Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பயணம் | சிறப்புப் பார்வை | தமிழக அரசியல் | Events Calendar | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | சினிமா சினிமா | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
சமயம்
ஆலயம்
- ரா. சுந்தரமூர்த்தி|ஏப்ரல் 2001|
Share:
Click Here Enlargeகோயிலுக்குச் செல்கிறபோது இறைவனின் அருளை வேண்டுகிறோம். அங்குள்ள சிற்பங்களின் அழகில் மயங்குகிறோம். ஆனால் ஆலய அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் இருப்பதை எல்லோரும் அறிவதில்லை.

கடவுளை மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் கூட மனிதனைப் போலவே அமைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'


என்பது திருமூலர் அருட்பாடல்.

அவர் உடலே கோயில் என்றார். உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது என்பதை '§க்ஷத்திரம் சரீரப் பிரஸ்தாரம்' என்கிறது ஆகமச் சொற்றொடர்.

உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிருத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகாமண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு.

கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்து உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

தூல சரீரம், சூட்சும சரீரம், குண சரீரம், அஞ்சுக சரீரம், காரண சரீரம் போல ஐந்து சபைகள் உள்ளன.

உடலில் உள்ள மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்கள் போலக் கருவறை, அர்த்த மண்டபம் முதலான ஆறு நிலைகள் உள்ளன.

கருவறை சிரமெனப்பட்டது. அதில் வலச்செவி தட்சிணாமூர்த்தி, இடச்செவி சண்டிகேசுவரர், புருவமத்தி லிங்கம், மூக்கு ஸ்தபந மண்டபம், வாய் ஸ்தபந மண்டப வாசல், கழுத்து நந்தி தலையின் உச்சி விமானம் என்று ஆகம சாத்திரம் தெரிவிக்கிறது.

ஆகம விதிப்படி ஆலயங்கள் கருவறை, ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம், பலி பீடம், கொடிமரம், யாகசாலை, நந்தி முதலியவற்றுடன் விளங்கும்.

மேலும் நம் உடல் தோல், இரத்தம், நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது போல் ஆலயமும் செங்கல், காரை, கல், போன்ற ஏழு வகையான பொருள்களால் ஆனது என்கிறது நமது சாத்த்¢ரங்கள்.

கோயில் என்பதை கோ-இல் எனப் பிரித்து 'கோ' என்றால் இறைவன். இல் என்றால் இருப்பிடம் என்கிறார்கள். ஆக, கோயில் என்பது இறைவனின் இருப்பிடம் என்றும் ஆலயம் என்பதை 'ஆ' ஆன்மா என்றும் லயம் சேருமிடம் என்றும் பொருள்படுகிறது.

மனிதனின் வடிவமாகச் சிவாலயத்தை ஒப்பிடும்போது (1) கருவறை - தலை, (2) அர்த்த மண்டபம் - கழுத்து, (3) மகா மண்டபம் - மார்பு, (4) யாகசாலை - நாடி, (5) கோபுரம் - பாதம் என்றும் கூறுவர்.

அதே போல்:

(1) ஆலயம் - உடல், (2) கோபுரம் - வாய், (3) நந்தி - நாக்கு, (4) துவஜஸ்தம்பம் (கொடிமரம்) - உள்நாக்கு, (5) தீபங்கள் - பஞ்சேந்திரியங்கள், (6) கருவறை - இதயம், (7) சிவலிங்கம் -உயிர் என்றும் கூறுவர்.

கோபுரம் :

கோயில் வாசலில் அமைக்கப்படும் கோபுரமே மற்ற கோபுரங்களை விட உயரமாக இருக்கும்.இதற்கு ராஜகோபுரம் என்று பெயர். நெடுந்தொலைவிலிருந்து பார்த்தாலே இது கம்பீரமாகத் தெரியும். இதை ஒரு லிங்கமாக எண்ணி வணங்குவதும் உண்டு. இதனை ஸ்தூல லிங்கம் என்பது ஐதீகம். இதையும் தெய்வ உருவமாக எண்ணி வணங்குவது நம் வழக்கம். 'கோபுர தரிசனம் பாப விமோசனம்' என்பது பழமொழி.

கோபுரத்தில் தேவகணஙகள், தெய்வ உருவங்கள், பறவைகள், விலங்குகள், புராண, இதிகாசக்காட்சிகள், மனிதர்கள், தேவியர்கள், மெய்யடியார்கள் எனப் பலவகை சிற்பங்கள் இருக்கும். உலகில் பிரபஞ்ச அமைப்பில் எல்லாவற்றுக்கும் இடமுண்டு. சிற்றுயிர்கள், பேருயிர்கள், விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் எல்லோரும் பிரபஞ்சத்தில் உள்ளனர். அதிலும் இது உண்டு - இது எல்லை என்ற பாகுபாடே கிடையாது என்பதை அவை விளக்குகிறது.

ராஜகோபுரத்தின் மேல் நிலைகள் பொதுவாக ஒற்றைப்படை எண்ணில் அமைந்திருக்கும். அவை மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என்பனவாகயிருக்கும். மூன்று நிலைகள் - ஜாக்கிரத், ஸ்வப்பன, சுஷ¤ப்தி என்பவற்றைக் குறிக்கும். ஐந்து நிலைகள் - ஐம்பொறிகளைக் குறிக்கும். ஏழு நிலைகள்- ஐம்பொறிகளோடு மனம், புத்தி என இரண்டும் சேரும். ஒன்பது நிலைகள் - அந்த ஏழினொடு சித்தம், அங்காரம் என இரண்டும் சேரும்.

பஞ்சேந்திரியங்களைக் கொண்டும் மனம், புத்தி முதலியவைகளைக் கொண்டும் புறவுலகை அறிகிறோம். புறவுலகை அறிகிற செயலை அப்படியே நிறுத்திவிட்டு, மனைத்துணையாகக் கொண்டு பரம்பொருளிடத்துப் பயணம் போக வேண்டும் என்கிற கோட்பாட்டையே ராஜகோபுர வாசல் பிரவேசம் நமக்கு உணர்த்துகிறது.

பலிபீடம் :

ராஜகோபுரத்தை அடுத்துள்ளது பலிபீடம். அதன் அருகில் சென்று வீழ்ந்து வணங்கும்போது பக்தன் மனதில் எழும் எண்ணமே மிக முக்கியமானது. அங்கு அவனது கீழான எண்ணங்கள், இச்சைகள் அனைத்தும் வணங்கும்போது பலிபீடத்தில் பலி கொடுக்கப்படுகிறது. அப்படி பலியிட்ட பின் தூய சிந்தனை, மேலான எண்ணத்துடன் அவன் எழ வேண்டும். அப்பொழுது மனிதத்தன்மை வாய்ந்த மனிதன் எழுந்திருக்கிறான் என்ற எண்ணம் வலுப்படும். அந்த எண்ணத்தின் சக்தி, அவனைப் புதியபிறவி எடுக்க வைப்பதற்குச் சமமானது.

கொடிமரம் :

பலிபீடத்தை அடுத்துள்ளது கொடிமரம். இதை வடமொழியில் துவஜஸ்தம்பம் என்கின்றனர். இது உயரமாக இருக்கும். நந்தி இதற்கு முன்போ பின்போ அமைக்கப்பட்டிருக்கும். கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியன ஒரே நேர் கோட்டில் மூலவரை நோக்கி இருக்கும்.

கொடிமரம் நேராக உள்ளது போல் உடல் நேராக இருக்க வேண்டும் என்பது சாத்திரம். இதன் உயரம் மூலவரின் விமானத்திற்குச் சமமாகவோ அல்லது மண்டபங்களின் மேல் தளத்திற்குச் சமமாகவோ இருக்கும். இதன் அதி தேவதை சிவன். அதுவே சிவனைக் குறிப்பதாக உள்ளது.

இது மூன்று பாகமாகவுள்ளது. முதல் பாகம் சதுரமானது. அடிப்பகுதி இது பிரம்மாவையும், இரண்டாவது பாகம் எண் கோணவேதி அமைப்பு. இது விஷ்ணுவையும், மூன்றாவது பாகம் உருளை போன்ற தடித்த உயரமான மேல் பகுதி ருத்ரனையும் குறிக்கும் என்கிறது ஆகமங்கள்.

உச்சியில் உள்ள மூன்று குறுக்குக்கட்டைகள்- இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியைக் குறிக்கின்றன. அதிலுள்ள இரு குறுக்குத் தண்டுகள் சூரிய, சந்திரனைக் குறிக்கின்றன.

விழாக்காலங்களில் கொடி ஏற்றம் நடைபெறும். அதில் கொடிக்கயிறு அனுக்கிரக சக்தியையும், கொடி - வாயுவையும், கொடியில் வரையப்பட்டுள்ள நந்தி - நந்தி பகவானையும் குறிக்கிறது.

இந்தக் கொடிமரத்தடியில்தான் கீழே விழுந்து வணங்க வேண்டும். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்யலாம். அஷ்டாங்கம் என்பது தலை, கைகள், காதுகள், முழங்கால்கள் ஆகிய ஒன்பதும் தரையில்படுமாறு விழுந்து வணங்குதல், பஞ்சாங்கம் என்பது கைகள், முழங்கால்கள், தலை ஆகிய ஐந்தும் தரையில் படுமாறு குனிந்து வணங்குதல்.

கொடிமரத்தின் முன் மும்முறை விழுந்து வணங்க வேண்டும். அதற்குக் குறையக் கூடாது. கிழக்கு நோக்கிய சந்நிதி எனில் வடக்கில் தலைவைத்துத் தெற்கில் கால் நீட்டி வணங்க வேண்டும். வடக்கில் சந்நிதி எனில் கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.
Click Here Enlargeயாக சாலை :

இது ஒரு தத்துவ வடிவமாகவும், சிவனது 9 மூர்த்த வடிவாகவும் கூறப்படுகிறது. யாசசாலையில் 9 குண்டங்களில் அக்னி வளர்க்கப்படும். அவை நாற்கோணம், முக்கோணம், அர்த்தசந்திரம் முதலான வடிவங்களில் காணப்படும். குண்டங்களைச் சுற்றிப் பசுந்தர்ப்பைகளைப் பரப்பி ஆல், அரசு முதலான சமித்துகளைக் குண்டத்தில் இட்டு அக்னி வளர்த்து மந்திரங்களைச் சொல்லி தெய்வங்களை தியானித்து, சிருக்கு, சிருவம் என்ற கருவிகளால் நெய் ஊற்றி, மந்திரம், கிரியை, பாவனை என்ற மூன்றாலும் வழிபாடு நடக்கும். ஓமகுண்டப் புகை அருட் சக்தியைத் தூண்டி உலகெங்கும் பரவச் செய்யும் என்பதும் ஐதீகம்.

நந்தி :

கருவறையிலுள்ள சிவனை நோக்கி இருப்பது நந்தி. இது சிவனின் வாகனம். சிவன் பரமாத்மா என்றால் நந்தி ஜீவாத்மா. பரமாத்மாவை நோக்கி அதில் கலக்கவே ஜீவாத்மா அதை நோக்கியுள்ளது. கோயிலுக்குச் செல்வோர் நந்திக்கும், சிவனுக்கும் குறுக்கே செல்லலாகாது.

கோயிலுக்குள் போகும்போது நந்தி தேவனை வழிபட்ட பின்னரே உள்ளே உள்ள சந்நிதிக்குள் செல்ல வேண்டும்.

பிராகாரம் :

கோயிலில் வழிபடுவோர் மூன்று முறை அல்லது ஐந்து முறை பிரகாரங்களை வலம் வர வேண்டும். மூவகை உடம்பையும், ஐந்து வித கோசங்களையும் கடந்து இறைவனை வணங்கு என்பதை இது நினைவூட்டும்.

கோயில் பிராகாரங்களைக் காலையில் வலம் வந்தால் நோய் நீங்கும். பகலில் வலம் வந்தால் விருப்பமளிக்கும். மாலையில் வலம் வந்தால் எல்லாப் பாவங்களும் போகும். அர்த்தசாமத்தில் வலம் வந்தால் மோட்சம் கிட்டும்.

மூலவர் :

கருவறையில் உள்ள சிவலிங்கமே மூலவர். லிங்கம் என்பது ஓர் அடையாளமே. லிங்கம் என்பதை லிம் + கம் எனப் பிரிப்பர். லிம் என்றால் அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்குமிடம் என்றும் கம் என்றால் ஒடுங்கிய பொருள் மீண்டும் தோன்றுமிடம் என்றும் பொருள். காண முடியாத இறைவனைக் காணும் ஒரு அடையாளமே சிவலிங்கம்.

லிங்கத்தின் அடிப்பாகம் பிரம்மபாகம் என்றும், ஆவுடையார் (நடுப்பாகம்) விஷ்ணுபாகம் என்றும், பானம் (மேல் குவளை) ருத்ரபாகம் என்றும் அழைப்பர். சிவலிங்கம் பல வகைப்படும். தானே தோன்றியது சுயம்புலிங்கம். விநாயகர், ராமன், முருகன் போன்ற கணங்களால் ஸ்தாபிக்கப் பட்டது கணலிங்கம். இருடிகள் ஸ்தாபித்தது தைவீக லிங்கம், மனிதர்கள் செய்து வைத்தது மானுடலிங்கம் எனப்படும்.

சிவலிங்கத்தை வழிபட்டால் யாவற்றையும் வழிபட்டதாகப் பொருள் கொள்ளப்படும். நினைத்தாலும், தரிசித்தாலும் அப்படியே. சிவலிங்க வழிபாட்டுப் பெருமையை 28 ஆகமங்கள் விரிவாகப் பேசுகின்றன. இக் கலியுகத்தில் சிவனுடைய சக்தியை அறியப் பாரெங்கும் பல இலட்சக்கணக்கான சிவத்தலங்கள் உள்ளன. ஒரே தலத்தில் பல விதமான லிங்கங்கள் உள்ளன. கலியுகத்திற்கு சிவஞானமே சிறந்த ஞானம்.

ஆலய வழிபாட்டின் நோக்கம் மிருகத்தன்மை ஒழிய வேண்டும். மனிதத் தன்மையும் அடங்க வேண்டும். தெய்வத் தன்மையை ஒளி வீசச் செய்ய வேண்டும் என்பதே.


தொகுப்பு : இரா.சுந்தரமூர்த்தி
Share: 




© Copyright 2020 Tamilonline