Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | புதிரா? புரியுமா? | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஜோ. ஜாய்ஸ் திலகம்
பேராசிரியர் ஸ்ரீனிவாசன் அவர்களுடன் ஒரு சந்திப்பு ....
- மணி மு.மணிவண்ணன், கே. டி. ஸ்ரீ, மதுரபாரதி|டிசம்பர் 2004|
Share:
Click Here Enlargeபேராசிரியர் T. N. ஸ்ரீனிவாசன் யேல் பல்கலைக் கழகத்தில் சாமுயெல் சி. பார்க் பொருளாதாரப் பேராசிரியர் மற்றும் தெற்காசியத் துறைத் தலைவர். இவர் தலைமையில் யேல் பல்கலைக் கழகம் இந்த ஆண்டுமுதல் தமிழ் மொழியைக் கற்பிக்கத் தொடங்கியுள்ளது. இவர் 1960களிலேயே இந்திய அரசின் மையப் பொருளாதாரத் திட்டக் கொள்கையின் சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டிய முன்னோடிகளில் ஒருவர். பேரா. ஜகதீஷ் பகவதியுடன் சேர்ந்து இவர் எழுதிய நூல்களும் கட்டுரை களும் இன்றைய இந்தியாவின் தாராளமய மாக்கல் கோட்பாடு\களுக்கு வழி வகுத்தவை. அவர் அண்மையில் ஸ்டான்·போர்டு பல்கலைக் கழகத்துக்கு வந்திருந்தபோது அவருடன் உரையாடினோம்.

யேல் பல்கலையில் தமிழ், உலகமய மாக்கல், இந்தியா-சீனா பொருளாதார வளர்ச்சி ஒப்பீடு, இந்தியா-தமிழ்நாடு தொழில் முதலீடு, தமிழகத்தில் எய்ட்ஸ் நோய், அமெரிக்கப் பொருளாதாரம் என்று பலவற்றைப்பற்றிய அழுத்தமான, ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்தினார். அவற்றிலிருந்து சில பகுதிகள் இதோ:

'யேல்' பல்கலையில் தமிழ்

யேல் பல்கலையில் 19ம் நூற்றாண்டிலேயே சமஸ்கிருதப் பீடம் நிறுவியிருக்கிறார்கள். அண்மைக்காலம் வரை வேறு எந்த இந்திய மொழியையும் கற்பிக்கவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்திப் பாடங்கள் தொடங்கின. பல மாணவர்கள் விரும்பிக் கேட்டதற்கு இணங்கி இந்த ஆண்டுமுதல் தமிழ் வகுப்புகள் தொடங்கியிருக்கிறோம். பாடத் திட்டத்தை வகுத்து, முதலாண்டு தமிழ் கற்பிக்கத் துவங்கியிருக்கிறார் பேரா. அண்ணாமலை. அவர் எங்களுக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம்தான். அவர் மைசூரில் இந்திய மொழிகளின் பயிலகத்தின் இயக்குநராக இருந்து சென்ற ஆண்டுதான் ஓய்வு பெற்றார். செப்டம்பர்முதல் இள நிலைத் தமிழ் வகுப்புகளை நடத்துகிறார்.

ஏற்கனவே யேலில் மாந்தவியல் துறையில் பேராசிரியர் பார்னி பேட் தமிழ் மேடைப் பேச்சுகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். தமிழில் மேடைப் பேச்சு (oratory) என்பதை உருவாக்கியவர் பைபிளை 19ம் நூற்றாண்டில் தமிழுக்கு மொழி பெயர்த்த சைவப்பெரியார் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்தாம் என்பார்கள். அவர் கிறித்தவ தேவலாயங்களில் செர்மன் (sermon) என்னும் மதபோதகப் பேச்சைப் பார்த்து விட்டு இந்து மதத்துக்கும் மேடைப்பேச்சு வேண்டும் என்று உருவாக்கினார். அது இன்றைய மேடைப்பேச்சு, கொள்கைகள் பேச்சு என்று தொடர்கிறது. தமிழ்நாட்டில் தோன்றிய பல அரசியல், சமுதாய இயக்கங்கள், தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம், திராவிட இயக்கம் போன்றவற்றின் மூலம் மேலும் மேடைப்பேச்சுக் கலை வளர்ந்தது. ஆறுமுக நாவலர் தொடங்கி இன்றைய அரசியல் பேச்சாளர் வரை ஆராய்ந்து வருகிறார் பேரா. பார்னி பேட். ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவது மட்டு மல்லாமல், வாரம் ஒரு மதிய உணவுக் கூட்டம் கூட்டி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை அழைத்துத் தமிழ் பேச, கேட்க வைப்பார்.

தமிழில் வாக்குவாதங்கள், அலசல்கள் நடத்தி அதன் மூலம் தமிழை அவர்களிடையே வளர்த்தார்.

"எங்களுக்குத் தமிழ் கற்றுக் கொடுங்கள்" - சிங்கள மாணவர்

நான் யேல் பல்கலையில் பன்னாட்டு வட்டாரக் கல்வி மையத்தில், தெற்காசியத் துறைத் தலைவராக இருப்பதால் யேலில் தமிழ் கற்பிக்கும் முயற்சி என் பொறுப்புக்கு வந்தது. தெற்காசியத் துறையில் தமிழ் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பல மாணவர்கள் வேண்டினார்கள். இலங்கையைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள் சிலரும் வந்து தமிழ் வகுப்புகள் நடத்த வேண்டும் என வற்புறுத்தினார்கள். "எங்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் அமைதி வரவேண்டும் என்றால் சிங்களவர்களான நாங்கள் தமிழ் பேச கற்றுக் கொள்ள வேண்டும். தமிழர்களுடன் நேரிடையாக நாங்கள் பேசி அங்கு அமைதியை உருவாக்க வேண்டும். ஆகையால் நீங்கள் தமிழில் வகுப்புகள் தொடங்குங்கள்" என்றனர். அது என்னை மிகவும் பாதித்தது.

'யேல்' பல்கலையில் வெளிமொழிகளில் வகுப்புகள் நடத்துவதற்குப் பல்கலைக்கழகம் நிதி ஒதுக்கீடு செய்யாது. அதற்கான நிதியை வெளியிலிருந்துதான் பெறவேண்டும். இதற்கான மானியத்திற்கு நாங்கள் விண்ணப்பம் செய்யவிருக்கிறோம். தமிழ் ஒரு சர்வதேச மொழி. இலங்கை, மலேசியா, இந்தியா என்று உலக அளவில் பலநாடுகளில் பேசப்படும் மொழி என்பதால் இதற்கான நிதி ஒதுக்கீடு கேட்டு அமெரிக்க அரசிடம் மனுச் செய்யவுள்ளோம். உலகமயமாக்கல் எப்போது வெற்றிபெறும்...

உலகமயமாக்கல் ஏழைநாடுகளுக்கு மிக நல்லது. இதனால் உற்பத்தித்திறனுடன் செய்யும் நம் பொருட்களை வெளிநாடுகளிலும், வெளிநாட்டுப் பொருட்களை நம் நாட்டிலும் விற்கலாம். ஒரு நாட்டின் தொழிலாளிகள் உலக அளவிலும் இணையத்தின் மூலம் சேவை செய்யலாம். மூலதனம், உழைப்பு போன்றவை உள்நாட்டிற்குள்ளும் உலக அளவிலும் பரவுதன் மூலம் நுகர்வோர் உலகமய மாக்கலின் பலனைப் பெறலாம். ஆனால் பொருளாதாரக் கொள்கைகள் சரியில்லை என்றால் சிக்கல்கள் நேரிடலாம்.

வளர்ந்த நாடுகள் கொடுக்கும் தொழிலாளர் சலுகைகளைப் பார்த்து வளரும் நாடுகளும் சலுகைகள் கொடுப்பது பிழையானது என்பதை எனது புள்ளியியல் குரு, இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தை உருவாக்கிய பேராசிரியர் மஹாலனோபிஸ் (Mahalanobis) அவர்களே சொல்வார்கள். உதாரணமாக, இந்தியாவில் தொழிலாளர் சட்டங்கள் நிரந்தரப் பணியாளருக்கு மருத்துவம், வைப்புத்தொகை என்று பல சலுகைகளைக் கட்டாயப்படுத்துகின்றன. இதனால் பலன் பெறுபவர்கள் அரசு ஊழியர்கள், பெரு நிறுவன ஊழியர்கள், நகரத் தொழிலாளிகள் போன்ற வெகுசிலரே. நாட்டுப்புறத் தொழிலாளிகளுக்கு இந்தச் சலுகைகள் இல்லை. இதனால் மூலதனம் முடங்கிப் போய், வேலை வாய்ப்பின்மை கூடுகிறது, தொழிலாளிகளிடையே ஏற்றத் தாழ்வு ஏற்படுகிறது. இத்தகை சட்டங்களை மாற்றி மனிதவளப் பெயர்ச்சிக்கு வழிவகுத்தா லொழிய உலகமயமாக்கல் உதவாது.

எடுத்துக்காட்டாக மென்பொருள் துறையை எடுத்துக் கொள்வோம். எப்படி இந்தியா இந்தத் துறையில் அசுர வளர்ச்சி பெற முடிந்தது? ஏனென்றால் இது இவ்வளவு பெரிதாக வளரும் என்று அரசு எதிர் பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் வரிகளைக் கூட்டியிருப்பார்கள். பல தடுப்புச் சட்டங்களைத் திணித்திருப்பார்கள். இந்தத் துறை வளர்ந்திருக்காது. இது தானாக வளர்ந்தது. 1980களில் வன்பொருள் (hardware) சுங்கவரியை அரசு குறைத்தபின் வன்பொருள் தாராளமாகக் கிடைத்தது. கணித்துறை மனிதவளம் நிறைய இருந்தது.

மென்பொருள் தொழில்நுட்பம் கிடைத்தது. இந்திய மென்பொருள்துறை ஏவுகணை போல் எழுந்தது. இது போல வேறுபல துறைகளிலும் இந்தியர்களால் உலகத்தோடு போட்டியிட முடியும்.

இந்தியா சீனாவைப் போல் வளரமுடியும்

சீனா1978ல் உலகமயமாக்கத் தொடங்கியது. உலக ஏற்றுமதியில் சீனாவின் பங்கு 2.5% லிருந்து இப்போது 5%க்கு உயர்ந்துள்ளது. இந்தியா விடுதலை பெறும்போது உலக ஏற்றுமதியில் அதன் பங்கு 2.5%. 1991ல் இந்தியா உலகமயமாக்கத் தொடங்கிய போது அதன் பங்கு 0.5%க்குச் சரிந்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி 2000ல் தான் 0.7%ஐ எட்டியுள்ளது. உலகஅளவில் ஏற்றுமதியில் ஒருநாடு முன்னேற வேண்டுமென்றால் அந்நாட்டின் அடிப்படைத் தேவைகளான சீரான மின்சார வசதி, தகவல் தொடர்புகள், சாலைப் போக்கு வரத்து, துறைமுகக் கட்டுமானப் பணிகள் எல்லாம் வேண்டும். சீனா எல்லாவற்றிலும் தன்னை மேம்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் தொழிலாளர் சட்டங்களையும் நெகிழ்த்திக் கொண்டார்கள். வெளிநாட்டார் முதலீடு செய்யும் நிறுவனங்களில் 100% உரிமையைக் கொடுக்கத் தயங்கவில்லை. இது போன்ற சீர்திருத்தங்களால் அவர்கள் அசுர வேகத்தில் முன்னேறுகிறார்கள்.

சீனாவுக்கு வெகுமுன்னரே, 60களிலேயே இந்தியா சிறப்பு ஏற்றுமதிப் பகுதிகளைக் கண்ட்லா பக்கத்தில் உருவாக்கியிருந்தது. ஏற்றுமதிப் பகுதிகளிலும் உள்நாட்டுத் தொழில்சட்டங்களைத் திணித்து அந்த நிறுவனங்களை மூச்சுத் திணறச் செய்து விட்டனர்.

சீனா ஆழச்சிந்தித்துதான் தன் சட்டங்களை நெகிழ்த்தியிருக்கிறது. சீனாவோடு போட்டி போட்டு இந்தியாவால் வளர முடியும். மனித வளம் இருக்கிறது. ஆனால் அடிப்படைக் கட்டுமானங்கள் (infrastructure) இல்லை. ஏற்றுமதித் தொழிலில் அனுபவ முள்ள வெளிநாட்டுச் சீனர்கள் சீனாவின் அடிப்படைக் கட்டுமானங்களில் முதலீடு செய்வதை சீனா ஆதரித்தது. ஆனால் இந்தியாவோ வெளிநாட்டு முதலீடுகளைக் குளறுபடியாக்கியிருக்கிறது. எரிபொருள் துறையைப் பாருங்களேன்! வெளிநாட்டு இந்தியர்கள் பெரும்பாலும் தொழில் முனைவோர்கள் இல்லை என்றாலும் அவர்களும் இந்தியாவில் நேரடி முதலீடு செய்ய வேண்டும். ஆனால், தொழிலைக் கையில் எடுத்துக் கொண்டு செய்ய வேண்டும். எட்டி நிற்கக்கூடாது.

தற்போது இந்தியத் தொழிலதிபர்களும் மாறத் தொடங்கிவிட்டார்கள். முதலில் சீனப் பொருள்கள் இந்தியாவுக்கு இறக்குமதியான போது பதைபதைத்த இந்தியர்கள் இப்போது சீனாவிலேயே முதலீடு செய்யத் துணிந்து விட்டார்கள். சீனா 10% வளர்ந்தால் உலகும் சேர்ந்து வளரும்போது இந்தியர்களும் அதில் பங்கு தேடுகிறார்கள். சீனாவின் தொடர்ச்சியான 10% வளர்ச்சி ஒன்றும் மர்மம் அல்ல. சீனாவின் வளர்ச்சி ஏனைய கிழக்கு ஆசிய நாடுகளையும் வளர்க்கிறது. அதே போல் தெற்காசியாவின் வளர்ச்சிக்கு இந்தியா அச்சாணியாக இருக்க முடியும். பாகிஸ்தானோடு சமாதானம் ஏற்பட்டால் இது சாத்தியம். பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கு இது நன்றாகத் தெரியும்.

கடந்த ஆட்சியில் பிரதமர் வாஜ்பாய், அமைச்சர்கள் அருண் ஜெய்ட்லி, அருண் ஷௌரிக்கும் இது தெரிந்திருந்தது. இதில் கூட்டணியிலிருக்கும் இடதுசாரிக் கட்சிகள் குறுக்கிடவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சி ஓங்கும். தென்னிந்தியாவில் மனிதவள வளர்ச்சி சீனாவைப் போலி ருக்கிறது. மாநில அரசியல் மற்றும் பொருளாதாரக் கோட்பாடு சீரானால் தென்னிந்தியாவால் மேலும் வளர முடியும்.

சிலிக்கன் வேல்லியில் கன்வால் ரேக்கி, மாலவல்லி, வினோத் கோஸ்லா ஆகியோர் இந்தியத் தொழில் வளர்ச்சிக்கான ஆராய்ச்சிகளுக்கு ஆதரவளிக்கிறார்கள். கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது தான் இப்போதைய உடனடித் தீர்வு. இந்தியாவில் வருடத்திற்கொருமுறை கருத்தரங்குகள் நடத்துகிறோம். கருத்தரங்குகளில் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் கலந்து விவாதிக்கிறார்கள். இவர்களுக்குப் பொருளாதாரக் கொள்கைகளைச் சீர்திருத்துவதன் கட்டாயத்தை உலக நிபுணர்கள் தகுந்த ஆராய்ச்சித் தரவுகளின் மூலம் காட்டுவதால்தான் அரசின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது.

இதே போல் தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் வெளிநாடு வாழ் தமிழ்த் தொழிலதிபர்கள் தமிழகம் பற்றிய ஆராய்ச்சி யையும், நிபுணர்கள் பங்கேற்கும் மாநாடு களையும் ஆதரிக்க வேண்டும். வெளிநாட்டு நிபுணர்கள் தமிழகத்திற்குச் சென்று அங்குள்ள திட்டவல்லுநர்களுடன் கலந்துரையாடல் மற்றும் விவாதங்கள் மேற்கொள்ள வேண்டும். முழு ஈடுபாடு, விரைவான செயல்பாடு, அடிப்படை மனமாற்றம் வேண்டும்.
தொழிலாளர் சங்கமும், வளர்ச்சியும்

தொழிலாளர் சங்கங்களைப் பின்பற்றி மென்பொருளாளர்களும் சங்கம் அமைக்கும் முன்னர் அந்தப் பழைய சங்கங்களால் என்ன நேர்ந்தது என்று பார்க்க வேண்டும். வாகனங்கள், எ·கு, துணியாலைத் தொழில்களில் வேலை வெளிபெயர்தலைத் தடுக்கும் முயற்சி வேலைகளைக் காப்பாற்று வதை விட எல்லோருக்கும் செலவைக் கூட்டியது. இந்த வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்கப் பொருளாதாரம் பெரும்பாலும் தனியார்த் துறைப் பொருளாதாரம். அரசின் குறுக்கீடு இங்கே குறைவு; இந்தியாவில் அதிகம். இந்திய மாநிலங்களில் ஒவ்வோர் அரசுக்கும் வேறுபாடு இருக்கிறது. வளர்ச்சிக் குத் துணைபுரியும் மாநிலங்களில் வேலை வாய்ப்புகூடுகிறது, தொழிலாளர் வளம் பெருகின்றனர். தொழிலாளர்களைப் பேணுகிறோம் என்னும் மாநிலங்களில் வளர்ச்சி குன்றி வேலையில்லாத் திண்டாட்டம் கூடுகிறது, தொழிலாளர்களும் நலிகின்றனர். எல்லா மாநிலங்களிலும் ஊழல் இருந்தாலும், தென்மாநில அரசுகள் மக்களை முழுதும் சுரண்டுவதில்லை. பீஹார் போன்ற வட மாநிலங்களில் ஊழலும் முழுச் சுரண்டலும் இருப்பதால் மக்கள் வாடுகின்றனர்.

வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர் களைத் தமிழக அரசு தண்டித்தது பாராட்டுக் குரியது. அந்த வேலை நிறுத்தம் தேவை யற்றது என்பது என் கருத்து. முதன்முறையாக இந்தியாவில் ஓர் அரசு அரசுஊழியர் சங்கத்தை எதிர்த்து நின்று வேலைநிறுத்தத்தை முறியடித்துக் காட்டியது. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் தமிழக அரசு பல்டியடித்தது வருந்தத் தக்கது. இனிமேல் யாரும் அரசின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டார்கள். இது ஏமாற்றத்துக் குரியது.

தமிழகத்தில் எய்ட்ஸ் தீ

தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் பரவி வருவதைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய காலக்கட்டம் விரைவில் முடிந்து விடும். இதற்குள் இதைக் கட்டுப்படுத்தாவிட்டால் இது தீப்போல் பரவி நாட்டைச் சிதைக்கக் கூடிய ஆபத்து இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு எய்ட்ஸ் நோய் மிகப்பெரும் ஆபத்து. தமிழர்கள் இதைப் பற்றிப் பேசவும் தயங்குகிறார்கள். எய்ட்ஸ் நோயாளிகளைத் தயவு தாட்சண்யம் இல்லாமல் வீட்டை விட்டுத் துரத்தி விடுகிறார்கள். மருத்துவர் களும் தொடப் பயப்படுகிறார்கள். இதனால் எய்ட்ஸ் நோயாளிகள் உண்மையை மறைக்கிறார்கள். யாருக்கும் சொல்லாமல் கல்யாணம் கூடச் செய்து கொள்கிறார்கள். இதனால் நோய் பரவுகிறது. தமிழ்க் கலாச்சாரம் இதை அருவருப்புடன் பார்ப்ப தால் வந்த விளைவு இது. நோய் எப்படி, எதனால் வந்தது என்று கவலைப்படுவதை நிறுத்தி, நோயாளிகளைக் கவனிப்பதன் தேவைபற்றிப் பேசவேண்டும்.

இந்த மாற்றத்தைச் சமுதாயத்தால் வணங்கிப் போற்றப்படும் மடாதிபதிகள், ஆதீனங்கள் கொண்டுவர வேண்டும். எய்ட்ஸ் பற்றிய அறிவு பரவினால்தான் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும். இதில் யேல் பல்கலைக்கழகமும் ஈடுபட்டு வருகிறது.

முயற்சி தேவை

தங்கள் குழந்தைகள் யேல் பல்கலையில் சேர வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட இந்தியப் பெற்றோருக்கு நான் சொல்வ தெல்லாம், அவர்கள் படிப்பில் சாதனை செய்வதோடு மட்டுமல்லாமல் சமுதாயத் தொண்டு, கலை வளர்ச்சி போன்ற பலதரப் பட்ட துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதுதான்.

யேலில் படிக்க ஏகப்பட்ட செலவாகும். ஓராண்டுக்கு 30,000 டாலர்கள் ஆகலாம். அனுமதி கொடுத்த பின்னர்தான் மாணவர்களுக்கு வசதி இருக்கிறதா என்று பார்க்கிறோம். வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுக்க ஏற்பாடு செய்கிறோம். எனவே, வசதியில்லை என்பதற்காக யாரும் முயலாமல் இருக்கக் கூடாது. யேலில் படிக்கும் அமெரிக்கத் தமிழர்கள் பெரும்பாலும் வசதியுள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தாம்.

அமெரிக்கப் பொருளாதார மந்தநிலை, சிலிக்கன் வேல்லியின் பொருளாதார வீழ்ச்சி பற்றிக் கவலை கொண்டிருக்கும் அமெரிக்கத் தமிழர்களுக்கு நான் சொல்லுவதெல்லாம், தொழில் முனைப்பின் தலை நகர்ப் பகுதியில் வாழ்கிறீர்கள். புதிய கருத்துகள் இங்கே பெரிதும் வரவேற்கப்படுபவை. நல்ல தொழில் தொடங்க புதிய கருத்து, போட்டி மனப்பான்மை, வணிகத் திறமை, தொழில் திறமை இருந்தால் போதுமானது. இங்கே முதலீடு எளிதாகக் கிடைக்கும். ஏன் மனந் தளரவேண்டும்? உங்களைச் சுற்றி இருக்கும் வாய்ப்புகளைப் பாருங்கள்.

*****


பேசினார்கள், நிதி கிடைக்கவில்லை

யேலில் தமிழ் கற்பிக்க நிதி திரட்டத் தமிழகத்துக்குச் சென்றிருந்தேன். பலருடன் பேசும் வாய்ப்பு கிட்டிய போதிலும் பணம் கிடைக்கவில்லை. அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்கள், தென்றல் வாசகர்கள் போன்றோர் உதவி இருந்தால் யேலில் தொடர்ந்து தமிழ் கற்பிக்கலாம். முதல், இடை, கடை நிலைகளுக்குத் தமிழ் வகுப்புகள் எடுக்க விருக்கிறோம்.

ஒவ்வொரு நிலைக்கும் ஒரு செமஸ்டர் நடத்துவதற்கு குறைந்தது 50,000 டாலர்கள் தேவைப்படும். வெளியுதவி கிடைக்காத நிலையில் இங்குத் தமிழ் படிக்கும் மாணவர்களின் குடும்பம் மற்றும் அமெரிக்காவில் வாழும் தமிழ்க் குடும்பங்களின் துணையுடன் தான் இதற்கான நிதி திரட்ட முடியும். யேலில் ஒரு தமிழ்ப்பீடம் அமைக்க வேண்டும் என்றால் 2.5 மில்லியன் டாலர் ஆகும். ஒவ்வோராண்டும் சிறிய தொகை, 100 அல்லது 200 டாலர் என்று பலர் கொடுத்தால் என்றால் அதுவே போதுமானது.

*****


வேலை வெளிகொடுப்புக்கு அஞ்சாதீர்கள்

உலகமயமாக்கலால் சிலிக்கன் வேல்லி இந்தியர்களின் வேலைகளும் இந்தியாவுக்குப் பெயர்வதைப் பார்க்கிறோம். அதனால், இந்தியர்கள் மனம் தளரக் கூடாது. அமெரிக்கப் பொருளாதார மந்தநிலையின் அறிகுறிதான் இது. அமெரிக்கப் பொருளாதாரம் அதிர்ச்சி களைத் தாங்கும் வல்லமையுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் பலகோடி வேலைகள் உருவாவதும் மறைவதும் அமெரிக்காவுக்கு இயல்பு. வேலை வெளிபெயர்தலின் தாக்கத்தைப் பூதாகரமாக்கக் கூடாது. பெரும்பாலும் அடிமட்ட வேலைகள்தாம் பெயர் கின்றன. வேலையை இழக்கும் தனி மனிதர்கள் இதனால் பாதிக்கப்பட்டாலும், நுகர்வோரும் நாடும் வேலை வெளிக்கொடுப்பால் வளம் பெறுகின்றன என்பதுதான் உண்மை. ஒரு துறையில் மறையும் வேலைகள் வேறு துறைக்கு வேலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

நேர்காணல்: மணி மு. மணிவண்ணன்
ஒலிபெயர்ப்பு: கே. டி. ஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி
More

ஜோ. ஜாய்ஸ் திலகம்
Share: 




© Copyright 2020 Tamilonline