|
|
விஸ்வநாதன்: ஐ.ஐ.டி.யில் பட்டம் பெற்ற நீங்கள் எவ்வாறு, எப்போது சங்கீதத்துறையில் நுழைந்தீர்கள்?
சௌம்யா: நான் சங்கீதம் கற்கத் தொடங்கியது இரண்டரை வயதில். இதற்குப் பல ஆண்டுகள் கழித்துதான் நான் ஐ.ஐ.டி.யில் சேர்ந்தேன்.
வி: எப்போது, எந்த நிலையில் நீங்கள் உங்களுடைய முழுநேரத்தையும் சங்கீதத்திற்காக அர்பணித்தீர்கள்?
சௌ: ஐ.ஐ.டி. பட்டப்படிப்பு முடிந்த பின்புதான். அதுவரை படிப்பு, சங்கீதம் இரண்டுக்கும் நான் நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது.
வி: நீங்கள் படித்த பொறியியல் பட்டப்படிப்பு உங்களது சங்கீதக் கலைக்குப் பயன்படுகிறதா?
சௌ: கண்டிப்பாக. சங்கீத சாஸ்திரத்தைத் தொழில்முறையில் விஞ்ஞான ரீதியாக ஒரு வரையறையுடனும் தனித்தன்மையுடனும் அணுகுவதற்கு உதவுகிறது.
வி: உங்கள் குரு யாவர்?
சௌ: எனது முதல் குரு என் தந்தையார். அவரும் என்னைப் போலவே ஒரு ரசாயனப் பொறியாளர். மிகுந்த ஆர்வமுள்ள ஒரு இசைக்கலைஞர். பிறகு சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். இராமநாதன் அவர்களின் சிஷ்யையாகப் பல ஆண்டுகள். அதன் பிறகு டி. முக்தா அம்மாவிடம் கற்றுக் கொண்டேன். இவர்கள் கொடுத்த உற்சாகமும், காஞ்சி காமாட்சி அம்மனின் அருளும்தான் எனது வெற்றிக்குக் காரணம்.
வி: உங்கள் குரு டாக்டர் இராமநாதன் அவர்களின் சங்கீத விரிவுரைகளைக் கேட்டிருக்கின்றோம். பல ராகங்களின் குணாதிசயங்களையும், நமது உள்ளங்களில் அவை எவ்வாறு பதிகின்றது அல்லது பாதிக்கின்றது என்பதை வெகு அழகாக விளக்குவார். இத்தகைய ஆய்வுகளை நீங்கள் செய்ய எண்ணியதுண்டா?
சௌ: இப்போது நாங்கள் செய்துவரும் சேவையே இதுதான். நானும் சங்கீதக் கலைஞர் சசிகிரண் அவர்களும் சேர்ந்து கர்நாடிகா.காம் (www.carnatika.com) என்ற வலைதளம் உருவாக்கியுள்ளோம். இதில் சங்கீதம் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறோம். மாணவர்களையும் இவைகளில் பங்குகொள்ள வைத்து ஊக்குவிக்கிறோம். மேலும் பல மாணவர்களுக்குக் கணினிமூலம் சங்கீதப் பயிற்சியே அளிக்கின்றோம். இவ்வாறு பலர் சங்கீதம் கற்றுக் கொள்கிறார்கள். இதனால் மாணவர்கள் உலகில் எங்கிருந்தாலும் நாங்கள் அவர்களுடன் தொடர்புகொண்டு பயிற்சி அளிக்க முடிகிறது. மற்றும் 'ராகம் சங்கீதம்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிமூலம் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அறிமுகப்படுத்துகிறோம்.
வி: எப்போதாவது நீங்கள் உங்கள் மேல் படிப்பைத் தொடராமல் போனதற்கு வருந்தியதுண்டா?
சௌ: ஆமாம். நான் ஐஐடியில் எம்.டெக் முடித்தபின் பி.எச்டி. ஆய்வுக்கு இடம் கிடைத்தது. ஆனால் சங்கீதத்திற்கு முழுநேரம் ஒதுக்க வேண்டியிருந்ததால் தொடரவில்லை. ஆனாலும், நான் சங்கீதத்துறையில் செய்த சாதனைகளைப் பார்க்கும் போது இந்த வருத்தம் இப்போது அவ்வளவாக இல்லை.
வி: உங்கள் முதல் கச்சேரி பற்றி...
சௌ: எனது 11-வது வயதில் தமிழ்நாட்டிலுள்ள நெரூர் என்ற ஊரில் ஸ்ரீசதாசிவ ப்ரம்மேந்திரரின் ஆரதானை விழாவில் முதன்முதல் மேடையேறிப் பாடினேன். பிறகு 13-வது வயதில் சென்னை ஸ்ரீ கிருஷ்ணகான சபா ஆதரவில் எனது கச்சேரி அரங்கேறியது.
வி: நீங்கள் பல நாடுகளில் கச்சேரிகள் செய்துள்ளீர்கள். அமெரிக்காவில் ரசிகர்களின் வரவேற்பு எவ்வாறு உள்ளது?
சௌ: மிகவும் பிரமாதமாக உள்ளது. ரசிகர்கள் அநேகமாக நம் நாட்டினர் என்பதால் தமிழ்நாட்டில் கச்சேரி செய்யும் உணர்வே ஏற்படுகிறது. இங்கு சபையோர் மூன்று மணி நேரமும் அசையாமல் உட்கார்ந்து கச்சேரியை ரசிப்பது பாராட்டத்தக்கது. இப்போது சென்னை போன்ற நகரங்களில் சபாக்கள் பல சங்கீதக் கலைஞர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டியிருப்பதால் கச்சேரி நேரமும் வெகுவாகக் குறுகிவிட்டது. |
|
வி: பல இளைஞர்கள், முக்கியமாகப் பெண்கள், சங்கீதம் பயின்றாலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தொடராமல் நிறுத்திவிடுகின்றனர். இதுபற்றி உங்கள் கருத்து?
சௌ: இதற்குப் பெற்றோர்களின் ஊக்குவித்தலும், கற்றுக்கொள்பவர்களின் ஒத்துழைப்பும் தாம் அவசியம். உண்மையிலேயே அக்கறையுடன் தொடர்ந்து பயின்றால் வெகுவாக முன்னேறலாம்.
வி: ஸ்ருதி ஸ்வர லயாவில் நான்கு நாட்களாக இந்தச் சங்கீத முகாம் நடத்தினீர்கள். இதில் பங்கு கொண்ட மாணவ, மாணவியரைப் பற்றிச் சொல்லுங்கள். இவர்களில் பலர் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள்.
சௌ: இவர்களுடைய ஒத்துழைப்பும் ஆர்வமும் மிக அருமை. ஒவ்வொருவரும் அழகாக என்னோடு இழைந்து பாடல்களைத் தெளிவாக உச்சரித்துப் பாடியது என்னை நெகிழ்வித்தது. இவர்கள் தொடர்ந்து தினமும் பயிற்சி செய்தால் நிச்சயமாகப் பலன் உண்டு.
வி: சங்கீதம் பயிலும் மாணவ மாணவியருக்கு உங்கள் அறிவுரை...?
சௌ: இடைவிடாத பயிற்சி மிகமிக அவசியம். பயிற்சியை முக்கியமாகக் காலை நேரங்களில் செய்ய முடிந்தால் நல்லது. நிறைய ராகம் கிடைக்கும். நிறைய ஒலி நாடாக்களையும், ஒலித்தகடுகளையும் கேட்க வேண்டும். நடைபெறும் சங்கீதக் கச்சேரிகளுக்கு சென்று கேட்க வேண்டும்.
வி: சில ஆண்டுகளுக்கு முன்பிருந்ததைவிட இப்போது பல இளம்வயதினர் அபாரமாக முழு மேடைக் கச்சேரி செய்கின்றனர். என்ன காரணம்?
சௌ: முக்கியக் காரணம் அவர்களுடைய ஆர்வமும், பெற்றோர் கொடுக்கும் ஊக்கமும், ஒத்துழைப்பும்தான். முன்னைவிட இப்போது சங்கீதம் சம்பந்தப்பட்ட பல வசதிகள் இருப்பதும் ஒரு காரணம்.
வி: நீங்கள் உங்களையே எவ்வாறு விமர்சிக்க விரும்புகிறீர்கள்? உங்கள் தனித்தன்மை என்ன?
சௌ: சங்கீதம் பற்றிய விஷயங்களில் தீவிர ஆர்வமுள்ளவள், எளிதில் உணர்ச்சி வசப்படுபவள், எடுத்த பணியை முடிப்பதில் உறுதியுள்ளவள். சிறிது முன்கோபியும்கூட.
வி: மறுபிறவி பற்றி நம்பினால் நீங்கள் யாராகப் பிறக்க விரும்புகிறீர்கள்?
சௌ: மறுபிறவியை நான் விரும்பவில்லை. நான் நாதமாக மாறி என்றென்றும் நிலைத்து இருக்க ஆசைப்படுகிறேன்.
திருநெல்வேலி விஸ்வநாதன் |
|
|
|
|
|
|
|