|
|
சென்ற மாதத்தில் மிகவும் வருத்தம் கொடுக்கும் பல செய்திகள். கொலம்பியா விண்கலம் ஏழு விண்வெளி வீரர்களோடு வெடித்துச் சிதறியது கொடுமையான செய்தி. விண்வெளிப் பயணம் இன்னும் தீரர்களுக்கே உரியதாகத்தான் இருக்கிறது. 1970-ல் அப்பாலோ-13 விண்கலம் மீண்டும் பூமியை வந்து அடையுமா என்று அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே பரிதவித்தது. அமெரிக்காவின் பரம விரோதிகளாய் இருந்த சோவியத் மக்கள்கூட அப்பாலோ 13 திரும்ப வேண்டும் என்றுதான் விரும்பினர். விண்வெளிப் பயணத்தைப் பற்றிக் கனவுகூடக் காண முடியாத நிலையில் இருந்த ஏழை இந்தியாவிலும் பட்டி தொட்டியெல்லாம் பரபரப்பு. விண்வெளி வீரர்கள் பத்திரமாக வந்து சேர வேண்டும் என்று கோவில்களில் எல்லாம் சிறப்பு அர்ச்சனை. விண்வெளியில் நாடு, மத, இன, மொழி வேறுபாடுகள் எல்லாம் இல்லை. எல்லோரும் மனிதர்கள்தாம். விண்வெளியில் இருந்து பார்த்தால் நாடுகளின் எல்லைகள் தெரிவதில்லை. அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கும் நீல உருண்டை ஒன்றுதான் தெரியும்.
1986-ல் சேலஞ்சர் விண்கலம் ஏவப்பட்ட சில நொடிகளுக்குள் வெடித்துச் சிதறிய போதும், உலக மக்கள் அனைவரும், அந்தக் கலத்தில் இருந்த மனிதர்களைக் குறித்துத்தான் வருந்தினார்கள். அப்போது ஆயிரக்கணக்கான பள்ளிச் சிறுவர்கள் ஓர் ஆசிரியை விண்வெளிக்குச் செல்வதைப் பார்க்கக் குழுமியிருந்தார்கள். அந்தப் பிஞ்சு உள்ளங்கள் எப்படி அதிர்ந்திருக்கும்? குழந்தைகளின் அதிர்ச்சி பற்றி அன்றைய அமெரிக்கத் தலைவர் ரோனால்டு ரேகனும் அக்கறையோடு தனது இரங்கற் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். விண்ணை முட்டும் முயற்சியில் இது போன்ற இன்னல்கள் பின்னிப் பிணைந்தவை என்ற பாடம் நாட்டின் தலைவர் வழியாகவே குழந்தைகளுக்குக் கிட்டியது.
2003-ல் மீண்டும் ஒருமுறை பள்ளி மாணவர்கள் தம் பள்ளியில் படித்த மாணவி தரை இறங்குவதைப் பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். முனைவர் கல்பனா சாவ்லா பயணித்த கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியபோது, ஹரியானாவில் தாகூர் பள்ளிக் குழந்தைகள் எப்படிப் பதறியிருப் பார்கள் என்பதை நினைக்கவே முடியவில்லை.
******
கொலம்பியா வெடித்தபோது அமெரிக்காவுடன் இந்தியாவும், இஸ்ரேலும் துயரப்பட்டாலும், அமெரிக்காவுடன் முரண்பட்ட மனிதர்கள் சிலர் "வேண்டும் இந்த அமெரிக்காவுக்கு"என்று கொண்டாடியிருக்கிறார்கள். செப்டம்பர் 11க்குப் பிறகு உலகமே இரண்டு அணிகளாகப் பிரிந்து மனித நேயத்தை மறந்து விட்டிருக்கிறதோ?
செப்டம்பர் 11-ல் தகர்ந்தது வெறும் கட்டிடங்கள் மட்டுமல்ல. தனி மனித உரிமைகளை ஆணி வேராகக் கொண்டிருந்த அமெரிக்கச் சமூகக் கட்டமைப்பும் அமெரிக்கர்களின் தன்னம்பிக்கையும் தகர்ந்து கொண்டிருக்கின்றன. பழைய கண்டங்களின் வெறுப்பூட்டும் போர்களை ஒதுக்கி "புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேருடன் சாய்ப்போம்"என்று வீறு கொண்டு எழுந்த சமுதாயமா இது என்று நம்ப முடியவில்லை. இரண்டாம் உலகப் போரில் பெர்ல் துறைமுகம் தாக்கப் பட்டபோது, "அச்சத்தைப் பற்றி மட்டும் தான் நாம் அஞ்ச வேண்டும்"என்றார் அன்றைய தலைவர் ரூசவெல்ட். ஆனால், இன்றோ, அமெரிக்கா இருண்டதெல்லாம் பேய் என்று மிரண்டு கொண்டிருக்கிறதோ?
****** |
|
இந்த மிரட்சியில் சிக்கித் தவித்தார் இந்தியா விலிருந்து டொராண்டோவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த கனடியப் பெண் பெர்ணா குரூஸ். கேரளாவிலிருந்து கனடா வுக்குப் புலம் பெயர்ந்து கனடியக் குடியுரிமை பெற்று வாழும் இந்தப் பெண்ணின் விமானம் கனடாவுக்குப் போகும் வழியில் சிகாகோ வில் இறங்கி இருக்கிறது. இரண்டு மணி நேரத்துக்கு மேல் தங்க வேண்டியிருந் தால் விமானத்திலிருந்து இறங்கி அமெரிக்கக் குடி புகல் அலுவலர்களைத் தாண்டி விமான நிலையத் துக்குள் போக வேண்டுமாம். குரூஸ் என்பது போர்த்துக்
கீசியப் பெயர், ஆனால் அவர் இந்தியப் பெண். மிரண்டு போன அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டைக் கள்ளப் பாஸ்போர்ட் என்று சொல்லிக் கிழித்து இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப உத்தரவிட்டார்கள். கனடியக் குடிமகள் என்ற உரிமையில் கனடிய அதிகாரிகளோடு பேச வேண்டும் என்று கெஞ்சினாலும் மறுத்து விட்டார்கள். துபாய்க்கு மீண்டும் போய் அங்கிருந்து கனடிய அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு வேறு பாஸ்போர்ட் எடுத்த பின் தான் அவரால் திரும்பி வர முடிந்திருக்கிறது.
******
உலகெங்கும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் ஈராக் மீது போர் தொடுப்பதை எதிர்த்து ஊர்வலம் நடத்தி இருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் கவலைப் படாத அரசு இப்போது ஈராக்கை விடப் போரை எதிர்க்கும் தங்கள் கூட்டாளிகளான ஃபிரான்ஸ், ரஷியா, சீனாவின் மீது சொற்போர் தொடுத்திருக்கிறது. இரண்டு லட்சம் போர் வீரர்களைப் போர் முனைக்குக் கொண்டு போன பின்னால், அமைதியாகத் திருப்பி அழைத்து வருவார்களா, என்ன? ஈராக்கில் கோடைக் காலம் வருவதற்கு முன்னர் போர்க்காலம் வந்து விடுமாம். இந்த முரடர்களிடமிருந்து விடிவுகாலம் வந்தால் நன்றாயிருக்கும் என்று ஈராக் மக்கள் தவிக்கிறார்கள்.
******
அமெரிக்கா தன்னைச் சுற்றி அரண் அமைத்துக் கொண்டு, கூட்டுக்குள் பதுங்கி, எல்லோரையுமே தன் எதிரியாகப் பார்க்கத் துவங்கி விட்டது. நாட்டுக்குள் வருபவர்கள், வந்து வாழ்பவர்கள் பலரைச் சந்தேகத்துடன் பார்க்கிறது. வானிலை அறிக்கை போல் இப்போது தீவிரநிலை அறிக்கை வந்து விட்டது. தீவிரநிலையும் தற்போது உச்சநிலைக்கு ஒரு படி குறைவான ஆரஞ்சு நிலைக்கு உயர்ந்து விட்டது. தீவிரத் தாக்குதல் எங்கே எப்போது என்று தெரியாத நிலையில் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்று எல்லோரையுமே பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. என்ன தாக்குதல்? தெரியாது. ஆனால், பிளாஸ்டிக் தாள் வாங்கிச் சன்னல்களை மூடி ஒட்ட வேண்டுமாம். கணினிகளை விற்றுக் கொண்டிருந்த ·ப்ரைஸ் எலக்ட்ரானிக்ஸ் அங்காடி இப்போது விஷவாயுத் தடுப்பு முகமூடி விற்கிறது. மக்களும் வரிசையில் நின்று வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் மக்களிடம் போதிய பயம் இல்லை என்று பதறும் அரசு. மறுபக்கம், பிளாஸ்டிக் தாள், முகமூடி எல்லாம் ஒன்றுக்கும் உதவாது என்று தொலைக்காட்சியில் விளக்கம் பேசும் தலைகள்! எதற்கும் www.fema.org வலைத்தளத்துக்குப் போய் அவசர நிலையை எதிர்கொள்ள ஆயத்தமாகுங்கள். நிலநடுக்கம், சூறாவளி, வெள்ளம், என்ற இயற்கைச் சீற்றங்களிடமிருந்து பிழைத்துக் கொள்ளவாவது பயிற்சி கிடைக்கும்.
மணி மு. மணிவண்ணன் |
|
|
|
|
|
|
|