|
|
|
இந்திய பாரம்பரியக் கலைகளைக் கற்பிப்பதில் விரிகுடாப் பகுதியின் முன்னோடி என 'ஸ்ருதி ஸ்வர லயா'வைச் சொல்லலாம். அது இந்த செப்டம்பர் மாதத்தில் வெள்ளி விழா காண்பது நமக்கெல்லாம் மிக மகிழ்ச்சிகரமான தருணம். இதனைத் தோற்றுவித்து, வெவ்வேறு சவால்களையும் மேடு பள்ளங்களையும் தீவிர ஈடுபாட்டோடு கடந்து வந்திருக்கிறார் அதன் நிறுவனர் திருமதி அனுராதா சுரேஷ். "சரியான லட்சியத்தைத் தேர்ந்தெடுத்து, அதைச் சாதிக்க ஒரு வாழ்நாள் எடுக்கும் என்பது தெரிந்தாலும், பரிபூரண நம்பிக்கையோடு செய்து வாருங்கள். தொடங்கிவிட்டால் போதும், உங்கள் லட்சியத்தின் மேன்மையால் செயல்பாடு தானே தன்னை நடத்திச் செல்லும்" என்கிறார் அனு. அந்த அற்புதமான உற்சாக மழையில் நனைந்தபடி நமது கேள்விக் கணைகளை வீசினோம்...
★★★★★
கே: வணக்கம். விரிகுடாப் பகுதியில் செவ்வியல் கலைகளைக் கற்பிப்பதில் வெள்ளிவிழா கொண்டாடும் உங்களுக்கு எமது வாழ்த்துகள். உங்கள் நீண்ட அனுபவத்தில், வெவ்வேறு கலை வடிவங்களைக் கற்பதில் நமது சமுதாயத்தினர் காட்டும் ஆர்வம் காலந்தோறும் எப்படி மாறி வந்துள்ளது? பதில்: நாம் ஸ்ருதி ஸ்வர லயாவைத் தொடங்கிய காலத்தில் தென்னிந்திய கர்நாடக சங்கீதப் பள்ளிகள் இங்கே அதிகம் கிடையாது. நாம் ஃப்ரீமான்ட் பகுதியில், கர்நாடகம் மற்றும் ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு மட்டுமல்லாமல், வயலின், மிருதங்கம், தபேலா, சிதார், பரதநாட்டியம், குச்சிபுடி, ஒடிசி, கதக், பியானோ, கீ போர்டு எல்லாமே கற்பிக்கத் தொடங்கினோம். தவிர, தமிழ், சமஸ்கிருத மொழிகளையும் கற்பித்தோம். சான் ரஃபேலில் அலி அக்பர் கான் மட்டுமே இப்படிப் பல பாணிகளையும் கலைகளையும் கற்பித்தார். அதைப் பின்பற்றியே நாமும் 'பாரதி கலாலயா' என்ற பெயரில் தொடங்கினோம். அதுதான் தற்போது 'ஸ்ருதி ஸ்வர லயா' என்று ஆகியுள்ளது.
கே: இப்போதெல்லாம் நடன அரங்கேற்றங்கள் இருக்கும் அளவுக்குக் கர்நாடக சங்கீத அரங்கேற்றங்கள் நடப்பதில்லையே? ப: நான் வந்த பின்னணியில் இருந்து பார்த்தால், கர்நாடக வாய்ப்பாட்டுக்கு அரங்கேற்றம் தேவையில்லை. சிறிய நிகழ்ச்சிகளில் பாடி, போதிய உரமும் தன்னம்பிக்கையும் பெற்ற பின்னர், கச்சேரிகளை அதிக நேரம் செய்யத் துணியலாம். ஒரு அரங்கேற்றதோடு கற்றல் முடிவதில்லை, அது ஒரு தொடரும் செயல்பாடு.
நடன அரங்கேற்றம் தேவைதான். கற்கத் தொடங்கும் போதே அதன் லட்சியமாக அரங்கேற்றத்தைப் பார்க்கிறார்கள். பல ஆண்டுகள் கற்றபின் அவர்கள் தமது திறமையை மேடையேற்றும் போது, சபாக்களும் சமூகமும் அவர்களை ஆதரித்து அங்கீகரிக்கிறது. இதுதான் வழக்கம். வாய்ப்பாட்டு அப்படியல்ல. அதைக் கற்பவர்கள் தமது குருவுக்குப் பின்பாட்டுப் பாடுவதில் தொடங்கித் தனிக் கச்சேரி என்று முன்னேறுவார்கள். அரங்கேற்றத்துக்கு அவசியம் இல்லை என்பது என் கருத்து. ஆனால், மாணவர்கள் அரங்கேற்றம் செய்ய விரும்பினால் அதற்கும் நாங்கள் உதவுகிறோம்.
எழுந்து நின்று பாடினால் மேல்ஸ்தாயி :-) பெரியவர்கள் குழந்தைகளிடம் சரியானபடி சொல்வது முக்கியம். நான் கற்பிக்கத் தொடங்கிய காலம். ஒரு குழந்தையிடம் "Sing upper Sa, you can't sing it like that. You're singing it too low" என்று கூறினேன். உடனே அந்தக் குழந்தை எழுந்து நின்று 'ஸ' என்று பாடியது. அந்தக் குழந்தை 'upper Sa' என்றால் மேலே இருந்து பாடுவது என்று புரிந்து கொண்டது. அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியாது. நாள் போகப்போக என் மாணவர்கள் எனக்கு எப்படி ஒரு நல்ல ஆசிரியராவது என்பதைக் கற்றுக் கொடுத்தார்கள்.
அனுராதா சுரேஷ்
கே: ஓர் ஆசிரியர் என்ற முறையில் உங்கள் அனுபவங்களைக் கூறுங்கள். ப: ஆரம்ப காலத்தில் பாட்டைச் சொல்லிக் கொடுக்கும்போது பொருளை அல்லது பாட்டின் பின்புலத்தைச் சொல்லித் தருவேன். அவர்கள் பாடும்போது, பாடல் மனதில் பதிவிட்டால் பாடல் வரிகளை மறந்துவிடுவார்கள். ஆக, மாணவர்களுக்குப் பாடலைப் புரிய வைப்பதும் ஆசிரியரின் கடமை ஆகிறது. அவர்கள் புரிந்துகொண்டால் சரியாகப் பாடுவார்கள். அதுவும் முக்கியம்.
சிறிது காலம் கற்றபின் விட்டுவிட்டு, பின்னாளில் மீண்டும் கற்க வருபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை, குடும்பம், குழந்தைகள் என்று இருக்கும். கச்சேரி செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்காது. ஆனால் எல்லோருமே கச்சேரி செய்ய வேண்டும் என்பதில்லை. மற்ற வேலைகள், குடும்பக் கடமைகள் இவற்றின் நடுவில் திரும்பி வந்து கற்றுக்கொண்டு, ஓரளவாவது பாடினால் அதில் ஒரு பெரிய திருப்தி கிடைக்கிறது. அதில் எனக்குச் சந்தோஷம் உண்டாகிறது. அவர்கள் பாட விரும்புகிறார்கள் என்பதே நல்லதுதான். இதை நான் பிறருக்கு விளக்க முடியாது, ஆனால் எனக்குள்ளே இருக்கத்தான் செய்கிறது.
கே: நம் விரிகுடாப் பகுதியில் கோவில்களும் சமூக நிறுவனங்களும் பெருகி உள்ளன. கர்நாடக சங்கீதம் மற்றும் கலை வளர்ச்சிக்கு இவை எப்படி உதவியுள்ளன? ப: கோவில் நமது மாணவர்களுக்குப் பாடவும் ஆடவும் நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன. அப்படி மேடை கிடைப்பதால் நமது மாணவர்களுக்கு நன்கு பயிற்சி செய்து, திறமைகளை வெளிக்காட்ட ஊக்குவிக்க முடிகிறது. அவர்களால் மக்கள்முன் மேடையேறும் அச்சத்தில் இருந்து வெளியே வர முடிகிறது.
பிரபல சமூக நிறுவனங்கள் தென்னிந்திய இசை குறித்து அதிகம் அறியாத காரணத்தால் எதுவும் செய்வதில்லை என்பது என் அனுபவம். நூலகங்கள், ஃப்ரீமான்ட் கலாச்சாரக் கவுன்சில் நிகழ்ச்சிகள் எனப் பல ஆண்டுகளாக நமது நிறுவனம் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. ஆனால் அதுவும் போதாது. காரணம் நமக்கு அங்கே 8 அல்லது 9 நிமிடம்தான் கிடைக்கும். அதில் எவ்வளவு பாடிவிட முடியும்? இந்த நிலைமை மாறி, கர்நாடக சங்கீதத்தைப் பொது நீரோட்டத்தில் கொண்டுவர முயல்வaது எங்கள் கடமை என்று கருதுகிறோம்.
பெற்றோர் செய்ய வேண்டியவை தொடக்கத்தில் பெற்றோர் ஈடுபாடு காட்டலாம். அதன் பிறகு, குழந்தைகளுக்குச் சுதந்திரம் கொடுத்தால்தான் அவர்கள் வளர்ச்சி அடைவார்கள். பெற்றோர் செய்ய வேண்டியவை: * நிறையக் கச்சேரிகளுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். * காரில் போகும்போதும் வீட்டிலும் கச்சேரிகளைக் கேட்கச் செய்ய வேண்டும். * இசை, பாடலாசிரியர்கள், அவர்கள் இயற்றிய காலம், நம் இசை ஏன் முக்கியம் என்பவற்றைப் பற்றி பெற்றோர் சொல்லித் தர வேண்டும். * அடுத்த தலைமுறைக்கு அவர்கள் இந்த இசையைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டும். * இசையைப் போட்டிக்காக அல்லாமல் ரசித்து அனுபவிக்கச் சொல்ல வேண்டும்.
அனுராதா சுரேஷ்
கே: எப்படி நம் கலைகளை வெளியே கொண்டு செல்வது? ப: கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்கள்தான் நம் இசையைக் கேட்க வேண்டும் என்பதில்லை. இதைப் பற்றித் தெரியாதவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். நாம் அலமேடா ஆர்ட் கமிஷனிடம் போய், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நமது இசை வடிவத்தைக் பாடிக் காண்பிக்கலாம். அத்தோடு இது என்ன, இன்று என்ன பாடப் போகிறோம், இந்தப் பாடலில் அங்கங்கள் என்ன, இதை எழுதியவரின் காலம் என்ன, பாடலின் பொருள் என்ன என்று இவற்றை அவர்களுக்குச் சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தலாம். அப்போது அவர்களுக்கு நமது இசைக்கு அவர்களது கலை விழாக்களில் பங்கு தர ஆர்வம் ஏற்படும். நமது மாணவர்களுக்கும் அப்போது நாம் பரவலான பொதுஜனத்தைச் சென்று தொடுகிறோம் என்கிற உற்சாகம் ஏற்படும்.
கே: இசை, ஆன்மீகம், நல்ல விழுமியங்கள், செவ்வியல் கலைகளின் கடுமையான பயிற்சி - இவற்றில் எது மிகவும் முக்கியமான, ஆனால் மக்களால் சரியாகப் புரிந்துகொள்ளப் படாத, லட்சியம்? ப: எல்லாமே மிகவும் முக்கியமான நோக்கங்கள் தாம். இசையின் முக்கிய லட்சியம், அது வாழ்க்கையைக் கட்டமைக்க உதவுகிறது, இளைப்பாறல் தருகிறது, அமைதிப் படுத்துகிறது. காலையில் அவர்கள் மூச்சுப் பயிற்சியும் குரல்வளப் பயிற்சியும் செய்தால் அந்த நாளை அவர்கள் சரியான முறையில் தொடங்குகிறார்கள். தொடர்ந்து செய்யும் பயிற்சியால் அவர்களுக்கு மனனம், நினைவில் நிறுத்துதல், திரும்பக் கூறல் போன்றவற்றில் உதவுகிறது. செய்வதைக் கட்டுப்பாட்டோடு செய்யப் பயிற்சி ஏற்படுகிறது. இந்தப் பழமையான கலை வடிவம் நம் முன்னோர்களோடு நமக்குத் தொடர்பை ஏற்படுத்துகிறது.
முந்தைய தலைமுறையுடன் தொடர்பு இங்கே கற்கும் குழந்தைகள் இந்தியாவுக்குப் போகிறார்கள் அல்லது அங்கிருந்து தாத்தா, பாட்டி இங்கே வருகிறார்கள். ஆரம்பத்தில் சிறு குழந்தைகள் அவர்களிடம் ஒட்டிக் கொள்கிறார்கள். ஆனால் வேறுபட்ட கலாச்சார சூழ்நிலையில் வளரும் இந்தக் குழந்தைகளுக்கு இந்திய கலாச்சாரம் அதிகம் தெரிவதில்லை. ஆனால், கர்நாடக சங்கீதம் கற்கும்போது அவர்கள் தாத்தா பாட்டியுடன் தொடர்பில் இருக்க முடியும். அவர்கள் இங்கே வரும்போது, "நீ இந்தப் பாட்டைப் பாடினாய், அது இந்தக் கோவிலைப் பற்றியது. நாம் அங்கு போனோம், நினைவிருக்கிறதா? நீ அப்போது சிறுபிள்ளை" என்று சொல்வார்கள். தலைமுறை இடைவெளியை இது குறைக்க உதவும்.
அனுராதா சுரேஷ்
கே: முந்தைய காலங்களில் கர்நாடக சங்கீதம் கடவுளைத் துதிக்கவே பயன்பட்டது. இப்போது அப்படி இல்லையா? இல்லை என்றால் அந்த உணர்வை, பக்தியை, ஏக்கத்தை எப்படி மீட்டுக் கொண்டு வருவது? ப: உண்மைதான். இன்றைய தலைமுறையில் சிலர் சங்கீதம் பக்திக்கானது என்று கருதுவதில்லை. ஆனாலும் ஓரளவு பக்தி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சங்கீதத்தின் கட்டமைப்பு மற்றும் கணிதவியல் பகுதிகளை ஆராய்வதில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். கட்டமைப்பு மற்றும் கணிதவியல் ரீதியாக ஒருவர் மிக நன்றாகப் பாடும்போது, அது ஆத்மாவைத் தொட்டால், அதை எல்லோரும் "ஆஹா! பிரமாதம்" என்பர். ஆனால் கேட்பவர் மனதைத் தொடும்படி பாடினால் அவரிடமிருந்து ஆஹா வராது, கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடும். அந்த உணர்வை வெளிப்படுத்துவது கர்நாடக சங்கீதத்தில் பக்தியின் மூலம்தான்.
கே: மாணவரின் இஷ்ட தேவதையை ஆசிரியர் அறிந்திருப்பதும், அத்தோடு தொடர்புடைய பாடல்களைச் சொல்லிக் கொடுப்பதும் அவசியமா? ப: நல்ல கேள்வி. சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் மலேசியாவில் ஓர் அரங்கேற்றம் செய்தேன். அவர்கள் குடும்பக் குலதெய்வத்தின் கோவில் ஒன்று அங்கே இருந்தது. அவர்களுக்குக் கர்நாடக சங்கீதம் குறித்து அதிகம் தெரியாவிட்டாலும், தம் வீட்டுக் குழந்தையின் சங்கீத அரங்கேற்றம் என்பதால், அவர்கள் அந்த தெய்வத்தைப் பற்றிப் பாடச் சொல்லிக் கொடுக்கச் சொன்னார்கள். பெற்றோர் அப்படிக் கேட்டால் இஷ்ட தேவதை குறித்த பாடல்களைக் கற்றுக்கொள்ளவும், கற்பிக்கவும் ஆசிரியர் தயாராக இருக்க வேண்டும்.
எல்லா இசைக்கும் கர்நாடக இசை அடித்தளம் ஆகலாம் இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு மிக அதிகமான மன அழுத்தம், அச்சம் (panic attack) ஏற்படுவதைப் பார்க்கிறேன். முந்தைய தலைமுறையினர் இப்படி எல்லாவற்றுக்கும் கவலைப்பட்டு நான் பார்த்ததில்லை. ஆனால் இங்கே வந்து கற்கும்போது குழந்தைகள் இறுக்கமில்லாமல், ஓய்வாக உணர்கிறார்கள். அண்மையில் நான் ஓர் இசைக்கலைஞரைச் சந்தித்தேன். அவர் பலவகை இசைகளைக் கற்றவர். "கர்நாடக சங்கீதம் தெரிந்திருந்தால் எதையும் பாடிவிடலாம்" என்று அவர் கூறினார்.
பல்வேறு கலாச்சாரங்களின் சங்கமம் ஆன விரிகுடாப் பகுதியில், நான்கு பேரைச் சந்திக்கும்போது, தென்னிந்தியா என்றாலே இட்லி, வடை சாம்பார் என்று இல்லாமல், நீங்கள் கர்நாடக சங்கீதம் பற்றியும் பேசலாம். அது சுவையான தலைப்புதான்.
அனுராதா சுரேஷ்
கே: பெற்றோருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? ப: அறிவுரை சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. ஒரு கலையின் மீது தமது குழந்தைகளிடம் இருக்கும் தீவிர ஆர்வத்தைப் புரிந்துகொள்வது வெற்றிக்கு வழி வகுக்கும். நாம் இந்தியர்கள் அல்லது நான் இதை விரும்புகிறேன் என்று சொல்லிக் குழந்தைகளை எதையும் கற்க வற்புறுத்தக் கூடாது. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதைக் கண்டறிய வேண்டும். 8, 9 வயது வரையில் எல்லாவற்றையும் கற்பிக்கலாம். அதற்குப் பின் அவர்களோடு உட்கார்ந்து பேச வேண்டும். எதுவுமே செய்யாமல் இருக்கவும் விடக்கூடாது. படிப்பைத் தவிர, கலை ஒன்று, விளையாட்டுகளில் ஒன்று என்று அவர்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள். நேரத்தையும் சக்தியையும் அவர்கள் அதற்காக ஒதுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வையுங்கள். அதுதான் வெற்றிக்கு வழி. அவர்களே தேர்ந்தெடுத்தால், பள்ளிக் கல்வியை முடித்த பின்னாலும் அவர்களது ஈடுபாடு தொடரும். |
|
உரையாடல்: சி.கே. வெங்கட்ராமன் தமிழ் வடிவம்: மதுரபாரதி |
|
|
|
|
|
|
|
|