Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | அமெரிக்க அனுபவம் | பொது | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar
Tamil Unicode / English Search
அமெரிக்க அனுபவம்
அமெரிக்காவில் திருமணம்!
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|செப்டம்பர் 2013||(1 Comment)
Share:
இளவயதில் 'வாஷிங்டனில் திருமணம்' விரும்பிப் படித்ததுண்டு. இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறிப் பல வருடங்கள் ஆகிவிட்ட தற்காலச் சூழ்நிலையில் இந்தியத் திருமணங்கள் இன்னும் சுவையாக அமெரிக்காவில் நடக்கின்றன. கலாசாரங்கள் கலந்து இன்று 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பொன்மொழி மெய்யாகிறது. ஆயிரம் காலப் பயிரான திருமணங்களால் புதிய உறவுகள் பூத்து அந்தப் பயிர் ஆலமரமாகி அமெரிக்காவில் புதிய விழுதுகளை உருவாக்குகின்றன.

கடந்த ஐந்து வருடங்களில் எங்கள் குடும்பத்திலேயே ஐந்து விதமான திருமணங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதை இங்கே திரும்பிப் பார்க்கிறேன்.

முதலில் நடந்தது சீக்கிய-இந்து திருமணம். அனைவரும் தலைப்பாகை அணிந்து 'குருத்வாரா'வில் கோலாகலமாய் இருந்தனர். ஊர்கூடி உறவை வளர்ப்பதற்கு இந்தத் திருமணம் ஒரு உதாரணம். பண்டைய காலத்தில் தெருவை அடைத்துப் பந்தல் போட்டு, உற்றாரும் உறவினரும் கூடிச் சமைப்பது வழக்கம். அதற்குப் பின்னர் சமையல் காண்ட்ராக்டர் என்று நமது ஊரில் வழக்கம் மாறிப் போயிற்று. இந்தத் திருமணத்தில் வந்திருந்த உறவினர்களும் நண்பர்களும் ஆளுக்கோர் உணவைத் தயார் செய்து வந்திருந்தது இந்த விழாவை ஒரு 'சமுதாய நிகழ்ச்சி' ஆக மாற்றியது வெகு சிறப்பு.

Click Here Enlargeஅடுத்து நடந்தது 'ஐயர்-ஐரிஷ்' திருமணம். ஐயர் மணமகனும் ஐரிஷ் மணப்பெண்ணும் கத்தோலிக்க முறைப்படி தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி மோதிரம் மாற்றி, உறுதிமொழி எடுத்து தம்பதிகள் ஆயினர். மறுநாள், நியூயார்க் பிள்ளையார் கோயிலில் மண்டபம் கட்டி, ஊஞ்சலில் அமர்ந்து பச்சைப்பிடி சுற்றி, பாட்டுப் பாடி, மாலை மாற்றி, அக்னியைச் சுற்றி வலம் வந்தனர். இதற்கு முதல்நாளே சாதம் வைத்து, வண்ண உருண்டைகளைச் செய்து அவற்றை Ziplock பையில் போட்டு வைத்தது வேறு கதை. திருஷ்டி சுற்றிய பிறகு இந்த உருண்டைகளை தரை அசுத்தம் ஆகாமல் ஒரு வாளியில் தூக்கி எறிந்ததைப் பார்க்க கூடைப்பந்து விளையாட்டு போல இருந்தது. இந்து, கத்தோலிக்கம் இரண்டு முறைகளிலுமே அக்னிதான் சாட்சி!

சிகாகோவின் பிரசித்தி பெற்ற பொடானிகல் கார்டனில் அடுத்த திருமணம். அழகான புடவை கட்டி, அலங்கார ஆபரணம் சூட்டி, அமெரிக்க மணப்பெண் செந்தமிழ் நாட்டு தமிழச்சியாய் அமர்ந்திட, இந்திய மணமகன் பதமாகத் தாலி கட்ட, மலர்கள் சொரிய மங்களமாய்த் திருமணம் நடந்தது. காற்றுக்குப் பெயர்போன இந்த நகரத்தில், பூந்தோட்டத்தில் மண்டபம் கட்டி, இயற்கைக்குச் சவால் விட்டது குறிப்பிடத்தக்கது. அடித்த காற்றில் மண்டபம் அசைந்தாலும், நமது பாரம்பரியம் தொடர்ந்தது. வந்திருந்த விருந்தினருக்கு திருமணத்தின் சடங்குகளை ஒரு 'மாஸ்டர் ஆஃப் செரிமனிஸ்' விளக்கிச் சொன்னது நன்றாக இருந்தது ஏன், நமக்கேகூடச் சில சடங்குகளுக்கு விளக்கங்கள் கிடைத்தன.

தமிழ்ப் பெண்ணும், மலையாள மணமகனும் அடுத்த திருமணத்தில் இணைந்தனர். கேரள முறையில் பூக்கோலம் போட்டு, தமிழ் முறையில் மாலை மாற்றி, அமெரிக்க முறையில் அலங்காரங்களுக்கு ஒரு 'Color Code' வைத்து மணமகனும் மணமகளும் ஒரே வண்ணத்தில் உடை அணிந்திருக்க எல்லைகள் கடந்து எங்கும் மகிழ்ச்சி பொங்கியது. வந்திருந்த விருந்தினர்களில் பலரும் எதிர்பாராத விதமாக ஒரே வண்ணப் புடவை அணிந்திருந்தது கண்கொள்ளாக் காட்சி. தட்டில் பூக்களும், பழங்களும் ஏந்திய மகளிர் அணிவகுப்பு அருமையிலும் அருமை. முதல் நாள் கேரள அறுசுவை விருந்தும், மறுநாள் தமிழ் நாட்டு உணவும், இரவில் இந்திய சீன உணவும் வெகு ஜோர்.
அடுத்து நடந்தது ஒரு 'Destination Wedding'. மணமக்கள் தேர்ந்தெடுத்த இடத்திற்குச் சுற்றமும், நட்பும் பயணம் செய்து போய் நடத்திக் கொடுப்பது இந்த வகைத் திருமணத்தின் சிறப்பம்சம். புதிய இடத்தில் பூத்தது ஒரு புதிய சிந்திக்கார மணமகனும், தமிழ் மணமகளும் அழகான திராட்சைக் கொடிகள் சூழ, மலைக்கும், மடுவிற்கும் இடையில் இணைந்தது அற்புதமாக இருந்தது. மாப்பிள்ளை அழைப்பில் சிந்தி முறையில் மாப்பிள்ளை குதிரை சவாரி செய்வார் என்று எதிர் பார்த்தோம். அமெரிக்க குதிரைகள் முரண்டு செய்ததால், மாப்பிளை நடை சவாரி செய்ய, அவரது குடும்பத்தினர் ஆடிப் பாடி டோலக் வாசித்து 'பராத்' ஒரே கலகலப்பு. தென்னிந்திய வழக்கப்படி ஆரத்தி எடுத்து, வட இந்திய வழக்கப்படி மாப்பிள்ளை வீட்டின் மூத்தவர்களுக்கெல்லாம் மாலை சூட்டி வரவேற்றோம். பெண்ணுக்கு கருகமணித் தாலியும், மாங்கல்யத் தாலியுமாக இரண்டு தாலிகள் கட்டப்பட்டன. சூரியன் பிரகாசமாய் இருக்க, வெயிலுக்குக் குடை பிடித்தபடி மணமக்கள் அமர்ந்திருக்க, மந்திரங்கள் சொல்லப்பட்டு அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து ஆனந்தமாய் சிந்து நதி வழியாகத் தமிழ் பாடியது.

மதங்களும், மொழிகளும், இனங்களும் இணையும் போது சம்பிரதாயங்கள் இன்னும் சுவைகூடிப் போகின்றன. இந்தத் திருமணங்களில் முதல்நாள் ஒத்திகை விருந்தும், மருதாணி இரவும், 'சங்கீத்' விழாவும் இன்னமும் சுவையைக் கூட்டின. திருமணம் முடிந்து நடக்கும் வரவேற்பு விழா அமெரிக்க கலாசாரத்தின்படி நடந்தது. மணப்பெண்ணின் தந்தையும், உடன் பிறந்தவரும், தோழியரும் சிறு வயது விளையாட்டுகளை நினைவு கூர, மணமகனின் உடன்பிறந்தோரும், பெற்றோரும், நண்பர்களும் அவரது குறும்புகளைப் பகிர்ந்துகொள்ள, கிண்டலும் கேலியும் ஆரம்பம். விருந்துக்குப் பின்னர் இசையும், நடனமும் அரங்கேற்றம்.

Click Here Enlargeஅமெரிக்காவில் இந்திய முறைப்படி திருமணம் செய்வது சுவாரஸ்யமான அனுபவம். அருகில் கிடைக்கும் கருங்கல்லை அம்மியாக பாவனை செய்ய வேண்டும். இருப்பதை இல்லையென்று மறுப்பதும், இல்லாததை இருப்பதாய் பாவிப்பதும் வேதாந்தத்தின் உச்சநிலை. இங்கு தெரியாத அருந்ததியைத் தெரிவதாக எண்ணுவது அப்படி ஒரு உயர்ந்த நிலைதானே! மந்திரங்களை அவசர அவசரமாய்ச் சொல்லவேண்டி வரலாம். அதனால் மந்திரங்களைத் தேர்ந்து எடுத்துச் சொல்வது ஒரு கலை. அதை வெளிநாட்டவருக்கு விவரிப்பதும் ஒரு கலை. மாமியார் முறுக்கு சுற்றலாம். ஆனால் மாப்பிள்ளை காசிக்குப் போக வேண்டாம். சம்பந்தி அத்தைக்குப் புளிக்காத தயிர், மாப்பிள்ளை பெரியம்மாவிற்கு புளித்த தயிர் என்று வேறுபாடு கிடையாது. இங்கு எல்லோருக்கும் சமபந்தி. அமர்ந்திருக்கும் மேசை எண்படி அறிவிக்க, அவரவர் சென்று தேவையான உணவைப் பரிமாறிக் கொள்வர்.

இந்த ஃப்யூஷன் திருமணங்களில் அது இல்லை இது இல்லை என்று குறை கூறாமல், உள்ளதை மகிழ்ச்சியோடு அனுபவிப்பர். கலாசாரப் பழமையில் நீந்த முயற்சித்தாலும் இங்கு எல்லாமே புதுமை. புதுமையில் இனிமை.

வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்
Share: 




© Copyright 2020 Tamilonline