ப்ருஹத்வனி - இசைவழியே கிராமக் குழந்தைகளுக்குக் கல்வி
|
|
கிரிக்கெட் வீரர் வெங்கடராகவன் |
|
- சேசி|டிசம்பர் 2005| |
|
|
|
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சூப்பர் ஆல் ரவுண்டர் என்று கேள்விப்பட்ட துண்டா? அப்படி ஒரு பட்டம் இருந்தால் அதற்கு மிகவும் தகுதியானவர் வெங்கட் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஸ்ரீனிவாசராகவன் வெங்கடராகவன். விளையாட்டு வீரர், கேப்டன், அம்பயர், நிர்வாகி, செலக்டர், டீம் மேனேஜர், நேர்முக வர்ணனையாளர், கட்டுரையாளர் என்று பல அவதாரங்கள் எடுத்து, கிரிக்கெட்டே தன் வாழ்க்கை என்று அமைத்துக் கொண்டவரை வேறு எவ்வாறுதான் அழைக்க முடியும்?
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு இந்தியப் படிப்பறிவுத் திட்டத்தின் (India Literacy Project) அழைப்பில் வந்திருந்த அவரைச் சந்திக்கும் வாய்ப்பு தென்றலுக்குக் கிடைத்தது. சட்டென்று உணர்ச்சிவசப் படுபவர், அதை வெளிக்காட்டச் சற்றும் தயங்காதவர்; மகிழ்ச்சி, கோபம், பெருமிதம் என்று உணர்ச்சிகளைக் கொட்டுபவர்; கிரிக்கெட் ஆட்டத்தையும், விளையாட்டு வீரர்களையும் நன்றாகப் புரிந்து கொண்ட உள்நோக்கு உடையவர்; கிரிக்கெட் பற்றியும், தனது திறமை பற்றியும் உணர்ச்சிபூர்வமாகப் பேசுபவர்; தனி நபரையோ, ஓர் அமைப்பையோ குறை சொல்ல அனுமதிக்காதவர்; “எனக்கு வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம்...” என்று தயங்காமல் ஆதங்கத்தை வெளிப்படுத்து பவர்; என்னால் முடியாதது எதுவுமில்லை என்ற மன உறுதி கொண்டு அதையே தன் வாழ்க்கையின் வெற்றிக்கு அடிக்கல் ஆக்கிக் கொண்டவர் என்று அவரது பல பரிமாணங்களையும் சில மணித்துளி களிலேயே எங்களுடன் பகிர்ந்து கொண்டார். இதோ, அந்தச் சந்திப்பிலிருந்து சில முக்கியப் பகுதிகள்.
கிரிக்கெட் வீரர்கள் அம்பயர் ஆவது பற்றி
நான் அம்பயர் ஆனதற்குக் காரணம், எனக்குக் கிரிக்கெட் விளையாடவும், பார்க்கவும் பிடிக்கும். ஆட்டத்தைப் பார்ப்பதற்கு அம்பயரின் இருக்கையை விடச் சிறந்த இடம் இருக்க முடியுமா?
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் உயர் மட்ட ஆட்டங்களை ஆடி உள்ளதால் இன்னும் சிறப்பாக நடுவராகப் பணியாற்ற முடியும் என நான் நம்புகிறேன். அவர்கள் விளையாடும் போது பல மன உளைச்சல்களுக்கு ஆளாவதுடன், அவர்கள் விளையாடும் போது அவர்கள் நடுவர்களுக்கு எவ்வளவு மன அழுத்தத்தை தருகிறார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும். எனவே அவர்கள் நடுவர்களாகும்போது அவர்கள் அந்த மன அழுத்த நிலையை நன்றாகச் சமாளித்துச் செயல்பட முடியும். ஆனால் அதற்காகக் கிரிக்கெட்டில் இல்லாதவர்களோ அல்லது டெஸ்ட் கிரிக்கெட் ஆடாதவர்களோ ஒரு நல்ல நடுவராக ஆக இயலாது என்று நான் நிச்சயமாகக் கூறவில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் ஆடியவர்கள் நடுவர்களாகும் போது அவர்களுக்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது என நான் நம்புகிறேன்.
கிரிக்கெட்டில் தொழில் நுட்ப முறைகளைப் புகுத்துவது பற்றி
கிரிக்கெட் நடுவருக்குப் பதிலாகத் தொழில் நுட்பத்தைக் கொண்டு தீர்வு எடுக்கும் போக்கில் எனக்கு விருப்பமில்லை. முதல் டெஸ்ட் விளையாடிய 1877-ல் இருந்து இன்று வரை, 128 ஆண்டுகளாக, கிரிக்கெட் நிலையாக இருப்பது அந்த விளையாட்டின் ஒரு நிச்சயமற்ற தனித்தன்மையால்தான் என்பது என்னுடைய சொந்த அபிப்பிராயம். நிச்சயமற்ற தன்மையுடன் இந்த விளையாட்டு இருப்பதுதான் கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் கவலையுடன் கூடிய அக்கறையைத் தருகிறது. பல சமயம் ஆட்டக்காரர்கள் ஆட்டம் இழந்தும் ஆட்டம் இழக்கவில்லை என்ற நிலையும், ஆட்டம் இழக்காமல் ஆட்டம் இழந்த நிலையும் இருந்திருக்கிறது. இதுவே இந்த கிரிக்கெட் ஆட்டத்திற்கு ஒரு சிறப்பையும் தருகிறது.
கிரிக்கெட் வீரர் டபிள்யூ. ஜி. கிரேஸ் பற்றி ஒரு சம்பவம் நினவுக்கு வருகிறது. அவர் ஒரு பந்தை ஆடி பெளல்ட் ஆகியபோது, நைசாக பெயிலை எடுத்து ஸ்டம்பின் மேல் வைத்துவிட்டு, "இன்றைக்குக் காற்றுச் சற்று அதிகம்" என்றார். உடனே நடுவரும் அசராமல், அவரிடம் "ஆமாம், நீ பெவிலியனுக்குத் திரும்பிப் போகும்போது உன்னுடைய தொப்பி பறக்காமல் பார்த்துக் கொள்" என்றார்.
அதிகமான தொழில்நுட்பத்தின் துணை, விளையாட்டுக்குத் தீமையைத்தான் விளைவிக்கும். நான் நடுவராக இருந்த காலகட்டம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மூன்றாவது நடுவருடன் ஆலோசனை செய்ய எங்களுக்கு அனுமதி இருந்தது. திட்ட வட்டமாகக் கணிக்க முடியாத ரன்-அவுட் வருமானால், முக்கியமாக ஸ்டம்பின் மீது நேராக அடித்து ஆட்டம் இழக்கச் செய்யப் படும்போது அநேக முறைகள் தொழில்நுட்ப உதவி மில்லி மீட்டர் அளவிற்கு அதைத் துல்லியமாகக் கணித்திருக்கிறது. ஆனால் புகைப்படக் கருவிக்குப் பின்னால் இருப்பவர் கிரிக்கெட் ஆட்டம் மற்றும் அதன் விதிகளைப் பற்றி நன்கு அறிந்தவராக இருத்தல் அவசியம்.
75 கஜங்களுக்கப்பால் பவுண்டரி அருகில் பந்தைப் பிடித்த ·பீல்டர் கயிற்றைத் தொட்டாரா என்ற முடிவு செய்ய வேண்டிய நிலையில் எல்லாம் இந்தத் தொழில்நுட்பம் துணை இருக்கிறது. ஆனால் L.B.W., caught behind, bat-pad போன்றவைகளைத் திறமை வாய்ந்த நடுவர்களின் தீர்ப்புக்கு விட வேண்டும் என நான் நினைக்கிறேன். அவர்கள் சில பிழைகள் செய்தால் அவர்களுக்கு மேலும் சற்று அவகாசம் கொடுக்கவேண்டும். அவர்கள் அதிகத் தவறுகளைச் செய்தால் சிறந்த நடுவர்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
தொழில் நுட்பத்தைக் கொண்டு பந்து வீசும் முறையைக் கண்காணிப்பதிலும், அதற்குப் பயிற்சி அளிப்பதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. ·ப்ரெடி ட்ரூமன், மைக்கேல் ஹோல்டிங், ஆன்டி ராபர்ட்ஸ், இம்ரான் கான், வாசிம் அக்ரம், வகார் யூனிஸ், மக்ரா, மக்டெர்மாட், மற்றும் நம்முடைய கபில் தேவ் போன்ற நல்ல சிறந்த பந்து வீச்சாளர்களைப் பார்த்திருக்கிறேன். தற்போது சிலருக்குப் பந்து வீசும் செயலில் சில குறைகள் உள்ளன. அவர்கள் அதைத் திருத்திக் கொள்ள வேண்டும். பந்தைத் தூக்கி விட்டெறிவது (chucking) கிரிக்கெட்டில் இருக்கக்கூடாது என நினைக்கிறேன்.
கிரிக்கெட் பயிற்சி, உடற் பயிற்சி பற்றி
பந்து வீசுவது தவிரப் பந்தைப் பிடிப் பதிலும், தடுப்பதிலும் நான் தினமும் பயிற்சி எடுப்பேன். எனது கிரிக்கெட் பயிற்சி பற்றி நீங்கள் மார்க்கரிடம் பேசவேண்டும். ஒரு முறை எனக்குப் பந்து பிடிக்கப் பயிற்சி கொடுக்கப் பந்தைப் போட்டுக்கொண்டே இருந்ததில் அவருக்குக் கை வலிப்பதாக முறையிட்டார். நான் தினமும் குறைந்த பட்சம் 100 முறை பந்தைப் பிடிக்கப் பயிற்சி செய்வேன்.
உடல் சீராக இருப்பதைப் பொருத்த வரையில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாம் ஒலிம்பிக்கிற்குச் செல்வதற்காக உடல்பயிற்சி செய்து கொள்ளவேண்டியதில்லை. கிரிக்கெட் விளையாட வேண்டிய உடல் தகுதிதான் வேண்டும். இதில் ஒரு நுட்பமான, பெரிய வேறுபாடு இருக்கிறது.
இந்திய அணியின் நிர்வாகியாக நான் இருந்தபோது ஸர் டொனால்ட் பிராட் மேனிடம், அவர் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க வந்தபோது, பேச வாய்ப்புக் கிடைத்தது. நாங்கள் இருவரும் ஒருவர் பக்கத்தில் ஒருவராக உட்கார்ந்து கொண்டிருந்தோம். அவருடன் பேச்சைத் தொடரும் வகையில் அவரிடம் நான், "கிரிக்கெட் ஆடுவதற்காக உடம்பை ·பிட்டாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி செய்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் "கிரிக்கெட் விளையாடுவதால் உடம்பை ·பிட்டாக வைத்துக் கொள்கிறேன்" என்று பதில் சொன்னார். இதைப்பற்றி அன்று மாலை நடந்த ஒரு விருந்தில் அவரது சக கிரிக்கெட் வீரர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள், "ஆமாம். டான் தினமும் ஒரு ஸ்டம்பை நிறுத்தி விட்டு, மறு பக்கத்தில் ஓர் ஆட்டக்காரரை வைத்துக் கொண்டு ஒரு மணி நேரம் பயிற்சி செய்வார். கவர்-பாயிண்ட் இடத்தில் அவர் மிக சிறப்பாகப் பந்தைத் தடுப்பவர்" என்று கூறினார்கள். ஆனால் அவரது பந்து அடிக்கும் அபார ஆட்டத்திறமையின் பிரகாசத்தில் மற்றவை எல்லாம் மறைந்து விட்டது.
பொறியியல் கோணத்தில் சொல்ல வேண்டுமெனில் உடலை நன்கு தொடர்ந்து பராமரித்தல் அவசியம். இயந்திரங்களை அடிக்கடி முறையே பராமரிப்பதன் மூலம் அவைகள் தொடர்ந்து வேலை செய்கின்றன.
ஒரு பிரபலமான உதாரணம் கபில் தேவ். அவர் காயம்பட்டுக் கொண்டதேயில்லை. ஒரே மாதிரி வேகத்துடன் இன்றைய பௌலர்கள் பந்து வீசுவது போலவே பந்து வீசியுள்ளார். எனவே ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கே உரித்தான ஒன்று இருக்கிறது. எதைச் செய்தாலும் அதற்கு என்று ஒரு செய்முறை உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு முறை பற்றி
என்னைப் பொறுத்தவரையில் தேர்வு செய்யும் முறை ஒளிவுமறைவில்லாமல் இருக்க வேண்டும். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. ஆட்டக்காரர்கள் காட்டும் திறமை வழிதான் நாம் செல்ல வேண்டும். அது மட்டுமல்ல. வெறும் புள்ளி விவரங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுப்பது என்றால் நாம் கணினிகளை வைத்தே அவர்களைத் தேர்ந்தெடுக்கலாமே! அணியின் ஆட்டக்காரர்களைத் தேர்வு செய்யும் போது subjectivity அங்கு இருக்கும். எப்போதும் அது objective ஆக இராது. இது ஒரு கணக்குக்குக் கொடுக்கப்படும் தீர்வு அல்ல. ஒளிவுமறைவின்றி இருப்பது subjectivity-யைக் களைந்து விடும்.
தேர்வாளரின் வேலை ஆட்டக்காரரைத் தேர்வு செய்வது மட்டுமன்று. அந்த ஆட்டக்காரரைத் தேர்வு செய்தால் அவர் அந்த நிலை விளையாட்டை (ரஞ்சி கோப்பை, திலீப் கோப்பை, டெஸ்ட் கிரிக்கெட், சர்வ தேச கிரிக்கெட்) ஆடக்கூடியவரா என்பதையும் துல்லியமாக உணர்ந்திருக்க வேண்டும். தேர்வாளர்கள் எந்த வித பாரபட்சமும் இன்றி கிரிக்கெட் வாரியத்துக்கும் மேலாக இருகிறார்கள் என்பதை எடுத்துக் காட்ட வேண்டும். தேர்வு செய்வது என்பது மிகவும் கடினமான வேலை. ஆட்டக்காரரின் தொழில் வாழ்க்கையை அடியோடு சிதைப்பதோ, வளர்ப்பதோ இதில்தான் இருக்கிறது என்ற பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.
தமிழ் நாட்டிலிருந்து வரும் ஆட்டக்காரர் களுக்கு ஹிந்தி தெரியாதது ஒரு வேளை ஆரம்ப நிலையில் கடினமாக இருக்கலாம். ஆனால் அதையெல்லம் கடந்து விடலாம். ஹிந்தியைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டியதுதான். வேறு என்ன செய்வது? ஹிந்தி தெரியாதது எந்த விதத்திலும் ஆட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு ஒரு குறையாக அமைவதில்லை. |
|
தற்போது சுழற்பந்து வீச்சாளர்கள் அதிகம் இல்லாதது பற்றி
சுழல் பந்து வீசுவது கடினம். மிகக் கடினம். கூடுதலானக் கடின உழைப்பு தேவை. வேகமாக ஓடிப் பந்தை வீசிவிடலாம். நல்ல விக்கெட்களில் நல்ல ஆட்டக்காரர்களுக்குப் பந்து வீசுவதன் மூலம் எவ்வாறு சிறப்பாகப் பந்து வீசுவது என்பதைக் கற்றுக் கொள்ளலாம். இப்போதெல்லாம் உள்நாட்டுப் போட்டிகளில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்வது அபூர்வமாகிவிட்டது. தமிழ்நாட்டு அணியில் நான் விளையாடிய காலத்தில் ஹைதராபாத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் அபீத் அலி, ஜெயந்திலால், அப்பாஸ் அலி பெயிக், எம். எல். ஜெயசிம்மா, பட்டோடி, போன்ற டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் ஆடுவார்கள். ஒருவர் விக்கெட்டைப் பிடித்தால் ஓய முடியாது. அடுத்து வருபவரும் பெரிய ஆட்டக்காரர்.
இவ்வளவு திறமையானவர்களோடு ஆடி அவர்களை நாம் ஆட்டமிழக்கச் செய்யும் போது நமக்கு வரும் தன்னம்பிக்கையும், துணிவும் அதிகமாகிறது. பிறகு நாமே டெஸ்ட் கிரிக்கெட் ஆடும்போது நம்மிடம் உள்ள தன்னம்பிக்கையால் நாம் ஏன் இன்னொரு டெஸ்ட் கிரிக்கெட் வீரரை ஆட்டம் இழக்கச் செய்ய முடியாது என்ற நம்பிக்கையும் வந்துவிடுகிறது.
பிட்ச் எந்த விதத்திலும் உதவி செய்ய இயலாத நிலையிலும் எப்படிப் பந்து வீசுவது என்பதை ஒரு ஸ்பின் பௌலர் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்த மாதிரியான பிட்ச்சிலும் ஒரு சிறந்த பாட்ஸ்மனுக்குப் பந்து வீசுதல் கடினமான வேலைதான். தினமும் ஒரு சுழல் பந்து வீச்சாளரால் இரண்டரை மணி நேரத்திற்குப் பந்து வீசும் ஆற்றல் வேண்டும். பிட்ச்சில் ஒரு சிறிய காசை வைத்து, அந்த இடத்தைக் குறிபார்த்துச் சரியாகப் பந்தை வீசும் திறன் வேண்டும். அந்த மாதிரி சரியாகக் குறி தவறாமல் பந்து வீச முடிந்தால் தான் ஒரு பௌலர் டெஸ்ட் கிரிக்கெட் ஆடத் தயார் நிலையில் உள்ளார் எனக் கொள்ளலாம். ஒரு ஸ்பின்னருக்கு, லைனை விட லென்ந்த் முக்கியம். பந்து வீச்சு அளவு கட்டுக்குள் இருந்தால், பாட்ஸ்மன் பந்து எங்கே விழப்போகிறது என்று ஊகிக்க வேண்டியிருக்கும், பந்தை ஸ்டம்ப்பை விட்டு ஆறு அங்குலம் தள்ளி வீசினாலும் பரவாயில்லை.
நல்ல பிட்ச்சில் பந்து வீசும் போது சோதனைகள் தேவையில்லை. நான் கண்டிப்பாக ஷார்ட் பால், ·புல் டாஸ், ஆ·ப் ஸ்டம்புக்கு வெளியே, லெக் ஸ்டம்ப்புக்கு வெளியே எல்லாம் பந்து வீசமாட்டேன்; ஆ·ப் ஸ்டம்ப்புக்கும் நடு ஸ்டம்ப்புக்கும் இடையில், ஒரே இடத்தில் தொடர்ந்து பந்து வீசுவேன் என்ற மன உறுதியுடன் பந்து வீச்சாளர் இருந்தால் போதும். பாட்ஸ்மன் என்ன வேண்டு மானாலும் செய்து கொள்ளட்டும், ஒவ்வொரு முறையும் அவரது விக்கெட் என் கையில்.
கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாடுவது பற்றி
கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாடியது நிச்சயமாக எனது திறமையை வளர்த்துக் கொள்ள உதவியது. கவுண்ட்டி கிரிக் கெட்டில்தானே விளையாடுகிறோம் என்று அசட்டையுடன் இருக்க முடியாது. அப்போதும் மிகுந்த திறமையுடன் விளையாடவேண்டும். அந்தக் காலத்தில் கவுண்ட்டி கிரிக்கெட் என்பது ஒரு விசேஷமானது. ஓர் உதாரணம் தருகிறேன்.
கென்ட் கவுண்ட்டியோடு விளையாடும் போது ஒரு முழு டெஸ்ட் கிரிக்கெட் டீமுடன் ஆடுவது போலிருக்கும். மைக் டென்னிஸ், லக்ஹர்ஸ்ட், பாப் வூல்மர், காலின் கெளட்ரி, அசி·ப் இக்பால், பெர்னார்ட் ஜூலியன், ஆலன் நாட், ஷெப்பர்ட், டெரெக் அண்டர்வுட், என்று பன்னாட்டு கிரிக்கெட் வீரர்களை ஒரே அணியில் சந்திக்க வேண்டும். கவுண்ட்டி மட்டத்திலேயே இந்த மாதிரியான சிறந்த அணிகளுடன், தலை சிறந்த மைதானங் களில், ஆடி அவர்களுடைய விக்கெட்டு களைக் கைப்பற்றும்போது நமது தன்னம்பிக்கை அளவு மேலும் உயர்கிறது.
எனவே, ரஞ்சிக்கோப்பை போன்ற உள்நாட்டுப் போட்டிகளில் சர்வதேச வீரர்களை வரவழைத்து ஆடச் சொல்லலாமே என்று நீங்கள் சொல்வது ஒரு நல்ல யோசனை. ஆனால், இந்தியாவின் கிரிக்கெட் சீசன் மற்ற நாடுகளின் கிரிக்கெட் சீசனுடன் மோதுவதால் துரதிருஷ்டவசமாக நம்மால் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆட்டக்காரர்களை இந்தியாவிற்குக் கொண்டு வந்து ரஞ்சிக் கோப்பையில் ஆட வைக்க இயலாது. இங்கிலாந்து, மேற்கு இந்திய ஆட்டக்காரர்களை கொண்டு வரலாம்.
ஆனால், அபரிமிதமான திறமை இருந்த பழைய மேற்கு இந்திய அணியைப் போல் இப்போது பிரையன் லாராவைத் தவிர அவர்களிடம் அந்த அளவுக்குத் திறமை இல்லை. நினைத்துப் பாருங்கள்... டெஸ் மண்ட் ஹெயின்ஸ், கார்டன் க்ரீனிட்ஜ், விவியன் ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாயிட், ஆல்வின் கல்லிச்சரன், ஜெ·ப் துஜான், லாரி கோம்ஸ், ராபர்ட்ஸ், ஹோல்டிங், கார்னெட் என்ற மாபெரும் வீரர்களைக் கொண்ட மேற்கு இந்திய அணியோடு ஆடுவது எப்படிப்பட்ட அனுபவம்!
அதுபோல, தென்னாப்பிரிக்காவோடு கிரிக்கெட் விளையாடுவது தடை செய்யப் பட்டிருந்தது ஒரு குறைதான். எங்களுக்குச் சில சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடும் வாய்ப்பு கிட்டவில்லை. பாரி ரிச்சர்ட்ஸ், மைக் போகாக், ஆர்தர்டன், பீட்டர் போல்லாக், எட்டி பார்லோ, மைக் ப்ராக்டர் இவர்கள் எல்லோரும் சிறந்த ஆட்டக்காரர்கள். ஆனால் இவர்களில் பலருடன் நான் என்னுடைய மூன்றரை வருட கால கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறேன்.
சுழற்பந்தை நன்றாக ஆடும் திறமையுள்ள மட்டையாளர்கள் பற்றி
எந்தக்காலத்திலும் சிறந்த ஆட்டக்காரர் களில் ஒருவர், சர் கார்·பீல்ட் சோபர்ஸ். அவர் எந்த இடத்திற்குப் பந்தை அடிக்க வேண்டுமென்று நினைக்கிறாரோ அந்த இடத்திற்குப் பந்தை அடிக்க அவரால் முடியும். பாரி ரிச்சர்ட்ஸ், கிரெக் சாப்பல், இயன் சாப்பல், நீய்ல் ஹார்வி, ஆல்வின் கல்லிச்சரன், ஆகியோர் தங்களுடைய பாதங்களைப் பந்தை அடிக்கும் போது நன்றாக உபயோகிப்பார்கள். மேற்கு இந்தியத் தீவு அணியில் சில நல்ல சுழல் பந்து வீச்சாளர்கள் இருந்தனர். எனவே ஆல்வின் கல்லிச்சரனுக்கு ஸ்பின் ஆடத் தெரிந்ததில் ஆச்சரியமில்லை.
தனக்கும் மற்ற கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கும் உள்ள உறவைப் பற்றி
எனக்கும் பிரசன்னாவிற்கும் எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை. போட்டி யிடும் மனப்போக்கு என்பதே எங்களுக்குள் கிடையாது. நான் அணியின் தலைவனாக இருந்த போதும், மற்றவர் கீழ் விளையாடிய போதும் இன்பமாக இருந்தது. நான் சுனில், பட்டோடி, பிஷன், கபில் ஆகியோர் கீழ் விளையாடினேன். அவர்களும் எனக்குக் கீழ் விளையாடியிருக்கிறார்கள். அவர்கள் அணித்தலைவர்களாக இருந்தபோது, சிக்கல்களுக்குத் தீர்வு காணுவதற்கு என்னையும் கலந்து ஆலோசித்தனர்.
ஒரு ஆட்டத்தில் அணித் தலைவராகவும், மறு ஆட்டத்தில் 12-ஆவது ஆட்டக்கார ராகவும் இருந்தாலும் நான் அதற்கு மனம் இடிந்ததில்ல. நான் எவ்வாறு அதை கையாண்டேன் என்பதை நீங்களே பார்த்திருக்கிறீர்கள்.
சக விளையாட்டு வீரர்களுடன் அவர்களது நகரங்களுக்குச் செல்லும்போது தொடர்பு கொள்வதுண்டு. ஆனால் நாங்கள் ஒன்றாகக் கூடுவோமே ஒழிய, பழங்காலக் கிரிக்கெட் நினைவு களைப் பற்றியெல்லாம் பேச மாட்டோம்.
கிரிக்கெட்டில் ஆர்வம், குடும்ப வாழ்க்கை பற்றி
மகன் அமெரிக்காவில் இருந்தாலும் தான் அடிக்கடி அமெரிக்காவிற்கு வருவதில்லை என்னும் இவர், உலகம் முழுவதும் விளையாடச் சென்றதால் குடும்பத்தைப் பராமரிப்பதும் குழந்தைகளை வளர்ப்பதும் சவாலாக இருந்தது என்று ஒப்புக் கொள்கிறார். குழந்தைகள் நன்றாகப் படித்து முன்னேறியதற்கு முழு மதிப்பெண்கள் தன் மனைவிக்கும், குழந்தைகளுக்கும்தான். அதற்குரிய மதிப்பு அவர்களுக்குத்தான், தனக்கு அல்ல என்கிறார்.
தற்போது ஒருநாளைக்கு 15 நிமிடங்கள் தான் கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்ப்ப தாகக் கூறுகிறார். அதுவும் ஆட்டத்தின் ஸ்கோர் தெரிந்து கொள்வதற்காக. தான் செய்த சாதனைகள் பல, தன்னைவிடக் கிரிக்கெட் வாழ்க்கையில் பல கோணங் களில் யார் வாழ்ந்திருக்க முடியும் என்ற பெருமையின்றி “திருப்தி அடைந்து விட்டால் நீ உப்புக்குப் பொறாதவன். வாழ்க்கையில் எப்போதுமே சாதிக்கவேண்டியது ஏதோ ஒன்று இருக்கிறது” என்று கூறுகிறார்.
“தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்லி இருக்காங்க. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று ஒளவை மூதாட்டி சொல்லி இருக்காங்க. அது போல நீங்கள் எங்கு இருந்தாலும் தொடர்ந்து மிளிர வேண்டும். எல்லாத் தமிழர்களும் நல்ல சமூகத்தை நிலைநாட்ட வேண்டும்”, என்று தென்றல் வாசகர்களுக்குத் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டு விடையளிக்கிறார்.
******
"1989 ல் நான் மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சென்ற இந்திய அணிக்கு நிர்வாகியாக இருந்தேன். அந்தக் கிரிக்கெட் பயண முடிவில் ஆலன் கிரே, க்ளைய்ட் வால்காட், மற்றும் ஒருவர் என்னிடம் மேற்கு இந்திய அணியின் எதிர்காலம் பற்றியும் யாரெல்லாம் அதில் சிறந்த ஆட்டக்காரர்களாக இருப்பர் என்றும் கேட்டனர். கீய்த் ஆர்தர்டன் மற்றும் இன்னும் சிலருடைய பெயர்கள் சொல்லப்பட்டன. நான் அவர்கள் இல்லை. அடுத்த சிறந்த ஆட்டக்கார இளைஞர் இவன் தான். இவன் விளையாடுவது மிக சிறப்பாக இருக்கிறது. இவன் தான் வருங்காலத்தில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரனாக வருவான் என்றேன். இவனைத் தேர்வு செய்யாவிடில் நீங்கள் பெரிய தவறைச் செய்கிறீர்கள் என்று கூறினேன். அதை அவர்கள் அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை.
அவ்வாறு நான் புகழ்ந்து பேசிய இளைஞர் நம்மிடம் உள்ள மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் ப்ரையன் லாரா (Brian Lara).
இரண்டு வருடங்களுக்கு பின்னர் நான் மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சென்ற போது அந்த மூவரும் என்னிடம் வந்து எனது திறமையைக் கணிக்கும் திறனை வியந்து வணக்கம் தெரிவித்தனர்" என்கிறார் பெருமிதத்துடன்.
சந்திப்பு: ஸ்ரீராம் வைத்தியநாதன், சேசி துணை: C.K. வெங்கடராமன், மணி மு. மணிவண்ணன் ஒலிபெயர்ப்பு:C.K. வெங்கடராமன் தமிழாக்கம்: சரஸ்வதி தியாகராஜன் தொகுப்பு மற்றும் படங்கள்: சேசி மற்றும் மணி மு. மணிவண்ணன் |
|
|
More
ப்ருஹத்வனி - இசைவழியே கிராமக் குழந்தைகளுக்குக் கல்வி
|
|
|
|
|
|
|
|