அதிசயமான கும்பாபிஷேகம்
|
|
|
தமிழகத்தில் எத்தனையோ சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் விட்டுச் சென்ற கருத்துகள் இன்றளவும் நிலைத்து நின்று மக்களை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
சித்தர்கள் மறைந்த பின்பும் வாழ்ந்து கொண்டிருக்கும் மகா ஞானிகள் ஆவர். அவர்கள் பிறந்த இடங்கள், வாழ்ந்த இடங்கள், மறைந்த இடங்கள் எல்லாமே புனிதத் தலங்களாகப் போற்றப்படுகின்றன. இப்படிப் பட்ட ஒரு புனிதமான இடம் தான் சென்னையை அடுத்த திருவெற்றியூர் கடற்கரை மீனவர் குப்பத்திற்கு மத்தியில் அமைந்துள்ள பட்டினத்தார் கோயில்...
சித்தர்களில் பட்டினத்தாருக்கென்று ஒரு சிறப்பான இடமுண்டு. அவர் பாடல் வடிவில் விட்டுச் சென்ற தத்துவங்கள் அனைத்தும் பெரும் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கவியரசு கண்ணதாசன் எழுதிய-
வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? கடைசி வரை யாரோ?
என்ற திரைப்பாடல் வரிகளின் மூல விதை பட்டினத்தாரின்-
அத்தமும் வாழ்வு மகத்துமட்டே! விழியம்பொழுக மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மியிரு கைத்தல மேல் வைத்தழு மைந்தருஞ்சுடு காடு மட்டே பற்றித் தொடருவினைப் புண்ணியப் பாவமுமே
என்ற பாடல்தான்.
வாழ்வின் நிலையாண்மை பற்றி நிறையப் பேசியவர். ஆசைகளை அறுக்கச் சொன்னவர். அதிலும் பெண்ணாசை பெருந்தீங்கென்றவர் பட்டினத்தார்.
பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி முத்தும் பவளமும் பூண்டு ஓடி ஆடி முடிந்த பின்பு செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச்சாம் பிணங்கள் கத்துங் கணக்கென்ன? காண்கயிலாபுரிக் காயித்தியே!
என்பதும்-
இருப்பது பொய் போவது மெய் என்று எண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே- பருத்த தொந்தி நம்மது என்று நாம் -ருப்ப நாய் நரிகள் பேய் கழுகு தம்மது என்று தாம் இருக்கும்தான்.
என்பதும் அவரது வரிகளில் சில.
சிற்றம்பலமும் சிவனும் அருகு - இருக்க வெற்றம்பலம் தேடி விட்டோமே - நித்தம் பிறந்த இடம் தேடுதே பேதை மட நெஞ்சம் கயிந்த இடம் நாடுதே கண்.
என்று அவர் தன்னை நொந்து கொள்வது போல் பிறருக்கு அறிவுரை வழங்கினார்.
பட்டினத்தார் பிறக்கும்போதே ஞானியாகப் பிறந்தவரில்லை . ஆசாபாசங்கள் நிறைந்த வசதி மிக்க வணிகர் குடும்பத்தில் பிறந்தவர்தான். தந்தை போலவே ஓடியாடிப் பெரும் பொருள் சேர்த்தவர்தான். அழகு மிக்க பெண்ணை மணந்து -ல்லறத்தில் உழன்றவர்தான். ஆனால் அவருக்கு குழந்தை இல்லை. இறைவன் திருவருளால் ஒரு பிராமணர் மூலம் ஓர் ஆண்குழந்தை கிடைத்தது. அக்குழந்தைக்கு மருதவாணன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். செல்ல மகனாக அவன் படிப்பில் நாட்டமில்லாமல், வாணிகத்தில் நாட்டமில்லாமல் அசட்டையாக இருந்தான். எனினும் சுட்டிப்பயலாக இருந்தான்.
பையனைக் கடல் கடந்து வாணிகத்துக்கு அனுப்பினால் புத்தி வரும். சொத்துக்களைக் காப்பாற்றுவான் என்று எண்ணி, கப்பலில் கடாரத்துக்கு அனுப்பினர். புறப்பட்டபோது அவன் அனுபவசாலி போல், கெட்டிக்காரத்தனமாகப் பேசினான். பெற்றோர், பிள்ளைக்கு புத்தி வந்துவிட்டது என்று மகிழ்ச்சியோடு வழியனுப்பினர்.
86 நாட்களுக்குப் பின் திரும்பிய மருதவாணன், துள்ளலோடு போனவன் சாதுவாகத் திரும்பினான். அதுவும் சிவ பக்தனாக. நேரே பாட்டியைப் பார்க்க ஓடினான்.
அவனுடன் வந்திருந்த வெளிநாட்டுச் சரக்குகளை வேலையாள்கள் இறக்கினர். அது கண்டு பட்டினத்தார் அதிர்ந்தார். ஏனெனில் பொன் பொருள்களைப் பெட்டியில்தான் எடுத்து வர வேண்டும். ஆனால் இறங்கியவை அனைத்தும் சாக்கு மூட்டைகள்.
ஒரு மூட்டையைப் பிரித்துப் பார்த்தார் பட்டினத்தார். உள்ளே எரு மூட்டைகள், தவிட்டு உமிகள். ஆத்திரமடைந்தார் பட்டினத்தார். பரம்பரையாகப் பொன் வணிகக் குடும்பத்தின் பெருமையைக் காப்பாற்றுவான் என நினைத்தால்...
கோபமாக மகனைத் தேடிய பட்டினத்தார், தனது தாயை அழைத்துப் 'பார்த்தாயா உன் பேரன் லட்சணத்தை' என்றார்.
பாட்டி வந்தாள். அதற்குள் பட்டினத்தார் ஒரு மூட்டையை எட்டி உதைத்தார். மூட்டை கிழிந்து கூடமெல்லாம் எரு முட்டைகள் சிதறியது.
அட ! திகைத்தார் பட்டினத்தார். எரு முட்டை உடைந்து உள்ளிருந்து நவமணிகள் உருண்டன. உமிகள் எல்லாம் தங்கமாய்ப் பளபளத்தது.
சட்டென மாறினார் பட்டினத்தார். ஆனந்தக் கூத்தாடினார். மருதவாணனின் ஒரு பயணத்திலேயே கோடிக்கணக்கில் செல்வம் வந்து சேர்ந்துவிட்டதே என்று மனங்குளிர்ந்தார்.
'மகனே... மகனே மருதவாணா' என்று அழைத்தார். ஆனால் மகனைக் காணவில்லை. ஆனால், அவன் கொடுத்து விட்டுப் போன ஒரு பெட்டியைப் பாட்டி கொடுத்தாள்.
அதை வாங்கித் திறந்தார் பட்டினத்தார். உள்ளே ஒரு நறுக்கு ஓலை. அதில் 'காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே' என்று எழுதியிருந்தது. அதைப் படித்ததும் ஆடிப் போனார் பட்டினத்தார். மாளிகை சுழன்றது. மன மயக்கம் தெளிந்தது.
உலக வாழ்வின் நிலையாமை புரிந்தது. ஆர்ப்பாட்டம் அடங்கியது. அரசனைப் போல் வாழ்ந்தவர் துறந்தார் ஆசைகளை. துறவு பூண முடிவு செய்தார்.
வீட்டை விட்டு ஊரை விட்டு புறப்பட்ட பட்டினத்தார், கால் போன போக்கில் சென்றார். ஆங்காங்கு உள்ள ஈசன் மீதும் வேறு பல சமயங்களிலும் பல பாடல்கள் பாடினார். அவை வெறும் பக்திப் பாடல்கள் மட்டும் அல்ல. ஞான மார்க்கத்தைக் காட்டும் தத்துவங்கள்.
தாய்க்குக் கொடுத்த வாக்குப்படி அவள் இறந்தபோது ஊர் திரும்பினார். தாய்க்குக் கொள்ளி வைத்தார். பச்சை வாழை மட்டையை வைத்து எரித்ததாகப் பெருமைப்படுத்திக் கூறுவதுண்டு.
அவர் தாய்க்கு சிதை மூட்டும்போது பாடிய பாடல்களை இன்றும் பல இடங்களில், இறந்தவர் சிதைக்குத் தீ மூட்டும்போது பாடுகின்றனர்.
ஐயிரண்டு திங்களாயங்கமெலா நொந்து பெற்றுப் பையலென்றுபோதே பரிந்தெடுத்துச் செய்யவிரு கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பேன் இனி?
என்று தொடங்கி அவர் பாடிய பத்துப் பாடல்களும் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. |
|
தாயின் மரணத்தின் பின் தென்நாடு விட்டு வட இந்திய யாத்திரை மேற்கொண்டார். உஜ்ஜயினியில் அவருக்குக் கிடைத்த அனுபவம் வாழ்வின் பல புதிர்களுக்கு விடை அளிக்கும். அங்கு அவருக்கு பத்திரகிரியார் சீடராக வாய்த்தார். பின்னர் இருவரும் தென்னாடு திரும்பினர்.
ஒரு கரும்புத்தோட்டத்துக்கு அருகில் வந்து அமர்ந்திருந்தபோது, ஒருவர் அவர்களுக்குக் கரும்பினைத் தின்னக் கொடுத்தார்.
கரும்பைக் கடித்த பட்டினத்தார், 'அடி இனிப்பதும் நுனி கசப்பதும்' என்று தெரியாதவர் போல் கேட்டார்.
கரும்பு கொடுத்தவர் 'வாழ்வின் தொடக்கம் இனிமை. முடிவு அவலம்' என்று கூறிப் போனார். பட்டினத்தாருக்கு ஏதோ உறைத்தது போலிருந்தது. அவரிடம் வந்து கரும்பை அளித்தவர் சிவபெருமானே என்பது தோன்றியது. கரும்பின் தத்துவத்தைக் குறிக்கவே பட்டினத்தார் கையில் கரும்புடன் உள்ளார் என்பார்கள்.
திருவிடைமருதூரில் பத்திரகிரியாருக்கு மோட்சம் கிடைத்துவிட்டது. பட்டினத்தார் தனது முடிவு எங்கே என்று ஈசனிடம் கேட்டார். 'பேய்க் கரும்பு எங்கு இனிக்கிறதோ அங்கே உனக்கு முடிவு தெரியும்' என்று ஈசன் சொன்னதாக ஓர் கருத்து உண்டு.
அதன்பிறகு பட்டினத்தார் பல இடங்களுக்கும் சென்றார். சென்னையை அடுத்த திருவொற்றியூர் கடற்கரைக்கு வந்து சேர்ந்தபோது அங்கு நிறைய பேய்க் கரும்பு இருக்கக் கண்டார். ஒன்றை ஒடித்து கடித்துக் பார்த்தார். ஆகா அது இனித்தது.
கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்தார். அவர்களிடம் மணலை அள்ளிக் கொடுத்து 'சாப்பிடுங்கள் சர்க்கரையாய் இனிக்கும்' என்றார்.
அவர்கள் தயங்கினர். 'சாப்பிடுங்கள்' என்று பட்டினத்தார் உற்சாகப்படுத்த அவர்கள் சாப்பிட்ட மணல் இனித்தது.
பின்னர் அங்கிருந்த 'சால்' கொண்டு தன்னை மூடச் சொன்னார். சிறுவர்கள் மூடினர்.
சிறிது நேரத்தில் அவர் பின்னாலிருந்து நடந்து வந்தார். சிறுவர்களுக்கு ஆச்சரியம். உள்ளே வைத்து மூடிய ஆள் எப்படி வெளி வந்தார். மீண்டும் சாலில் வைத்து மூடினர். அப்போதும் அவர் வெளியில் வந்தார்.
மூன்றாவது முறையாகவும் சால் உள்ளே வைத்து மூடினர் சிறுவர்கள். இப்போது அவர் வரவில்லை. வருவார் வருவார் என எதிர்பார்த்த சிறுவர்கள் அவர் வராததால் சாலைத் திறந்தனர். உள்ளே ஓர் சிவலிங்கம் இருந்தது. அதிசயித்த சிறுவர்கள் ஊருக்குள் ஓடிப் போய் மக்களை அழைத்து வந்தனர்.
அது முதல் அந்த லிங்கம் வழிபாட்டுக்குரியதாகியது. லிங்கமாக மாறிய பட்டினத்தார் கோயில் இன்றும் மீனவர் குப்பத்துக்கு மத்தியில் உள்ளது.
அழகிய சிறு கோயில் கோபுரம் எதுவுமின்றி மொட்டை மண்டபமாக உள்ளது. பட்டினத்தார் லிங்கத்தை அழகாக மலர்களால் அலங்கரித்து வைத்துள்ளனர். கோயில் உள்ளே நுழைந்ததும் ஓர் அமைதி வந்து ஆட்கொள்கிறது.
பட்டினத்தாருக்கு அழகிய செப்புத் திருமேனியும் வைத்துள்ளனர். விழாக் காலங்களில் வீதி உலாவும் உண்டு. பட்டினத்தார் கருவறை நோக்கித் தழைத்து வளர்ந்துள்ள்ள பன்னீர் மரம், காற்றில் மலர்களைக் கலசத்தை அர்ச்சிப்பது மாதிரி உதிர்கின்றன. பக்கத்தில் அழகிய பூந்தோட்டமும் உள்ளது.
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அமைந்திருந்தாலும் பட்டினத்தார் பக்தர்கள் தேடி வந்து தரிசனம் செய்துவிட்டுப் போகின்றனர்.
கட்டுரை & படங்கள் இரா.சுந்தரமூர்த்தி |
|
|
More
அதிசயமான கும்பாபிஷேகம்
|
|
|
|
|
|
|