|
|
|
|
திரைப்படத்துறையில் அழுந்தக் கால் பதிக்கவிருக்கும் 34 வயது துறுதுறுப்பான யுவதி ஐஷு கிருஷ்ணா வாஷிங்டனில் பிறந்து மேரிலேண்டில் வளர்ந்தவர். கனடாவின் பிஷப் யுனிவர்சிடியில் இருந்து ஆங்கிலம், நாடகம், அரசியல்துறை ஆகியவற்றில் பி.ஏ.; இங்கிலாந்தின் ரீடிங் பல்கலையிலிருந்து பன்னாட்டுப் பாதுகாப்பில் எம்.ஏ.; ஜான் ஹாப்கின்ஸ் பல்கலையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் எம்.எஸ்.; அமெரிக்கன் பல்கலையிலிருந்து திரைப்படம் மற்றும் எலக்ட்ரானிக் மீடியாவில் MFA ஆகிய பட்டங்களை வாங்கிக் குவித்துள்ளார் என்றால் அவரது சூட்டிகை பற்றிக் கொஞ்சம் ஊகிக்க முடியும். Deloitte நிறுவனத்தின் ஊடகம் மற்றும் கேளிக்கைப் பிரிவில் பணி செய்யும் அவர் பாரமௌண்ட், டிஸ்னி, யூனிவிஷன், டெக்னிகலர் ஆகிய நிறுவனங்களைக் கையாள்கிறார். இவரது தாத்தா டி.கே. நாகராஜன், கர்நாடக இசையின் முன்னோடிக் கலைஞர்களில் ஒருவரான டி.கே. பட்டம்மாளின் சகோதரர். தென்றலுக்காக அவரோடு உரையாடியதிலிருந்து....
*****
அம்பாள்: உங்கள் குடும்பப் பின்னணி குறித்துச் சொல்லுங்களேன். இஷு: எழுபதுகளில் என்னுடைய தாத்தா அமெரிக்காவுக்குத் தூதரகப் பணியில் வந்தார். என்னுடைய தாத்தா பாட்டியுடன் நாங்கள் இருந்தோம். அம்மா லதா, அப்பா கிருஷ்ணன் இருவருமே எனக்கு ஏதாவது பொழுதுபோக்கு (hobby) இருப்பதை ஊக்குவித்தார்கள். ஜாஸ், பரதநாட்டியம், பாலே, வயலின், குரல் பயிற்சி வகுப்புகளில் சிறுவயது முதற்கொண்டே என்னைச் சேர்த்து விட்டார்கள். தாத்தா நாகராஜனும் பாட்டி பார்வதியும் கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுப்பார்கள் என்பதால் வீட்டில் எப்போதும் நிறையப் பேர் இருப்பார்கள். எப்போதும் கலைகள் என்னைச் சூழ்ந்திருக்கும். என் சகோதரி ரசிகா கிருஷ்ணாவுக்கு என்னைவிட கலைக் கண்ணோட்டம் அதிகம்.
கே: நீங்கள் வலது+இடது மூளைத் திறன் ஒருங்கே அமைந்த அபூர்வ ஆளுமை. சிறுவயதில் உங்கள் படைப்பார்வத்தைத் தூண்டியவர் யார்? ப: பெற்றோர்கள்தாம். டி.சி. தமிழ்ச் சங்க நாடகங்களில் என்னை அவர்கள் நடிக்க வைத்தார்கள். கலையை ஊக்குவித்தாலும் அதைப் பொழுதுபோக்காகத்தான் கருதினார்கள். நான் படிப்பில் கவனம் செலுத்த வேண்டுமென்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள். பொலிடிகல் சயன்ஸ், நாடகம், ஆங்கிலம் மூன்றிலும் பட்டங்கள் வாங்கினேன். நாடகம் என்ற பீநட் வெண்ணெயைப் பிற இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு நடுவே வைத்துத்தான் சமாளிக்க வேண்டியிருந்தது. ஒருபக்கம் மாலை நேரங்களிலும் வார இறுதிகளிலும் என் கலைத் திறனைத் தீட்டியபடியே நான் அலுவலகப் பதவியிலும் மேலேறினேன்.
கே: 'Arrange to Settle' திரைப்படத் தயாரிப்பில் இப்போது ஈடுபட்டிருக்கிறீர்கள். இதை எப்போது தொடங்கினீர்கள்? ப: MFA பட்டத்துக்கு நான் எழுதிய இரண்டு கதை-வசனங்களில் இது ஒன்று. இந்த நவீன யுகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாணம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதை நான் அடிக்கடி அமெரிக்கர்களுக்கு விளக்க வேண்டியதாக இருக்கிறது. இவர்களிடம் இரண்டு தவறான புரிதல்கள் உள்ளன: ஒன்று, பிறப்பதற்கு முன்னாலேயே ஜோடியைத் தீர்மானம் செய்துவிடுவார்கள் என்பது; இரண்டு, கல்யாணத்துக்கு முன்னால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதே இல்லை என்பது. முன்னாளில் அல்லது சில இந்திய சமூகங்களில் இது உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால், பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த கல்யாணம் என்பது சற்றே முன்னேறிய குடும்பங்களில் வேறுவகையாக உள்ளது. நமது திருமண இணையதளங்கள் கிட்டத்தட்ட டேடிங் தளங்கள் போலவே செயல்படுகின்றன என்பதை விளக்கினால் அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். என்னமோ என்று நினைத்துக் கொண்டிருந்த விஷயம் இப்போது அவர்களுக்குப் புரிந்துவிடுகிறது. இந்தப் படத்தின் கரு இதுதான். எல்லோரும் ரசிக்கத் தக்கதாக இருக்க வேண்டும் என்று இதில் ஒரு புதிய கோணத்தைப் புகுத்தியிருக்கிறேன். கதாநாயகி ஜோதி, தனது திருமணம் நிச்சயம் ஆனபின், அவளுடைய கனவு நாயகன் ஜஸ்டினைச் சந்திக்கிறாள். இதன் மூலம் இந்தியக் கதைக் கூறுகளை உலகளாவிய கதைக்கருவோடு சேர்த்திருக்கிறேன்.
கே: டி.சி.யைப் பற்றிய படம் ஏன்? டி.சி.யின் மேல் அப்படி என்ன மோகம்? ப: என் ஊர் டி.சி.தான். இந்த இடத்தின் சமுதாய வாழ்வைப் பற்றி எழுதினால் அதில் யதார்த்தம் தொனிக்கிறது. இந்தச் சமூகத்தின் வளப்பமான பின்னணியைப் படங்கள் பிரதிபலிப்பதில்லை. இங்கே எடுத்த படங்கள் பொதுவாக அரசியலையே களமாகக் கொண்டிருக்கின்றன. டி.சி. என்பது வெறும் அரசியல் மட்டுமல்ல.
கே: இந்தப் படத்தின் அடுத்த கட்டம் என்ன? ப: மே 7ம் தேதி படப்பிடிப்பை ஆரம்பிக்கிறேன். இதற்கான நிதி பெறுவது என் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. குறும்படம், டி.வி. முன்னோட்டம் எல்லாம் இதற்கு முன்னால் எடுத்திருக்கிறேன். ஆனால் முழுநீளத் திரைப்படம் எடுத்ததில்லை. அதற்குப் பணச்செலவு அதிகம். நிதி ஆதாரம் பெற்றுப் படத்தை முடிக்க வேண்டும்.
கே: மியூசிக் விடியோ 'Back to You', டி.வி. முன்னோட்டம் 'Young Adult', குறும்படம் 'Tiebreaker', 'My Bollywood Hero'வுக்கு நடன அமைப்பு, ஆவணப்படக் கதை 'God I Thee Wed' என்ற இத்தனை உங்கள் படைப்புகளில் எது உங்களைப் பெருமிதம் கொள்ள வைக்கிறது? ப: நல்ல கேள்வி. 2010 எனக்கு முக்கியமான வருஷம். நானும் 2005ல் இருந்து படங்கள் செய்துகொண்டிருக்கிறேன். ஒரு அங்கீகாரமும் கிடைத்ததில்லை. சரி, இதை விட்டுவிட்டு நமது தொழிலைப் பார்க்கலாம் என்று நினைத்தபோது மாநிலத்தின் ஆல் ஸ்டார்ஸ் என்னைக் கூப்பிட்டு 'Back to You' என்கிற அவர்களின் வீடியோவைச் செய்யக் கேட்டார்கள். அதன் முதன்மைப் பாடகி விக்டோரியா பேட்சனுக்காக நான் முதலில் செய்த இசை வீடியோ அவருக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு அதுதான். அதே வருடம் என்னுடைய 'Tiebreaker', நகரத்தின் திரைப்பட விழாவுக்கு அதிகாரபூர்வமாகத் தேர்வு ஆனது. Best Graphics பரிசையும் தட்டிச் சென்றது. 'Young Adult' இண்டி விழாவில் award of merit பெற்றது. தேவதாசிகளைப் பற்றிய டாக்குமெண்டரிக்கான திரைக்கதை 'விஷன்ஸ் அவார்டு'க்கு அனுப்பப் பட்டது. 'My Bollywood Superstar' சிறந்த நடன அமைப்புக்கான விருதைப் பெற்றது. தொடர்ந்து இந்தத் துறையில் ஈடுபடு என்று கூறுவதற்கான எல்லா அறிகுறிகளும் ஒரே சமயத்தில் தோன்றின.
கே: உங்களுக்குத் தூக்கம் வராமல் செய்யும் விஷயம் எது? ப: சினிமாவைப் பற்றியே நான் எப்போதும் நினைக்கிறேன். அதுதான் என் தூக்கத்தைக் கெடுப்பது. ஒரு புதிய ஐடியா வந்தால் எனக்குப் பரபரப்பாகிவிடும். நடு ராத்திரி எழுந்து உட்கார்ந்துகொண்டு எழுதத் தொடங்கிவிடுவேன். முழுநேரம் திரைத் துறையில் ஈடுபட ஆசை. ஆனால் என் வேலையை விட்டால் சமாளிக்க முடியுமா என்று தெரியவில்லை. எனக்கு வயது 34. இந்த வயதில் 'ஏழைக் கலைஞர்' ஆவது மிகக் கடினம். வீட்டுக்கடன் எல்லாம் இருக்கிறதே.
கே: அடுத்த 5, 10 வருடங்களில் எங்கே இருப்பீர்கள்? ப: முழுநேரம் திரைப்படத் தொழிலைச் செய்வது எப்படி என்று அறிந்திருப்பேன் என்று நம்புகிறேன். முழுநீளக் கதைப்படம் ஒன்றை எடுத்து அது தியேட்டர்களில் ஓடியிருக்கும். இதே கேள்வியை 5, 10 வருடங்களுக்கு முன்னால் நீங்கள் என்னைக் கேட்டிருந்தால் நான் இன்றிருக்கும் இடத்தை என்னால் ஊகித்திருக்க முடியாது.
கே: உங்களுக்கு மிகமிகப் பிடித்த படம் எது? ஏன்? ப: ஒரு திரைப்படத் தொழில்நுட்பப் பைத்தியத்துக்கு இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது கஷ்டம். எனக்கு மிகப் பிடித்த ஐந்து படங்களின் பெயர்களை மனதில் தோன்றிய வரிசையில் சொல்கிறேன். 'Requiem for a Dream', 'Trainspotting', 'The Beach', 'Pulp Fiction', 'Memento'. |
|
|
கே: உங்கள் பிடித்த நடிகர்/நடிகை? ப: அப்படி யாரும் இல்லை. சில படங்களில் சிலரின் நடிப்பு எனக்குப் பிடிக்கும். உதாரணமாக, 'There will be Blood' படத்தில் டேனியல் டே லூயிஸின் நடிப்பு பிரமாதம்.
கே: எந்த மாதிரி இசையைக் கேட்பீர்கள்? ப: இண்டி/ஆல்டர்னேடிவ். என்னை 'மியூசிக் ஜங்க்கி' என்று சொல்லலாம். நிறை ராக் இசைக் கச்சேரிகளுக்குப் போவேன். என் ஐபாட் ரொம்பப் பிடித்த விஷயம்.
கே: உபயோகமான நாலைந்து வலைப்பதிவுகள் (blogs), புத்தகங்கள், பத்திரிகைகள் சொல்லுங்களேன். ப: திரைக்கதை எழுத ஆசைப்படும் எவரும் Syd Field எழுதிய 'Screenplay' நூலை அவசியம் படிக்க வேண்டும். நான் Techie Geek என்பதால், பிலிப் ப்ளூம் philipbloom என்கிற வலைப்பதிவில் டிஜிடல் படமாக்கல் பற்றி எழுதியிருப்பவை பிடிக்கும். லெனோர் டி கோவன் எழுதிய 'Changing Directions' என்ற படம் இயக்குதல் பற்றிய நூலை மிகச்சிறந்ததென்று நினைக்கிறேன். சார்லட் பேக்கன் எழுதிய 'There is room for You' ஒரு நல்ல தேசி-கதைக்கரு கொண்ட நாவல். அந்த நாவலுக்குத் திரைக்கதை எழுதியபோது நான் அவரோடு பேசியுள்ளேன். 'Arrange to Settle' முடிந்தபின் மீண்டும் அதை வாசிக்கணும்.
கே: முக்கியமான வர்த்தகக் குறிப்பு? ப: மறுப்புக்கு அஞ்சாதே. எது வேண்டுமோ அதைக் கேள். அதிகம் போனால் 'இல்லை' என்று ஒருவர் மறுக்கப் போகிறார், அவ்வளவுதானே!
கே: பயணத்தின்போது செய்ய விரும்புவது? ப: சாப்பிடுவது. நான் ஒரு சாப்பாட்டு ராமி.
கே: பின்னாளுக்கான ஒரு கனவு? ப: இளைஞர்கள் தங்கள் கனவை நனவாக்கிக்கொள்ள உதவுவது.
கே: உங்கள் தலைமைப் பண்பைக் காட்டும் ஒரே ஒரு அறிகுறி? ப: நான் பேசினால் பிறர் கவனிக்கின்றனர். அவர்கள் என்னை மதிக்கிறார்கள்.
கே: யார் ஒருவரை நீங்கள் (கற்றுக்கொள்வதற்காக) டின்னருக்கு அழைக்க விரும்புகிறீர்கள்? ப: மீரா நாயர்.
ஆங்கில உரையாடல்: அம்பாள் பாலகிருஷ்ணன் தமிழில்: மதுரபாரதி |
மேலும் படங்களுக்கு |
|
|
|
|
|
|