Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | பயணம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புதுமைத்தொடர் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
புதுமைத்தொடர்
திருவண்டம் பகுதி - 1
- ஜாவா குமார்|டிசம்பர் 2005|
Share:
Click Here Enlarge'Cogito ergo sum!'
- Rene Descartes

(Meditationes de Prima Philosophia)
உளது! இலது என்றலின், எனது உடல் என்றலின்,
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின், கண்படில்
உண்டிவினை இன்மையின், உணர்த்த உணர்தலின்,
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா.
- மெய்கண்டதேவர்

(சிவஞானபோதம்: மூன்றாம் நூற்பா)

'யோகரே விழித்தெழும்' என்று கிசுகிசுப் பாய்க் கேட்ட தமிழ்க்குரல் தாத்தாவின் குரல் போலிருந்தது. யோகநாதன் திகைத் தெழுந்தார். எதிரில் நிற்பது யார் தாத்தாவா? இல்லை. எதிரில் நின்ற முதியவர், தாத்தாவை விட உயரமாய், திடகாத்திரமாய் இருந்தார். அவருக்குப் பின்னால் மற்றொருவர் நிற்பதும் தெரிந்தது.

யார் இவர்கள்? கடுமையான காவலை மீறி இந்த ஆய்வகத்துக்குள் எப்படி வந்தார்கள்? அதுவும் வேட்டி, மேல்துண்டுடன் அமெரிக்காவில். இதென்ன கனவா!

'தாங்கள் யார்? எப்படி உள்ளே வந்தீர்கள்? தமிழில் பேசுகிறீர்கள்!'

முன்னால் நின்ற முதியவர் சிரித்தார்.

'யோகரே, எம்மை நும் பாட்டனார் முருகானந்தருக்கு அணுக்கர் என்றே கொள்வீர். எம் தமிழ் விளங்குவது மகிழ்ச்சி. நும் காலச் சூழலுக்கேற்ப நெகிழ்த்தியே உரைப்போம். நீர் காண்பது கனவல்ல. நனவில் வருவதற்கும் எமக்கு எந்தத் தடையுமில்லை.'

யோகநாதனின் திகைப்பு அதிகரித்தது. என்றோ யாழ்மண்ணில் இறந்துபோன தாத்தாவை இவர்களுக்கு எப்படித் தெரியும்! நனவென்று சொன்னாலும் நடப்பது கனவாகவே தோன்றியது.

'யோகரே அஞ்சவேண்டாம். நாங்கள் வந்தவழியே போய்விடுவோம். நும்மைத் தேடி வந்ததன் காரணம் நீர் செய்துவரும் ஆய்வினைக் குறித்துச் சற்றுக் கதைப்பதற்கே.'

யார் இவர்கள், என் ஆய்வைப் பற்றி இந்தக் கிழவர்களுக்கு என்ன வந்தது!

'என்ன யோகரே, நனவின் சூக்குமத்தை எம்மட்டில் புரிந்து கொண்டீர்?'

நனவின் சூக்குமமா! என் தேடலும், ஆய்வும் இவர்களுக்கு எப்படித் தெரியும். டாக்டர் யோகநாதன், நியூரோபிஸியாலஜி நிபுணர், உறைந்து நின்றார்.

'ஐயா, என் ஆய்வு தாங்கள் சொல்லும் நனவு அதாவது பிரக்ஞை சம்பந்தப்பட்டது தான். இந்தப் பிரக்ஞை என்பது மூளையின் ஒரு செயல்பாடா, அப்படி என்றால் அதன் தொடர்புடைய மூளையின் பகுதிகள் என் னென்ன, அவை இயங்குவது எப்படி என்று இங்கு தீவிரமாய் ஆய்ந்து வருகிறோம். இந்த ஆய்வில், கடந்த சில ஆண்டுகளில் நிறைய முன்னேற்றங்கள் இருந்தாலும் முழுமையாய்த் தெரிந்துகொள்ள இன்னுமொரு நூறாண்டு போகும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு இதற்கு மேல் என்ன விவரம் வேண்டும்?'

'மேலே விரித்துச் சொல்லும் யோகரே!' என்றார் முன்னால் நின்ற முதியவர்.
'தங்களுக்கு எதில் தொடங்குவது, எதைச் சொல்வது என்று யோசிக்கிறேன். மேலும் சில சொற்களுக்குத் தமிழில் எனக்குப் பெயர் தெரியாது.'

'சொல்லும். தெரியாததை நீர் அறிந்த மொழியிலேயே சொல்லும்.'

வழக்கமான வகுப்பறை உற்சாகம் தொற்றிக் கொள்ளத் தொடர்ந்தார் யோகா.

'இந்தப் பிரக்ஞை என்பதை முதலில் வரையறுக்க வேண்டும். ஆன்மா, சீவன், அறிவு, உள்ளம், ஆங்கிலத்தில் கான்ஷியஸ்னஸ் என்று பல பெயர்களிலும் வழங்கப்படும் இது பொதுவில் மூளை நிகழ்த்தும், வலி மற்றும் இன்பம் உணர்தலோ, அல்லது ஐம்பொறிகளை இயக்கும் மோட்டார் உணர்வோ மட்டுமல்ல. எளிமையாய்ச் சொன்னால் தன்னுணர்வு. நான், என்னு டையது என்று எது சொல்வதோ அது. அதுவே ஒருவனை அறிவியலாளனாய், கவிஞனாய், ஓவியனாய், இசைக்கலைஞனாய், மேலும் தேடத்தேட எப்படி ஆக விரும்புகிறானோ அப்படிச் செலுத்துவது என்று சொல்லலாம்.'

'இது மனித உடலுக்குள் வெறும் அகநிகழ்வா அல்லது ஏதாவது புறத்தூண்டுதலால் செலுத்தப்படுவதா என்பது வெகுகாலமாய் சர்ச்சைக்குள்ளான விஷயம். அறிவியலாரும், ஆன்மீகவாதிகளும் இதுவரை ஒத்துப் போகாத துறை.’

'நும் முடிவென்ன?' முதியவரின் வினா இடைமறித்தது.

'ஐயா, என் முடிவென்றும், முடிந்த முடிவென்றும் இன்னும் ஏதுமில்லை. சொல்லப் போனால் அறிவியலார் இதில் நுழைந்ததே சென்ற நூற்றாண்டில்தான். அதற்கு முந்தைய நியூட்டனின் சித்தாந்தங் கள் கோலோச்சிய காலத்தில் இதற்கு இடமே இருக்கவில்லை. பிரபஞ்சத் தைக் குறித்த ஐன்ஸ்டீனின் புதிய அணுகு முறையும், குவாண்டம் இயற்பியல் என்ற அதிநுண் துகள் இயக்கம் குறித்த ஆய்வுகளும் இறுதியில் இதில் கவனத்தைத் திருப்ப வைத்தன.'

'சரி, என் ஆய்வைப் பற்றிக் கேட்டீர்கள். முதலில் மூளை என்ற விந்தையான பகுதியில் ஆரம்பிக்கிறேன். சுமார் மூன்று பவுண்ட் எடைகொண்ட மனித மூளைக்குள் கிட்டத்தட்ட நூறு பில்லியன் நியூரான் என்ற சிக்கலான செல்கள் பின்னி இருக்கின்றன. நூறு பில்லியன் என்றால் இங்கே அமெரிக்கக் கணக்குப்படி ஒன்றுக்குப்பின் பதினோரு பூச்சியங்கள்.'

'ஒரு நிகர்வம்' என்றார் முதியவர்.

(வளரும்)

ஜாவா குமார்
Share: 




© Copyright 2020 Tamilonline