|
|
கடந்த ஆண்டைப் போலவே இந்த டிசம்பர் மாதமும் ஏகப்பட்ட நேர நெருக்கடி. சென்ற ஆண்டு கவிஞர் மதுரபாரதியோடு பாரதியின் “பாஞ்சாலி சபதம்” என்ற கவிதை நாடகத்தைப் படைத்தேன். அந்தத் துணிவில், இந்த ஆண்டு சான் ·பிரான்சிஸ்கோ தமிழ் மன்றத்தின் பாரதி விழாவுக்கு “அக்கினிக் குஞ்சு” என்ற தலைப்பில் மகாகவி பாரதியின் வாழ்க்கையைத் தழுவிய வரலாற்று நாடகமாக அமைக்க விரும்பினேன். பாரதியின் எண்ணற்ற சிந்தனைகளையும், கருத்துகளையும், கோணங்களையும் ஒரு மணி நேரத்துக்குள் வெளிக்கொணர்வது எளிதல்ல. வசனத்துக்கு, பாரதியைக் கரைத்துக் குடித்த தமிழகத்தின் சிறந்த கவிஞர் ஒருவரின் உதவியை நாடினேன். அவரால் முடியவில்லை. வேறு வழியில்லை; குருவி தலையில் பனம்பழம் என்று நானே அக்கினிக் குஞ்சு நாடகத்தை எழுதத் துணிந்தேன்.
பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் படைத்தவர்கள், முக்கியமாக, பாரதி படத்தை எடுத்தவர்கள், அவரைச் சாதாரண மானிட அளவுகோலில் அளக்க முற்பட்டிருக்கிறார்கள். “காலத்தைத் தாண்டி கனவு கண்டு உன் வாழ்வையும் வீணடிக்காதே” என்ற தன் தந்தையின் எச்சரிக்கையையும் மீறி வாழ்வில் தோல்வி அடைந்ததாய் பாரதியைச் சித்தரித் திருக்கிறார்கள். மனைவி, உற்றார், உறவினர், என்று எவராலுமே புரிந்து கொள்ள முடியாத புதிராய், போதைப் பழக்கத்திலே தம்மை வருத்திக் கொண்டவராய், ஊருடன் ஒத்து வாழத் தெரியாத வராய், தம் குடும்பத்தைப் பேணக்கூட முடியாதவராய், மனித வாழ்வின் எல்லா அளவுகோல்களிலும் தோல்வியைத் தழுவியவராய் அவரைச் சித்தரித் திருப்பது சரியா என்ற கேள்வி என்னை உறுத்திக் கொண்டே இருந்தது...
“எந்நாளும் அழியாத மகாகவிதை இயற்றும் கவியரசன்” என்று தன்னைத்தானே அடையாளம் காட்டிக் கொண்டவனுக்கு எது அளவுகோல்? “பார் மீது நான் சாகாதிருப்பேன்” என்று அறைகூவல் விட்டவன் நாற்பது வயதுக்குள்ளே மடிந்தான். அவன் வாழ்க்கையைத் தோல்வியாகச் சித்தரித்ததில் வியப்பென்ன! ஆனால் அக்கினிக் குஞ்சுக்கு அளவுகோல் எது? தீப்பொறி பறக்கும் பாரதியின் கவிதைகளை அக்கினிக் குஞ்சாய்க் கருதலாமா? அடிமைத்தனம், ஜாதிப் பிரிவினைகள், மூட நம்பிக்கைகள் என்று எண்ணற்ற அறியாமைப் புதர்கள் நிறைந்த உள்ளத்தைக் காடு என்று கொள்ளலாமா? ஏதோ ஒரு பொந்தில் வைக்கப் பட்ட அக்கினிக் குஞ்சால் அந்தக் காடு வெந்து தணிய எத்தனை நாட்களாகும்? அஞ்ஞானம் நீங்கி ஞானம் வர எவ்வளவு காலமாகும்? இப்படி ஓடியது என் எண்ணம்.
பாரதியாரின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், வாழ்க்கைக் குறிப்புகள், வரலாற்றுச் செய்திகள், ஆவணப் படம் என்று பல இடங்களில் செய்திகள் திரட்டினேன். ரா. அ. பத்மநாபனின் சித்திரபாரதி என்ற நூல் விலைமதிக்க முடியாத தகவல்களைக் கொடுத்தது. நடிக்க வந்த நடிகர்களை பாரதி பற்றி நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் தயாரித்திருந்த ஆவணப் படத்தைப் பார்க்க வைத்தேன். எல்லோரும் பார்த்த படம் அண்மையில் வெளிவந்த “பாரதி.” ஆனால் வரப்பிரசாதமாக இந்தியாவில் இருந்து வந்தது டிசம்பரில் வெளியான “அமரன் கதை” என்ற நாவல். நான் சொல்ல எண்ணியிருந்த கதையை மிகச் சிறப்பாக எழுதியிருந்தார் பாரதியின் பேத்தி பேராசிரியை விஜயபாரதி.
இந்தச் சிந்தனைகளின் விளைவாக “அக்கினிக் குஞ்சு” நாடகம் உருவெடுத்தது. தமிழ் நாடகக் கலையில் சங்கரதாஸ் சுவாமிகள் இசையை முன் வைத்தவர். திராவிட இயக்க நாடகங்கள் கருத்தையும், வசனத்தையும் முன் வைத்தவை. இன்றும் கூட நல்ல பாடல்களும், வசனங்களும், காட்சி அமைப்பும், தேர்ந்த நடிகர் களும் நிறைந்த திரைப் படங்கள் மனதில் நிற்கின் றன. நாடகங்கள் மட்டும் இதற்கு விதி விலக்கா என்ன! நாடகத்தின் காலம், இடம் மற்றும் வெளியை உருவகிக்க இலக்கியம், இசை, கவிதை, நடனம் ஆகிய எல்லாக் கலைகளும் துணை புரிந்தன. நாடகத் தின் முக்கிய உணர்வுகளை வெளிக்காட்ட ராகவன் மணியன் என்ற அற்புதமான இளம் இசைக்கலைஞர் குழுவினரின் உதவியை நாடினேன். பாரதியாக நடித்த ஸ்ரீகாந்த் பல நீண்ட செந்தமிழ் வசனங்களை மிகக் குறுகிய காலத்தில் மனனம் செய்தது மட்டுமல்லாமல், மேடையில் பாரதியாகவே வாழ்ந்தார். ஏனைய கலைஞர்களும் தங்கள் பாத்திரங்களின் தன்மை களைத் திறமையாக வெளிக் கொணர்ந்தார்கள். |
|
நாடகத்தின் வெற்றி நாடக ஆசிரியன், மேடைக் கலைஞர்கள், பார்வையாளர்கள் இவர்களுக் கிடையான ஒத்துழைப்பில் இருக்கிறது. அந்தக் கண்ணோட்டத்தில் ஒரு மகாகவியின் வாழ்வைச் சித்தரிக்கும் முயற்சியில் ஓரளவு வெற்றி கண்டோம். ஸ்டான்·போர்டு பல்கலைக்கழக வானொலி “மோஸ்ட்லி தமிழ்” நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சுதா சிவசுப்பிரமணியம் நாடகத்தின் ஒலிப்பதிவைக் குறுக்கி ஒலி பரப்பினார். நாடக ஒலிபரப்பின் பதிவை “மோஸ்ட்லி தமிழ்” ஆவணக்கிடங்கில் http://www.mostlytamil.com/archive.html என்ற சுட்டியில் கேட்கலாம்.
******
தமிழ் நாடக மேடை கருத்துப் பரிமாற்றத்தைத் தூண்டும் பண்பாட்டின் அடையாளமாக இருந்த நிலை மாறி, தன் பன்முகத் தன்மையை இழந்து அண்மைக்காலத்தில் மத்திய வர்க்கத்தின் வெறும் கேளிக்கை உணர்வுகளுக்கு வடிகாலாகச் சுருங்கிப் போய் விட்டது என்று குற்றம் சாட்டுகிறார் விமரிசகர் வெளி ரங்கராஜன். அவரது “தமிழ் நாடகச் சூழல் - ஒரு பார்வை” என்ற நூல் தமிழ் நாடக வளர்ச்சி பற்றிய ஆரோக்கியமான நோக்கைக் கொடுக்கிறது. “நாடகம் என்பது கூட்டுச் செயல்பாடு. ஆனால் தமிழில் கூட்டுச் செயல்பாடு என்பது சாத்தியப் படுவதே இல்லை. நாம் எல்லோரும் அதிகமான ஈகோ தன்மையுடன் இருக்கிறோம்” என்றும் எச்சரிக்கிறார். உண்மைதான்.
கலைத்தன்மையும் இலக்கியத் தரமும் வாய்ந்த நாடகங்களை சின்னஞ்சிறு குழுக்கள் அவ்வப்போது அரங்கேற்றுகின்றன. சான் ·பிரான்சிஸ்கோ பகுதியின் “நாடக்”, கனடாவின் ‘நாளை’, ‘மனவெளி’ குழுவினர், மேடைக் கலையில் எந்த தொழில் முறைக் கலைஞர்களுக்கும் சளைத்தவர்கள் இல்லை. நல்ல பல நாடக முயற்சிகள் நடந்து கொண்டிருந்தாலும் அவற்றைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிவதில்லை. “சிந்தனை மறுப்பும் தரமற்ற நகைச்சுவையுமே பொழுதுபோக்கு” என்று வெளி ரங்கராஜன் குற்றம் சாட்டும் நிலை மாற வேண்டும்.
மணி மு. மணிவண்ணன் |
|
|
|
|
|
|
|