வினோத் ராஜன் சீர்காழி சிவசிதம்பரம்
|
|
|
|
|
இந்து தர்மத்தின் தெரிந்தெடுத்த அம்சங்களை அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் பொருட்டு உருவாக்கப்பட்ட அமைப்பு சின்மயா மிஷன். அதனை சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் நிறுவி, வெற்றிகரமாக நடத்தி வருபவர் உமா ஜெயராசசிங்கம். உமா 1965ல் சுவாமி சின்மயானந்தாவைச் சந்தித்தது முதல் அவரையே தன் குருவாகக் கொண்டார். அவருடைய ஆசியுடன் 1972ல் சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் சின்மயா ஆன்மிக வகுப்புகளைத் தொடங்கினார். 1975 முதல் 1990 வரை சின்மயா மிஷனின் இயக்குனராக, பொருளாளராகப் பணியாற்றினார். 1981ல் குருதேவரின் விருப்பத்திற்கிணங்க லாஸ் அல்டோஸில் பால விஹாரைத் துவங்கினார். 6 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு இன்று 2000க்கும் மேற்பட்ட மாணவர்களோடு விரிகுடாப் பகுதியில் 3 கிளைகளாக விரிந்துள்ளது. ஆன்மிகம் தவிர, இந்திய மொழிகளும் கற்பிக்கப்படுகின்ற பால விஹாரில், தமிழ் மற்றும் இந்தி கற்பிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. உமா ஜெயராசசிங்கம் இந்து தர்மத்தின் மாண்டூக்ய காரிகா, முக்கிய உபநிடதங்கள், விவேக சூடாமணி, பகவத்கீதை ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தவர். அதுமட்டுமன்றி ரமண மகரிஷியின் தத்துவங்கள், துளசிதாசர் ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர். சின்மயாவின் உயரிய தகுதியான 'ஆச்சாரிய' அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்றல் இதழுக்காக அவர் இல்லத்தில் சந்திக்கச் சென்றபோது ஏதோ ஓர் ஆலயத்துக்குள் பிரவேசித்த உணர்வே ஏற்பட்டது. ஆன்மிகச் சூழலில் அமைதியான குரலில் பேட்டி துவங்கியது.
*****
கே: 'பால விஹார்' பள்ளியை நிறுவத் தூண்டியது எது? ப: என் மகள் 6 வயது இருக்கும்போது பக்கத்து வீட்டுக் குழந்தையுடன் சர்ச் நடத்தும் ஞாயிறு பள்ளிக்கு வாரந்தோறும் சென்று வந்தாள். என் மகள் தாய் மதத்தை அறியாமலேயே போய்விடுவாளோ என்ற பயம் எனக்கு வந்தது. இந்து மதத்தில் உள்ள - ஏன் உலகிலேயே பழமையான, விலை மதிப்பற்ற எண்ணற்ற இலக்கியங்கள், இதிகாசங்களை நம் குழந்தைகள் அறியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். சுவாமிஜி அமெரிக்காவுக்கு வந்தபோது "ஏன் பிற மதத்தினர்போல் நாமும் ஞாயிறு பள்ளி நடத்துவதில்லை?" என்று கேட்டேன். "ஏன் நடத்த முடியாது? நீயே நடத்து" என்றார். "நானா? பகவத்கீதை மட்டுமே எனக்குத் தெரியும். நான் எப்படி நடத்துவது?" என்றேன். "உன்னால் முடியும்" என்றார். துவக்கினேன். கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். நானும் படித்தேன். 60களில் இங்குவந்தபோது சுவாமிஜி சொன்னார், "இந்தக் குழந்தைகள் வேறு கலாசாரத்தில் வாழ்கிறார்கள். பெற்றவர்களும் பரபரப்பான சூழலில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு நம் கலாசாரப் பின்புலம், வேத தர்ம நெறிகள், இதிகாசங்களைச் சொல்லித் தருவதற்கான சூழலின்றி வசிக்கிறார்கள். இந்தியாவில் திரும்பிய பக்கமெல்லாம் கோவில்கள், பண்டிகைகள்; பெரியவர்கள் மூலம், ஊடகங்கள் மூலம் தினமும் கற்கிறார்கள். இங்குள்ள குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் தாங்கள் இந்துகள் என்று சொல்லத் தயங்கிறார்கள், இந்து மதச் சடங்குகளைச் செய்ய மறுக்கிறார்கள். முதலில் தான் ஒரு இந்து என்று சொல்லும் நிலைமயை ஏற்படுத்த வேண்டும்."
கே: சுவாமி சின்மயானந்தாவைச் சந்தித்த பிறகு உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டதா? ப: நான் என் அம்மாவிடம் கடவுளைப்பற்றி நிறையக் கேள்விகள் கேட்பேன். அம்மா அப்படியெல்லாம் கேட்காதே கடவுள் கோபித்துக் கொள்வார் என்று சொல்வார். கோபப்படுகிற கடவுளையா நான் கும்பிடுகிறேன் என்று கேட்டேன். அப்போது என் தாயாரின் குருநாதரான ரங்கநாத சுவாமிகள் வந்தார். கடவுளை அறிந்துகொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு இறைவனே ஒருவரை வழி நடத்த அனுப்புவான், அப்படிபட்ட ஒரு குருவை நீ விரைவில் சந்திப்பாய் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
"ராமாயணத்தைப் பாருங்கள். சபரி என்கிற முதியவள், ராமன் குடியிருந்த குடிலைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். ஆண்கள் மட்டுமே தங்கியிருந்த குடில் என்பதால் இரவில் சென்று சுத்தம் செய்து வருவாள். அவளுக்கு ராமனைப் பார்க்க ஆவல். இதை குருவிடமும் சொன்னாள். உன்னைப் பார்க்க ராமனே வருவான் என்று குரு சொல்லி அனுப்பினார். அயோத்திக்கு திரும்பிக் கொண்டிருந்த ராமன், லக்ஷ்மணனிடம் ஒரு நிமிடம் எனக்கு இந்த வழியாகப் போகவேண்டும் என்று சொல்லிவிட்டு சபரியின் குடிலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். சபரியின் உள்மனது ராமன் வருவதை அறிந்தது. இதுவரை ராமனைப் பார்த்ததில்லை. ராமன் உருவம் எப்படி இருக்கும் என்று தெரியாது இருப்பினும் ராமன் வரும் திசை நோக்கி ஓடினாள். தன்னுடன் கொண்டுசென்ற பழங்களை கடித்துப் பார்த்து நல்லவையாக இறைவனுக்குக் கொடுத்தாள். லக்ஷ்மணன் சொன்னான், "அண்ணா இவை எச்சில் பழங்கள்" என்று. இது அந்த மூதாட்டியின் அன்பு என்றான் ராமன். எச்சில் செய்து கொடுப்பது தவறு என்றுகூட அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை. இறைவனை நம்புபவர்களுக்கு இறைவன் கட்டாயம் வருவான். ஒரு நல்ல குருவின் மூலம் நீங்கள் அதை அறிவீர்கள்.
நான் சுவாமிஜியை மலேஷியாவில் சந்தித்த அதே வருடம்தான் நான் என் கணவரைச் சந்தித்தேன்.அவர் மலேஷியாவில் வருகைப் பேராசிரியராக இருந்தார். திருமணம் இலங்கையில் நடந்தது. பிறகு அமெரிக்காவுக்கு வந்தோம். சுவாமிஜியிடம் இருந்து கடிதங்கள் வரும், நான் என்ன படிக்க வேண்டும் என்று சொல்லி எழுதுவார். சுவாமி சொல்படி நடப்பதும், இறைப்பணி செய்வதும் எனக்குப் பூஜை செய்வதுபோல. என் அப்பா இறந்தபோது நான்மட்டும் அமைதியாக இருந்தேன். என் சகோதரிகள் கேட்டார்கள், "உன்னால் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது? அப்பாவுக்கு இப்படி நேர்ந்திருக்க வேண்டாம்" என்று. நான் சொன்னேன் "அப்பாவுக்கு வயது 77 பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த வேதனையுடன் அவர் வாழ வேண்டுமா? இறைவன் அவருக்கு மேலும் கஷ்டத்தைக் கொடுக்காமல் அழைத்துக் கொண்டான். நீங்கள் உங்களுக்கு அப்பா இல்லை என்று வருந்துகீறீர்கள். நான் அவர் மேலும் கஷ்டப்படாமல் சென்றுவிட்டார் என்று சந்தோஷப்படுகிறேன்" என்றேன். சுவாமிஜியை சந்தித்த பிறகுதான் இந்தப் பக்குவம் எனக்குக் கிடைத்தது.
கே: பெற்றோர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்? ப: பெற்றோர்களில் பெரும்பாலோர் தம் குழந்தைகள் வாரத்தில் ஒருநாள் ஒரு மணி நேர வகுப்பிலேயே எல்லாவற்றையும் கற்றுக் கொண்டுவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். அது தவறு. கண்ணால் பார்ப்பவைதான் மனதில் தங்கும். பெற்றோர்கள் முதலில் தாங்கள் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். குடும்பச் சடங்குகள் சம்பிரதாயங்களின் பின்புலத்தை அறிந்துகொண்டு ஒழுகுதல் வேண்டும். அப்படிச் செய்தால் குழந்தைகள் அவற்றை இயல்பாகவே பின்தொடரும். தெரிந்தவரை அவற்றின் அர்த்தத்தைப் பெற்றோர்கள் சொல்லித் தரலாம். பொருள் தெரியாத ஒரு மந்திரத்தை, செய்யுளை, ஸ்லோகத்தைச் சொல்வதில் மனத்தடை உண்டாகலாம் என்றால் வற்புறுத்த வேண்டாம். நம் பண்டிகைகளைத் தவறாமல் கொண்டாட வேண்டும். குழந்தைகளிடம் தாம் எதிர்பார்ப்பதைப் பெற்றோர்கள் முதலில் செய்யவேண்டும். கே: விரதம் இருப்பது குறித்து... ப: ஒருநாள் ஒரு குழந்தை வந்து விரதம் இருந்தால் நல்லது என்று என் அம்மா விரதம் இருக்கிறார்கள் என்னையும் இருக்கச் சொல்கிறார்கள். அது அவசியமா என்றான். தேவையில்லை என்றே நான் சொல்வேன். இந்த உடல் கடவுள் குடியிருக்கும் ஒரு கோவிலைப் போன்றது. அதை ஏன் உணவில்லாமல் தண்டிக்க வேண்டும் என்பார் என் குரு. சாப்பாடே இல்லாமல் நம் உடலை வருத்திக் கொள்வதை விட அன்று ஒரு நாள் குழந்தைகளை கோக், சாக்கலேட், ஐஸ்க்ரீம், junk food சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொல்லலாம். அம்மா சமைத்த உணவை மட்டுமே சாப்பிடச்சொல்லலாம் என்று நான் அந்தப் பெற்றோர்களிடம் சொன்னேன். அந்தக் குழந்தையும் அதை ஏற்றுக் கொண்டது. கே: இக்காலத்தில், அதிலும் இங்கு வளரும் குழந்தைகள் சமயம் சார்ந்த கல்வியை ஏற்றுக் கொள்வார்களா? ப: ஒருநாள் எங்கள் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வருத்தத்தோடு என்னிடம் வந்து, "என் பிள்ளை எட்டு வருடங்கள் இங்கு படித்தான். நேற்று என்னிடம் 'இனி நான் இப்பள்ளிக்குப் போகப் போவதில்லை' என்றான். ஏனென்று கேட்டால், 'இனி நான் நாத்திகன். எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை' என்கிறான்" என்றார். அந்தப் பையனிடம் "எந்தக் கடவுள் உனக்குப் பிடிக்கவில்லை?" என்று கேட்கச் சொன்னேன். நம் இந்துக் கடவுள்கள் பயங்கரமாக, கோபமாக உள்ளன. எனக்கு இந்தக் கடவுளைப் பிடிக்கவில்லை என்று வரிசையாகச் சில கடவுளரின் பெயர்களைச் சொன்னான். "உனக்குள் உள்ள கடவுளைப் பிடிக்கவில்லையா?" என்று கேட்கச் சொன்னேன். அவன் நான் அதைச் சொல்லவில்லை என்றான். 'ஆக நீ கடவுள் இல்லை' என்று சொல்லவில்லை. 'இந்தக் கடவுள் பிடிக்கவில்லை' என்று சில கடவுள்களைச் சொல்கிறாய். 'கடவுளே இல்லை' என்று சொல்பவன்தான் நாத்திகன். உனக்கு ஏற்புடைய நம் கடவுளர்கள் எவரையும் நீ வழிபடலாம் என்றேன். அந்தக் குழந்தைக்கு உண்மையில் இருந்தது கடவுளைப்பற்றிய குழப்பம். அதை அக்குழந்தை புரிந்துகொள்ளும் முறையில் எடுத்துச் சொன்னால் ஏற்றுக்கொள்ளும். அதுவும் பத்து, பதினைந்து வயதுக் குழந்தைகளுக்குப் பெரிய மன உறுதி இருப்பதில்லை. அவர்கள் மனம் ஒரே இடத்திலும் நிலைத்து இருப்பதில்லை. அவர்களின் தவறுகளைத் திருத்துவதும், நல்லவற்றை ஏற்றுக்கொள்ளச் செய்வதும் கடினமல்ல.
இந்து மதத்தில் பல உருவங்களில் கடவுளை வழிபடுகிறோம். எந்த வடிவம் பிடிக்குமோ அதை ஏற்றுக்கொள். எதுவுமே வேண்டாமா, உனக்குள்ளேயே கடவுள் இருக்கிறார். அதைக் கடைப்பிடி. இத்தனை முறை பூஜை செய்யவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை, என் சன்னதிக்கு வரவில்லை என்றால் நீ மதத்திலிருந்து விலக்கப்படுவாய் என்கிற கட்டுப்பாடு இல்லை. உன் வீட்டிலேயே கோவில் உள்ளது. உன்னிடம் கடவுள் உள்ளது. எப்படி வாழ வேண்டும் என்கிற தர்ம நெறியை சாஸ்திரங்கள் போதிக்கின்றன. இந்த வளைந்து கொடுக்கும் தன்மைதான் இந்து மதத்தின் சிறப்பு.
எத்தனையோ ஆண்டுகள், எத்தனையோ பேர் நம் நாட்டை ஆண்டபோதிலும், செல்வங்கள் எல்லாம் கொள்ளை போன போதிலும் இன்றும் நமக்கு வேண்டியது நம் நாட்டில் உள்ளது. நமக்கென்று ஒரு வாழ்முறை உள்ளது. இன்றும் இம்மதம் எல்லா மதங்களையும் ஏற்றுக் கொள்கிறது. எதையும் மறுக்காமல் இருக்கிறது. யாரையும் துவேஷிப்பதில்லை. வாழும் வழிமுறைகளை மட்டுமே சொல்லிச் செல்கிறது என்று விளக்கினேன். |
|
|
கே: இங்குள்ள குழந்தைகள் எப்படி? ப: உண்மையில் இங்குள்ள நம் குழந்தைகள் நமக்கு ஆசான்கள். இவர்கள் நமக்கே கற்றுக் கொடுப்பார்கள்தான். ஒருமுறை பள்ளியைச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். ஒரு குழந்தை வெள்ளை வேஷ்டி அணிந்து குங்குமம் இட்டுக்கொண்டு வந்திருந்தான். "இது என்ன உடை? கோவிலுக்கு போய்விட்டு வருகிறாயா?" என்று கேட்டேன். "இல்லை. இங்கு சாமிபற்றிப் படிக்கிறோம். பள்ளியிலேயே சாமி இருக்கிறது. சாமி புத்தகம் உள்ளது, பூஜை செய்கிறோம். அப்படியென்றால் இதுவே கோவில்தானே" என்றான் அவன். உண்மைதானே. எளிய அடிப்படை உண்மைகளைக்கூட இவர்களிடம் சிலசமயம் கற்றுக் கொள்கிறோம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்றால் அறிவைத் தரும் இடம் கோவிலேதான் அல்லவா! கே: குழந்தைகள் உள்ளத்தில் நல்ல விழுமியங்களை (values) விதைப்பது எப்படி? ப: ஒரு குழந்தை என்னிடம் அடுத்தவரைப் புண்படுத்தும் உண்மை முக்கியமா அல்லது மற்றவரை சந்தோஷப்படுத்தும் பொய் சிறந்ததா என்றுக் கேட்டது. பொய் சொன்னால் நாளைக்கும் அதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் அதே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். உண்மை அதுபோல் இல்லை. இன்று சொல்லிவிட்டு மறந்து விடலாம். இதை எங்கள் பள்ளியில் வகுப்பிலேயே விவாதமாக வைக்கிறோம். "உண்மையைச் சொல்லி முன்னுக்கு வருவீர்களா? அல்லது பொய்யைச் சொல்லி வேகமாக முன்னுக்கு வருவீர்களா?" என்று விவாதிக்கச் சொல்லுவோம். இறுதியில் உண்மையே சிறந்தது என்ற முடிவிற்கே பெரும்பாலும் வருவார்கள். கே: சுவாமிஜியிடம் உங்களுக்குப் பிடித்த ஒரு விஷயம் சொல்லுங்கள்? ப: ஒருமுறை சுவாமிஜியிடம் ஒருவர் வந்து நீங்கள் மதமாற்றம் செய்கிறீகளா? என்று கேட்டார். சுவாமிஜி சிரித்துக் கொண்டே, "நான் ஏன் மாற்ற வேண்டும்? இந்துக்களை இந்துக்களாக மதமாற்றம் செய்கிறேன், அவ்வளவே" என்றார். இது எனக்குப் பிடித்தவற்றுள் ஒன்று. இன்னும் நிறைய உண்டு.
கே: இங்கு வளரும் குழந்தைகளுக்குத் தவறு செய்தால் அதற்குரிய தண்டனை சட்டப்படி கிடைக்கும் என்று தெரியும். இது அவர்களைத் தவறு செய்யாமல் காக்கிறது. நீங்களோ தவறு செய்யக்கூடாது, தர்மத்தைப் பேணி வாழ வேண்டும்; இது இந்து தர்ம விழுமியம் (values) என்கிறீர்கள்? இவ்விரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ப: நம்முடைய மதத்தில் பாவ மன்னிப்பு என்கிற ஒன்று இல்லை. பாவத்தைத் தீர்க்கலாம். அதற்கு இன்னொரு பிறவி எடுக்க வேண்டியதே இல்லை. இந்தப் பிறவியிலேயே தன்னால் முடிந்த தான தர்மங்களைச் செய்யலாம். மனித நேயத்துடன் வாழலாம். துன்பம் கொடுப்பவர்களை மன்னிக்கலாம். நல்ல செயல் நல்லதைத் தரும். கடவுள் தண்டிப்பார் என்று நாம் சொல்வதில்லை. எங்கே அதர்மம் நடக்கிறதோ அங்கு தர்மம் எழும். தர்மம் இறுதியில் நிற்கும், அதர்மம் அழியும். அவரவர் செயலுக்குரிய பலன் அவர்களை வந்தடையவே செய்யும். கே: எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நம்முடைய இதிகாச, புராணக் கதைகளை எப்படி இந்த காலகட்டத்திற்கு ஏற்பக் கூறுவீர்கள்? ப: நம் இதிகாசங்கள் கட்டுக்கதைகள் அல்ல. ரிஷிகள் ஞானத்தில் எதிர்காலத்தைக் கணித்தவர்கள். வாடகைத் தாய் (surrogate mothers) சோதனைக் குழாய்க் குழந்தை (test tube babies) என்று இன்றைக்குச் சொல்கிறோம்; இதையே அவர்கள் கதையாகச் சொல்லிச் சென்றார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புஷ்பக விமானங்களைப் பற்றி நம் முன்னோர் சொல்லியிக்கிறார்கள். ராமன் அயோத்திக்குத் திரும்பிச் செல்கையில் தன்னுடன் வர விரும்பியவர்களை தன் விமானத்தில் ஏற்றிக் கொள்கிறான். அனுமன் சொல்கிறான் "ஐயனே என் சுற்றத்தினர் நம்முடன் வர விரும்புகிறனர். ராமன் அவர்களையும் ஏற்றிக் கொள்கிறான். விமானம் விரிகிறது.இன்றைக்கும் இதுபோல ஒரு expandable விமானம் கண்டு பிடிக்கப்படவில்லை. கர்ம யோகத்தைக் கற்பிப்பது கம்பராமாயணம், ஞானயோகத்தைக் கற்பிப்பது வால்மீகி ராமாயணம், பக்தி யோகத்தைக் கற்பிப்பது துளசிதாஸ் ராமாயணம். வரலாற்றில் நிகழ்ந்த ஒன்றின் சமூக ஞாபகங்கள்தான் இதிகாசங்கள். ஒவ்வொரு காலத்திலும் அவை தம்மைப் புதுப்பித்துக் கொள்கின்றன. காலம், இடத்திற்கு ஏற்றவாறு எத்தனை விதமாக நம் இதிகாசங்கள் புதுப்புதுப் பொருள்களைத் தருகின்றன என்பதை கவனித்தால் ஆச்சரியமாக இல்லை! 33 வயது வரையே வாழ்ந்த சங்கராசாரியார் ஆன்மிகத்தைப் பரப்ப தெற்கிலிருந்து வடக்குவரை நடந்தே பயணம் செய்தார். எது அதைச் சாத்தியப்படுத்தியது? நம் மந்திரகளுக்கு அளவற்ற சக்தி உள்ளது. வலியைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியை அது தரும். யுத்த தர்மத்தைப் பற்றி மகாபாரதம் சொல்வதைப் பாருங்கள். மஹாபாரதப் போர் அதர்மத்திற்கும் தர்மத்திற்கும் இடையே நடந்த போராட்டம். அங்கும் இரவில் போர்வீரர்கள் தத்தம் படையினரோடு சேர்ந்து உண்பர், சேர்ந்து களிப்பர். பகலில்தான் சண்டையிடுவர். இரவைப் பயன்படுத்தி வெற்றிபெற நினைக்கவில்லை.
கே: இங்கே கற்கும் மாணவர்களிடம் நீங்கள் காணும் மாற்றங்கள் என்ன? ப: இந்தியாவுக்குப் போவதில் இருக்கும் தயக்கம் நீங்கி, இந்தியப் பயணத்தை ரசிக்கிறார்கள். அந்தப் பாரம்பரியத்தின் நீட்சியாகத் தம்மைக் கண்டு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். வாரம் ஒருமுறை வெவ்வேறு வகுப்பு மாணவர்கள் சான்ட்விச் (sandvich) தயாரித்து கொண்டுபோய் இங்குள்ள வீடற்றோருக்குக் (homeless) கொடுக்கின்றனர். குளிர்காலத்தில் கம்பளிப் போர்வைகளைச் சேகரித்து ஏழைகளுக்குக் கொடுக்கின்றனர். 'ஊருக்கு உழைத்திடல் யோகம்' என்கிற பாரதியின் சொல்லுக்கிணங்க பிறர்க்கு உதவும் பெருங்குணத்தை இளவயதிலேயே இவ்வாறு அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, சின்மயாவின் மூத்த மாணவர்கள் புதிய இளைய தலைமுறைக்கு தாம் கற்றுணர்ந்த பாரம்பரியச் செழுமையை போதிக்கும் ஆசானாக, வழிகாட்டியாக விளங்குகின்றனர். இந்தத் திட்டம், இந்துப் பாரம்பரியத்தையும், இந்திய கலாசார வேர்களையும் குறித்த தெளிவைப்பெற விரும்புவோருக்கு வழிகாட்டும் அமைப்பாக வலுவாகத் தொடரும் என்பது உறுதி.
அவரது குரலில் தொனிக்கும் பெருமிதமும் நம்பிக்கையும் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. புன்னகை மாறாமல், குரலில் பக்தி ஒழுகப் பேசுகிறார். இவரிடம் மிகத் தொன்மையானதொரு ஆன்மிக, இலக்கிய, கலாசார, பண்பாட்டுப் பாரம்பரியத்தைத் தம் சந்ததியருக்குக் கொடுத்துச் செல்வதன் அவசியத்தை உணர்ந்து பேசுகிறார். இந்த அளப்பரும் தொண்டுக்கும், நம்மோடு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதற்கும் நன்றி கூறி விடைபெற்றேன்.
உரையாடல்: நித்யவதி சுந்தரேஷ்
*****
பால விஹார் 1981ல் சுவாமி சின்மயானந்தர் இந்த ஆன்மிகப் பயிற்சி அமைப்பைத் துவங்கினார். இங்கே குழந்தைகளுக்கு இதிகாச புராணங்கள், இந்து தர்மம் சொல்லும் வழிப்படி நம் கலாசாரத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் விழுமியங்கள் ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன. இந்து மதத்தின் அடையாளச் சின்னங்கள், பண்டிகைகள், அவற்றைக் கொண்டாடும் முறைகள், பல்வேறு இந்திய மொழிகள் (தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராட்டி) ஆகியவை கற்றுத்தரப் படுகின்றன. தமிழும் ஹிந்தியும் கற்பிக்கத் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன! ஆண்டுக்கு ஒருமுறை ஒரு வாரம் சின்மயா பள்ளி நடத்தும் முகாமில் கலந்து கொள்கின்றனர். அங்கும் உடற்பயிற்சி, விளையாட்டு இவற்றுடன் ஆன்மிக விஷயங்கள் கற்றுக்கொடுக்கப் படுகின்றன.
இங்கே மழலையர் வகுப்புத் தொடங்கி 12ம் வகுப்புவரை மாணவர்கள் பயில்கின்றனர். மழலையர், ஒன்று, இரண்டாம் வகுப்புகளில் கடவுள்கள் பற்றிய அறிமுகம் கிடைக்கிறது. 3, 4ம் வகுப்புகளில் ராமாயணமும் 5, 6ம் வகுப்புகளில் பாகவதம், ஹனுமான் மற்றும் ரிஷிகளின் கதைகளும், 7 முதல் 12ம் வகுப்பு வரை மஹாபாரதமும் பகவத்கீதையும் சொல்லித் தரப்படுகிறது. 12ம் வகுப்பு முடித்த குழந்தைகள் வேத முறைப்படிப் பட்டம் பெறுகிறார்கள். இந்து கலாசாரப் பின்னணி கொண்ட குழந்தைகள் ஒவ்வொரு வாரமும் ஒன்று கூடுகிறார்கள்; புத்தகங்கள் வாசிக்கிறார்கள்; தம் பண்டைப் பண்பாட்டு ஞானத்தைப் பிற கலாசார இனக் குழுக்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அதன் வழியாக, பிற மதங்கள், கலாசாரங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளவும் அவற்றின்மீது உரிய மரியாதை வைக்கக் கற்றுக்கொள்கிறார்கள்.
உமா ஜெயராசசிங்கம்
*****
எல்லாக் குழந்தைகளிலும் என் குழந்தை நான் என் குழந்தையை எல்லாக் குழந்தைகளிலும் காண்கிறேன். என் குழந்தைக்கு நான் எதையும் தனியாகக் கஷ்டப்பட்டு சொல்லித் தரவில்லை. மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதைப் பார்த்து அவர்களுடன் சேர்ந்து தானாகக் கற்றுக்கொண்டாள். ஒரு பள்ளியைத் துவங்கினேன் .என் பெண்ணும் கற்றுக் கொண்டாள். அடுத்தவர் குழந்தையை உங்கள் குழந்தையாக பாவித்துக் கற்றுக்கொடுங்கள். உங்கள் குழந்தை தானே வளரும். இதைத்தான் என் பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடமும் கூறுகிறேன். இன்றைக்கு என் பெண் திருமணமாகி வர்ஜினியாவில் பால விஹார் நடத்துகிறார்.
உமா ஜெயராசசிங்கம்
*****
தாயாரிடம் கற்றுக்கொண்டவை என் அம்மா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், வெய்யிலோ, குளிரோ, மழையோ எதுவானாலும் தானே சமைத்து எடுத்துக்கொண்டு பேருந்தில் போய் கோவிலுக்கு அருகில் இருக்கும் ஏழைகளுக்கு உணவளித்த பிறகே உண்பார். சாகும்வரை செய்திருக்கிறார். என் தாயாரிடம் இருந்து எத்தனையோ நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அம்மா இறைவனை திடமாக நம்பினார்கள். தர்மம் செய்வது என்பது வாழ்வின் அன்றாடச் செயல்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அதில் ஒன்று. என் தாய்க்குப் புற்றுநோய் வந்தது. அது முற்றிய நிலையிலும் வலி நிவாரண மருந்துக்களை எடுத்துகொள்ளவில்லை. மந்திரங்களை மட்டுமே உச்சரித்துக்கொண்டிருந்தார். மருத்துவர்களும் ஆச்சரியப்பட்டனர். வலியைத் தாங்கக்கூடிய சக்தியை மந்திரங்களே அவருக்குக் கொடுத்தன. மந்திரங்களுக்குக் கட்டாயம் அந்த சக்தி உள்ளது.
உமா ஜெயராசசிங்கம் |
மேலும் படங்களுக்கு |
|
More
வினோத் ராஜன் சீர்காழி சிவசிதம்பரம்
|
|
|
|
|
|
|
|