Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஸ்தபதி என்பவன் ஒரு விஞ்ஞானி: பத்மபூஷண் வை. கணபதி ஸ்தபதி
சூசி நாக்பால்
- |மார்ச் 2009|
Share:
Click Here Enlarge2008 நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் வளைகுடாப் பகுதி சரடோகா நகர நிர்வாகக்குழு உறுப்பினராகத் திருமதி. சூசி நாக்பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரைப் பற்றிய அறிமுகம் அக்டோபர் 2008 மாத தென்றல் இதழில் வெளியாகி இருக்கிறது. அவரது தந்தை திரு. வேதாந்தம் 1977, 78களில் சான் ஃபிரான்சிஸ்கோவில் கான்சல் ஜெனரலாகப் பணி புரிந்தவர். சூசி நாக்பால், வேதாந்தம் இருவருடனும் தென்றலுக்காக உரையாடிய போது...

கேள்வி: உங்களுக்குப் பொதுவாழ்வில் ஈடுபாடு வந்தது எப்படி? சரடோகா நகர நிர்வாகியாகத் தேர்தலில் நிற்கும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

சூசி: எனக்குப் பொதுவாழ்வில் ஈடுபாடு வர எனது தந்தை ஒரு முக்கியக் காரணம். அவரோடு வாழ்ந்தால் பொதுச் சேவையில் பங்கேற்காமல் இருக்க முடியாது. எந்த நகரச் சூழலில் வளர்ந்தாலும், தொண்டு நிறுவனங்களுக்குத் தொடர்ந்து சேவை செய்து வந்திருக்கிறேன். நான் சரடோகா நகர திட்டக்குழுவில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பங்கேற்று வந்திருக்கிறேன். அதனால் தேர்தலில் நின்று நான் வாழும் சமூகத்திற்குச் சேவை செய்வது சரியென்று தோன்றியது.

வேதாந்தம்: எவ்வளவு சம்பாதித்தாலும், தொழிலில் வெற்றி பெற்றாலும், நாம் வாழும் சமூகம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அதனால் பொதுச் சேவையில் பங்கேற்பது மிகவும் அவசியம்.

சூசி: நமது சமூகத்துடன் தொடர்ந்து உறவாடத்தான் தமிழ் மன்றம் போன்ற அமைப்புகளை உருவாக்குகிறோம். சில சமயம் அத்தகைய நமக்குப் பரிச்சயமான சூழலைத் தாண்டி நாம் வாழும் சமூகத்துக்கு எப்படி உதவலாம் என்று யோசிக்க வேண்டும்.

கேள்வி: இந்தப் பதவியில் உங்களுக்கு உடனடிச் சோதனைகள் யாவை?

தமிழ் மன்றம் இங்கு வாழும் தமிழ் சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு உதவ வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் பல சாதனைகளைச் செய்ய முடியும்
சூசி: நகர நிர்வாகத்தில் இளைஞர்கள், முதியவர்கள் என்று சமூகத்தின் பல பிரிவினர்களையும் பங்கேற்க வைக்க விரும்புகிறேன். வளைகுடாப் பகுதிச் சமூகம் பலதரப்பட்ட பிரிவுகளை அடக்கியது. ஜாதி, மொழி, இன வேற்றுமை மட்டுமன்றி, வயது, படிப்பு, எந்தவிதமான பள்ளிக்குச் செல்கிறார்கள், தொழில் ஆகியவற்றைப் பொறுத்தும் பிரிவுகள் உள்ளன. அனைவரையும் இணைத்து நகர நிர்வாகத்தில் ஆர்வத்துடன் ஈடுபட வைக்க விரும்புகிறேன். அதைத்தவிர, village என்று அழைக்கப்படும் நகரின் முக்கியப் பகுதி பொருளாதார அடிப்படையில் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அது முன்னேற எப்படி உதவலாம் என்பதும் எனது அடுத்த நோக்கம். நகர நிர்வாகத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் 40 அல்லது 50 சதவிகிதம் நிலம் கையகப்படுத்துவது (land restitution) சம்பத்தப்பட்டதுதான். அதற்குத் திட்டக் குழுவில் பணிபுரிந்த அனுபவம் மிகவும் உதவும் என்று நம்புகிறேன். நான் சுற்றுச் சூழலில் பெற்ற பட்டமும் அதற்கு மிகவும் உதவும்.

கேள்வி: உங்கள் இளமைக்காலம் குறித்துச் சொல்லுங்கள்...

சூசி: எனது சகோதரியும் நானும் லண்டனில் பிறந்தோம். எங்கள் பெற்றோருடன் அமெரிக்காவுக்கு 1977ல் வந்தோம். நாங்கள் அப்போது சிறு பிள்ளைகள். அப்போதிலிருந்தே தமிழ் மன்றக் கூட்டங்களில் பங்கு பெற்றிருக்கிறோம். எங்கள் பெற்றோருடன் அவர்களின் நண்பர்கள் வீட்டிற்குச் செல்வோம். என்னைவிட எனது தந்தை நிகழ்ச்சிகளை நன்றாக நினைவுகூர முடியும். நான் தமிழை மறக்காமல் சரளமாகப் பேச வேண்டும் என்பதற்காகத்தான் பெற்றோர் என்னை இந்தக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். பிறகு வேலைமாற்றம் காரணமாகப் பெற்றோர் இந்தியாவிற்குத் திரும்பினார்கள். நாங்கள் இங்கேயே தங்கிக் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்து, வேலையிலும் சேர்ந்தோம்.

வேதாந்தம்: வளைகுடாப் பகுதி இந்தியர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் இருந்தார்கள். நான் எல்லாப் பிரிவினர்களையும் சந்தித்து அவரவர்களுக்கு ஒரு சங்கம் வைத்துக்கொள்ளச் சொல்லித் தூண்டினேன். நான் அரசாங்க உத்தியோகத்தில் இருந்ததால் எதிலும் நேரடியாகப் பங்கேற்க முடியாது. எனது தாய் மொழி தமிழ்தான். தமிழன் பாக்கியராஜ் போன்ற நண்பர்களைச் சந்தித்து தமிழுக்காக ஏன் ஓர் அமைப்பை உருவாக்கக் கூடாது என்ற எண்ணத்தைத் தூண்டிவிட்டேன். நாம் ஒன்றாகச் செயல்பட்டால் பல சாதனைகளைச் செய்ய முடியும் என்று நம்பினேன். அந்த எண்ணத்தின் வடிவாகவே வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் உருவானது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

லிவர்மூர் கோவிலுக்கு இடம் கிடைக்காமல் தேடிக் கொண்டிருந்த சமயம். சன்னிவேல் போன்ற பகுதிகளில் இடம் தேடிக் கொண்டிருந்தனர். அப்போது ஜோன்ஸ்டவுனில் நடந்த மாபெரும் தற்கொலையில் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பலரும் இறந்திருந்த சமயம். மற்றொரு மாபெரும் தற்கொலை இந்தப் பகுதியிலும் நடந்து விடுமோ என்று மிகவும் அஞ்சினார்கள். அந்தச் சமயத்தில் பெர்க்கலியில் பல அமெரிக்கர்கள் 'ஹரே கிருஷ்ணா' அமைப்பில் சேர்ந்ததும் மக்களிடையே ஒரு பீதியைக் கிளப்பி இருந்தது. அதனால் நம் கோவிலுக்கு இடம் கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது. அந்தச் சமயம் நான் கான்சல் ஜெனரலாக இருந்ததால் நமது மதம், கடவுள் நம்பிக்கை, கோட்பாடுகள் பற்றியும் லிவர்மூர் நகர நிர்வாகிகளிடம் விளக்கிக் கூற முடிந்தது. அதனால் அங்கே கோவில் கட்டுவது சாத்தியமாயிற்று.

கேள்வி: உங்களை இங்கு வளரும் இரண்டாம் தலைமுறை என்று கருதலாம். ஆனாலும் நீங்கள் அருமையாகத் தமிழ் பேசுகிறீர்கள். அதன் ரகசியம் என்ன?

சூசி: நான் என்னை முழுமையாக இரண்டாம் தலைமுறை என்று கருத மாட்டேன். இங்கு வந்தபொழுது எனக்கு 13 வயது. பள்ளிக் காலங்களில் நான் டில்லியில் வளர்ந்தேன். வீட்டில் அனைவரும் தமிழில் தான் பேசுவோம். அதனால் எனக்குத் தமிழ் சரளமாகப் பேச வரும். டில்லியில் வளர்ந்ததால் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் தமிழிலும், ஹிந்தியிலும் நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டோம். தமிழ் மன்றம் போன்ற அமைப்புகளின் பெரிய சேவை, இங்கு வளரும் குழந்தைகளுக்குத் தமிழை அறிமுகப்படுத்துவதுதான்.

கேள்வி: தமிழ் மன்றம் துவங்கியபோது நண்பர்கள் கூடும் அமைப்பாகத்தான் இருந்தது. பல கட்டங்களைக் கடந்து இப்பொழுது ஒரு சமூக அமைப்பாக உருவாகி இருக்கிறது. வரும் காலங்களில் தமிழ் மன்றம் எதில் கவனம் செலுத்த வேண்டும்?

வேதாந்தம்: நல்ல ஆழமான கேள்வி. எனக்கு உடனடியாக மனதில் தோன்றுவது என்னவென்றால், தமிழ் மன்றம் இங்கு வாழும் தமிழ் சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு உதவ வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் பல சாதனைகளைச் செய்ய முடியும். தமிழ்ச் சமுதாயம் இங்கு வளர்ந்து வருகிறது. அவ்வாறு வளரும் சமுதாயத்தில் பல சோதனைகள் உருவாகும். அத்தகைய சோதனைகளுக்குத் தீர்வுகாண தமிழ்மன்றம் போன்ற அமைப்புகள் எவ்வாறு உதவி செய்யலாம் என்பதில் கவனம் செலுத்தலாம்.
Click Here Enlargeகேள்வி: இந்தியச் சூழலில் வளர்ந்த பெற்றோர்கள், அமெரிக்கச் சூழலில் குழந்தைகளை வளர்ப்பதைப் பற்றிய உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சூசி: எனக்கு இப்போது டீன் ஏஜ் பெண் இருக்கிறாள். எனது தந்தை சொன்னது போல் (பார்க்க: பெட்டிச்செய்தி), அவர்கள்மேல் நாம் வைக்கும் நம்பிக்கை மிகமிக முக்கியமானது. நாம் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்கள் வாழ்வில் நல்ல முடிவுகளை எடுப்பார்கள் என்று நம்பவேண்டும். நாம் வளரும்போது இளவயதில் பல முடிவுகளை எடுத்திருக்கிறோம். அவற்றில் பல நல்ல முடிவுகளாகத்தான் அமைந்திருக்கின்றன. அதேபோல் நமது குழந்தைகளும் நல்ல முடிவுகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை வேண்டும். அவர்கள் எப்படித் தெளிவாக சிந்திக்கிறார்கள் என்பதை அறிந்து நீங்களே வியந்து போவீர்கள்.

கேள்வி: இங்கு வளரும் குழந்தைகள் பொதுவாழ்வில் ஈடுபட விரும்பினால் அவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

சூசி: சரடோகாவில் Youth Commission என்ற அமைப்பு இருக்கிறது. பொதுவாழ்வில் ஈடுபட விரும்பும் மாணவர்கள் அங்கு தொண்டு செய்யலாம். தொண்டு செய்வதற்கான வாய்ப்புகள் இங்கு அதிகம். ஒரு அறிவுரை மட்டும் கூறிக் கொள்வேன். தொண்டு செய்யும்போது, அதை முழு மனதுடன் செய்ய வேண்டும், கல்லூரி விண்ணப்பத்தில் நிரப்புவதற்காக மட்டும் அதைச் செய்யக்கூடாது. பல நகரங்களிலும் யூத் கமிஷன் இருக்கிறது. 'பொதுஜனக் கொள்கை' (Public Policy) போன்ற விஷயங்களில் ஆர்வம் இருக்கும் மாணவர்கள் இந்த அமைப்பின் மூலம் நல்ல அனுபவத்தைப் பெறலாம்.

தொண்டு செய்யும்போது, அதை முழு மனதுடன் செய்ய வேண்டும், கல்லூரி விண்ணப்பத்தில் நிரப்புவதற்காக மட்டும் அதைச் செய்யக்கூடாது
கேள்வி: உங்கள் குடும்பத்தைப் பற்றிக் கூற முடியுமா?

சூசி: எனக்கு இரண்டு மக்கள். முதல் பையன் U.C. Davis-ல் படித்துக் கொண்டு இருக்கிறான். இரண்டாவது பெண் சரடோகா உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறாள். என் கணவரின் பெற்றோரும் எங்களுடன் வசிக்கிறார்கள். எனது சகோதரியும், அவரது குடும்பமும் இங்குதான் வசிக்கிறார்கள். அதேபோல் எனது கணவரின் நெருங்கிய உறவினர்களும் இங்கு இருக்கிறார்கள். அதைத் தவிர பல உறவினர்கள் இங்குதான் இருக்கிறார்கள். அதனால் எங்கள் குடும்பம் ஒன்று சேரும் போது ஒரே உற்சாகமாகவும், கொண்டாட்டமாகவும் இருக்கும்.

கேள்வி: நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

சூசி: எனக்கு என் தந்தையே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். யாரோ முன்பின் தெரியாத ஒரு அரசியல்வாதியிடம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதை விட, அப்பாவே பதவிப் பிரமாணம் செய்து வைத்தது மறக்க முடியாத சம்பவம்.

சூசிக்கும் அவர் தந்தை வேதாந்தத்திற்கும் நன்றி கூறி, சூசி நாக்பால் சரடோகா நகர நிர்வாகியாக வெற்றிபெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறோம்.

சந்திப்பு: சிவக்குமார் சேஷப்பன்

***
அமெரிக்காவுக்கு வந்தபோது எனது இரண்டு பெண்களும் பதின்மப் (டீன் ஏஜ்) பருவத்தினர். அப்போதெல்லாம் இந்தியாவில் மட்டுமல்ல, இங்கும் பெண்கள் பொறியியல் போன்ற துறைகளில் மேல்படிப்பைத் தொடர்வது அபூர்வம். அத்தகைய சூழலில் அவர்களை இந்தியாவில் இருந்து இங்கு அழைத்து வரவேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

முதலாவதாக, நாம் குழந்தைகள்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். நமது கலாசாரத்திலும், நாம் வளர்ந்த சூழலிலும் இருந்து மாறுபட்டு, சுதந்திரத்துடன் குழந்தைகள் இங்கு வளரும்பொழுது அவர்கள்மேல் நம்பிக்கை வைப்பது மிகவும் அவசியமாகிறது. இரண்டாவதாக நமது கலாசாரத்தின் பழக்கங்களை அவர்கள்மேல் திணிப்பதைவிட, அதன் சிறப்புகளையும், மேம்பாட்டையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். எவற்றை அவர்கள் தவிர்க்க வேண்டும், எதனால் நம் முன்னோர்கள் அவ்வாறு அறிவுறுத்தினார்கள் என்பதை அவர்களுக்குப் புரியும்படியாக விளக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு நம்மேலும், நமது கலாசாரத்தின் மேலும் மரியாதை வரும். மூன்றாவதாக நாம் சொல்லும் எல்லாவற்றையும் அவர்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை, அதேபோல அவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் நாம் ஏற்கும்படியாக இருக்காது என்ற யதார்த்தத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

- வேதாந்தம்
More

ஸ்தபதி என்பவன் ஒரு விஞ்ஞானி: பத்மபூஷண் வை. கணபதி ஸ்தபதி
Share: 
© Copyright 2020 Tamilonline