|
கான்கிரீட் தொழில்நுட்ப மேதை பேரா. வி. ராமகிருஷ்ணன் |
|
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2005| |
|
|
|
லாவா எனப்படும் எரிமலைக் குழம்பு பாறையாக இறுகியதும், அதை மீண்டும் உருக்கி, அதிலிருந்து மெல்லிய இழைகள் நெய்து இவற்றைக் கான்கிரீட்டில் சேர்த்தால் அது அசுர பலம் பெறும் என்பதைக் கண்டுபிடித்தவர் பேராசிரியர் வி. ராமகிருஷ்ணன். அமெரிக்காவின் சவுத் டகோட்டா மாநிலத்தில் ராபிட் சிட்டியில் இருக்கும் தென் டகோட்டா தொழில்நுட்பப் பல்கலையில் (Technological University of South Dakota) கடந்த 35 ஆண்டுக் காலமாகப் பணியாற்றி வருகிறார். இன்று கான்கிரீட் தொழில்நுட்பத்தில் இவரது கண்டுபிடிப்புகள் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் புரட்சிகரமான பல மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
சவுத் டகோட்டா மாநில ஆளுநர் இவரைக் கெளரப்படுத்தும் விதமாக 'ராமகிருஷ்ணன் தினம்' (Ramakrishnan Day) என்று ஒரு நாளைப் பிரகடனப்படுத்தியிருக்கிறார் என்றால் பாருங்களேன்!
தென்றலுக்காக இவருடன் உரையாடிய போது...
சொந்த ஊர்
கோயம்புத்தூர் என் சொந்த ஊர். பீளமேடு பகுதிதான் நான் பிறந்து வளர்ந்த இடம். அப்பா வெங்கடசாமி எக்சைஸ் துறையில் பணியாற்றியவர். எங்கள் பெற்றோருக்கு நாங்கள் நான்கு மகன்கள். ஒரே மகள். என் மூத்த சகோதரர் கிருஷ்ணன் புகைப்படக் கலையில் பேரார்வம் கொண்டவர். தன்னுடைய கல்லூரிப் படிப்பைவிடக் காமிரா வின் மீது அதிகக் கவனம் கொண்டிருந்தார். அன்றைய காலத்தில் புகழ்பெற்ற கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் உதவி புகைப் படக்கலைஞராகப் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு பின்பு 'ஜகதலப்பிரதாபன்' என்ற படத்தில் பல தந்திரக்காட்சிகள் எடுத்துப் புகழ் பெற்றார். பின்பு அவர் திரைப்பட இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். 'நால்வர்' அவர் இயக்கத்தில் உருவான படம். 'முல்லைவனம்', 'அருமை மகள் அபிராமி' போன்ற படங்களையும் தயாரித்திருக்கிறார்.
என்னுடைய இரண்டாவது சகோதரர் நாராயணசாமி, அடுத்த சகோதரர் கோவிந்தராஜூலு. என் ஒரே சகோதரி ரங்கநாயகி இப்போது கோயம்புத்தூரில் இருக்கிறார். என் சகோதரியின் கணவர் வெங்கடேஸ¤லு அன்றைய குடியரசு தலைவர் வி.வி. கிரி யிடமிருந்து 'தேசிய நல்லாசிரியர்' விருது பெற்றவர்.
கல்வி
என்னுடைய அப்பா எக்சைஸ் துறையில் தனக்கு வேலை கிடைத்ததற்குக் காரணமே தான் ஏதோ கொஞ்சமாவது ஆங்கிலம் கற்றதனால்தான் என்று நினைத்தார். அதனால் தன் பிள்ளைகளுக்குக் கல்வி அவசியம் என்பதை உணர்ந்தார். அப் போது அவர் அவினாசியில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆனாலும் பிள்ளைகளின் கல்விக்காகக் குடும்பத்தை மட்டும் பீளமேட்டில் தங்கவைத்தார்.
பள்ளியிறுதித் தேர்வில் அறிவியல் பாடத்தில் நான் நல்ல மதிப்பெண் எடுத்ததால் கோவை கலைக்கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்தது. நல்ல மதிப்பெண் எடுத்துத் தேறினேன். சென்னையில் பொறியியல் படிப்பைத் தொடர்ந்தேன்.
அதுவும் லஞ்சம்தான்
என்னுடைய பொறியியல் படிப்பின் இறுதித் தேர்வை எழுதப் போகும் நேரத்தில் எனக்குக் காவிரிப் படுகையில் அமைந்திருந்த காளிங்கராயன் கால்வாயைக் கண்காணிக்கும் 'சூபர்வைசர்' வேலை கிடைத்தது. அந்தக் காலத்தில் பொறியியல் கல்வி படித்துக் கொண்டிருக்கும் போதே வேலை கிடைக்கும். ஆனால் என்னால் அந்த வேலையை அதிக நாட்கள் தொடர முடியவில்லை.
ஏனென்றால் நான் வேலை பார்த்த பகுதியில் ஒவ்வொரு ஏக்கர் நிலத்துக்கும் ஒரு மூட்டை நெல் என்ற கணக்கில் மேற்பார்வையாளர் வீட்டுக்கு அன்பளிப்பு என்கிற பெயரில் அனுப்பிவிடுவார்கள். அதுபோல் சூபர்வைசர் சோதனைப் பணிக்காகப் வெளியூருக்குச் சென்றால் உடனே அந்த இடத்துக்கான பயணச் சீட்டை அப்பகுதியின் ஒப்பந்தக்காரர் வாங்கி அனுப்பி வைப்பார். இத்தகைய விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. இது லஞ்சம் போன்றதுதான் என்பது என்னுடைய அபிப்பிராயம். இந்தக் காரணத்தினால் என்னால் அந்த பணியில் ஈடுபட முடியவில்லை. நல்ல சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தேன்.
உதவி விரிவுரையாளர் பணி
இளநிலைப் பொறியியலில் 1952ல் நான் முதல் வகுப்பில் தேறினேன். அப்போது தொழில் அதிபரும், கோவை பி.எஸ்.ஜி கல்லூரியின் முக்கியப் பிரமுகருமான ஜி.ஆர். தாமோதரனிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. அவரது அழைப்பை ஏற்று நான் அவரைப் போய் பார்த்தேன். அவர் என்னை வெகுவாகப் பாராட்டினார். தங்கள் கல்லூரியில் விரிவுரையாளராகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், 'உங்களை போன்றவர்கள் வந்து எங்களுக்கு உதவ வேண்டும்' என்றும் கூறினார். அவரது வார்த்தையைத் தட்டமுடியாமல் அங்கு உதவி விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தேன். மூன்று ஆண்டுகள் அக்கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே சமுதாய அறிவியலில் முதுகலைப் பட்டயமும் பெற்றேன்.
அமெரிக்காவா? இங்கிலாந்தா?
பிரிட்டிஷ் அரசு அந்தச் சமயத்தில் 'கொழும்புத் திட்ட உதவித்தொகை' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் தகுதியானவர்களுக்கு உதவித் தொகையுடன் இங்கிலாந்தில் மேற்படிப்பைத் தொடர உதவி கிட்டியது.
தகுதி அடிப்படையில் எனக்கு இந்த உதவித் தொகை கிடைத்தது. ஆனால் அதே சமயத்தில் அமெரிக்காவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்புக்குத் தேர்வானேன். உலக அளவில் மிகப்பெரிய பல்கலைக்கழகம் இது. எனக்கு உதவித் தொகையாக கிட்டத்தட்ட இருபதாயிரம் ரூபாய் கிடைக்கும்.
நான் அமெரிக்கா செல்வதற்குத் தயாராகி, சொந்தபந்தங்கள், நண்பர்கள் என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டேன். புறப்படுவதற்கு மூன்று நாட்கள் இருக்கும் வேளையில்தான் கொழும்புத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியும் வந்து சேர்ந்தது.
இங்கிலாந்தில் இம்பீரியல் காலேஜில் படிப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இக்கல்லூரி உலகில் மிகச் சிறந்த மாணவர்களுக்கே கூடக் கனவாக இருந்தது. அப்படிப்பட்ட கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு எனக்கு வந்ததை என்னால் நழுவவிட முடியவில்லை. கடைசியில் இங்கிலாந்தில் படிக்கத் தீர்மானித்து, பி.எஸ்.ஜி. கல்லூரியில் அனுமதி பெற்றுச் சென்றேன்.
கான்கிரீட் ஆர்வம்
இம்பீரியல் கல்லூரியில் முதலில் ஹைட்ராலிக் பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்தேன். ஓராண்டு காலம் படித்தேன். அச்சமயத்தில் அணைகள் கட்டுவது என்பது ரொம்பச் சாதாரணமான விஷயமாக இருந்தது. நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அப்போது நிறைய அணைகள் கட்டப்பட்டுவிட்டன. ஹைட்ராலிக்ஸ் படித்துவிட்டு, பின்னாளில் நம்மால் இந்தத் துறையில் பெரியதாகச் சாதித்துக் காட்ட முடியாது என்ற எண்ணம் உருவானது.
கட்டிடக் கலையில் கான்கிரீட் தொழில் நுட்பம் உருவாகிக் கொண்டிருந்த நாட்கள் அவை. எங்கள் கல்லூரியில் கான்கிரீட் பிரிவின் பேராசிரியர் என்னுடைய ஆர்வத்தையும் திறமையையையும் அறிந்து அவரது பிரிவுக்கு என்னை அழைத்தார். இதற்கிடையில் நான் ஹைட்ராலிக்ஸில் தேர்வு எழுதிப் பட்டம் பெற்றேன். அந்தப் பேராசிரியரின் விருப்பப்படி பிரிட்டிஷ் கவுன்சிலின் முன் அனுமதியைப் பெற்று கான்கிரீட் பிரிவில் சேர்ந்தேன். தொடர்ந்து கான்கிரீட் துறையில் எம்.எஸ். மற்றும் டாக்டர் பட்டம் பெற்றேன்.
பொதுவாகக் கொழும்புத் திட்டத்தின் கீழ் தேர்வு பெறுகிறவர்கள் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே அந்த உதவித் தொகையைப் பெறமுடியும். மொத்தம் மூன்றாண்டுகள் யாருக்கும் கிடைத்ததில்ல. ஆனால் எனக்கு ஐந்தாண்டுகள் உதவித் தொகை கிடைத்தது. இது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.
விழாத கட்டிடங்கள்
நான் மிக ஆர்வமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அப்போது ஷியர் ·பெயில்யூர் (shear failure) காரணமாக அமெரிக்காவில் இரண்டு பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. என் ஆர்வத்தை அந்தச் சேதங்கள் தூண்டிவிட்டன. கம்பிகள் வைக்காமல் கட்டிடங்கள் கட்டுவதில்லை. அப்படி உறுதியாகக் கட்டப்பட்டும் ஏன் இந்த ஷியர் ·பெய்ல்யூர்கள் ஏற்படுகின்றன என்று ஆராய்ந்தேன். கம்பிகளின் கட்டுமான முறை, அவை எங்கே எப்படி வார்ப்புக் காரையில் பொருத்தப்பட்டிருக்கின்றன போன்ற அம்சங்கள்தான் ஒரு கட்டடத்தின் நிரந்தர அல்லது நீண்டகால உறுதியை நிர்ணயிக்கின்றன என்று கண்டறிந்தேன். ஷியர் ·பெய்ல்யூர் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் கம்பிகளைப் பொருத்தும் இடங்களிலும், முறைகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதைக் கண்டு பிடித்தேன். அதற்கான சமன்பாடுகளை (equations) எழுதினேன். என்னுடைய அந்த கண்டுபிடிப்பும், சமன்பாடுகளும் கட்டுமானத் துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனை நிபுணர்களும் ஏற்றுக் கொண்டனர்.
என்னுடைய சமன்பாடுகள் பிரிட்டிஷ் கட்டுமான நெறிமுறையில் சேர்க்கப்பட்டது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம் தான்.
எனக்குக் கிடைத்த நிதியுதவியில் கொஞ்சம் சேமித்துக் கொண்டு கோடை விடுமுறைகளில் அருகிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அங்கு என்னுடைய துறை தொடர்பாகவும், அங்குள்ள மக்கள் வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொண்டேன். ஐரோப்பிய நாடுகள் பலவற்றை நான் சுற்றிப் பார்த்திருக்கிறேன். இதுமட்டுமல்லாமல் கல்வி சம்பந்தமாகப் பல நாடுகளையும், ஊர்களையும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
பிரம்மாண்ட அணைகள்
உலகின் மிக உயரமான அணையை நான் பார்த்து வந்தேன். அணயைப் பற்றிச் சொல்லும் போது கொஞ்சம் டெக்னிக்கலாக இருந்தாலும், சில விவரங்களைத் தெரிவிக்கிறேன். அடிப்படையில் இரண்டு வகையான அணைகள் கட்டப்படுகின்றன. ஒன்று ஆர்ச் டாம். இன்னொன்று கிராவிட்டி டாம். இந்த பெயர்களை அந்த அணையின் தன்மையை உங்களுக்கு ஓரளவு புலப்படுத்தும். ஆர்ச் அணையை வளைத்துக் கட்டுவார்கள். அதன் மீது தண்ணீர் அடித்துப் போகும்போது அதன் அமைப்பின் காரணமாக தண்ணீர் வேகமாகப் பக்க வாட்டுக்குப் போகும். பக்கங்களில் பாறைகள் இருக்கும். இதைப் பொறியியலில் 'ஆர்ச் ஆக்ஷன்' என்பார்கள். இத்தகைய ஆர்ச் அணைக்கட்டுகள் சிறியவையாக இருக்கும். பெரிதாக இருக்க வேண்டும் என்றில்லை. உலகில் மிகப் பெரிய ஆர்ச் டாம் ஸ்விட்சர்லாந்தில் உள்ளது.
அதுபோல் கிராவிட்டி அணை நேராக இருக்கும். தன் எடையின் காரணமாக அது ஊன்றி நிற்கும். அப்போது ஸ்விஸ்ஸில் ஆர்ச் அணையைக் கட்டி முடித்துவிட்டு, கிராவிட்டி அணையைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அது ஆயிரம் அடி உயரமான அணை. அருகில் சென்று பார்க்கும் போது தான் அதன் தொழில்நுட்பத்தையும் பிரம் மாண்டத்தையும் நம்மால் உணர முடியும்.
எங்கள் கல்லூரியில் இந்தப் பாடத்தை போதித்தவர் ஸ்விஸ் நாட்டுக்காரர். அவர்தான் எங்களை அழைத்துச் சென்று தன் நாட்டுத் தொழில்நுட்பத் திறமையை நாங்கள் அறிந்துகொள்ள வழி வகுத்தார். நாங்கள் சென்றபோது கிராவிட்டி அணையைக் கட்டிக் கொண்டிருந்ததால் அதன் கட்டுமான முறைகளை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ள முடிந்தது. |
|
மீண்டும் இந்தியா!
லண்டனின் உயர்கல்வி முடித்து இந்தியா திரும்பிய என்னை பி.எஸ்.ஜி கல்லூரி நிர்வாகம் மகிழ்ச்சியுடன் வரவேற்றது. மறுபடியும் நான் அக்கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் துறையில் பேராசிரியராக ஆனேன். பிறகு அகடமி கவுன்சில் உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் என்று பதவிகள் வர ஆரம்பித்தன.
நம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினியரிங் பிரிவில் முதன்முதலாக பிஎச்.டி. ஆய்வுப் பட்டத்தைத் துவங்கியது நான்தான் என்று இங்கு பெருமையாகச் சொல்வேன்.
'பேக்கர் முறை' கட்டிடங்கள்
எந்த ஆய்வின் முடிவும் செயல்முறைப்படுத்தபட்டு, வெற்றி பெறும்போதுதான் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை அதிகம். எனது கண்டுப்பிடிப்புகள் அனைத்துமே இப்படிச் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. நான் லண்டனிலிருந்து திரும்பியதும் 'ரீஇன்·போர்ஸ்டு கான்கிரீட்'டைப் பயன்படுத்தி அடுக்குமாடிக் கட்டிடங்களை 'பேக்கர் மெதட்' முறையில் வடிவமைப்பது எப்படி என்று நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறேன். இந்த முறையில் ஆறு மாடிக் கட்டிடம் ஒன்றைக் கோவையில் கட்டியிருக்கிறேன். இது இந்தியாவில் கட்டப்பட்ட முதல் பேக்கர் மெதட் கட்டிடம் ஆகும். அந்த முறையை மிகவும் எளிமையாக்கி அது பற்றி ஒரு புத்தகம் எழுதினேன்.
சர்வதேச மாநாடு
நான் 1969க்குள் பல முறை உலக நாடுகளுக்குப் போய் வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் எனக்குக் கிடைத்த தொடர்புகளின் அடிப்படையில் 'ஏன் நாம் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து இங்கேயும் ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தி ஒரு தொழில்முறை நல்லுறவைத் தொடங்கி வைக்கக்கூடாது' என்று தோன்றியது. இதன் விளைவாக 1969ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவையில் ஒரு மாநாட்டை நடத்தினேன். அதில் ஜப்பான், துருக்கி, ஈரான், இலங்கை, மலேசியா, மேற்கு ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 15 நாடுகளிலிருந்து கான்கிரீட் தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் கலந்து கொண்டார்கள்.
அமெரிக்காவில்...
நான் மறுபடியும் அமெரிக்காவிற்குச் செல்வதற்குக் காரணம் பேராசிரியர் டாக்டர் ஷ¥ டியன் லீ (Shu Tien Li) என்பவர்தான். அவர் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒருவர். அமெரிக்கன் கான்கிரீட் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பின் ஆதரவில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மாநாடு ஒன்றுக்குத் தலைமை தாங்க என்னை லீ அழைத்தார். அதுதான் என்னுடைய முதல் அமெரிக்கப் பயணம். அமெரிக்காவில் பல பல்கலைக் கழகங்களில் சிறப்புரையாற்றினேன். சிகாகோ மாநாட்டுக்குப் போவதற்கு முன்பு அமெரிக்காவில் செளத் டகோட்டாவில் நான் பேசிய உரையைக் கேட்க 'ஸ்கூல் ஆ·ப் மைன்ஸ்' தலைவரையும் லீ அழைத் திருந்தார். என் உரையைக் கேட்டுப் பாராட்டியது மட்டுமல்லாமல் என்னை அக்கல்லூரியின் சிவில் என்ஜினீயரிங் துறைக்கு வருகைதரு பேராசிரியராகவும், கான்கிரீட் தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குநராகவும் நியமித்தற்கான ஒப்பந்தக் கடிதத்தை என்னிடம் அளித்தார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா? என்று ஒரே குழப்பம். என் மனைவியிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன் என்றேன். அங்கிருந்து என் மனைவியுடன் தொலைபேசியில் பேசினேன். சம்மதம் என்று சொன்னவுடன் பணியில் சேர ஒப்புக்கொண்டேன். நான் பணியாற்றிக்கொண்டிருக்கும் பி.எஸ்.ஜி. கல்லூரியில் ஒரு வருடம் விடுமுறை பெற்றுக் கொண்டு, மறுபடியும் இந்தியாவிற்குத் திரும்பி விடலாம் என்று நினைத்து நான் மட்டும் தனியாக அமெரிக்கா சென்றேன்.
மறக்க முடியாத நாள்
என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் 1969ஆம் ஆண்டு ஜூலை முதல் நாளாகும். அன்று தான் நான் அமெரிக்காவில் செளத் டக்கோடா ஸ்கூல் ஆ·ப் மைன்ஸ் அண்ட் டெக்னாலஜியில் பேராசிரியராகச் சேர்ந்தேன். அதே மாதத்தில்தான் அதாவது 1969 ஜூலை மாதம் 20ம் தேதி அமெரிக்கா விண்வெளியில் சாதனை படைத்தது. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த அந்த நாளன்று, தொலைக்காட்சியில் ஆம்ஸ்ட்ராங் கின் நிலவுப் பயணத்தைப் பார்த்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
அந்த நேரத்தில் பேராசிரியர் லீ அவர்கள் ஓர் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அவரது ஆய்வுக்காகக் கிட்டத்தட்ட மூன்று லட்சம் டாலர்கள் உதவித் தொகை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆராய்ச்சிக்கு என்னை உதவியாக இருக்க வேண்டும் என்று லீ கேட்டு கொண்டதை என்னால் மறுக்க முடியவில்லை. அந்த ஆய்வு என்னுடைய ஒப்பந்தக் காலமான ஓராண்டுக்குள் முடியவில்லை. இன்னும் ஒரு ஆறு மாதமாவது நான் அமெரிக்காவில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த இக்கட்டான நிலையில் நான் என் விடுமுறையை நீட்டித்து தரும்படி கோவையில் எங்கள் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டேன். ஆனால் அவர்கள் விடுமுறை நீட்டிப்புத் தரமறுத்துவிட்டனர். இதனால் நான் பி.எஸ்.ஜி. வேலையை ராஜினாமா செய்தேன்.
அமெரிக்காவில் என் பேராசிரியர் பதவியைத் தொடர்ந்தேன். அதுமுதல் இன்றுவரை நான் அமெரிக்காவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறேன்.
ஆராய்ச்சி
அமெரிக்காவில் தேசிய அறிவியல் அறக்கட்டளை அமைப்பிலிருந்து ஆய்வுப் பணிகளுக்காக உதவித் தொகை பெறுவதற்கு நிறையப் போட்டி இருக்கும். நமது ஆராய்ச்சியின் தன்மை, அதற்காக மேற்கொள்ளப்பட இருக்கும் முயற்சிகள், அதன் விளைவாக ஏற்படக் கூடிய நன்மைகள் போன்றவற்றை விளக்கி விண்ணப்பம் தர வேண்டும். நூறு பேரில் பத்து பேருக்குதான் உதவி தொகை கிடைக்கும். இந்த அமைப்பிலிருந்து உதவித்தொகை கிடைத்து விட்டால் பின்னர் முழுச் சுதந்திரம்தான். இப்படிப் ஆராய்ச்சி பணியில் ஈடுபடும் பேராசிரியர்களுக்குப் பணிப் பளு குறைக்கப்படும். இத்தகைய உதவித் தொகைகளை நான் பலமுறை பெற்றிருக்கிறேன்.
இந்த வகையில் என்னுடைய ஆய்வுகள் ·பைபர் கான்கிரீட், சிலிகா ·ப்யூம் கான்கிரிட், எரிமலைப் பாறையைக் கட்டிடக்கலையில் பயன்படுத்தும் முறை, பாக்டீரியா கான்கிரீட் என்று பல ஆய்வுகளைச் சொல்லலாம்.
காப்புரிமை வேண்டாம்
பேடன்ட் வாங்குவதில்லை என்பதில் நான் மிகவும் தீர்மானமாக இருக்கிறேன். நான் என் துறையில் ஏதேனும் புதிதாக கண்டுபிடிக்கிறேன் என்றால் அதற்காக அமெரிக்க அரசு எனக்குத் தாரளமாக நிதியுதவி வழங்குகிறது. அரசு மக்களின் வரிப் பணத்திலிருந்துதானே தருகிறது? மக்களின் வரிப் பணத்திலிருந்து நான் உதவி பெற்று ஆராய்ச்சி செய்து அதனால் விளையும் கண்டுபிடிப்புகளின் பலன் மக்களைப் போய்ச் சேர்வதுதான் முறை. அந்தக் கண்டு பிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்று நான் பணம் பண்ணுவது தவறு என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஓர் ஆராய்ச்சியாளன் தனது கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தம் கொண்டாடுவதோ, காப்புரிமை பெறுவதோ, அதைக் கொண்டு பெரும் பணம் சேர்ப்பதோ தவறேயில்லை. அமெரிக்காவில் அதற்குத் தடையும் இல்லை. ஆனால் எனக்கு என்னமோ அப்படிச் செயல்படுவதில் ஆர்வம் இல்லை. என் மனசாட்சி அதை ஏற்கவில்லை.
பெற்ற பல பெருமைகள்
1980ல் 'தலைசிறந்த பேராசிரியர்' என்ற கெளரவத்தை எனக்கு நான் பணியாற்றிய பல்கலைக்கழகம் வழங்கியது. அதுபோல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க எனக்கு ரொக்கப் பரிசும் வழங்கியது. பின்பு 1989ல் 'மிகச் சிறந்த சிவில் என்ஜினியரிங் பேராசிரியர்' விருதும் கிடைத்தது. அமெரிக்காவில் உள்ள 'போர்டு ஆ·ப் ரீஜன்ட்ஸ்' என்னும் குழு எனக்கு 'ரீஜன்ட்ஸ் டிஸ்டிங்விஷ்டு புரொ·பஸர்' என்ற பெரிய பட்டத்தையும், கெளரவத்தையும் அளித்தது.
ஒருமுறை நான் பணியாற்றும் கல்லூரியில் கல்லூரிக்கு ஒரு அதிநவீன 'மெட்டீரியல்ஸ் லேபரட்டோரி' வேண்டும் என்று நான் கூறினேன். என்னுடைய கோரிக்கையை ஏற்று கல்லூரி நிர்வாகத்தினர் ஒரு மில்லியன் டாலர் செலவில் ஓர் அருமையான ஆய்வகத்தை உருவாக்கினார். அந்த கட்டடத்திற்கு 'ராமா மெட்டீரியல்ஸ் லேப்' என்று என் பெயரையே வைத்தனர். நான் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் என் பெயரை வைத்து எனக்கு மிகப் பெரிய கெளரவத்தைக் கொடுத்தது. இதற்கான விழா கல்யாணம் போல் நடந்தது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியை ஊடகங்கள் பெரிதாக மக்களுக்குக் கொண்டு சென்றன. இந்த விஷயங்கள் அப்போது அந்த மாநில கவர்னராக விளங்கிய வில்லியம் ஜெ. ஜேங்க்லோவுக்கு எட்ட அவர். 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதியை சவுத் டகோட்டா மாநிலத்தில் டாக்டர். ராமகிருஷ்ணன் தினமாக அறிவிக்கிறேன் என்று கூறிக் கடிதம் ஒன்றை எங்கள் கல்லூரித் தலைவருக்கு எழுதியதினார்.
பொழுதுபோக்கு
டேபிள் டென்னிஸ் ஆடுவதும், புகைப்படங்கள் எடுப்பதும் எனக்குப் பிடித்தமானவை. டால்ஸ்டாய் மற்றும் இலக்கியத் தரம் வாய்ந்த ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளை ஆர்வத்துடன் படிப்பதும் பிடிக்கும். நான் ஓய்வுபெற்ற பிறகு ஆராய்ச்சி மாணவ மாணவியருக்கு உதவிக் கொண்டிருக் கிறேன். உலகில் கான்கிரீட் தொழில்நுட்பம் தொடர்பான ஆலோசனைகளை யார் கேட்டாலும் தருகிறேன். சர்வதேசக் கருத்தரங்குகள் பலவற்றில் கலந்து கொள்கிறேன்.
பாறையைக் கயிறாகத் திரித்து...
எரிமலை சீறி வெடிக்கும்போது வெளியாகும் அக்கினிக் குழம்பு பின்னர் கெட்டியாகும்போது கிடைக்கும் கடினமான பாறையை பஸால்ட் ராக் என்று சொல்வார்கள். இந்த பஸால்ட் ராக்கில் அசுத்தங்கள் இருக்காது. அது இயற்கையின் அதிசயம். பஸால்ட் ராக் என்ற எரிமலைப் பாறையைக் கிட்டத்தட்ட இரண்டாயிரம் டிகிரி வெப்பத்தில் கொதிக்க வைத்து மீண்டும் அதைக் குழம்பாக்கலாம். ஒரு பக்குவத்தில், ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தால் அந்தக் குழம்பை மிக மெல்லிய இழைகளாக மாற்றலாம். நமது முடியின் அடர்த்தியில் பாதிக் குறுக்களவு கொண்ட பஸால்ட் இழைகள் அவை. கிட்டத்தட்ட பத்து மைல் நீளத்துக்குக் கூட இழுத்துக் கொள்ள முடியும். அப்படி இழுக்கப்பட்ட இழைகளை மீண்டும் ஒன்றுசேர்த்துக் கடினமான முறுக்கு நூலாக மாற்றினேன். இந்த நூல் எ·கைவிட மூன்று மடங்கு பலம் பொருந்தியதாகவும், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எடை கொண்டதாகவும் இருந்தன. இவற்றை மொத்தமாகப் பெரிய அளவில் தயாரித்து, பிறகு அவற்றை கிட்டத்தட்ட இருநூறு இருநூறு ஒயர்களாக ஒன்று சேர்த்து நாம் பயன்படுத்தும் 'ட்வைன்' போல உருவாக்கினேன். பலம் பொருந்திய கம்பிகளாக அந்த ட்வைன்கள் இருந்தன.
அவற்றை துண்டுகளாக்கி கான்கிரீட்டில் கலந்து கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்த தொடங்கினேன். கட்டடங்களுக்கு அசுர பலம் சேர்ந்தது. என்னுடைய இந்த 'பஸால்ட் ராக் கான்கிரீட் தொழில் நுட்பம்' எனக்கு அதிகப் புகழ் சேர்த்தது.
*******
தக்க துணைவிதான்
கணவனுக்கேற்ற மனைவியாக விஜயலட்சுமி ராமகிருஷ்ணன் அமெரிக்காவில் ஒரு மிகச் சிறந்த ஆசிரியையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அமெரிக்கா முழுவதிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லாசிரியப் பெருமக்களில் விஜயலட்சுமியும் ஒருவர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விஜய லட்சுமி முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர். கோவை கரும்பு வளர்ச்சிக் கழகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு கணவருடன் அமெரிக்கா சென்று அங்கு சிறந்த ஆசிரியையாகப் பெயரெடுத்தார். விஜயலட்சுமி ராமகிருஷ்ணன் வெள்ளை மாளிகையில் கணவருடன் விருந்தினராகக் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பைப் பெற்றார். கணவரைப் போல் இவரது பெருமைகளுக்காக சவுத் டகோட்டா மாநில ஆளுநர் ஒருநாளை 'விஜயலட்சுமி தினம்' (Vijayalakshmi Day) என்று பிரகடனப்படுத்தி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.
இப்படியோர் அரிய கெளரவம் வேறு எந்த அமெரிக்க இந்தியத் தம்பதிக்கும் கிடைத்ததில்லை. ஆசிரியர் மட்டுமல்லா மல் விஜயலட்சுமி தெலுங்கு இலக்கியவாதியும் கூட. நிறையச் சிறுகதைகள் மற்றும் நாவல்களைத் தெலுங்கில் எழுதியிருக்கிறார்.
சந்திப்பு: கேடிஸ்ரீ தொகுப்பு: மதுரபாரதி |
|
|
|
|
|
|
|