|
|
செ ன் ற இ த ழி ல் :
டாக்டர் யோகநாதன் நியூரோ பிஸியாலஜி நிபுணர். அமெரிக்காவில் தனது ஆய்வகத்தில் மனிதனின் பிரக்ஞை குறித்து ஆய்வுகள் நடத்திவருகிறார். கடுமையான காவல் கொண்ட அவரது ஆய்வுக்கூடத்துக்குள் ஒரு நாள் முதியவர் ஒருவர் தோன்றுகிறார். அவரைப் பார்த்தால் யோகநாதனுக்கு யாழ்மண்ணில் வாழ்ந்து மறைந்த தனது தாத்தாவின் நினைவு வருகிறது. அந்த முதியவருக்குப் பின்னால் மற்றொருவர் நிற்பதும் தெரிகிறது.
தான் செய்துவரும் ஆய்வுகளைப் பற்றி அவருக்குத் தெரிந்திருப்பது யோகநாதனுக்கு வியப்பை அளிக்கிறது. முதியவர் கேட்கவே யோகநாதன் உற்சாகமாகத் தன் ஆய்வின் நோக்கம் குறித்து விளக்குகிறார். அப்போது யோகநாதன் 'சுமார் மூன்று பவுண்ட் எடைகொண்ட மனித மூளைக்குள் கிட்டத் தட்ட நூறு பில்லியன் நியூரான் என்ற சிக்கலான செல்கள் பின்னி இருக்கின்றன. நூறு பில்லியன் என்றால் இங்கே அமெரிக்கக் கணக்குப்படி ஒன்றுக்குப்பின் பதினோரு பூச்சியங்கள்' என்று கூறுகிறார்.
'ஒரு நிகர்வம்' என்கிறார் வந்த முதியவர்.
மேலே . . .
'நிகர்வமா? அப்படி ஒரு சொல்லை இதுவரை கேள்விப்பட்டதேயில்லை ஐயா!' என்றார் யோகநாதன்.
'நும் காலச்சூழலில் மறைந்து போயின போலும். அ·தொரு பேரெண். கோடிக்கு மேலும், பத்தின் பல மடங்குகளாய், அற்புதம், பதுமம், கர்வம், நிகர்வம், பிருந்தம் என்று பரார்த்தம் வரை எண்கள் பலவுள. அவை சொல்வதன் சூக்குமங்களே மறைந்திருக்கை யில், அந்த எண்களும் தொலைந்தன போலும். போகட்டும். தொடர்வீர்,' என்று கூறினார் கட்டுக்காவலை எப்படியோ மீறி நுழைந்துவிட்ட அந்த முதியவர்.
மேலே தொடர்ந்தார் யோகநாதன்.
'இந்த நியூரான்கள் தத்தம் நியூரோட்ரான்ஸ் மிட்டர் என்ற தகவல்கடத்திகளின் துணை கொண்டு பொறிகளின் தூண்டுதலில், கார்டெக்ஸ் தாலமஸ் என்ற மூளைப்பகுதி களூடே, தம்மிடையே செய்தி பரிமாறிக் கொள்வதே சிந்தனை ஓட்டம் என்பது ஒரு கருத்து. இதை ஆய்வகத்தில் உறுதிப் படுத்தியுள்ளோம். இந்த நியூரான் அலைகள் ஒரு குறிப்பிட்ட கால அளவில், இருபத்து ஐந்து மில்லிசெகண்ட் என்னும் நொடித் துளியில், தொடர்ந்து பரப்பும் இந்த நாற்பது ஹெர்ட்ஸ் மின்வீச்சைப் பதிவும் செய்திருக் கிறோம். இந்த மின்கதிர்வீச்சு ஒரு நிகழ்வே அன்றி இவற்றைச் செலுத்தும் காரணப் பொருள் இன்னதென்று கண்டுபிடிக்கப் படவில்லை. ஆக இதைப் பிரக்ஞை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.'
'இது கனவிலும் நிகழுமோ? அப்போது நனவுக்கும் கனவுக்கும் என்ன வேறுபாடு?'
'ஆம் ஐயா, இது கனவிலும் நிகழ்வது. ஆனால் கனவில் முதுகுத்தண்டுக்கு 'இனி உடலின் பொறிகள் யாவும் ஓய்வெடுக்க வேண்டும்' என்ற செய்தி போய், சென்ஸரி இன்புட் மோட்டார் அவுட்புட் தொடர்புகள் மூளையின் கார்டெக்ஸ் பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும். கனவுக்கும் நனவுக்கும் இதுதான் வேறுபாடு.'
'யோகரே, அங்ஙனமெனில் கனவில் நீர் பெறும் அனுபவத்தைப் பெறுவது எது என்று கண்டீரோ?'
'இல்லை, தெரியவில்லை ஐயா!'
'அது தூல உடலுக்குள் கலந்த சூக்கும சரீரம்; நுண்ணுடல். ஐம்பொறிகளும் இயங்காவிடினும், அவற்றின் தன்மாத்திரைகள் ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம் மூன்றும் சேர்ந்த இன்பமும், துன்பமும் துய்க்கவல்ல புரியட்டக உடம்பு அது.'
'அதுதான் ஆன்மாவா ஐயா?'
மெல்லச் சிரித்தார் முதியவர்.
'யோகரே, புரியட்ட காயம் ஆன்மா அல்ல. அதைச் செலுத்தும் புருடனே ஆன்மா. மேலே சொல்லும்.'
'கடந்த நாற்பதாண்டுகளில் குவாண்டம் என்ற அதிநுண்துகளின் செயல்பாடுகளைக் குறித்த ஆய்வுகள் இந்தப் பிரக்ஞை பற்றிய ஆய்வில் பல புதிய தேடல்களுக்கு வழிவகுத்துள்ளன. |
|
'அதற்கு முன்னால் ஆற்றல் என்பது அலைகளாய் மட்டுமே இயங்குகின்றது என்ற கோட்பாடிருந்தது. அதுவரை ஒரு பொருளின் விசை குறித்த விளக்கங்கள் ஒரு வரம்பில் நிகழ்வன என்றே அறிவியலார் கருதி வந்தனர். ஆனால் குவாண்டம் துகளியக்கக் கண்டுபிடிப்பும், அவற்றின் கட்டுக்கடங்காத ப்ரோபபலிடி தன்மை யிலான விசை குறித்த கண்டுபிடிப்புகளும் முற்றிலும் ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொண்டுவந்தன. இந்த அதிநுண்துகள் உலகத்தில் யாதொரு வரம்புமில்லை. இந்தச் சக்தித்துகள்களின் செயல்பாடுகள் பிரமிப்பானவை. பிரபஞ்ச முழுமையும் நிறைந்திருக்கும், ஒன்றுடன் ஒன்று தொடர் புடைய இந்த அதிநுண்துகள்களுக்கு இடையேயான செய்திப் பரிமாற்றம் ஐன்ஸ்டீனின் ஒளிவேகத்தடையையும் கடந்தவை. அவற்றுக்கிடையே காலதூர அளவை என்ற கணக்குமில்லை. இந்தக் கண்டுபிடிப்புகளின் விளைவாகவே அறிவியலார் கவனம் பிரக்ஞையின்பால் திரும்பியது.
'நம் மூளையின் நியூரான்களிடையேயான சிந்தனை ஓட்டம் இந்தக் குவாண்டம் தேற்றத்துக்குப் பொருந்தி வருவதாய்க் கண்டுள்ளோம். சுருக்கமாய்ச் சொன்னால் நம் ஞாபகம் என்பதே மூளைக்குள் இல்லாமல், ஒரு புறத்தூண்டுதலால் நிகழ்வதோ என்றும் தேட ஆரம்பித்திருக் கிறோம். திடீரென்று உதிக்கும், நாம் இதுவரை அறிந்திராத புதுப்புதுச் சிந்தனைகள் இப்படிக் குவாண்டம் துகள்களின் தொடர்புகளாலேயே என்றும் கருதுகிறார்கள். ஆனால் இந்தத் தூண்டுதல்களின் மையம் மூளைக்குள் எங்கே என்று இன்னும் ஒருமித்த கருத்தில்லை.'
'யோகரே, நும் கருத்தில் இது எங்கு நிகழ்வது என்று சொல்லும்.'
'ஐயா, என் கருத்து அறிவியலார் எர்வின் ஷ்ரோடிங்கர் மற்றும் ரோஜர் பென்ரோஸ் போன்றோர் கருத்துகளை ஒட்டியதே. மேலும் நியூரானின் சைட்டோஸ்கெலிடன் என்ற உட்கட்டமைப்பின் பகுதியான மைக்ரோட்யூபுள் என்ற அதிநுண்குழல்களே இந்தக் குவாண்டம் பரிமாற்றத்தின் மையம் என்று கருதுகிறேன். ஆனால் அதிலும் விடைகாண முடியாத சில சிக்கல்கள் இருக்கின்றன.'
'மேலே சொல்லும் யோகரே!' என்றார் முதியவர் அழுத்தமான புன்னகையுடன்.
( வளரும் )
ஜாவா குமார் |
|
|
|
|
|
|
|