Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | வாசகர்கடிதம் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
சித்த மருத்துவர் பாஸ்கரன்
- அரவிந்த் சுவாமிநாதன்|நவம்பர் 2023|
Share:
பழநி மலையில் நவபாஷாண முருகன் சிலையைப் பிரதிஷ்டை செய்தவர் சித்தர் போகர். அவரது குரு புற்றுமகரிஷி எனப்படும் காளங்கிநாதர். புற்றுமகரிஷி குருவழிப் பாரம்பரியத்தின் 48-வது தலைமுறை வாரிசும், இந்திய அரசின் இம்ப்காப்ஸ் நிறுவனத்தின் வேலூர் கிளை இயக்குநருமான சித்த மருத்துவர் பாஸ்கரன் தீராத நோய்களையும் தீர்த்து வைப்பதில் பெயரும் புகழும் பெற்றிருக்கிறார். இவரிடம் சிகிச்சை பெற்று குணமானவர்களின் மகிழ்ச்சி வாக்குமூலம் இணையத்திலும், சமூக வலை தளங்களிலும் வைரலாக வலம்ருகின்றன. புற்றுநோய், நீரிழிவு உட்பட சகலவிதமான நோய்களையும் குணமாக்கி வரும் சித்த மருத்துவர் பாஸ்கரன் நமது தென்றலுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இது.

கே: வணக்கம் டாக்டர். சித்த மருத்துவம், அலோபதி, ஆயுர்வேதம், யுனானி உட்படப் பல்வேறு வகையான மருத்துவ முறைகள் இருக்கின்றன. இவற்றில் சித்த மருத்துவத்தின் சிறப்புகள் என்ன?
ப: சித்த மருத்துவமே ஆகப்பெரும் சிறப்புதான். இந்தக் கேள்விக்கு முழுமையான பதில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு நாள் போதாது. ஆனாலும் சில முக்கியமான அடிப்படைச் சிறப்புகளை மட்டும் சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன்.

பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகவே மனித உடலை சித்த மருத்துவம் பார்க்கின்றது. அதாவது மனித உடல் இந்தப் பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகின்றது. மனித உடல் ஒரு குட்டிப் பிரபஞ்சம். உடலும் பிரபஞ்சமும் கட்டமைப்பாலும் செயல்பாட்டாலும் ஒன்றே என சித்த மருத்துவம் பார்க்கின்றது. இதைத்தான், 'அண்டத்தில் உள்ளதே பிண்டம்; பிண்டத்தில் உள்ளதே அண்டம்' என்கின்றனர் சித்தர்கள். மனித உடலின் பஞ்சபூதங்களும் பிரபஞ்சத்தில் இருக்கும் பஞ்சபூதங்களும் சரிநிலை தவறும்போது ஏற்படுவதே நோய்கள். சரிநிலையைச் சமன் செய்வதன் மூலம் நோய்களை நிரந்தரமாகக் குணமாக்க முடியும் என்பதே சித்த மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவம்.



மருந்துகளை உணவுபோல எடுத்துக்கொண்டு பக்கவிளைவுகளாகப் பல வியாதிகளை வரவழைத்துக் கொள்வது நவீன மருத்துவம். ஆனால், உணவையே மருந்துபோல எடுத்துக்கொண்டு பக்கவிளைவுகளற்ற நிரந்தரத் தீர்வு காண்பது நம் சித்த மருத்துவம். உணவே மருந்து என்பதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படை. திருக்குறளில் 95வது அதிகாரமான மருந்து அதிகாரத்தில் 6 குறள்கள் உணவு சம்பந்தமானவை. உணவை நேர் செய்வதன் மூலம் நாம் ஆரோக்கியத்தைப் பேண முடியும். சித்த மருந்துகள் ஒருபோதும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.

சித்த மருத்துவம் ஒவ்வொரு நோயாளியையும் தனித்தனி நபராகக் கருதி சிகிச்சை தருகின்றது. அதாவது ஒரே நோயால் பாதிக்கப்பட்ட இருவருக்கு ஒரே மாதிரி மருந்துகள் தரப்படுவதில்லை. இருவருக்கும் வெவ்வேறு விதமான மருந்துகள் தரப்படலாம். இருவரும் ஒரே நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட இருவருக்கும் அந்த நோய்க்கான மூலகாரணம் வெவ்வேறாக இருக்கக்கூடும். இதை மிக எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரேவகை மருந்துகளைக் கொடுப்பதில்லை சித்த மருத்துவர்கள். ஒருவருக்கு அந்த நோய்க்கான மூலகாரணம் கணையத்தில் ஏற்படும் உஷ்ணமாகலாம். இன்னொருவருக்கு கல்லீரலில் பிரச்னை இருக்கலாம். வேறொருவருக்கு தூக்கமின்மைகூட மூலகாரணமாக இருக்கலாம். மூவருக்கும் ஒரே மருந்து கொடுப்பதால் பலன் கிடைக்குமா சொல்லுங்கள்! அதனால்தான் சித்த மருத்துவம் ஒவ்வொரு நோயாளியையும் தனி நபராகக் கருதும் தனிச்சிறப்பைக் கொண்டிருக்கிறது.

நோய் வந்தபின்னர் குணப்படுத்துவது மட்டுமல்ல, நோயே வராமல் தடுப்பதும் சித்த மருத்துவத்தின் சிறப்பாகும். நோய் வராமல் தடுத்தல், நோய்க்கு சிகிச்சை, பாதிப்புகளைச் சரிசெய்தல், மீண்டும் அந்த நோய் வராமல் பார்த்துக் கொள்ளுதல் என்ற நான்கு அம்சங்களிலும் சித்த மருத்துவம் கவனம் செலுத்துகிறது. சித்த மருத்துவம் நோய் அணுகா நீண்ட ஆயுளைத் தர முனையும் மருத்துவ முறையாகும். அதாவது சித்த மருத்துவத்தை ஒரு மருத்துவ முறை என்பதைவிட நம் சித்தர்கள் நமக்கு அருளிச்சென்ற அழகான வாழ்க்கை முறை என்றே சொல்ல வேண்டும்.

கரோனா தொற்றுத் தடுப்புப் பணியில் சிறப்பாகப் பங்கேற்றதற்காக வேலூர் வி.ஐ.டி. சிறப்பித்தது.



கே: பாரம்பரியமான சித்த மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் நீங்கள் என அறிகிறோம். அந்தப் பாரம்பரியம், சித்த மருத்துவராக நீங்கள் உருவான பின்புலம் பற்றிச் சொல்லுங்கள். அதோடு, உங்கள் குருகுல வாசம் பற்றி, குரு மூலம் நீங்கள் கற்றதையும் பெற்றதையும் பகிர்ந்துகொள்ள முடியுமா?
ப: பழநி மலையில் நவபாஷாண முருகனைப் பிரதிஷ்டை செய்தவர் சித்தர் போகர் என்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த போகரின் குருவானவர் புற்றுமகரிஷி என்று அழைக்கப்படும் காளங்கிநாதர். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர். வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலின் மூலஸ்தானத்தை பிரதிஷ்டை செய்தவர் இவர்தான். எங்களின் மூல குரு இவரே.

புற்றுமகரிஷியை குருவாக ஏற்றுக் கொண்டு குருவழிப் பாரம்பரியமாக 48-வது பரம்பரையினராக இந்த சித்த மருத்துவத்தைச் செய்து வருகின்றோம். தாய், தந்தை வழியாக வருவது கருவழிப் பரம்பரையாகும். சித்தர்களை, மகான்களை குருவாக ஏற்றுக்கொண்டு அவர்கள் வழியைப் பின்பற்றி வருவது குருவழிப் பரம்பரை. அவ்வகையில், நாங்கள் புற்றுமகரிஷி வழிப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள்.

அப்பரம்பரை வழிவந்த முன்னத்தி ஏர்களில் எனது பெரியப்பா வைத்தியர் கே.பி.அர்ச்சுனன் ஐயா, எனது தந்தையார் எலும்பு முறிவு வைத்தியர் கே.பி.டம்பாச்சாரி ஆகியோர் எனது குருக்கள். இவர்களது தந்தை, எனது தாத்தா பரசுராமன் அவர்களும் வைத்தியர், அவரது முன்னோர்களும் வைத்தியர்களே. காலம்காலமாக இப்படி நீளும் புற்றுமகரிஷி குருவழிப் பாரம்பரியத்தின் 48-வது வாரிசு நான்.

வைத்தியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் இளம்பிராயத்திலேயே நாடி பிடித்து நோய் அறியும் பயிற்சியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மருத்துவம் செய்வதிலும் பயிற்சி தொடங்கிவிட்டேன். பெரியப்பாவும் அப்பாவும் எனக்குப் பயிற்சிகள் கொடுத்தனர். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே சித்த மருத்துவத்தைச் சேவையாகவே செய்து வந்தார் பெரியப்பா. கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை, ஏலகிரி மலை, ஜவ்வாது மலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு வனத்துறையினரின் ஒத்துழைப்போடு இலவச மருத்துவ சிகிச்சை முகாம்கள் நடத்துவார் பெரியப்பா. அவ்வாறான மருத்துவ முகாம்களின் தொடக்க காலத்தில் எனக்கு ஐந்து, ஆறு வயது இருக்கும். மருத்துவ முகாம்களுக்கு என்னையும் அழைத்துச் செல்வார் பெரியப்பா. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போது என்னையும் அருகே இருக்கச் செய்வார். அப்போதிலிருந்தே எனது சித்த மருத்துவப் பயணம் தொடங்கிவிட்டது. பெரியப்பாவுக்குப் பின்னர் நானும் அப்பாவும் மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இதுவரை 4486 முகாம்கள் நடத்தியிருக்கிறது எங்களது புற்றுமகரிஷி சித்த மருத்துவ சேவை மையம். ஆயிரக்கணக்கான எளிய மக்களுக்கு நோயறிந்து சிகிச்சை அளித்திருக்கிறோம்.

எனது மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் அடுத்து என்ன படிப்பது என்ற கேள்வி ஏற்பட்டது. பெரியப்பாவிடம் பாரம்பரிய மருத்துவப் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த மருத்துவர்கள் பலரும், 'நமது பாஸ்கரன் சிறு வயதில் இருந்தே உங்களுடன் இருக்கிறார். நாடி பிடித்து வைத்தியம் பார்ப்பதில் சிறப்பாகவும் தேறியிருக்கிறார். அவரைச் சித்த மருத்துவப் பட்டப்படிப்பு படிக்க வையுங்கள். நமது பாரம்பரிய வைத்தியத்தை இன்னும் அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல அது உகந்ததாக இருக்கும்' என்று வலியுறுத்தினார்கள். அதன் காரணமாக ஶ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரியான 'வேலுமயில் சித்த மருத்துவக் கல்லூரி'யில் பி.எஸ்.எம்.எஸ். பட்டம் படித்து முடித்தேன். இன்று பாரம்பரிய சித்த மருத்துவப் பரம்பரையில் பட்டதாரி சித்த மருத்துவராகவும் இருக்கிறேன்.



கே: நாடி பிடித்து நோய்களை, நோய்க் காரணிகளை அறிவதில் தேர்ந்தவர் நீங்கள். அது குறித்து விளக்கமாகச் சொல்லுங்களேன்.
ப: ஒருவருக்கு என்ன நோய் பாதித்துள்ளது என்று கண்டறிந்து அதற்கான மூலகாரணத்தைக் கண்டறிவதே சித்த மருத்துவ சிகிச்சையின் முதல் படி.

நோய்க்கணிப்புக்கு எட்டு வழிமுறைகளைக் கூறியுள்ளார்கள் சித்தர்கள். 'மெய்குறி நிறந்தொனி விழி நாவிரு மலம் கைகுறி' என்கிறார் தேரையர். சித்தர்களின் நெறிமுறைப்படி நா, நிறம், மொழி (பேச்சு), விழி, ஸ்பரிசம் (உடல்), மலம், சிறுநீர், நாடி ஆகியன எண்வகைத் தேர்வு முறைகள் ஆகும். இதில் முதன்மையானது நாடி ஆகும்.

நாடி என்பது பல்ஸ் பார்த்தல் அல்ல. ஸ்தூல, சூக்கும மற்றும் காரண உடல்கள் என்ற மூவித உடல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆராய்வதாகும்.

நாடி குறித்து அறிய வேண்டுமெனில் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள தச நாடிகள் மற்றும் ஆறு ஆதாரங்கள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், நாடி பார்த்தல் என்பது உடலில் உள்ள வாத, பித்த, கப ஓட்டங்களின் அளவை அறிந்து அதன்வழி தச நாடி, தச வாயுக்கள், ஆறு ஆதாரங்கள் ஆகியவற்றின் நிலைமையைக் குறித்துக் கணக்கிட்டு அதனடிப்படையில் நோயைக் கணித்தல் ஆகும். (விவரம் பெட்டிச்செய்தியில் பார்க்க)

இன்று நாடி பார்த்து நோயறியும் மருத்துவர்கள் மிகவும் அருகி விட்டனர் என்பது வருத்தப்பட வைக்கும் செய்தியாகும்.

நாடி சட்டெனச் சொல்லிவிடும்
ஆணுக்கு வலது கையிலும் பெண்ணுக்கு இடது கையிலும் நாடி பார்க்க வேண்டும். உடலில் நோய் ஏதும் இல்லாமல் சமநிலையில் இருக்கிறது என்றால் வாத ஒட்டம் ஓர் அலகு ஆகவும் பித்த ஓட்டம் அதில் பாதியாகவும் கப ஓட்டம் அதனினும் பாதியாகவும் இருக்கும். அதாவது வாத, பித்த, கபம் அளவு முறையே 1, ½, ¼ என்று இருக்கும். இதுவே ஆரோக்கியமான உடலுக்கான இயல்பு நிலையாகும். நாடி பார்ப்பதன் மூலம் வாத, பித்த, கப அளவுகளைக் கணக்கிடும் சித்த மருத்துவர் இதில் எது மிகுந்துள்ளது, எது குறைந்துள்ளது என்று கணக்கிட்டு எதற்குள் எது விரிந்துள்ளது என்றும் கண்டறிகின்றார். அதன்பின்னர் வயது, கிழமை, நாள், நேரம், மாதம், ஆண்டு ஆகியவற்றுக்கு ஏற்ப வாத, பித்த, நாடிகள் மீண்டும் கணக்கிடப்படும். நோய்கள், நோய்க்கான மூலகாரணம், அறிகுறிகள் என சகலமும் நாடி பார்த்தலில் தெரிந்துவிடும். பல ஆயிரம் ரூபாய் செலவழித்து முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதற்குச் சமம் நாடி மூலம் அனைத்தையும் சட்டென அறிந்துகொள்வது!

முகநூல் பக்கம்

- மருத்துவர் பாஸ்கரன்


கே: நாடிகளின் சமநிலைக் குலைவுதான் பல்வேறு நோய்களுக்குக் காரணம் என்கிறீர்கள். அந்தச் சமநிலையை ஒருவர் தக்க வைத்துக் கொள்வது எப்படி?
ப: நான் ஏற்கெனவே சொன்னபடி, சித்த மருத்துவத்தில் நாடி என்பது பிரதானமான ஒன்றாகும். நமது உடல் திடம், திரவம், வாயு என்ற மூன்று விதமான மூலக்கூறுகளால் இயங்குகிறது. பஞ்சபூதத்தால் ஆன நமது உடலில் இருக்கும் திட, திரவ, வாயு ஆகியவை சமநிலையில் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதுதான் நாடி பிடித்தல். இதை வாத, பித்த, கபம் ஆகியற்றை அறிதல் என்றும் சொல்வோம். இவற்றில் எது ஒன்று கூடினாலும் குறைந்தாலும் நோய் தரும். சமநிலையில் இருக்குமானால் பிரச்னையொன்றும் இல்லை.

எனவே, வாத, பித்த, கபத்தை ஒருவர் சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டுமெனில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய சூத்திரம்: நாளில் இரண்டு, வாரத்தில் இரண்டு, மாதத்தில் இரண்டு, வருடத்தில் இரண்டு. இதுதான் சித்தர்கள் வழிகாட்டும் ஆரோக்கியத்துக்கான வாழ்க்கை முறை.

இதன் விளக்கம் என்னவென்றால், ஒருநாளைக்கு இரண்டு முறை மலம் கழித்தல் வேண்டும்; வாரத்தில் இரண்டு முறை தலைக்கு எண்ணெய் வைத்து தலைக்குளித்தல் வேண்டும்; மாதத்தில் இரண்டு முறையே ஆண் - பெண் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள வேண்டும்; வருடத்தில் இரண்டு முறை குடலை சுத்தம் செய்ய பேதி மருந்து சாப்பிட வேண்டும். இது வாதத்தைச் சமநிலைப்படுத்தும். அதேபோல், பித்தத்தைச் சமநிலைப்படுத்த வாந்தி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கலிக்கம் எனும் கண்ணுக்கு மை வைக்கும் முறையினால் கண் நோய் வராமல் இருக்கச் செய்தல், நசியம் எனும் நாசியினுள் மூலிகைச்சாறு விடுதல் மூலமும் வேது பிடித்தல் மூலமும் கப நோய் வராமல் பாதுகாத்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளினால் உடலைச் சமநிலையில் வைத்துக் கொள்ளலாம். இப்படி மூன்று விதமான தோஷங்களையும் சமநிலையில் வைத்துக்கொள்வதே சித்த மருத்துவம் வழிகாட்டும் வாழ்வியல் முறை.



கே: சித்த மருந்துகளில் உலோகங்கள் கலக்கப்படுகின்றன; பாதரசம் கலந்திருக்கிறது, அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படும் கருத்துகள் குறித்து…
ப: நமது முன்னோர்கள் சித்த மருத்துவத்தில் அதிக அளவில் உலோகங்களைப் பயன்படுத்தி இருக்கிறாரகள். தங்கம், வெள்ளி பயன்படுத்தியதற்கான சான்றுகள் எல்லாம் இருக்கின்றன. பல நுட்பமான முறைகளில் பயன்படுத்தியிருக்கிறார்கள். தங்கம், வெள்ளி, இரும்பு, காந்தம் போன்றவற்றோடு பாதரசத்தையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களாகட்டும் இரும்பு, ஈயம் போன்றவைகளாட்டும் எல்லாவற்றையுமே சுத்திமுறை செய்தே பயன்படுத்தி இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பொருளில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கி, அதனை மருந்தாகப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக மாற்றியமைப்பதையே சுத்திமுறை எனப்படும். அப்படித்தான் செய்திருக்கிறார்கள்.

சித்த மருத்துவத்தில் இதைப் புடம் போடுதல் என்றும் சொல்வார்கள். சுத்தி செய்தபின் மூலிகைச் சாறுகளில் நனைத்து மருந்து முறைகளுக்கு ஏற்றபடி ஐந்து, ஐம்பது, நூறு, இருநூறு என்ற எண்ணிக்கையில் வரட்டிகளின் நடுவே வைத்து எரியூட்டுவதையே புடம் போடுதல் என்போம். அவ்வாறு புடம் போடும்போது உலோகங்கள் பஸ்பமாக உருமாறும். அவ்வாறு நுண்ணிய துகள்களாக மாற்றப்பட்டு அதன்பின்னரே அதனை மருத்துவத்திற்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்.

பாதரசத்துக்கென்று ஒரு சுத்தி முறை இருக்கிறது. எருக்கம்பாலில் மூன்று நாள் ஊறவைத்து அதைச் செங்கலிலும் மஞ்சளிலும் போட்டு அரைத்து, அதை வடிகட்டி, திரும்பத் திரும்ப அவ்வாறு ஏழு முறை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது பாதரசத்தில் உள்ள நச்சுத்தன்மை நீங்கிவிடும் என்பதைச் சித்த நூல்களின் மூலம் அறியலாம். இதுபோல் சுத்தி முறையில் பல சூட்சுமங்கள் இருக்கின்றன. அவற்றை ச்சித்தர்கள் சொல்லி வைத்தபடி முறையாகச் செய்யும்போது பாஷாணங்களில் உள்ள விஷத்தன்மை முழுதாக நீங்குகிறது.

இதுபோல், சுத்தி முறை செய்து புடம் போட்டு உலோகங்களைப் பஸ்பமாக்கி மருந்துகள் செய்யும்போது எந்தப் பக்கவிளைவும் உண்டாவதில்லை. உலோகங்களைச் சுத்தி முறை செய்யாமல் அப்படியே நேரடியாகக் கொடுக்கும்போதுதான் பக்க விளைவுகள் உண்டாகும். இம்மாதிரியான பஸ்பங்களை மருந்துகளாக எடுத்துக்கொள்வதாக இருந்தால், முறையான அனுபவம் வாய்ந்த பாரம்பரியமான முறையில் இதனைத் தெளிவாகக் கையாளத் தெரிந்த திறமையும் தகுதியும் கொண்ட சித்த மருத்துவர்களை, அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இம்காப்ஸ் (IMPCOPS) போன்ற சிறந்த மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களை அணுகியும் சிகிச்சைக்கு மருந்து வாங்கிப் பயன்பெறலாம்.

இப்படிப்பட்ட பற்பம், சுண்ணம், செந்தூரம், கட்டு போன்ற மிகச் சிறப்பான மருந்துகள் நம் சித்த மருத்துவத்தில் இருக்கின்றன. புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கு இந்த பற்பம், செந்தூரங்கள் மிகச் சிறப்பாக வேலை செய்யும். பற்பம், செந்தூரத்தை எடுத்தவுடனேயே எல்லோருக்கும் உடனே கொடுக்க மாட்டார்கள். மூலிகைச் சாறு, லேகியம், மணப்பாகு போன்றவற்றை முதலில் கொடுப்போம். அதில் எந்தப் பலனும் இல்லை என்கிற நிலையில்தான் பற்பம், செந்தூரம் போன்றவற்றைக் கொடுப்பார்கள். தீவிரமான நாள்பட்ட நோய்களை குணமாக்குவதில் உலோக மருந்துகள் அற்புதமாக வேலை செய்யக்கூடியவை. பத்துப் பதினைந்து நாட்களிலேயே நல்ல பலனை அளிக்கக்கூடிய தன்மை பற்பங்களுக்குண்டு.

முறையாகத் தயாரிக்கப்பட்ட பற்பம், செந்தூரங்களைக் கொடுப்பதில் எந்தத் தடையும் இல்லை. இது எந்தப் பக்க விளைவையும் ஏற்படுத்தாது. தயாரிப்பு முறையில் பிசகு இருந்தால் மட்டுமே பக்க விளைவுகளை உண்டு பண்ணும்.



கே: சித்த மருத்துவம், ஆயுர்வேதம் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள் என்ன?
ப: சித்த மருத்துவம் மிகவும் பழைமையான பாரம்பரியம் கொண்ட மருத்துவ முறையாகும். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியதாக அறியப்படுகிறது. தமிழர்களின் வாழ்வியல் கலாசாரம் என்பது எவ்வாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தொன்மை வாய்ந்ததோ அதுபோலவேதான் சித்த மருத்துவமும்.

பல ஆராய்ச்சி அறிஞர்களின் கூற்றுப்படி உலகம் தோன்றிய காலம்தொட்டே சித்த மருத்துவமும் தோன்றியதாகக் குறிப்புகள் இருக்கின்றன. காரணம் என்னவெனில் என்றைக்கு மனிதன் இயற்கையின் கொடையான மரம், செடி, கொடிகளில் இருந்து உணவையும் மூலிகைகளையும் கண்டறிந்தானோ அன்றைக்கே சித்த மருத்துவமும் தோன்றியது எனலாம். இதனை உணர்ந்தவர்கள் நம் மெய்ஞானிகள். அறிந்தவர்கள் நம் சித்தர்கள். இதற்குப் பல்வேறு சான்றுகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக, போகருடைய நூல்கள், சங்க இலக்கியங்கள், திருவள்ளுவரின் திருக்குறள் இப்படிப் பல்வேறு நூல்களும் சான்று பகிர்கின்றன.

தமிழர்களின் பாரம்பரியம் சித்த மருத்துவம். அதேபோல மொழி சார்ந்து உருவானவை தான் ஆயுர்வேதம், யுனானி போன்ற மற்ற மருத்துவ முறைகள். சமஸ்கிருதத்தில் ஆயுர்வேதம், அரபி மொழியில் யுனானி, இப்படி. ஆனால் இந்த மருத்துவ முறைகள் மிகச் சிறப்பானவையே.

சித்த மருத்துவத்தைத் தாய் மருத்துவம் என்றும் குறிப்பிடலாம். சித்த மருத்துவ முறை மற்ற மருத்துவ முறைகளிலும் வெவ்வேறு பெயர்களில் காணக் கிடைக்கின்றன. சித்த மருத்துவம் அறிமுகப்படுத்திய வர்மம், தொக்கணம் போன்ற சிறப்பான சிகிச்சைகள் கர்மம் (பஞ்சகர்மா), அபயங்கம் என ஆயுர்வேதத்திலும் காணப்படுகின்றன.

சித்த மருத்துவத்துக்கும் ஆயுர்வேதத்துக்கும் மொழியின் அடிப்படையில் உருவான வேறுபாடுதான் இருக்கிறது. தவிர, சித்த மருத்துவத்தில் பற்பம், செந்தூரம், சுண்ணம், கட்டு போன்ற அதி அற்புத மருந்துகள் நம் சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு.

நாடி பிடித்துப் பார்த்தல்



கே: இம்காம்ப்ஸ் இயக்குநராக நீங்கள் செய்துவரும் பணிகள் பற்றிச் சொல்லுங்கள்…
ப: இம்காப்ஸ் என்பது சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற பாரம்பரியம் மிக்க பன்மாநில கூட்டுறவு மேலாண்மை சொசைட்டியின் கீழ் இயங்கக்கூடிய ஓர் அமைப்பு. இது மத்திய அரசின் மருத்துவத்துறையின் கீழ் இயங்கும் நிறுவனம். சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகளை பெரிய அளவில் தயாரிக்கும் பணியைச் செய்துவருகிறது. நாடு முழுவதும் மருந்து விற்பனை மற்றும் சிகிச்சை மையங்கள் நடத்தி வருகிறது. 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற இம்ப்காப்ஸ் அமைப்புக்கான தேர்தலில் டாக்டர் ஆர். கண்ணன் அவர்கள் தலைமையில் இம்ப்காப்ஸ் இயக்குநர்களாக 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அதில், நானும் ஒருவன். நான் வேலூர் மண்டலத்துக்கான இம்ப்காப்ஸ் இயக்குநர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக இம்காப்ஸுக்கென விற்பனை நிலையம் இல்லாமல் இருந்தது. இம்காப்ஸ் ஆரம்பிக்கப்பட்டு ஏறக்குறைய 78 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில், நான் இயக்குநராகப் பொறுப்பேற்றவுடன் மக்களுக்குப் பயன்படும் வகையில் திருவண்ணாமலையில் தலைவர் டாக்டர் ஆர். கண்ணன் அவர்களின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புடன் இம்ப்காப்ஸ் மருந்து விற்பனை நிலையத்தைத் தொடங்கினோம். அதனைத் தொடர்ந்து அவரது வழிகாட்டுதலின் பேரில் நாங்கள் 16 பேரும் செயல்பட்டு திருவனந்தபுரம், திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் புதிதாக இம்ப்காப்ஸ் மருந்து விற்பனை நிலையங்களைத் தொடங்கியுள்ளோம்.

சென்னை ஐஐடி வளாகத்திற்குள் இம்காப்ஸின் மருத்துவ ஆலோசனை மையம் அமைத்துள்ளோம். ஐஐடியுடன் இம்ப்காப்ஸும் இணைந்து பல மருந்துகளை ஆய்வுசெய்வதற்கென ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

பல்வேறு புதிய மருந்துகளைத் தயாரிக்கிறோம். இதற்கு முன்னர் தயாரிக்கப்படாத பல அற்புதமான மருந்துகள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளன.

கே: புற்றுமகரிஷி மருத்துவ மையம் மூலம் நீங்கள் செய்துவரும் பணிகள் குறித்துச் சில வார்த்தைகள்…
ப: புற்றுமகரிஷி மருத்துவ மையம் மூலமாக அர்ச்சுனன் ஐயா அவர்கள் பல ஆண்டுகளாகச் செய்துவந்த சீரிய பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்துவருகிறோம். புற்றுமகரிஷி மையத்தின் மூலமாகப் பல்வேறு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக குருகுலப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றோம். நாடி மருத்துவத்தைக் கற்றுத் தருகிறோம். எலும்பு முறிவு சிகிச்சை, மூலிகைகளை இனம் காணுதல், மருந்து செய்முறைக் கலை போன்றவற்றை சொல்லித் தரும் குருகுலமாக இந்த மையத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.

அர்ச்சுனன் ஐயா சிறப்பான முறையில் இந்தப் பயிற்சிகளை வடிவமைத்து, கட்டணமின்றி இலவசமாகவே பயிற்சி அளித்து வந்தார். நாங்களும் அவரது வழியையே பின்பற்றி வருகிறோம். அடிக்கடி பள்ளி, கல்லூரிகளில் மூலிகைக் கண்காட்சி, மூலிகை குறித்தான பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறோம். புற்றுமகரிஷி மையத்தின் மூலமாக இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி வருகின்றோம். குறிப்பாக மலைவாழ் மக்களுக்கு இதனை அளித்து வருகின்றோம். அதேபோல் மூலிகைத் தோட்டம் அமைக்கவும், மூலிகைகளை வழங்கியும் ஆர்வலர்களுக்கு உதவி செய்கிறோம். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கல்லூரிகளில் மூலிகைத் தோட்டங்கள் அமைக்கக் கட்டணமின்றி உதவுகின்றோம்.

மரணத்தை அறியும் சூட்சுமம்!
இன்னொரு ஆச்சரியப்படுத்தும் செய்தியையும் தெரிவிக்கிறேன். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் நாடி மூலம் மரணத்தை அறியும் சூட்சுமத்தையும் சொல்லியுள்ளனர். அவற்றை மரணநாடிக் குறிப்புகள் என்போம். பித்த நாடி சிதறி ஓடினால் மூன்றாவது நாளில் மரணம், வாத நாடி முழுமையாகச் சிதறி ஓடினால் எட்டாவது நாளில் மரணம், கப நாடி வெள்ளம் பாய்வதைப் போல் மடமடவென ஓடினால் மறுநாள் மரணம் என்று கணித்துச் சொல்லியுள்ளனர் சித்தர்கள்.
- மருத்துவர் பாஸ்கரன்


கே: உங்கள் குடும்பம் பற்றி…
எனது தந்தையும் மருத்துவர்தான். பெயர், பி. டம்பாச்சாரி, தாய் ராஜேஸ்வரியம்மாள். என் அக்கா, அண்ணன், தங்கை, நான் என எங்கள் பெற்றோருக்கு நாங்கள் நான்கு வாரிசுகள். இவர்களில் நான் மூன்றாவது மகன். எனது தந்தை எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை அளிக்கும் பாரம்பரிய வைத்தியர். காசு பணத்துக்கு ஆசைப்படாமல் அறம் சார்ந்த முறையில் வைத்தியம் செய்து வருபவர் என் அப்பா. இவ்வளவுதான் கட்டணம் என அவர் கேட்டதே கிடையாது. சிகிச்சை பெற்றுக்கொண்டவர்கள் அவர்களாக விருப்பப்பட்டுக் கொடுப்பதை வாங்கிக்கொள்வார். அதனால் வசதியான வாழ்க்கை கிடையாது. பல்வேறு சிரமங்களுக்கிடையேதான் எங்கள் நால்வரையும் வளர்த்து ஆளாக்கினர் எங்கள் பெற்றோர்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தேடிவருவோருக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்து விட்டேன். எனது வருமானத்திலேயே கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்திவிடுவேன். இது என்னுடன் படித்த நண்பர்களுக்குத் தெரியும். சில நேரம் கட்டணம் செலுத்த இயலாத தருணங்களில் அப்பா தனது சிரமங்களுக்கிடையே அதனைக் கட்டுவார்.

என் மனைவியின் பெயர் ப்ரீதா. கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். எங்கள் திருமணம் காதல் திருமணம். பி.எஸ்ஸி டயாலிசிஸ் படித்திருக்கிறார் ப்ரீதா. கணவனையும் அவன் தொழிலையும் புரிந்துகொண்டு கணவனின் காரியம் யாவினும் கைகொடுக்கும் மனைவி அமைவது இறைவன் அளிக்கும் வரம். அந்த வரம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

திருப்பத்தூர் கலெக்டர் சிறப்பித்தது | புதுச்சேரி ஆளுநர் சிறப்பித்தது



கே: உங்கள் லட்சியங்கள் என்னென்ன?
ப: உலகில் உள்ள அத்தனை மருத்துவ முறைகளிலும் நமது சித்த மருத்துவமே சாலச்சிறந்தது. அத்தனை சிறப்பு மிக்க நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தின் அற்புதங்களை உலகறியச் செய்ய வேண்டும். மூலிகைகள் குறித்த விழிப்புணர்வை அனைத்துத் தரப்பு மக்களிடமும் விதைக்க வேண்டும். முக்கியமாக வளரும் தலைமுறைக்குச் சித்த மருத்துவத்தின் சிறப்புக்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அரசு அனுமதி பெற்று அனைத்துப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு மூலிகை விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், மூலிகைத் தோட்டம் அமைக்க உதவுதல், சித்த மருத்துவத்தின் சிறப்புக்களை எடுத்துரைத்தல் போன்றவை எப்போதும் என் லட்சியமாக இருக்கும்.

சித்த மருத்துவத்தின் பல பரிமாணங்கள் குறித்துச் சாமானியர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக நல்ல தமிழ் நூல்கள் எழுதவேண்டும்.

சர்வதேச அளவிலும் சித்த மருத்துவத்தின் மீது கவனத்தை ஈர்க்கும் விதமாக ஆராய்ச்சிக் கட்டுரைகள், சித்த மருத்துவ சிகிச்சையின் பலனாகத் தீராத நோய்களும் பூரணமாக குணமான குறிப்புகளை ஆதாரங்களுடன் எழுதி முக்கியமான மருத்துவ இதழ்களில் வெளியிட வேண்டும்.

நாடி பார்த்து நோயறியும் திறன் பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கே உரித்தான தனிச்சிறப்பாகும். பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு முழுமையான, முறையான அரசு அங்கீகாரம் கிடைக்கப் பாடுபட வேண்டும்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் மூலிகைப் பண்ணைகள் அமைத்து அங்கு வருபவர்களுக்கு மூலிகைகளின் மருத்துவ குணங்கள், சித்த மருத்துவத்தின் மகத்துவம் குறித்து நேரடியாகப் பயிற்சி அளிக்க வேண்டும்.

சித்தமருத்துவ பட்டப்படிப்பு முடித்துவிட்டு வரும் மாணவர்களுக்கு நாடி பார்த்தறியும் பாரம்பரிய முறையைக் கற்பிக்க வேண்டும். சித்தர்கள் வழிகாட்டியிருக்கும் முறைப்படி தரமான சித்த மருந்துகள் தயாரிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

உயர்நிலை சித்த மருந்துகள் (Higher order Siddha medicines) குறித்து கூட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுவதை ஊக்கப்படுத்த வேண்டும். அதற்காக 'சித்த மருத்துவ உயர் ஆய்வு மையம்' ஏற்படுத்த வலியுறுத்த வேண்டும்.

சிறப்பாகச் செயல்படும் சித்த மருத்துவர்களுக்கு எனது குருவும் புற்றுமகரிஷி குருவழிப் பாரம்பரியத்தின் 47-வது தலைமுறை வைத்தியருமான கே.பி. அருச்சுனன் ஐயாவின் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி ஊக்குவிப்பதும் எனது எக்காலத்துக்குமான லட்சியங்களாகும்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
Share: 




© Copyright 2020 Tamilonline