|
|
|
இனம், நிறம் என்கிற கண்ணாடிக் கூரைகளைத் தகர்த்து திரு. ரவி ராஜன் California Institute of the Arts (CalArts, LA) பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவியை அடைந்துள்ளார். தமிழ் அமெரிக்கர்கள் பெருமைகொள்ள வேண்டிய மிகப்பெரிய சாதனை இது. சிறந்த நாடகத்துறை சாதனைகளைக் கௌரவிக்கும் Tony Awards Nominations தேர்வுக்குழுவில் இவர் ஒருவர். பர்ச்சேஸ் பல்கலைக் கழகத்தில் பணிபுரிகையில் Enterpreneurship in the Arts என்கிற பாடத்திட்டத்திற்கு இவர் வித்திட்டார். இசைத்துறையில் மிகுந்த ஈடுபாடுள்ள ரவி ராஜன் டிரம்பெட் வித்தகர் என்றாலும் இவரது ஆர்வங்கள் கணினி, அனிமேஷன், கலைகள், நாடகம், தொழில்முனைதல் என்று பலவாறாக விரிகிறது. இரண்டாம் தலைமுறைத் தமிழ் அமெரிக்கரான இவர், வழக்கத்துக்கு மாறாக, சராசரிப் பொருளாதாரம் கொண்ட குடும்பத்தில் பிறந்து STEM துறைகளைத் தேர்ந்தெடுக்காமல் புதியதொரு பாதையைத் தனக்கென அமைத்துக்கொண்ட துணிச்சல்காரர். இவற்றுக்கான பின்னணியையும், அவரது மனவோட்டத்தையும் அறிய, அவரோடு உரையாடினோம். இதன் முதல் பகுதி சென்ற இதழில் வெளியானது. மேலும் சுவையான பலவற்றை இங்கே வாசியுங்கள்....
*****
உழைப்பும் வெற்றியும் நான் பிராட்வேயில் டிரம்பெட் வாசிக்கும் அளவுக்கு உயர எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள். அதற்குப் பல காரணிகள் உண்டு. கடின உழைப்பு என்பது நம் கையில் இருப்பது. ஆனால் அதிர்ஷ்டம் என்பது நம் கையில் இல்லை. இந்தச் சமுதாயம் மேதைகளை அதிமாகவே கொண்டாடுகிறது. மேதைகள் ஏதோ ஜீயஸின் (Zeus: இந்திரனுக்கு இணையான கிரேக்கக் கடவுள்) தலையிலிருந்து தோன்றியதுபோல நினைக்கிறார்கள். அவர்கள் மேதைகள் ஆகுமுன்னர் பல விஷயங்கள் நடக்கின்றன. அப்புறம்தான் அவர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகிறார், சரியா? அதை நாம் பின்னோக்கிப் போய்ப் பார்க்கமுடியும். ஏதேதோ சின்னச் சின்ன விஷயங்களாக நடந்து, திடீரென்று அவர் சேரவேண்டிய இடத்தில் வந்து சேர்ந்துவிடுகிறார்.
ஆக, முக்கியமான விஷயம் கடின உழைப்புத்தான். அது உன் கையில் இருக்கிறது. அர்ப்பணிப்பு, முழுக்கவனம்; அதற்காக நீ வியர்வை சிந்தாவிட்டால் உன்னால் எதையும் பெறமுடியாது. எளிமையானதென்று எதுவுமில்லை.
ஒரு கலைப் படைப்பின் வெற்றி ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணிதத்தில் கூறிவிடலாம். ஓர் ஓவியத்தை எப்படி மதிப்பிடுவது? கலை உனக்குள் எதையோ உணரவைக்கும். காணும் கலை என்றாலும், நிகழ்த்தும் கலை என்றாலும், அவற்றைப் பார்க்கும்போது ஓர் அனுபவம் ஏற்படுகிறது. அது நல்லதா? அது குறிப்பிடத் தக்கதா? அதில்தான் இருக்கிறது விஷயம். நல்லது கெட்டது என்பது பார்ப்பவரைப் பொருத்தது. பார்க்கப்படுவது அவருக்கு எத்தனை அணுக்கமானது? நீ வாழ்நாளில் நடனத்தைப் பார்த்ததே இல்லையென்றால், முதல்முறையாக ஒரு கதக் நடனத்தைப் பார்த்தால் மிக நன்றாக இருப்பதாக நினைப்பாய். ஆனால் அமெரிக்காவில் மாடர்ன் டான்ஸ் ஏராளமாகப் பார்ப்பவராக இருந்தால், உனக்குக் கதக் பிடிக்காமல் போகலாம். அது உன் பார்வை, சரியா? ஆனால் அழகியல், தொழில்நுணுக்கம் என்று டோனி விருதுகளில் பல ஒப்பீட்டு அம்சங்கள் உள்ளன. அதை மனதில் வைத்துக்கொண்டு பார்ப்போம். அப்போதுதான் ஒரு படைப்பின் வெற்றியைத் தீர்மானிக்க முடியும். உண்மையிலே வெற்றிகரமான படைப்புகள் பலதரப்பட்டவர்களுக்குப் பலதரப்பட்ட அனுபவங்களை அளிக்கின்றன. அவை குறுகலானவை அல்ல.
மிகவும் வெற்றிகரமான எவரும் சோம்பேறியாக இருந்து நான் பார்த்ததில்லை. ஏனென்றால் வெற்றிக்குக் குறுக்குவழி கிடையாது. அங்கேதான் கடின உழைப்பின் அவசியம் தெரிகிறது. வாழ்க்கை சிக்கலானதாக இருப்பதால்தான் சுவாரசியமாக இருக்கிறது. எளிதான விடைகள் இல்லை. செய்தே ஆகவேண்டிய எதுவுமே எளிதானதாக இருப்பதில்லை.
CalArts-ன் தலைவர் ஆன முதல் தெற்காசியர் CalArts-ன் முதல் தெற்காசியத் தலைவர் என்று சொல்வதில் ஏதேனும் விசேஷம் உண்டா? இருக்கிறது. அப்படி அறியப்படத்தான் நான் விரும்புகிறேன். அப்படிச் சொல்வதால் நாம் யாவரும் ஒன்றிணையலாம் என்கிற ஆசை எனக்கு உண்டு. நாம் அதைக் கொண்டாடலாம். பாருங்கள், ஒருநாள் இங்கே தீபாவளியைப் பற்றிக் குழந்தைகள் புத்தகம் ஒன்று வெளிவரும். அதில் இந்தியர்கள் தீபாவளி கொண்டாடுவதைப் பற்றியல்ல, ஓக்லஹாமா மக்கள் தீபாவளி கொண்டாடுவதைப் பற்றி எழுதப்பட்டிருக்கும். அந்தப் புத்தகம் எனக்குச் சுவையானதாக இருக்கும். ஏனென்றால் அப்படிப்பட்ட எதார்த்தத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அது நல்லது.
ஆனால் இந்த 'தேசி' (ABCD என்பதில் வருவதைப் போல) என்றெல்லாம் குறிப்பிடுவது எனக்குச் சரியாகத் தெரியவில்லை. என் அக்கா இந்தியாவில் பிறந்தார், நான் இங்கு பிறந்தேன். அப்படியானால் எங்களில் ஒருவர் தேசி, மற்றொருவர் தேசியில்லையா?
வால்ட் டிஸ்னியும் ஸ்டீவ் லீவைனும் வால்ட் டிஸ்னி CalArts பல்கலையைத் தொடங்கினார். ஷபோ கலைப்பள்ளி, லாஸ் ஏஞ்சலஸ் இசைப்பள்ளி ஆகியவை பொருளாதார ரீதியில் தவித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவர் அவற்றை எடுத்து நடத்தினார். அனிமேஷன் என்றால் அதற்கு ஓவியமும் வேண்டும், இசையும் வேண்டும் என்பதை அவர் எண்ணிப் பார்த்து இவற்றைச் செய்தார். படைப்பாற்றல் மிக்கவர்களால் கீழிருந்து மேலாக, வேறொரு கோணத்தில் பார்க்கமுடியும். அப்படி வால்ட் டிஸ்னி பார்த்த காரணத்தால் இன்றைக்கு உலகம் முன்னேறியுள்ளது.
எனக்கு முன்னர் 29 ஆண்டுக் காலம் கேல் ஆர்ட்ஸின் தலைவராக இருந்த ஸ்டீவ் லீவைன் அதற்கே தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார். அவரது இடத்தை நிரப்புவது கடினம். அவருடைய உழைப்பினால்தான் இன்றைக்கு CalArts இத்தனை உயரத்தை எட்டியுள்ளது. அவர் எப்படித் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தாரோ, நானும் என்னால் இயன்ற அனைத்தையும் நிச்சயம் செய்வேன்.
நான் செய்ய விரும்புவது சிறிய கல்வி நிறுவனத்தின் அளவுக்கேற்ப அதன் பொருளாதாரப் பரப்பு குறைவாக இருக்கிறது. அதே நேரத்தில் அதில் இருப்பவர்கள் நெருங்கிச் செயல்பட முடிகிறது. அதில் பல அனுகூலங்கள் உள்ளன. ஆனால், மொத்தச் செலவினத்தையும் குறைவான எண்ணிக்கை கொண்டவர்களே பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அந்த நிலையில் நமக்குப் பெரிய நிதிக்கொடைகள், நிதி திரட்டும் செயல்பாடுகள் எல்லாம் தேவைப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டுமே இப்படித்தான். இப்போது நான் எடுக்கின்ற நடவடிக்கைகளின் காரணமாக நிதி வளர்ச்சி சாத்தியமாகும், ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்று நான் நம்புகிறேன்.
நமது இளைஞர்கள் கலைத்துறைக்கு வருவது... கலைஞராகும் நோக்கத்துடன் ஒருவர் கலையைக் கற்கக்கூடாது. கலையைக் கற்கும் நோக்கத்தில்தான் கற்கவேண்டும். கலை உன்னை நெகிழச் செய்தால், உள்ளிருந்து உந்துதல் கொடுத்தால், உலகத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வைத்தால் நீ கலையைக் கற்க வேண்டும். இளங்குழந்தைகளின் பெற்றோர் கலை மற்றும் கலாசார நிகழ்ச்சித் தயாரிப்புகளில் பங்கேற்க வேண்டும். அது மிக முக்கியம். அவற்றைக் கற்கவேண்டும். கலைநிகழ்ச்சிகளுக்குப் போகவேண்டும். ஓவியம் அல்லது நடனத்தை ஒருவர் கற்கப் போகும்போது, அதற்கான ஒழுக்கமும் உழைப்பும் உன்னை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்வது கடினம். அதே நேரத்தில் அதை நீ ரசிக்கவும் செய்கிறாய்.
குழந்தைகள் ஏதேனும் செய்ய விரும்பினால் அனுமதியுங்கள். செய்யட்டும். உற்சாகப்படுத்துங்கள். அவர்களோடு சேர்ந்து செய்யுங்கள். அவர்கள் கலைஞர் ஆகாமல் போகலாம். அதில் தவறில்லை. ஒருவேளை அவர்கள் கலைஞராக விரும்பினால், அதுவும் நல்லதே. ஏனென்றால், நாமெல்லோருமே சமுதாயத்தில் முக்கியமான பாத்திரங்களை வகிக்கிறோம், நாம் இறுதியாக இவற்றையெல்லாம் ஒருங்கிணைந்துதான் செய்யப் போகிறோம். |
|
|
திறமையைக் கண்டறிதல்... ஒருவர் கல்லூரிக்கு வரும்போது, அவர் பத்தாயிரம் இருபதாயிரம் மணி நேரம் அதற்கெனச் செலவழித்திருந்தால் அவரை நாம் திறன்மிக்கவர் என்கிறோம். நாம் பார்ப்பது விடாமுயற்சி, மனவுறுதி, ஊக்கம். சரியா? ஏதோ புகைமூட்டம் போல இனந்தெரியாத ஒன்றை நாம் அவர்களிடம் தேடுவதில்லை.
திறமை முன்னெழுந்து நிற்கும். உன் படைப்பைக் காட்டு, உன்னைப்பற்றிச் சொல் என்கிறோம். அவர்கள் எப்படி ஆர்வத்தில் துடிக்கிறார்கள், எப்படி அதையே சிந்திக்கிறார்கள், அதற்கென எப்படிப் பாடுபடத் தயாராக இருக்கிறார்கள் - வேறெதையும்விட இவைதாம் அவர் யார் என்பதைத் தீர்மானிக்கின்றன. சிலருடைய பெற்றோருக்கு கலைகுறித்துத் தெரியாது அல்லது உதவமாட்டார்கள், சிலருக்குப் பள்ளியிலோ வெளியிலோ எந்த ஆதரவும் இருந்திருக்காது. ஆனால் அவர்கள் ஆர்வத்தால் உந்தப்பட்டு கல்லூரிக்கு வருவார்கள். அவர்கள் படைப்பாளி ஆகக்கூடாது அல்லது முடியாது என்பதல்ல. 10,000 மணிநேரம் உழைத்தவனை ஒரு கலைப்பள்ளி சேர்த்துக் கொள்ளலாம். மற்றொரு கலைப்பள்ளி ஒருவனது ஆர்வத்தைப் பார்த்து, இங்கு வந்து கற்றுக்கொள்ளட்டும் என்று சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு விஷயம், பதினெட்டு வயதில் கலைப்பள்ளிக்குக் கற்க வரும் இளைஞன் மரணத்தைப் பார்த்ததில்லை, காதலை அனுபவித்ததில்லை, வலியை உணர்ந்ததில்லை. இவை மூன்றும் அற்புதமான கலைக்கு உரமாகும். காலப்போக்கில் கலைஞன் பக்குவமடைகிறான்.
கலைக்கல்வித் துறையில் இந்தியர்கள் இங்கே இந்தியர்கள் பெரிய உயரங்களைத் தொட்டிருக்கிறார்கள். மைக்ரோசாஃப்டின் CEO ஒரு தமிழர். பஃபலோ பல்கலைக்கழகத்தின் தலைவர் ஓர் இந்தியர். இவர்கள் பொறியியல் அல்லது அறிவியல் பின்னணி கொண்டவர்கள். ஆனால் கலை என்று எடுத்துக்கொண்டால், நிலைமை அப்படி இல்லை. வெகுசிலரே இருக்கிறார்கள்.மேரிலாண்ட் சிடி கலைக்கல்லூரியின் தலைவர் ஓர் ஆசியர். ரோடு ஐலண்ட் வடிவமைப்புப் பள்ளியின் தலைவர் ப்ரதிபா ராய் ஓர் இந்தியர். மிச்சிகன் பல்கலையின் கலைப்பள்ளித் தலைவராக இருப்பவர் சிங்கப்பூரைச் சேர்ந்த குணா நடராஜன், நல்ல நண்பர், மிக நன்றாகத் தமிழ் பேசுவார்.
கலையே வாழ்க்கையாக... தொடக்கத்தில் கலைகளைப்பற்றி, அதைக் கற்றால் எந்தெந்தப் பதவிகளை அடையலாம் என்பதைப் பற்றியெல்லாம் தெரியாது. ஆனால் அப்படி ஒரு பெரிய உலகம் இருப்பது தெரியும். கலைஞர்களெல்லாம் பட்டினி கிடக்கவில்லை என்பது தெரியும். ஏன், சிலசமயம் அவர்கள் மற்றவர்கள் அளவுக்கே சம்பாதிக்கிறார்கள் என்பதும் தெரியும். ஆனால், கலைஞர்கள் மகிழ்ச்சியால் நிரம்பியவர்கள். அவர்கள் பெரும் பணக்காரர்களாக இல்லாமல் போகலாம், ஆனால் அவர்களில் 90 சதவிகிதம் பேர் மன நிறைவோடு வாழ்கிறார்கள். இன்றைக்கு நான் நடிக்கவோ, டிரம்பெட் வாசிக்கவோ வாய்ப்புக் கேட்கவில்லை. ஆனாலும் ஆரம்பத்தில் சில தடங்கல்கள் இருந்தன. அவற்றை நான் தடங்கலாகக் கருதவில்லை.
தென்றல் தொடர்பு தென்றல் என்னை நேர்காணல் செய்யப்போகிறது என்பதை என் பெற்றோருக்குக் கூறினேன். அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம். அவர்கள் தென்றல் வாசகர்கள்தாம். அதுமட்டுமல்ல, என்னோடு நேரடித் தொடர்பில்லாத பலரிடம் தென்றல் போய்ச் சேருகிறது. ஆகவேதான் நான் இந்த நேர்காணலை முக்கிமானதாக எண்ணுகிறேன். எனக்குத் தமிழ் பேச வரும், ஆனால் படிக்க வராது.
ஆழ்ந்து சிந்திக்கத் தக்க கருத்துக்களை நுணுக்கமாகப் பார்த்து, நம் எல்லாக் கேள்விகளுக்கும் மிகுந்த கவனத்தோடு பதில் கூறிய ரவி ராஜன் அவர்களுக்குத் தென்றல் வாசகர்கள் சார்பில் நன்றியும் வாழ்த்தும் கூறி விடைபெற்றோம்.
உரையாடல்: சி.கே. வெங்கட்ராமன், அபி ஆழ்வார் தமிழில்: மீனாட்சி கணபதி
*****
புதுமை படைப்பவர்கள் படைப்புத்துறையில் புதுமை படைத்தவர்களை உணவு, ஃபேஷன் இந்தத் துறைகளில் நிறையப் பார்க்கலாம் ஆனால் கிளாசிகல் இசையில் சென்ற பத்தாண்டுகளில் எத்தனை பேர் செய்திருக்கிறார்கள் என்று கேட்டால் இரு கை விரல்களுக்குள் அடங்கிவிடும். வேறு சில துறைகளில் புத்தாக்கக் கலைஞர்களாக நான் இவர்களைப் பார்க்கிறேன்:
ழான் ஜார்ஜ் ஃபோங்கரிக்டன் சமையற்கலைஞர்களில் ழான் ஜார்ஜ் ஃபோங்கரிக்டன் (Jean-Georges Vongerichten) ஒரு ஃப்ரெஞ்ச் ஹாட் க்விஸீன் ஷெஃப் ஆகத் தொடங்கினார். பிறகு ஷாங்காய்க்கும் அதன்பின் இந்தோனேசியாவுக்கும் போனார். ஃப்ரெஞ்ச் ஹாட் க்விஸீனில் ஷாங்காயின் தாக்கத்துடன் அவர் இந்தோனேசியாவைப் பரிமாறுகிறார்! அவர் மிக வெற்றிகரமான உணவக நிறுவனர் மற்றும் எக்ஸக்யூடிவ் ஷெஃப். 'மாறுபட்ட அனுபவங்கள் என்னிடம் உள்ளன, இப்படி ஒரு உணவகம் இல்லை. அதை நான் தொடங்குவேன்' என்று அவர் தொடங்கினார்.
அன்னா சூயி ஃபேஷன் டிசைனர்களிலும் இப்படிப் பட்டவர்களைப் பார்க்கலாம். ஏதோ ஒரு கம்பெனிக்குள் இருந்துகொண்டு செய்யாமல், தானாகவே, தன் பெயரிலேயே ஒரு ஃபேஷன் லேபலை உருவாக்கினார் அன்னா சூயி (Anna Sui).
க்ளேர் சேஸ் செவ்விசை என்று எடுத்துக்கொண்டால் க்ளேர் சேஸ் (Claire Chase) மற்றும் அவருடைய ICE (International Contemporary Ensemble) நினைவுக்கு வருகிறது. ஓபர்லின் கல்லூரியின் இளம் மாணவியான அவர் இசையை எப்படிக் கூட்டாகச் சேர்ந்து செய்யமுடியும் என்று யோசித்ததில் பிறந்தது ICE. அவருக்கு மேக்ஆர்த்தர் ஆய்வுதவி நிதி கிடைத்தது.
- ரவி ராஜன்
*****
படிப்பும் வேலையும் படிப்பதே வேலைக்காக என்றுதான் நினைக்கிறார்கள். நான் இதைக் கற்றேன், அதிலேயே வேலை கிடைத்தது என்று சொன்னால் வாழ்க்கை வெற்றி பெற்றதாக நினைக்கிறார்கள். ஒருவர் ஜெர்மானிய இலக்கியம் படிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் என்ன ஜெர்மானிய இலக்கியம் தொடர்பான வேலையா பார்க்கப் போகிறார்? அநேகமாக இல்லை. அதற்காக ஜெர்மானிய இலக்கியம் கற்கக்கூடாது என்று பொருளல்ல. ஆனால் கலைகளைக் கல்வியாகப் படிப்பதைக் குறித்த உலகத்தின் பார்வை பிழைபட்டதாக இருக்கிறது. காரணம், அது வேலை பெறுவதற்கான கல்வியல்ல என்பதோடு அது மிகவும் சிக்கலானதும்கூட என்பதால்தான்.
- ரவி ராஜன் |
|
|
|
|
|
|
|
|