பனிப்படுகை
|
|
|
|
ஜன்னல் திரை ஒதுக்கி தென்றல் மெல்லக் கசிய, அதன் வழி வந்த நிலா ஒளி இருட்டோடு விளையாடியது.
ஆட்டத்தை ரசித்தபடி, உடல் உறங்கிப் போக, கனவுக்குதிரை சத்தம் கேட்டு மனம் விழித்துக் கொண்டது.
ஆழ்மன ஆசைகளை நிறைவேற்றுவதாய் ஆசை வார்த்தை பல கனவுக்குதிரை கூற, மனம் மயங்கி வேகமாய்ப் பறந்தது பால்வண்ண நிலவு நோக்கி.
பஞ்சுமெத்தை மேகத்தில் முகம் புதைத்து விளையாடிய பின், தூரமாய் மினுக்கிய நட்சத்திரம் எல்லாம் அலை அலையாய் ஓடிவந்து என் விரல் இடுக்கில் சிக்கிக்கொள்ள, மெல்ல அதைப் பிரித்து எடுக்குமுன் நிலவில் மோதி நின்றது கனவுக்குதிரை.
விழுந்து எழுந்து பார்க்கையில் புரிந்தது நிலவின் ரகசியம். மாசுபடாத அதன் தேகமெங்கும் கூட்டம் கூட்டமாய் வெள்ளை ரோஜா.
ஒவ்வோர் இரவும் சிவப்பாய் பிறக்கும் ரோஜாக் கூட்டம், பின் பொறாமையில் வெளிறிப் போவதாய் குதிரை கூற, காரணம் எதுவென்று தலைதூக்கிப் பார்த்தால், அங்கு கருப்புக் கடலில் ஒரு குட்டித்தீவாய் நீலநிறத்தில் ஓர் அதிசயம். |
|
சட்டெனக் கனவு மரணம்போல் உயிரற்றுப் போனது, தூரத்தில் என் அகம், அழகாய் கோடி உயிர் சுமந்து.
ஆளற்ற கடற்கரையில் என்னை அநாதைப் படுத்த்தியதாய்க் கனவைக் கடிந்தபோது, இதுவே என் ஆசையென, குதிரை கூறியது.
இறகு விரித்துக் காற்றில் பறக்க கனவு கண்டாலும், என் மனம் மிதப்பதென்னவோ, அந்த இளம்தளிர் விரலின் வருடலில்தான்.
மலரின் கருவறையில் கண்ணயர வேண்டுமென கவிதை பாடினாலும், மனம் அயரும்போது என் விருப்பம் எல்லாம் தாயின் கர்ப்பத்துள் மீண்டும் சென்று சுருண்டு கொள்ளத்தான்.
அழகு வடிவங்கள் விண்ணெங்கும் மிதந்தாலும் என் தோள் சாய்ந்து அவை கண்டு களிக்க என்னவள் வேண்டும் என் அருகில்.
குழம்பிப் போன குதிரை தடுமாற கண் விழித்துப் பார்த்தேன், நான் மீண்டும் என் அறையில்.
அதே நிசப்தம் ஆனால் உருவற்ற அழகாய், என் உறவும், அன்பும் அருகே. இதுவே சொர்க்கமென ஜன்னல் வழி வெளியே பார்க்க, மெல்ல சந்திரன் மறைந்து சூரியன் சிரித்தான்.
விஜய் சாமி, உட்பிரிட்ஜ் டௌன்ஷிப், நியூ ஜெர்சி |
|
|
More
பனிப்படுகை
|
|
|
|
|
|
|