முதுகலை பிசியோதெரபி (ஆர்த்தோபெடிக்ஸ்) முடித்திருக்கும் வினோத், பாரம்பரிய இசைக் குடும்பத்தில் வந்தவர். நாதஸ்வரம், புல்லாங்குழல் இரண்டையும் அநாயாசமாக வாசிக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பிற பகுதிகளிலும், அமெரிக்கா, சிங்கப்பூர், லண்டன், துபாய் எனப் பல வெளிநாடுகளிலும் பல கச்சேரிகளை நிகழ்த்தி வருகிறார். மாணவர்களுக்கு ஆன்லைனில் இசை கற்பிக்கிறார். புல்லாங்குழலில் திரையிசைப் பாடல்களை வாசிக்கிறார். தனது இசை வாழ்க்கை பற்றி நம்மோடு பேச வந்திருக்கிறார் வினோத். கேட்போமா?
★★★★★
கே: இளமைப் பருவம் குறித்துச் சொல்லுங்கள்? ப: என் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் கிராமம். என் தாத்தா திரு. செட்டிக்குளம் சிங்காரம் புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான். எனது பெற்றோர்களான சௌந்தர்ராஜன் - சந்தானலக்ஷ்மி இருவருமே நாதஸ்வரக் கலைஞர்கள். எங்கள் ஊரில் இருக்கும் பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் ஆஸ்தான வித்வான்களாக தாத்தாவும் அப்பாவும் இருந்தனர். எங்கள் வீட்டுக்கு மிக அருகேதான் கோயில். வீட்டிலும், ஆலயத்திலும் எப்போதும் இசை ஒலித்துக் கொண்டே இருக்கும். இந்த இனிமையான இசைச்சூழலில் நான் வளர்ந்தேன். எனது இசையார்வத்திற்கு எனது பாரம்பரியமும், இந்த இசைச்சூழலும் தான் காரணம்.
கே: உங்கள் குருநாதர்கள் யார் யார்? ப: கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூரில் வாழ்ந்த கோடி சுந்தரம் என்ற இசைமேதை அப்பாவின் குரு. அவர் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வருவதும், நாங்கள் அவர் வீட்டுக்குச் செல்வதும் வழக்கம். எனக்கு ஆறு வயதாக இருந்தபோது ஒரு கோடை விடுமுறையில் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். முழுக்க முழுக்கக் கிரிகெட்டிலும் பிற ஆட்டங்களிலும் என் நேரம் கழிந்தது. இதைக் கண்ட கோடி சுந்தரம் ஐயா, எனக்கு இசை கற்றுக் கொடுக்க விரும்பினார். அப்பாவிடம் அதைத் தெரிவித்தார். ஒரு நல்ல நாளில் இசையின் பால பாடங்களை எனக்கு அவர் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். எனது முதல் குரு அவர்தான்.
அதன் பிறகு எனது தாத்தா செட்டிக்குளம் சிங்காரம் அவர்களிடமும், அப்பா, அம்மாவிடமும் இசை கற்றேன். இசையின் நுணுக்கங்களை, கீர்த்தனைகளை, ராகங்களை எப்படி எப்படியெல்லாம் வாசிக்கலாம், எப்படி வாசிக்கக் கூடாது என்பவற்றை அவர்களிடமிருந்து கற்றேன். என் சித்தப்பா திருமானூர் டி.சி. கருணாநிதி அவர்களும் சிறந்த நாதஸ்வர வித்வான். அவரிடம் பல கீர்த்தனைகள், தேவாரப் பாடல்களை இசைக்கக் கற்றுக் கொண்டேன்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில்
கே: முதல் கச்சேரி அனுபவம் பற்றி... ப: என்னுடைய முதல் கச்சேரி, என்னுடைய ஏழு வயதில், எங்கள் கிராமத்துக்கு அருகிலிருந்த ஒரு கோயில் கும்பாபிஷேகத்தில் நடந்தது. அதில் நான், எனது தாத்தா, அப்பா, அம்மா என்று எல்லாரும் சேர்ந்து வாசித்தோம். என்னுடைய முதல் கச்சேரியே எனது குடும்பத்தோடு, அதுவும் ஒரு கோயில் விழாவில் அமைந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். நான் அப்போது அந்த நாதஸ்வரத்தின் உயரம்தான் இருப்பேன். கச்சேரிக்கு அந்த ஊர் மக்களிடமிருந்து நிறையப் பாராட்டுக் கிடைத்தது. எனக்கு அது மிகுந்த உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்தது.
வினோத் பெற்றிருக்கும் விருதுகள் 1995 - ஜவஹர் பாலபாரதி 2011 - தமிழக அரசு வழங்கிய கலை இளமணி பட்டம் 2020 - தமிழக அரசு வழங்கிய கலை வளர்மணி பட்டம் சர்வாணி சங்கீத சபா வழங்கிய யுவஸ்ரீ கலாபாரதி விருது பாரதீய யுவகேந்திரா விருது, லயன்ஸ் க்ளப் இண்டர்னேஷனல் வழங்கிய சிறந்த இசைக்கலைஞர் விருது மற்றும் பல விருதுகள்
கே: நாதஸ்வரத்திற்கு இணையாகப் புல்லாங்குழலும் வாசிக்கிறீர்கள் அல்லவா? அதைப்பற்றிச் சொல்லுங்கள். ப: புல்லாங்குழல் வாசிக்கக் கற்றுக்கொண்டது எனது 13ம் வயதில். அப்போது திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவுக்கு நான் அப்பாவுடன் சென்றிருந்தேன். அங்குதான் ஏன் புல்லாங்குழல் வாசிக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அங்கிருந்த கடை ஒன்றில் ஒரு புல்லாங்குழல் வாங்கினேன். வாசிக்க முயன்றேன். ஆரம்பத்தில் அது மிகக் கஷ்டமாகத்தான் இருந்தது. இருந்தாலும் சுயமாக நான் தினந்தோறும் வாசிக்கப் பயிற்சி எடுத்து வந்தேன்.
சென்னையில் நான் இளங்கலை ஃபிசியோதெரபி படித்தேன். அப்போது எனக்குக் கிடைத்த நேரத்தில் புல்லாங்குழல் வாசிக்கப் பயிற்சி செய்யலாம் என்று நினைத்து, குருநாதரைத் தேடினேன். அப்படித்தான் எனது புல்லாங்குழல் குருநாதரான திருவாரூர் சுவாமிநாதன் அவர்களைச் சந்தித்தேன். அவர்தான் புல்லாங்குழலில் விரல் வைத்தல், அதன் நுணுக்கங்கள், கமகங்கள் எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லிக் கொடுத்தார்.
கே: நாதஸ்வரமும் வாசிக்கிறீர்கள்; குழலும் வாசிக்கிறீர்கள். இரண்டையும் வாசிக்கும் விதம், சவால்கள் பற்றிச் சொல்லுங்கள்... ப: நாதஸ்வரம், புல்லாங்குழல் இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஸ்வரங்கள் இரண்டுக்கும் பொதுவாக இருந்தாலும் விரலைப் பயன்படுத்தும் விதம் நாதஸ்வரத்திற்கும் புல்லாங்குழலுக்கும் வெவ்வேறு. என்னுடைய அனுபவத்தில், நாதஸ்வரம் வாசிப்பதைவிடப் புல்லாங்குழல் வாசிப்பது சுலபமானது என உணர்கிறேன். ஏனென்றால் நாதஸ்வரத்திற்குத் தேவைப்படும் அளவிற்கு மூச்சுக் கட்டுப்பாடு புல்லாங்குழலுக்குத் தேவையில்லை. நாதஸ்வரம் உண்மையில் வாசிக்கக் கடினமானது. நாதஸ்வரத்திற்குத் தேவையான கமகங்களுக்கும், புல்லாங்குழலுக்குத் தேவையான கமகங்களுக்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடு உள்ளன. அந்தந்தக் கருவிக்கேற்ப நான் பயிற்சிகளை மேற்கொண்டு வாசிக்கிறேன்.
என்னுடைய அனுபவத்தில் நாதஸ்வரம் வாசிப்பவர்களால், எளிதில் புல்லாங்குழலைக் கற்றுக்கொண்டு வாசிக்க முடியும். ஆனால், புல்லாங்குழல் வாசிப்பவர்கள், நாதஸ்வரம் வாசிப்பது நிறையவே கடினமானது. அப்படி வாசிப்பவர்களையும் என்னுடைய அனுபவத்தில் இதுநாள்வரை நான் பார்த்ததில்லை.
கே: தினந்தோறும் எவ்வளவு நேரம் சாதகம் செய்கிறீர்கள்? ப: தினமும் இரண்டு மணி நேரமாவது சாதகம் செய்வதுண்டு. பயணம், கச்சேரி என்று தொடர்ந்து இருக்கும் நாளில் சாதகம் செய்யமுடியாது. என்றாலும் நான் ஏழு வயது முதலே தினந்தோறும் வாசித்து வருவதால் அது எனக்கு ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை. நேரம் அமையும்போது தினமும் சாதகம் செய்வேன்.
கே: நாதஸ்வரம், குழலிசை வாசிப்பதற்குத் தனி மூச்சுப் பயிற்சி தேவையா? ப: என்னைப் பொறுத்தவரையில், நாதஸ்வரம், குழலிசை வாசிக்கத் தனி மூச்சுப் பயிற்சி வேண்டும் என்பதில்லை. அந்த வாசிப்பே மூச்சுப் பயிற்சிதான். சுவாசத்தில் கட்டுப்பாடு இருந்தால்தான் அவற்றை வாசிக்கவே முடியும். அதற்காக உட்கார்ந்து தனியாக மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டியதில்லை. இதனை நான் அறிவியல் பூர்வமாகவும் சொல்ல முடியும். என்னுடைய யூ.ஜி. படிப்பில் நான் செய்த புராஜெக்டும் இதுதான். ஃபிசியோதெரபியில், கார்டியாலஜி சப்ஜெக்டில் நான் இதுபற்றி ஆய்வு செய்துள்ளேன்.
ஒரு காற்றுக் கருவியை வாசிக்கும் இசைக் கலைஞரின் சுவாசத் தசைகள், நுரையீரல் திறன் எப்படி இருக்கும் என்பதுதான் என்னுடைய ஆய்வுப் பணி. அதன்படி மற்றவர்களை விட காற்றுக் கருவிகள் வாசிக்கும் ஒருவரது மூச்சுவிடும் திறன், நுரையீரல் கொள்ளளவு, தசை வலு எல்லாமே மிகுதியாகத்தான் இருந்தது. அவர்கள் யாரும் தனிப்பட்ட மூச்சுப் பயிற்சி எதுவும் செய்யவில்லை. அந்தக் கருவிகளை வாசித்து வாசித்தே, அந்தப் பயிற்சியால், பழக்கத்தால் இவை மேம்பாடு அடைந்திருக்கின்றன.
சுர்சாகர் விருது பெறும் வினோத்
கே: நீங்கள் ஃபிசியோதெரபிஸ்ட் மருத்துவராக உள்ளீர்கள். இசையால் நோயை, வலியைக் குணப்படுத்த முடியும் என்பது குறித்து உங்கள் கருத்து என்ன? ப: இசை ஒரு நோயைக் குணமாக்குகிறது என்பது இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால், இசையின் மூலம் நோய்க்குறிகள் கட்டுப்பாட்டுக்குள் வருவது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமக்குப் பிடித்த இசையைக் கேட்கும் போது மூளையிலிருந்து வலி நிவாரண ஹார்மோன்கள் சுரந்து, மருந்தைவிட வேகமாக உடலில் பரவுவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிலவகை இசைகளால் வலியைக் குறைக்க முடியும்.
மறைந்த வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இது குறித்து மிக விரிவாக ஆராய்ச்சி செய்து பல விஷயங்களைத் தெரிவித்துள்ளார். ஒருமுறை ஓர் இசைப் போட்டிக்கு அவர் நடுவராக வந்தபோது அவரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் ஃபிசியோதெரபிஸ்ட் என்பதை அறிந்து அவராகவே என்னைக் கூப்பிட்டுப் பேசினார். பல ராகங்களைப் பற்றி, அதன் தன்மைபற்றி என்னிடம் பகிர்ந்துகொண்டார். வலியை மட்டுமல்லாமல், சில ராகங்கள் மன அழுத்தம் போன்றவற்றைக் குறைப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கே: தமிழ்த் திரைப்பாடல்களை யூ ட்யூபிற்காகப் புல்லாங்குழலில் வாசித்துள்ளீர்கள். அந்த அனுபவம், சவால்கள் குறித்து... ப: திரையிசைப் பாடல்களை காற்றுக் கருவிகளில் வாசிப்பது என்பது பெரிய சவால்தான். காரணம், கர்நாடக சங்கீதம், கீர்த்தனைகளை ஒருவர் தனக்கான சுதந்திரத்தை எடுத்துக் கொண்டு, தனது கற்பனைத் திறனைப் புகுத்தி தன் பாணியில் வாசிக்க முடியும். ஆனால், திரையிசைப் பாடல்களில் அந்தச் சுதந்திரம் கிடையாது. இசையமைப்பாளர் எப்படிப் பாடலைத் தந்துள்ளாரோ, பாடல் எப்படி உள்ளதோ அப்படியேதான் வாசித்தாக வேண்டும். அது உண்மையாகவே சவாலான விஷயம்தான். ஆகவே திரையிசைப் பாடல்களை வாசிப்பதற்காக நான் தனியாகப் பயிற்சி எடுத்து, தனியாக நோட்ஸ் எழுதி, பலமுறை பயிற்சி செய்து பின்னர்தான் யூட்யூபில் வாசிக்கிறேன்.
அதுவும் எம்.எஸ்.வி., இளையராஜா எல்லாம் நிறைய கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாகக் கொண்டு பாடல்களைத் தந்துள்ளார்கள். அவற்றை உணர்ந்து வாசிப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். அதுவும் இளையராஜா அவர்கள், கர்நாடக சங்கீதத்தில் அதிகம் பயன்படுத்தப்படாத ராகங்களைக் கொண்டு பல பாடல்களைத் தந்துள்ளார். அந்த ராகங்களை, இசையைக் கேட்கும்போது ஏற்படும் உணர்வும், வாசிக்கும் போது கிடைக்கும் உணர்வும் வேறு வேறு. புதுப்புது ராகங்களைக் கற்றுக்கொள்ளக் கூட அந்தப் பாடல்கள் உதவியிருக்கின்றன. அது ஒரு நிறைவான, மகிழ்ச்சியான விஷயம்.
ஏர்ப்போர்ட்டில் ஒரு கச்சேரி ஒருமுறை டெக்சஸில் ஏர்போட் இமிக்ரேஷன். நாதஸ்வரம் ஸ்கேனிங்கில் போனபோது அவர்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. இது ஏதோ ஆயுதம் போல இருக்கிறதே, என்ன, ஏது என்றெல்லாம் விசாரித்தார்கள். அது ஓர் இசைக்கருவி என்று சொல்லியும் சந்தேகம் தீரவில்லை. அதனால், நான் அங்கேயே ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்து வாசித்துக் காண்பித்தேன். அங்கு உள்ளவர்களுக்கெல்லாம் ஆச்சரியம், பிரமிப்பு. அது ஒரு மறக்க முடியாத நிகழ்வு. - வினோத்
கே : உங்கள் வாழ்வில் மறக்க முடியாத பாராட்டு எது? ப: நான் சிறுவயது முதலே வாசித்துக் கொண்டு வருவதால், பலர் பல தருணங்களில் பாராட்டியுள்ளனர். ஒரு சமயம் சென்னை இசை விழா ஒன்றில், ஏ.கே.சி. நடராஜன் அவர்கள் என் வாசிப்பைக் கேட்டுப் பாராட்டினார். அதுபோல மிருதங்கக் கலைஞர் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் அவர்கள் பாராட்டியதும் மறக்க முடியாது. ஒருசமயம் எனது கச்சேரிக்கு வந்திருந்த மாண்டலின் ஸ்ரீநிவாஸ் அவர்கள், நான் வாசித்த கீரவாணி ராகம் மிகச்சிறப்பாக இருந்ததாகப் பாராட்டினார். இவையெல்லாம் மறக்க முடியாதவை.
கே: வெளிநாடுகளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான அனுபவங்கள் பற்றி... ப: அமெரிக்கா, லண்டன், துபாய், அயர்லாந்து, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா என்று பல நாடுகளில் இசைக் கச்சேரிகள் செய்துள்ளேன். பரதநாட்டியத்துக்கு வாசித்துள்ளேன். அமெரிக்கா, அயர்லாந்து, சிங்கப்பூர் போன்றவற்றிற்கு வருடா வருடம் சென்று கச்சேரி செய்து வருகிறேன். ஒருமுறை மேற்கத்திய இசைக்கலைஞர்கள் முன்னால் ஒரு நிகழ்ச்சி செய்தோம். அவர்கள் வெஸ்டர்னில் ஒரு நோட்ஸைக் கொடுத்து இதனை உடனே கர்நாடிக்கில் வாசிக்க முடியுமா என்றனர். எங்களுக்கு அது ஒரு சவாலாகப் பட்டது. உடனே கர்நாடிக் முறையில் அந்த நோட்ஸை வாசித்துக் காட்டினோம். அவர்களுக்குப் பிரமிப்பு. வெகுவாகப் பாராட்டினார்கள். அது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.
பொதுவாக அமெரிக்கா, அயர்லாந்து போன்ற நாடுகளில் நாதஸ்வரத்தை மேற்கத்தியர்கள் வெகுவாக ரசிப்பார்கள். அந்த இசையைப் பாராட்டுவார்கள். அந்த நாதத்தைக் கேட்டு ஆச்சரியப்படுவார்கள். இது எப்போதும் நடப்பது. நான் அவர்களுக்கு நிறைய டெமோ செய்து காட்டியிருக்கிறேன்.
வினோதின் இசைப் பாடல்கள் முகநூல் பக்கம் | யு ட்யூப் பக்கம் | பெற்றோர்களுடன் கச்சேரி | மகள் ஆலாபனாவின் ஆலாபனை
வினோத் இசைத்துள்ள சில பாடல்கள் சின்னஞ்சிறு கிளியே | கீரவாணி ராகம் | தில் தில் தில் மனதில் | உன்ன நெனச்சி நெனச்சி
கே: மாணவர்களுக்கு இசைப்பயிற்சி அளித்து வருகிறீர்களா? ப: ஆம். நான் தொடர்ந்து பல கச்சேரிகள், பிரயாணங்கள் என்று இருப்பதால் ஆன்லைனில் கற்றுத் தருகிறேன். அது எனக்கு மிகவும் வசதியாக உள்ளது. அமெரிக்கா, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா என்று பல நாட்டு மாணவர்கள் என்னிடம் கற்கின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் (Bogg Mathews from California; Alexander James from Texas) நாதஸ்வரத்தை மிகவும் ஆர்வமாக என்னிடம் கற்று வருகின்றனர். அவர்கள் அமெரிக்கக் குடிமக்கள். அவர்கள் கற்பதை மிகவும் பெருமைக்குரிய விஷயமாக நான் கருதுகிறேன்.
கே: உங்கள் குடும்பம் பற்றி... ப: நாதஸ்வர வித்வான்களான எனது பெற்றோர் இப்போதும் கச்சேரி செய்து வருகிறார்கள். எனது மனைவி கிருபா. இல்லத்தரசி. என்னிடம் இசை கற்கிறார். மகள் ஆலாபனா. மகன் ஆரோஹன். மகள் என்னிடம் புல்லாங்குழல் கற்று வருகிறாள்.
கே : எதிர்கால விருப்பங்கள்.. ப: மகான்கள் எல்லாம் நிறையக் கீர்த்தனைகளைச் செய்திருக்கிறார்கள். அவற்றை எல்லாம் கற்றுக்கொண்டு வாசிக்க வேண்டும். குறிப்பாகத் தவில், நாதஸ்வர வித்வான்கள் நிறையக் கீர்த்தனைகள், வர்ணங்கள் கம்போஸ் செய்திருக்கிறார்கள். அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும் என்பது என் ஆசை. அந்தப் பணியை ஆரம்பித்திருக்கிறேன். அதுபோல எனது மாணவர்களுக்காக அவர்களுக்குப் புரியும் விதத்தில் வேறு வேறு ராகங்களில், எளிமையாகச் சிறு சிறு கீர்த்தனைகள், பாடல்களைக் கம்போஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறேன். அவற்றைத் தொகுத்து புத்தகமாக வெளியிடும் விருப்பம் உள்ளது.
தென்றல் இதழுக்கு என் நன்றி. அனைவருக்கும் எனது இனிய 2023 புத்தாண்டு நல்வாழ்த்துகள். |