Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2024 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்: மதுமஞ்சரி
- அரவிந்த் சுவாமிநாதன்|ஆகஸ்டு 2024|
Share:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் மதுமஞ்சரி பிறந்து வளர்ந்தார். கோவை ரங்கநாதன் கட்டடக்கலைக் கல்லூரியில் கட்டடக்கலையியல் பயின்ற மதுமஞ்சரி, இன்று 'ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம்' என்ற அமைப்புடன் இணைந்து மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர் வாழும் கிராமப்புறங்களில் இதுவரை 15 கிணறுகளைப் புனரமைத்துள்ளார். கைவிடப்பட்ட கிணறுகளையும், பாழடைந்த கிணறுகளையும் மீட்டெடுத்துச் சீரமைத்து உதவுகிறார். உயர்வருவாய் தரும் வேலையை விட்டுவிட்டு கிராம மக்களுக்கான சேவையில் மதுமஞ்சரி இறங்கியது ஏன், எது அவரை உத்வேகத்துடன் செயல்பட வழிகாட்டிக் கொண்டிருக்கிறது என்று கேட்டோம். மனம் திறந்தார். நமது மனச்சாட்சியை உலுக்கிவிட்டார் மதுமஞ்சரி...

★★★★★




கே: சமூகசேவையில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்போது, எப்படி?
ப: நான் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் முக்கியமான நிறுவனங்களில் பணியாற்றிய பின்னர், கட்டடக்கலை நிபுணர்கள் கெளஷிக், அருணிமா ஆகியோரின் நிறுவனமான அகர்மாவில் பணியாற்றினேன். அங்குதான் 'குக்கூ' சிவராஜ் அண்ணா அறிமுகமானார். அந்தச் சந்திப்பின் முடிவில் என் கையில் புத்தகம் ஒன்றைக் கொடுத்துவிட்டுப் போனார். ஸ்டாலின் அண்ணா எழுதிய 'நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு' என்னும் அந்தப் புத்தகம், யோகி நிகமானந்தாவைப் பற்றியது. வாழ்வின்மீது நான் கொண்டிருந்த அநாவசியப் பற்றுதல்களை அது கேள்விக்குள்ளாக்கியது. அதுவரை காத்துவந்த நம்பிக்கைகளை நொறுக்கிப் போட்டது. ஒரு புதிய தெளிந்த நம்பிக்கை ஒன்றை விடாப்பிடியுடன் தாங்கி நிற்கவல்ல மனநிலைக்கான தொடக்கத்தை அந்தப் புத்தகம் தந்தது. அதுதான் தொடக்கம்.

கையளவு நீருடன் சுனை



கே: அப்படி அந்தப் புத்தகத்தில் என்ன இருந்தது?
ப: அது. யோகி நிகமானந்தாவைப் பற்றியது. அவர், பெரிய கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி கற்றவர். உலகளவிலான பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்தவர். அந்த வேலைகளை உதறிவிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் அலைந்து திரிந்தார். பயணத்தினூடே கங்கைநீரைக் குடிநீர் ஆதாரமாகக் கொண்ட சிறு சிறு கிராமங்களில் பிறக்கும் குழந்தைகள் பலவகையான உடல்நலக் கேடுகளுடனும் குறைபாடுகளுடனும் பிறப்பதைப் பார்க்கிறார். கங்கையின் கரையோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைக் கழிவுகள் கங்கையில் கலப்பதே அத்தனை நோய்களுக்கும் காரணம் என்பதை அறிகிறார். அந்தத் தொழிற்சாலைகளை அகற்றி நீர் மாசுபாட்டை விலக்கப் பலதரப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்கிறார். அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை.

வேலை தொடங்கியது



ஒன்றும் செய்வதற்கில்லை என்று ஆகும்போது, ஒருநாள் அதிகாலை அதே கங்கையில் நீராடிவிட்டு அதன் கரையில் சிறு மண் அகல்விளக்கை ஏற்றி வைத்துவிட்டு அருகே அமர்கிறார். கங்கையின் தூய்மை வேண்டி உணவை மறுத்த அவரது உண்ணாவிரதம் தொடர்கிறது. தீவிர உண்ணாநோன்பின் காரணமாக 114வது நாளில் அவர் நல்லுயிர் இவ்வுலகில் இருந்து விடைபெற்றது.

அவர் இறுதி நாட்களில் பேசிய வார்த்தைகள்தான் 'நெருப்பு தெய்வம்; நீரே வாழ்வு' என்னும் நூல். அதை வாசித்ததும் ஆற்றாமை என்னை அலைக்கழித்தது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கண்ணீர் பெருகியது. "பிறர் துன்பம் ஒருவரை வருத்தமடையச் செய்யலாம். ஆனால், எப்படி இந்தத் தனியொரு மனிதன் இன்று வதைபடும் குரலற்ற மக்களுக்காக மட்டுமின்றி நாளைக்கு பிறக்கப் போகும் தலைமுறைக்காகவும் தன்னுயிரை அணுஅணுவாகத் தியாகிக்க முடிவெடுத்தார்? தனிநபர் ஒருவர் தன் சமூகத்தின் மீதாக ஏற்றுக்கொண்ட எவ்வளவு பெரிய பொறுப்பு அந்தத் தியாகம்?. அந்த மனோநிலையை அந்த மனிதர் எவ்விடத்தில் கண்டடைந்தார்?" இந்தக் கேள்விகள் என்னை அமைதியிழக்கச் செய்தன.

அன்றைய நாளின் அந்த இரவுதான் என்னை இந்த இடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தது. நான் பிறந்து வளர்ந்த இந்தச் சமூகத்தின் மீதிருக்கும் பொறுப்பை நான் துரும்பளவாவது ஏற்றுக்கொள்ளும் மனோநிலையை அந்த இரவுதான் எனக்குத் தந்திருப்பதாக நம்புகிறேன்.

ஒரு சுனை கிணறாகிறது



கே: அதன் பிறகு?
ப: அன்றிலிருந்து சில நாட்களிலேயே 'குக்கூ' நிலம் வந்து சேர்ந்தேன். ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் குழந்தைகளுக்கான வெளி அந்நிலம். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் களப்பணி ஆற்றுவதற்காக அக்டோபர் - 2 காந்தி ஜெயந்தி தினத்தன்று இளைஞர்கள் அங்கே வந்து சேர்ந்திருந்தார்கள். அருட்தந்தை காட்சன் சாமுவேல் பனைமரம் சார்ந்த தனது பயணத்தையும் பனை மரங்களை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தைக் குறித்தும் அந்த இளைஞர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அன்று மாலை குக்கூ சிவராஜ் அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தேன். "மஞ்சரி, எதையோ உங்கள் மனம் தேடுகிறது என்பது எனக்குத் தெரிகிறது. இங்கே பக்கத்தில் சின்னச்சின்னதாய் கிராமங்கள் நிறைய இருக்கின்றன. தினமும் நடந்தோ சைக்கிளிலோ கிளம்பி ஒவ்வொரு ஊராகச் சென்று பாருங்கள். மக்களைச் சந்தியுங்கள். குழந்தைகளிடம் பேசுங்கள். அவர்களின் வாழ்வு ஏதோவொரு வகையில் உங்களை வேறொன்றாக மாற்றும்" என்றார்.

கிணற்று நீர் குடிநீர் ஆகிறது



பதினைந்து நாட்களும் நாள் தவறாமல் ஒவ்வொரு கிராமமாகச் சென்றேன். அங்குள்ள பள்ளிகளுக்குப் போனேன். பிள்ளைகளைச் சந்தித்தேன். மக்களிடம் பேசினேன். ஆனால் ஒரு விஷயம் எனக்குப் பெரும் நெருடலாக இருந்தது. அந்தக் கிராமங்களில் குடிக்கப் போதிய தண்ணீர் இல்லவே இல்லை. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவிக் கொண்டிருந்தது. வெட்டப்பட்ட கிணறுகள் அத்தனையும் எதனாலோ தூர்ந்து மண்மூடிக் கிடந்தன. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் அங்கே சொற்ப அளவிலான தண்ணீரும் தீண்டாமைக்கான குறியீடாய் நிலைத்துப்போய் இருப்பது நிகழுலகின் மீதான பெரும் அச்சத்தை எனக்குள் உண்டாக்கியது.

கிராமத்தில் சண்டைகளும் சச்சரவுகளும் பிளவுகளும் உண்டாகும் போதெல்லாம் முதலில் அங்கிருக்கும் பொதுக்கிணறுகள்தான் பாழ்படுத்தப்படுகின்றன. பழிவாங்கும் நோக்கத்தில் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட பன்றியை வெட்டிக் கிணறுகளில் போட்டு விடுவார்கள். அம்மாதிரியான சம்பவங்களுக்குப் பிற்பாடு அந்தப் பழங்கிணறு தீட்டுப்பட்ட ஒன்றெனப் பயன்பாடற்றுப் பாழடைந்து தூர்ந்து மண்மூடிப் போகிறது. அப்படியான ஏராளமான கிணறுகளைச் சுற்றுவட்டாரத்தில் பார்க்க முடிந்தது. பஞ்சாயத்துத் தேர்தலில் தனக்கு வாக்களிக்காத காலனி மக்கள் வாழும் பகுதியில் இருக்கும் குடிநீர்த் தேக்கத் தொட்டியின் தூண்களை உடைத்துச் சாய்க்கிறார்கள். எனக்கு இதெல்லாம் மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அந்தத் தருணங்களில் எல்லாம் கங்கையின் கரையில் உயிரை நீத்த அந்த மனிதரை நினைத்துக் கொண்டேன்.

மகிழ்ச்சி வெள்ளமும் கிணற்று வெள்ளமும்



கே: ஊர்க்கிணறு புனரமைப்புத் திட்டத்துக்கான விதை உங்களுக்குள் விழுந்தது எப்போது, எப்படி?
ப: காந்தி நினைத்திருந்தால் ஒரு தேசத்தை ஆளும் ஜகத்குருவாகவோ அல்லது ஒட்டுமொத்த மக்களுக்கும் தன்னை ஒரு கடவுளாகவோ நிச்சயமாகக் காட்டியிருக்க முடியும். ஆனால், தன் இறுதிப் பிரார்த்தனை முடித்து அவர் இறந்து போகும்வரை சாதாரண மக்களுடன் ஒரு மனிதனாக, அவர்களுடன் வேலைகளைச் செய்து அந்த மக்களுக்காகவே வாழ்ந்து தன்னை பலியிட்டுக் கொண்டார். "எந்த நெருக்கடியான சூழலை இலகுவாக்க நாம் உழைக்கிறோமோ அந்த மக்களே நம்மைச் சந்தேகிப்பதும் புறக்கணிப்பதும் நிகழும் என்பது தவிர்க்கவே இயலாத ஒன்று. அவர்களுக்காகத்தான் அந்த அந்த வேலைகள் செய்யப்படுகின்றன என்பதைக்கூட உணர இயலாத அறியாமையில் தான் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களுக்காகத் தான் நாம் இவற்றையெல்லாம் செய்தாகவேண்டும் மஞ்சரி." என்று சிவராஜ் அண்ணா அடிக்கடி சொல்வார்.

எழுத்தாளர் சித்ரா பாலசுப்ரமணியம் அவர்கள் எழுதிய 'மண்ணில் உப்பானவர்கள்', பாலசுப்ரமணியம் முத்துசாமி அண்ணன் எழுதிய 'இன்றைய காந்திகள்' இவைதான் காந்தி குறித்து நான் வாசித்த முதலிரண்டு நூல்கள். அதன் பிறகு இந்நாள்வரை காந்தியை வாசிக்காத, எண்ணிப் பார்க்காத நாட்கள் மிகக்குறைவு.

இந்த நவீன காலகட்டத்தில் இவ்வளவு கல்வியறிவும் தொழில்நுட்பங்களும் வளர்ச்சி அடைந்த பிறகும் கூட, சிறு கூட்டமாக மனிதர்களை ஒருங்கிணைப்பதில் இருக்கக்கூடிய சிக்கல்களை நான் சந்திக்கிறேன். ஆனால் நெடுங்காலம் முன்னர் லட்சக்கணக்கான பாமர மக்களை தேசம் முழுவதிலிருந்தும் ஒரு மனிதர் எப்படித் தன் சொல்லால் திரட்டி தேசத்தின் கனவை நிறைவேற்றியிருப்பார்? அவ்வளவு பெருந்திரளை ஒருங்கிணைத்திருக்கிறது என்றால் அந்த மனிதரின் சத்திய வார்த்தைகளின் வல்லமையை என்னவென்று சொல்வது?.

யோகி நிகமானந்தா



காந்தியின் வாழ்வை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வதும் 'நவகாளி யாத்திரை', எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் காந்தியம் குறித்தான கட்டுரைகள் என வாசிப்பதும் லட்சுமண அய்யர், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், 'மரம் தாத்தா' நாகராஜன் மாதிரியான காந்திய மனிதர்களின் கதைகளைத் தொடர்ந்து குக்கூ நிலத்தில் கேட்டு வந்ததும் எனக்குள் உண்டாக்கிய மாற்றங்கள் பல.

சமூகம் நோக்கி உள்நகர்வதும் அங்கே இயன்றதைச் செய்வதும் தருவதுபோலத் திருப்தி அளிப்பவையாக வேறெதையும் இப்போது நினைக்கவே முடியவில்லை. "எந்த நிலையிலும் நமக்கு அருளப்பட்ட இந்த வாழ்வு அர்த்தமற்றுப் போய்விடக்கூடாது. இந்த வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஆசீர்வதிக்கப்பட்டவை. வீணாகும் நாளென ஒரு நாள் இந்த வாழ்வில் இருக்கக் கூடாது" என்று சிவராஜ் அண்ணாவும், "மனிதனின் எந்தப் படைப்பும் அவன் மாற்றியமைக்கும் எதுவொன்றும் இந்த உலகுக்கும் அதன் வாழுயிர்களுக்கும் எவ்வித இடையூறும் இல்லாதபடிக்கு இருக்க வேண்டும். நம் வேலை இந்தச் சமநிலையைக் குலைக்காமல் இருப்பதுதான்" என்று பீட்டர் அண்ணனும் சொன்ன வார்த்தைகளை நான் வாழ்வின் பாடமாகவே எடுத்துக் கொள்கிறேன். "செயல்வழி ஞானம்" என்ற மகா வாக்கியத்தின் அர்த்தத்தை பீட்டர் அண்ணனுடன் பயணித்த காலங்களின் உடனிருந்து உணர முடிந்தது. நான் கண்டடைந்த ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் பீட்டர் அண்ணா.

காகா கலேல்கர் எழுதிய 'ஜீவன்லீலா' புத்தகமும் அனுபம் மிஸ்ராவின் 'The ponds are still relevant' நூலும் பின்னாளில் நீர் சார்ந்து எனக்கு மனத்தெளிவை உண்டுபண்ணியவை என்று சொல்லலாம்.

"பெரியசாமி வந்துட்டுப் போச்சு!"
நான் கல்வி கற்ற கல்லூரி முதல்வர் தமிழ்வாணன் மற்றும் சூழலியல் குறித்த தெளிவுகளை அளித்த ஆசிரியர் ரங்கநாதன் இருவரும் வாழ்வில் எனக்கு மிக முக்கியமானவர்கள். இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் இருவருடனும் அவ்வப்போது பேசி எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். சமீபத்தில் ஆசிரியர் ரங்கநாதன் அவர்களுடன் பேசினேன். சமீபத்தில் புனரமைத்த முடித்த அக்னிபாவி கிணறு குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

அக்னிபாவி மலைமுகட்டில் இருக்கும் சிறு பள்ளம்தான், சுற்றிலும் உள்ள மக்களுக்கான நீராதாரம். எல்லோரும் அங்கே நடந்து வந்து தண்ணீர் எடுத்துப் போவார்கள். காடு வறண்டு போகும் காலத்திலும் அந்தப் பள்ளம் தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டே இருக்கும். நீர் சுண்டிப் போகும் கோடை காலங்களில் யானைகளும் பிற மிருகங்களும் கூட அந்தப் பள்ளத்தில் நீரருந்த வருவதாக அங்குள்ள மக்கள் சொல்லி இருந்தார்கள். அந்தப் பள்ளம் அவ்வளவு உயிர்த்தன்மை கொண்டது. அந்தப் பள்ளத்தை ஆழப்படுத்தி சீரமைத்துத் தரும் பணிகளை அங்கேயே தங்கி முடித்துக் கொடுத்தோம். எல்லா வேலைகளும் நிறைவடைந்து கிணற்றை மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வுக்கான நாளும் வந்தது. நிகழ்வுக்காகக் காலை கிணற்றடிக்கு வந்தபோது ஏற்கனவே அங்கு வந்து கூடியிருந்தவர்கள் "பெரியசாமி ராத்திரி தண்ணீ குடிக்க இங்க வந்துட்டுபோச்சும்மா. நாங்க பாத்தோம். கால்தடம் கூட அப்டியே கிடக்குது பாருங்க." என்று சொன்னார்கள். இவற்றையெல்லாம் ஆசிரியரிடம் பகிர்ந்துகொண்டேன். "கல்லூரிக் காலங்களில் நீங்கள் எடுத்த சூழலியல் பாடங்களும் காடுகளில் நாம் செய்யும் வேலை வனவிலங்குகளையும் கருத்தில் வைத்து முன்னெடுப்பதாகவே இருக்க வேண்டும் என நீங்கள் சொன்னதும் நினைவிற்கு வந்தது சார்" என்றேன்.

அதற்உ அவர், "யானை மிகுந்த உணர்திறன்மிக்க ஜீவன். அது தன் பாதத்தை மண்ணோடு சேர்த்து அழுத்தி நடக்கும் போதே அந்த நிலத்தோடு தொடர்புடைய எல்லா அதிர்வுகளையும் அறிந்துகொண்டுவிடும். நீங்கள் கிணற்றை ஆழப்படுத்தி புதிய சுனையைக் கீறி இருக்கிறீர்கள். நீர்ச்சுனை திறந்ததை அதே காட்டில் வாழும் யானை நிச்சயம் அறிந்திருக்கும். அதனால்தான் கிணற்றடிக்கு அந்த யானை வந்து தண்ணீர் குடித்துப் போயிருக்கிறது." என்று ஆச்சரியம் பொங்கப் பேசினார். அவர் பேசப்பேச எனக்கு உடல் சிலிர்த்தது.
- மதுமஞ்சரி


கே: உங்கள் முதல் ஊர்க்கிணறு புனரமைப்புத் திட்டம் பற்றிச் சொல்லுங்கள்..
ப: நீராதாரம் இழந்துபோன திருவண்ணாமலை அருகிலுள்ள துருவம் காலனியில் இருந்த மண்மூடிய கிணற்றைப் புனரமைத்துத் தரும் பணியைத்தான் நான் முதன்முதலில் தொடங்கினேன். எனக்கு முன்பாக ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கத்தின் மூலம் கிருஷ்ணமூர்த்தி அண்ணன் ஆடையூர் கிராமக் கிணற்றைப் புனரமைத்துத் தந்திருந்தார். திருவண்ணாமலை துருவம் காலனி கிணற்றுக்குப் பிறகு இதுவரையிலும் பதினைந்து கிணறுகளைத் தூர்வாரிப் புனரமைத்துத் தந்துள்ளோம். ஒவ்வொரு கிணறு புனரமைப்பின் போதும் புதிய புதிய அனுபவங்களும் புதிய மனிதர்களும் கிடைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு கிணறும் கசடுகள் அகன்று ஊற்றுக்கண் திறந்த கணங்கள்தான், என் வாழ்வின் நிறைந்த கணங்கள் என்று நான் நினைக்கிறேன்.

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்



கே: களப்பணிகளின் போது நீங்கள் எதிர்கொண்ட சவாலான விஷயங்கள்பற்றிச் சொல்லுங்கள்
ப: சில மாதங்களுக்கு முன்பு ஈரோட்டிற்கு அருகில் உள்ள அவல் பூந்துறை எனும் கிராமத்திற்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு தலித் காலனியில் உள்ள கிணற்றினைப் புனரமைக்க முடிவு செய்து வேலைகளைத் திட்டமிட்டோம். அப்போது எனக்குத் தெரியாது அதுவரை செய்த வேலைகள் எல்லாவற்றையும் விடக் கடும் நெருக்கடிகளையும் கற்றலையும் இந்த கிணறு தரப்போகிறது என்று.

கிணறு புனரமைப்புக்கான தொகையைத் திரட்டுவது ஒரு பக்கத்தில் சிரமமாக இருந்த போதிலும், அதைவிட மிகுந்த சிரமம் தந்தது அந்த ஊரைச் சுற்றியுள்ள மக்களின் அணுகுமுறை. வழக்கமான கூலித்தொகையை விட அதிகம் தருகிறோம் என்று போதிலும் அங்கு வந்து வேலை செய்வதற்கு மறுத்தார்கள்.

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளில் உள்ள சாதிப் பாகுபாட்டிற்கும் இங்கு உள்ள பாகுபாட்டிற்கும் உள்ள வித்தியாசம் இரவு பகல் போல. எங்கெங்கோ இருந்து நண்பர்கள் சிறுகச் சிறுக தொகையை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த வேலையை அவ்வளவு எளிதாகத் தொடங்க இயலவில்லை.

அந்தக் காலனியைச் சுற்றியுள்ள வெவ்வேறு மட்டங்களில் இருந்து வெவ்வேறு குரல்கள். அனைத்துமே எதிர்மறைக் குரல்கள்‌. வேணு அண்ணன், சந்திரமோகன் ஐயா ஆகியோரின் கடுமையான முயற்சிக்குப் பிறகு வேலைகளைத் தொடங்கினோம். அந்த காலனியின் இளைஞர்கள் காலை வேலைக்குச் சென்றுவிட்டு இரவுகளில் உடன் நின்று தொண்டாற்றினர்.

ஒரு விஷயம் சொல்வதற்கு மிகவும் கசப்பாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது ஆனால் சொல்லித்தான் ஆக வேண்டும். கிணறு வேலை கால் பங்கு முடிந்த நிலையில் அந்த ஊரின் முக்கியப் பிரமுகர் கிணற்றைப் பார்வையிட்டுவிட்டு, என்னைக் குறித்த தகவல்களை தொழில், குல தெய்வம் என ஏதேதோ தகவல்களைக் கேட்டுக்கொண்டிருந்தார். பின்பு ஒரு 500 ரூபாயை என் கையில் தந்த பின் அவர் பேசிய வார்த்தைகள் என்னை சுக்குநூறாய் உடைத்துப் போட்டது. "கண்ணு நீ செய்யற வேல ரொம்பப் பெருசு. ஆனா இவனுங்க எல்லாம் அரசாங்க வேலை வாங்கிட்டு வசதியாதான் இருக்கானுங்க. ஞாயித்துக்கிழம தவறாம மாடு அடிச்சி சாப்பிடறவங்க கண்ணு. வேற எங்காவது கஷ்டப்படுற மக்களுக்குப் போயி வேல செய்யு கண்ணு. இந்தக் கிணறை இவனுக ஒழுங்காப் பயன்படுத்த மாட்டாங்க கண்ணு" இப்படி அடுத்தடுத்து அவர் பேசிய வார்த்தைகளைப் பொதுவெளியில் எழுத முடியாது. அவர் ஒருவர் அல்ல. அந்த ஊரின் டீக்கடை தொடங்கிப் பலரது வார்த்தைகள் அதுதான்.

மதுமஞ்சரியும் நண்பர்களும்



ஆனால் அந்த ஒட்டுமொத்த அவல் பூந்துறையின் கழிவுகளைச் சுமக்கும், தூய்மை செய்யும் மனிதர்கள் வாழும் குடியிருப்பு அது. அவர் சொன்ன கவர்மெண்ட் வேலை என்பது அதுதான்.

அந்த மனிதர் பேசியது ஒரு நடுக்கத்தை, கோபத்தை, அழுகையை வரவழைத்தது. தாங்க இயலாமல் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அம்மாவை அழைத்துப் பேசியபோது, "மஞ்சரி பக்கத்தில் உள்ள எல்லா அருந்ததியர் குடியிருப்புகளுக்கும் சென்று பார். குழந்தைகள் பள்ளி செல்லும் நேரத்தில் அங்கு நின்று கவனி. அங்குள்ள வயோதிகர்களிடம் எந்தவிதத் தயக்கமும் இன்றிப் பேசு மஞ்சரி" என்றார். ஏன் சொன்னார் எனத் தெரியவில்லை. ஆனால் அதைப்பற்றி எல்லாம் யோசிக்காமல் அலைந்து திரிந்தேன். வெய்யிலின் கடுமை ஒருபக்கம் இருக்க, அங்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அதிர்ச்சியைச் சந்தித்துக் கொண்டே இருந்தேன்.

ஈரோடு எராளமான கல்வி நிறுவனங்களாலும் மிகப்பெரிய தொழிற்சாலைகளாலும் நிரம்பி வழிகிறது. ஆனால் இங்கு நான் உணர்ந்த சாதித் தீண்டாமையை வேறு எங்கும் கண்டதில்லை. என்னுடன் வந்த அண்ணனுக்கு பேப்பர் டம்ளரில் டீயும் எனக்குக் கண்ணாடி டம்ளரில் டீயும் தந்தார்கள். அவர்களிடம் கேள்வி கேட்டபோது அந்த அண்ணனை ஒருமையில் திட்டுகிறார்கள். எதுவும் பேசமுடியாமல் அந்த அண்ணன் என்னையும் அமைதிப்படுத்தினார். இந்த ஊர்களில், சாதி என்பது அத்தனை அழுத்தமாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகளாய் இந்த மக்கள் இந்த அவலத்தில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை நினைக்கும் போதெல்லாம் மனம் பொங்கியது.

எழுபது வயதிற்கும் மேற்பட்ட பெரியவரைக்கூட அந்த ஊரின் சிறுவன் ஒருமையில்தான் பேசுகிறான். ஆனால் அந்தப் பெரியவர் 'எசமான்' என்று சாதியைக் குறிப்பிட்டு அத்தனை மரியாதையாய்ப் பேசுகிறார்‌. இப்படி அடுத்தடுத்து நிகழ்ந்தபடியே இருந்தன. சாதி, நவீனத் தீண்டாமை, அவர்கள் நடத்தப்படும் விதம் எல்லாம் என்னைத் தூங்கவிடவில்லை. ஒரு சுடரை ஏற்றிவிட்டு அன்றைய இரவில் அழுதுகொண்டே இருந்தேன்.

இதன் விளைவாக முகநூல் பதிவொன்றை எழுதினேன். அதைத் தொடர்ந்து பெயர் சொல்லாத பல அழைப்புகள், அநாகரிக வார்த்தைகளால் மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்தன. ஏராளமான எதிர்ப்புகள், வசவுகள் மாறி மாறி என்னை நோக்கி எறியப்பட்டன. அந்தக் காலகட்டத்தில் மனம் கொண்ட அச்சமும் நடுக்கமும் பயங்கரமானது. நிகழ்ந்துகொண்டிருக்கும் உண்மையைப் பொதுவெளிக்கு எழுத இவ்வளவு நெருக்கடிகள் வரும் என்ற நடைமுறை உலக உண்மை தெரியவரும்போது மனம் அடைந்த துணுக்குறலுக்கு அளவேயில்லை.

கமலஹாசனுடன் மதுமஞ்சரி, நண்பர்கள்



கே: தீராக் கொடுமைதான். பின்னர் என்ன செய்தீர்கள்?
ப: இந்த எதிர்ப்புகள் எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கத்தில் இருந்து நம்பிக்கை தரும் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன. அந்தச் சமயத்தில்தான் கமலஹாசன் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. அவருடனான சந்திப்பு, செய்து கொண்டிருக்கும் செயலின் மீதான பிடிப்பை இன்னும் இறுகப் பிடித்துக் கொள்ளச் செய்தது. அவரே முன்வந்து ஒரு கிணற்றுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாகச் சொன்னார்.

ஒரு வைராக்கியம் வந்தது. இந்த மக்களின் வாழ்வில் ஒரு சிறு நம்பிக்கையை உருவாக்கியே தீர வேண்டும். அவர்களுக்குச் செய்த அத்தனை அநீதிகளுக்கும் பாவங்களுக்கும் பதிலாக இந்த வாழ்வு அமைய வேண்டும் என நினைத்துக்கொண்டேன். அதன்பின் அதுவரை இல்லாத தீவிரத்தில் நண்பர்கள் இணைந்து வேலை செய்தோம். கிணற்றுப் பணி முழுமை அடைந்தது. பல மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் வாழ்வைக் காக்கத் தன் வாழ்வை அளித்த லூர்து மேரி அம்மா, எல்லோர்க்கும் அம்மாவான கண்ணம்மா ஆகியோர் கிணற்று நீரை மக்களுக்கு அர்ப்பணித்தனர். வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த நண்பர்கள், கொடையாளர்கள், ஊர் மக்கள் எல்லோரும் ஒரு விதத்தில் நிம்மதி அடைந்தோம்.

இன்று அந்த உழைக்கும் மக்கள் துணி துவைப்பதற்கும், மாலையில் அமர்ந்து ஊர்க்கதை பேசுவதற்கும், வருடத்திற்கு ஒருமுறை தமது குல சாமிக்குத் தீர்த்தம் படைப்பதற்கும் அந்தக் கிணறுகள் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கைவிடப்பட்ட ஊர்க்கிணறு | தூர்வாரப் படுகிறது



கே: மலைக்கிராமங்கள் என்றாலே நீர்ச்சுனைகளும் பசுமை வெளியும்தான் நினைவுக்கு வரும். அங்கே தண்ணீர்த் தட்டுப்பாட்டிற்குக் காரணம் என்ன, அங்கே கிணறுகளுக்கான அவசியம், தேவை என்னவாக இருக்கிறது?
ப: முதலில் மழை பொழியும் இடங்களாகவும் விரைந்து ஈரம் சுண்டி வறண்டு போகும் நிலங்களாகவும் மலை கிராமங்களின் நிலவமைவு இருக்கின்றது. சமவெளிகளைக் காட்டிலும் மலை கிராமங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதைப் பார்க்கிறேன். வெகுசாதாரணமாக மூன்று, நான்கு கிலோமீட்டர் தூரம் மேடு பள்ளங்கள் தாண்டி குறைந்த அளவு நீரைக் கருணையோடு சுரந்து கொண்டிருக்கும் பள்ளங்களை நம்பியே அவர்களின் அன்றாடம் இருக்கிறது. அந்தச் சூழலுக்குப் பதிலீடாக அரசின் சார்பில் ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தண்ணீர் வரும்-வராது என்ற பொருளெல்லாம் தாண்டி, வெறுமனே அரசாணைகளின் அடிப்படையில் தோண்டப்பட்ட ஏராளமான ஆழ்துளைக் கிணறுகளைப் பல மலைப்பகுதிகளில் பார்த்தேன். உதாரணமாக, அந்தியூர் மலையில் அமைந்துள்ள சோளகனை எனும் மலைக்கிராமத்தில் மட்டும் பதினைந்துக்கும் அதிகமான ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டு பயனற்றுக் கிடக்கின்றன. நீரே வராத அந்த ஆழ்துளைக் கிணறுகளுக்கு உபதேவையாக லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட காலித் தண்ணீர் தொட்டிகள் அந்த மலைக்கிராமங்களில் பூதங்கள் போலப் பயனற்று நிற்கின்றன.

இம்மாதிரியான சூழலில் அந்த நில அமைவுகளுக்கு உகந்தது போன்று பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட கிணறுகளை மீட்டெடுப்பது மிக அவசியமான ஒன்று.

இதுவரையிலும் இரண்டு கிணறுகளை சோளகனை கிராம மக்களுக்காகப் புனரமைத்துத் தந்திருக்கிறோம். மூன்றாவதாக ஒரு கிணறு சார்ந்த திட்டமும் உள்ளது. அந்தக் கிணறு தயாரானால் ஒட்டுமொத்த ஊருக்கான தண்ணீர்த் தட்டுப்பாடும் குறையும். இதுவரையிலும் இல்லாத அளவு சவாலான காரியமாக அந்தப் பணி இருக்கும். மழைக்காலங்களில் மலையின் உச்சியில் இருந்து திரண்டு வரும் நீர் காட்டாற்று வெள்ளமாகப் புரண்டு ஓடும் வழித்தடத்தில் கிணறு ஒன்றைப் புதிதாகவே வெட்டப்போகிறோம். அந்த இடத்தில் ஊறும் ஊற்று வற்றாத ஜீவ ஊற்று என்று அவர்களின் முன்னோர்கள் சொன்னதாக நம்புகிறார்கள்.

புதிதாகக் கிணறு தோண்டுவதோடு அல்லாமல், சீறிவரும் காட்டாறு, பெரும்பாறைகளைப் புரட்டிக்கொண்டு வந்து கிணற்றில் போடாதபடிக்கு வடிவமைப்புச் செய்ய வேண்டும். அந்த நீரைப் பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு ஏற்றி மக்களின் சிரமத்தை இலகுவாக்கும் யோசனையும் உள்ளது. இந்தச் செயல்கனவு நிறைவேறும் பட்சத்தில் முழு கிராமத்திற்கும் தேவையான நீராதாரத்தை உறுதிபடுத்தியதன் சாட்சியாக அச்செயல் எஞ்சி நிற்கும். அத்தோடு அரசுக்கு எடுத்துக் கொண்டுபோகும் முன்மாதிரி வடிவமாகவும் அந்தப் பணி இருக்கும் என நம்புகிறோம்.

யாரிடமும் சொல்ல வேண்டாம்!
மலைக்கிராமங்களில் இந்தக் கிணறு புனரமைப்புப் பணி நிகழ்கிறது என்றால், முழுக்க நண்பர்களின் சிறுசிறு பங்களிப்புகளின் மூலமாகத்தான். இங்கே சாத்தியமாகிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு செயலின் பின்னும் அவ்வளவு மனிதர்கள் நிறைந்திருக்கிறார்கள். எவ்வளவோ மனிதர்களின் உயிரும் உழைப்பும் இந்தச் செயலில் நிறைந்திருக்கிறது. சோளகனையில் பணிகளைத் தொடங்கும் முன்னர், அந்தப் பணிகள் குறித்து முகநூலில் ஒரு பதிவிட்டோம். உடனடியாகவே வெவ்வேறு இடங்களில் இருந்தும் சின்னச் சின்னதாக உதவிகள் வந்துகொண்டே இருந்தன. அந்தச் சமயத்தில் ஒரு நபர் தொடர்ந்து தொகை அனுப்பிக்கொண்டே இருந்தார். பணிகள் தொடங்கி நிறைவாகும் சமயத்தில் அந்தக் கிணற்றுக்கு ஆகும் முழுச் செலவையும் தானே பொறுப்பேற்றுக் கொள்வதாக சொல்லிச் செய்தி அனுப்பி இருந்தார்.

கிணறு புனரமைக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வன்று காலையில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினோம்:

"உங்கள் தந்தையின் நினைவை முன்னிட்டு இந்தக் கிணற்றின் செலவினங்களை நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டீர்கள். உங்கள் தந்தையின் புகைப்படம் இருக்குமென்றால் அனுப்பி உதவுங்கள். அவரது முகத்தை இங்குள்ள மக்களிடமும் குழந்தைகளிடமும் காட்டிவிட்டு அந்தக் கிணற்றடியில் சிறு பிரார்த்தனையும் வைக்கிறோம்."

முதலில் மறுத்தவர், கடைசியாகப் பெரும் தயக்கத்துடனும் வெளியில் யாரிடமும் சொல்லிவிட வேண்டாம் என்ற ஒற்றை வேண்டுகோளுடனும் தன் தந்தையின் புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பி வைத்தார். அவர் அனுப்பி வைத்த படத்தில் இருந்த மனிதரின் முகம் அறியப்படாத முகமல்ல. தமிழ்ச்சூழலில் பெரும்பான்மையானோருக்கு மிகவும் பரிச்சயமான முகம். ஆம். எத்தனையோ பேரால் ஆசிரியராக ஏற்றுக்கொள்ளப்பட்ட மாபெரும் எழுத்தாளுமை அசோகமித்திரனின் படம்தான் அது. படம் வந்து சேர்ந்த நேரத்தையும், அந்தப் படத்தில் இருந்த அமர ஆத்ம மனிதரை அடையாளம் கண்டு மனம் பொங்கி அழுத கணத்தையும் இப்போதும் நினைத்துக் கொள்கிறேன்.

மறுநாள் கிணறு ஒப்படைப்பு நிகழ்வின்போது எழுத்தாளர் அசோகமித்திரனின் படத்தைக் கிணற்றடியில் வைத்து அந்த நிகழ்வை மனமுருகிய பிரார்த்தனையோடு நடத்தி முடித்தோம். அவர் எழுதிய புத்தகங்களை அங்குள்ள பிள்ளைகளுக்குப் படிக்கச் சொல்லிப் பரிசளித்தோம்.
- மதுமஞ்சரி


கே: உங்கள் பணிகளின் போது நடந்த மறக்க முடியாத சம்பவங்கள் பற்றிச் சொல்லுங்கள்...
ப: சோளகனை மலைகிராமத்தில் இரண்டாவதாக ஒரு கிணறுப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்திருந்தோம். அந்தச் சமயத்தில் சென்னையில் இருந்து அறுபதுக்கும் மேற்பட்ட வயதுடைய தம்பதியினர் அங்கே வந்து சேர்ந்தனர். அவர்கள் பெயர் மீனாட்சி - ரவீந்திரன். வாழ்நாளில் தவிர்க்கவோ, மறக்கவோ முடியாத பேருன்னத அனுபவங்களை அளிக்கப் போகிறவார்களாக, நினைத்தாலே கண்ணீர் இல்லாமல் நினைக்க இயலாத மனிதர்களாக மாறிப் போவார்கள் என்று முதலில் அவர்களைச் சந்தித்தபோது தவறியும் நினைத்திருக்கவில்லை. கிணறு புனரமைப்புக் குறித்துக் கேள்விப்பட்டுக் கிளம்பி வந்து எங்களுடனேயே தங்கி இருந்தார்கள். எல்லா நாட்களும் களப்பணியாற்றினார்கள். அந்தக் கிணறு முழுமை அடைவது வரையிலும் தங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்தார்கள். இன்றைக்கு எனக்கு இன்னொரு தாய் தந்தை போல எல்லாச் சூழலிலும் அவர்கள் உடனிருக்கிறார்கள். என்னைப்போல இன்னும் எவ்வளவோ பேருக்கு அவர்கள் அப்படி இருக்கிறார்கள்.

இம்மாதிரியான மனிதர்களும் அவர்கள் உடன் இருந்து தரும் உந்துதலும் எல்லாச் சலிப்புகளையும் சோர்வுகளையும் தாண்டி மனம் நொடிந்து போகாமல் ஓடிக்கொண்டிருக்கக் காரணமாக இருந்து கொண்டிருக்கிறது.

மதுமஞ்சரி, ரவீந்திரன், மீனாட்சி



கே: உங்கள் குடும்பம் பற்றி, அவர்களின் உறுதுணை பற்றி...
ப: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி நான் பிறந்து வளர்ந்த ஊர். அப்பா செல்வராஜ். இளங்கலை பொருளியல் பட்டதாரி. அம்மா புனிதவதி. அக்கா பிரியதர்ஷினி. அண்ணன் திலகராஜன். அப்பா, அம்மா, உடன்பிறந்தோர், அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, அவர்கள் பிள்ளைகள் என பெரிய கூட்டுக் குடும்பச் சூழலில் வளர்ந்தேன். புகழ் பெற்ற சின்னாளப்பட்டி சுங்குடிச் சேலை நெசவும் விற்பனையும் பலகாலமாக குடும்பத் தொழிலாக இருந்து வருகிறது. என் குடும்பத்தில் இன்னொரு முக்கியமான நபர் சரவணன் அண்ணன். உடன்பிறக்காத போதிலும் நான் பிறந்தது முதல் எங்கள் அண்ணனாக எங்களுடன் இருக்கிறார். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அப்பாவின் தொழிலிலும் எங்கள் குடும்பத்திற்கும் பெரும் உறுதுணையாக எல்லா நிலைகளிலும் இருக்கிறார்.

அப்பா, என் சிறுவயது முதலே எல்லா நிலைகளிலும் எனக்கான சுதந்திரத்தை அளித்தவர். நேருவின் புத்தகங்களை அப்பா வீட்டில் வைத்திருந்தார். நேருவை அப்பாவின் மூலம்தான் நாங்கள் வாசித்து அறிந்தோம். அப்பாவிடம் எப்போதுமே பயத்தைப் புகுத்தாத அளவு கண்டிப்பு இருக்கும். பள்ளிப் பாடங்களைத் தாண்டிப் பிற விஷயங்களில் எங்களுக்கு ஈடுபாடு இருந்தது என்றால் அதற்கு அப்பாதான் காரணம்.

குடும்பம் மற்றும் குடும்ப நலனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அம்மாக்களில் ஒருவர்தான் என் அம்மா. பக்திமீது மிகுந்த நாட்டம் கொண்டவர். உடல்நலம் குன்றிப் படுத்த படுக்கையாக இருந்த பாட்டியின் அருகிலேயே இருந்து அவருக்கான எல்லாப் பணிவிடைகளையும் செய்தவர். பாட்டியின் இறுதி மூச்சுவரை அம்மாதான் பார்த்துக் கொண்டார். அந்தக் காலங்களில் அவரது முகத்தில் சலனமே இல்லாத பேரமைதி குடிகொண்டிருந்தது. அம்மாவின் அந்தச் சித்திரம் எனக்குள் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது.

இவர்கள் எல்லாருமே எனது பணிகளுக்கு ஆதரவாய், உத்வேகமாய், உறுதுணையாய் இருக்கிறார்கள்.

ஒரே ஒரு குடம் தண்ணீருக்காக...



கே: எதிர்காலத் திட்டங்கள் பற்றி...
ப: இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் இருக்கும் கிணறுகள் குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். அது குறித்த வரைபடங்கள், செயல்திட்டத் தொழில் முறைகள், நிலத்துக்கு நிலம் மாறுபடும் நீரின் தன்மை என எல்லாவற்றையும் இயன்றவரை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

இந்த ஊர்க்கிணறு புனரமைப்பு இயக்கம் மீட்டெடுக்கும் ஒவ்வொரு கிணற்றின் பின்னாலிருப்பதும் மஞ்சரி எனும் தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல. பல கைகளின் பற்றுதலோடுதான் வரலாற்றின் பெருங்காரியங்கள் இன்றுவரை நடந்தேறி இருக்கின்றன. இந்தக் கிணறுகளை மீட்டெடுக்கும் பணிகளையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். இவற்றுக்குப் பின்னால் இந்தச் செயலை நம்பும் எத்தனையோ மனங்களின் உழைப்பு இருக்கிறது. இன்னும் இன்னும் முகம் தெரியாத எத்தனையோ மனிதர்களின் கூட்டு, நல்லதிர்வுதான், எடுக்கும் எல்லாக் கிணற்றிலும் நன்னீராய்ச் சுரந்து கொண்டிருக்கிறது.

கிணறுகளை பூமியின் காதுகள் என்று நம்பும் தொன்மம் ஒன்று ஜப்பானில் இருக்கிறது. மக்கள் தங்களுடைய வேண்டுதல்களை கிணறுகளிடம் சொல்லி வைக்கிறார்கள். அந்த வேண்டுதல்கள் நிறைவேறும் என்னும் பெரும் நம்பிக்கை அந்நாட்டு மக்களிடம் இருக்கிறது. நம்முடைய அம்மா, அப்பா என நம் அனைவரின் பால்யத்தின் நினைவுகளில் கிணற்றுக்கு நீங்காத இடம் இருந்து வருகிறது. கிணறு மீதான நம்பிக்கைகளை, தொன்மங்களை, நினைவுகளைச் சிதைத்துவிடாதபடிக்கு உறுத்தல்கள் இல்லாமல் அவற்றை மீட்டெடுக்க வேண்டும். சுனையில் சுரக்கும் ஒவ்வொரு துளி நீரும் பூமியின் தாய்ப்பால்தான். நீரை வணங்குவதை நேரடியாய்த் தெய்வத்தை வணங்குவதாகவே நான் கருதுகிறேன்.

'நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு'

ஊர்க்கிணறு புனரமைப்பு - இணைப்புகள்
ஃபேஸ்புக் | இன்ஸ்டாகிராம் | காணொளிகள்
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
Share: 




© Copyright 2020 Tamilonline