் திறமையைக் காட்டியுள்ளார். மின்சாரத்தில் இயங்கும் பவர் டூல்ஸ்களைக் கையாள்வதில் இவர் தேர்ந்தவர்.

இவர் தற்போது எழுதி வருவது 'Shadow Princess' என்னும் ஜஹனாராவைப் பற்றிய நாவல். ரெட்மண்ட், சியாட்டிலில் வசித்து வரும் இந்து - சுந்தரேசன் தம்பதியருக்கு ‘சிதாரா' என்னும் இரண்டு வயது சுட்டிப் பெண்குழந்தை இருக்கிறது. தன் கணவரின் முழு ஒத்துழைப்புத்தான் தன் வெற்றிக்குக் காரணம் என்று கூறும் இந்துவுக்குத் தமிழில் மிகவும் பிடித்த படம் 'நாயகன்'. நாயகிகளைப் பற்றி எழுதும் இவருக்கு 'நாயகன்' பிடித்திருப்பதில் வியப்பொன்றுமில்லை. இவருடன் ஒரு தொலைபேசி உரையாடல்:

கே: உங்கள் பிறப்பு, வளர்ப்பு குறித்து...

ப: பெற்றோர்கள் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள். பிறந்தது தமிழ்நாட்டில். ஆனால் விமானப் படையில் பணிபுரிந்த என் தந்தையின் பணி நிமித்தம் நான் வளர்ந்தது பெரும்பாலும் வட இந்தியாவில்தான். கல்லூரிப் படிப்பை (பி.ஏ. பொருளாதாரம்) சென்னையிலுள்ள எதிராஜ் கல்லூரியில் முடித்த பின் அமெரிக்கா வந்தேன். இங்கு எம்.ஏ. எகனாமிக்ஸ், எம்.எஸ். ஆபரேஷன்ஸ் ரிசர்ச் ஆகியவை படித்து முடித்தேன்.

என் மனதைக் கவர்ந்த கதாபாத்திரங்கள் பெண்கள். மேலும் பெண்ணினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவே இப்பாத்திரங்களை தீர்க்கமானவர்களாக, ‘நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும்' கொண்டவர்களாக அமைத்துள்ளேன்.
கே: புதினம் எழுத வேண்டும் என்ற ஆவல் எப்போது ஏற்பட்டது?

ப: படித்து முடித்த பிறகு ஒரு பொருளாதார நிபுணராக வேலை பார்க்க ஆசைப்பட்டேன். நான் டெலவேரில் படித்துக் கொண்டிருந்த சமயம், அங்குள்ள நூலகத்திற்குச் சென்று இந்திய முகலாய சாம்ராஜ்யம் பற்றி, குறிப்பாக அவர்களது அந்தப்புரம் பற்றியும், ராணி நூர்ஜஹான் பற்றியும் ஒரு புத்தகத்தைப் படித்தேன். அது என் மனதில் நன்கு பதிந்து விட்டது. அவர்களைப் பற்றி ஒரு கதை எழுதினால் என்ன என்ற எண்ணம் வர, 1993-94 காலகட்டத்தில் எழுதத் தொடங்கினேன். சிறிதுகாலம் அலுவலகப் பணியில் ஈடுபட்டேன். பின்னர் முழுநேர எழுத்தாளராக மாறி விட்டேன். எனது முதல் மற்றும் இரண்டாம் நாவல்கள் பிரசுரம் ஆகவில்லை. ஆனால் நான் மனம் தளராமல் எழுத, எனது மூன்றாவது முயற்சியான 'The Twentieth Wife' 2002ம் ஆண்டு பிரசுரமாயிற்று.

கே: நீங்கள் ஒரு வரலாற்றுக் கதாசிரியராக அடையாளம் கொண்டுள்ளீர்கள். இந்த வரலாற்று ஆராய்ச்சிக்காக எத்தனை முறை இந்தியா செல்ல வேண்டி இருந்தது?

ப: நான் நாவல் ஆராய்ச்சிக்காக இந்தியா போக வேண்டியதேயில்லை. நான் வசிக்கும் சியாட்டில் பகுதியில் வாஷிங்டன் பல்கலைக்கழக நூலகம் உள்ளது. அதுவே எனது ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகிறது. இந்நூலகத்தில் இந்திய வரலாறு பற்றியும், முகலாயர்கள் பற்றியும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. அதுதவிர எனக்கு ஏதாவது குறிப்பிட்ட தலைப்பில் ஆய்வுக்குப் புத்தகங்கள் தேவைப்பட்டால், அதையும் இந் நூலகமே பிற நூலகங்களிலிருந்து எனக்கு வரவழைத்துத் தரும்.

கே: தாங்கள் எழுதிய நாவல்கள் என்னென்ன?

ப: முதலில் வெளியான 'The Twentieth Wife' நூர்ஜஹானைப் பற்றிய இதற்காக எனக்கு 2003ம் ஆண்டில் ‘வாஷிங்டன் ஸ்டேட் புக் அவார்டு' அளிக்கப்பட்டது. அடுத்த நாவல் 'Feast of Roses'. இது 17ம் நூற்றாண்டு முகலாய இந்தியாவை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. அடுத்து ‘Splender of Silence'. 1942ம் ஆண்டு மேதம் 4 நாட்களுள் நடந்த கதையாக எழுதியுள்ளேன். தற்போது ‘In The Convent of Little Flowers' என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியாகத் தயாராக உள்ளது. டிசம்பர் மாதம் இப்புத்தகம் வெளிவரும். இதிலுள்ள ஒவ்வொரு கதையும் ஏதேனும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.

கே: உங்களது மூன்று நாவல்களும் பெண்களை மையப்படுத்தியே அமைந்துள்ளன. இதற்கு என்ன காரணம்?

ப: இதற்கு முதல் காரணம், என் மனதைக் கவர்ந்த கதாபாத்திரங்கள் பெண்கள். மேலும் பெண்ணினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவே இப்பாத்திரங்களை தீர்க்கமானவர்களாக, ‘நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும்' கொண்டவர்களாக அமைத்துள்ளேன்.

கே: குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினரையே மையமாக வைத்து கதைகளை எழுதியுள்ளீர்கள், இதற்கு வரவேற்பு எப்படி இருந்தது?
Click Here Enlargeப: முகலாய சாம்ராஜ்ய ஆண்மக்கள், மன்னர்களைப் பற்றி வரலாற்றிலும் சரி, புதினங்களிலும் சரி நிறைய பேசப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் வாழ்விலுள்ள பெண்களைப் பற்றி அதிகம் பேசப்பட்டதில்லை. ஆகையால் எனது நாவல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. பலர் ‘ஷாயரி' அதாவது வரலாற்றினை வர்ணிக்கும் சிறிய பாடல்களை என்னிடம் பாடிக் காண்பித்து அவற்றின் மூலம் மேலும் விவரங்களைத் தெரிவிக்கின்றனர். இதைத் தவிர மின்னஞ்சல் மூலமும், எனது கதையின் ஒரு பகுதியை நான் படிக்கும் கூட்டங்களில் நேர்காணல் மூலமும் பலர் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றனர். இவர்களுள் இந்தியாவில் வசிக்கும் வாசகர்களும் அடக்கம்.

கே: உங்கள் கதைகளை நாடகம்/ திரைப்படமாக்க யாரேனும் முன் வந்துள்ளனரா?

ப: பெங்களூருவைச் சேர்ந்த ‘பெங்களுர் லிட்டில் தியேட்டர்' குழுவினர என் நாவல்களை நாடகமாக்குவதில் இறங்கியுள்ளனர். பல தயாரிப்பாளர்களிடமிருந்து திரைப்படமாக்கும் விருப்பங்களும் வந்துள்ளன. இவை பரிசீலனையில் உள்ளன.

இந்துவின் எழுத்துப்பணி தொடர தென்றல் வாழ்த்துகிறது!

*****


இந்து சுந்தரேசனின் In the Convent of Little Flowers

இந்து சுந்தரேசனின் சிறுகதைத் தொகுப்பு அவரது எண்ணங்களின் பிரதிபலிப்புகளையும், வாழ்வில் சந்தித்த செய்திகளின் தாக்கங்களையும் நன்றாக வெளிப்படுத்துகின்றது. புத்தகத்தின் பின்னுரையில் எப்படி பல சம்பவங்கள் தனது கதைகளுக்கு வித்தாக அமைந்தன என்பதைச் சுவையாக விவரிக்கிறார். ஆங்கிலத்தில் எழுதிய கதைகள் என்றாலும், அவற்றின் எளிய நடை, காட்சிகளின் தொகுப்பு, கதை நடக்கும் சூழலின் விவரமான வர்ணனை அனைத்தும் நம்மை இந்திய மண்ணிற்கே இழுத்துச் செல்கின்றன.

புத்தகத்தின் தலைப்புடன் இணைந்த Shelter of Rain என்ற கதை சியாட்டில் நகரையும், சென்னையையும் இணைத்து கதை நாயகியின் மன ஓட்டம் வழியாக நம் கண்முன்னே நிறுத்துகிறது. சியாட்டில், சென்னை, வட இந்தியா, ஏழைக் குடும்பம், பணக்கார வாழ்க்கை, இந்து, கிறிஸ்தவர், இளைஞரின் நோக்கு, முதியவர் எண்ணப் பார்வை என்று பல பரிமாணங்களை இந்தச் சிறுகதை தொகுப்பில் சித்திரிக்கிறார்.

The Key Club, Hunger இரண்டு சிறுகதைகளும் இந்தியப் பின்னணி கொண்ட ஒரு பெண் எழுத்தாளரின் படைப்பில் நாம் எதிர்பாராத கதைக்கருக்கள். பல கசப்பான சம்பவங்களை கதைக்கருவாகத் தயங்காமல் பயன்படுத்தி வாழ்க்கையின் யதார்த்தத்தை வெளிக் கொணர்ந்திருக்கிறார். Three and a Half Seconds மனதில் ஏற்படுத்தும் கனம் குறையப் பல மணி நேரங்கள் ஆகும். Fire மூலம் சாதி வேற்றுமையும், குடும்ப கௌரவமும் எவ்வாறு கண்மூடித்தனமான அறிவற்ற செயல்களைச் செய்ய வைக்கிறது என்று நம்மைப் புழுங்க வைக்கிறார். அதே சமயம் The Most Unwanted கதை முடிவில் நாதன் மனம் மாறி தனது பேரக் குழந்தையை ஏற்றுக் கொள்ளும்போது மனித நேயத்தின் அழகு வெளிப்படுகிறது.

ஒரு சிறுகதையின் பாதிப்பை அதைப் படித்து முடித்த பின்னர் நினைவுகூரும் போதுதான் அனுபவிக்க முடியும் என்று இந்து தனது பின்னுரையில் குறிப்பிடுகிறார். அது முற்றிலும் உண்மை என்பதை இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் நிரூபிக்கின்றது. இந்தத் தொகுப்பு அனைவரும் படித்து அனுபவிக்க வேண்டிய ஒன்று.

சந்திப்பு: காந்தி சுந்தர்
More

"தளையற்ற, வன்முறை எழுத்துக்கள் பயன் தராது" அசோகமித்திரன்
Share: 




© Copyright 2020 Tamilonline