|
ஸ்ரீ பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம், திருத்துறைப்பூண்டி, தமிழ்நாடு |
|
- சீதா துரைராஜ்|ஆகஸ்டு 2023| |
|
|
|
|
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. சிவபெருமான் கஜசம்ஹார மூர்த்தி வடிவில் அரக்கனைக் கொன்று அருள் பாலிக்கிறார். இது பக்தர்களின் ஆணவம், கர்வம், பொறாமை ஆகியவற்றை இறைவன் அழிப்பதன் குறியீடாகும். பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் வழிபாடு செய்தால் துன்பங்கள் இல்லாத வளமான வாழ்வு அமையும் என்பது ஐதீகம்.
தலச் சிறப்பு இத்தல இறைவன் மேற்கு நோக்கி அமர்ந்திருப்பது ஒரு சிறப்பாகும். இக்கோயிலின் விசேஷம் கஜசம்ஹார மூர்த்தி வடிவம். இவரை வழிபடுவதால் அச்சங்கள் நீங்கும்.
தலபுராணம் ஜல்லிகை என்ற அரக்கி சிவபக்தி கொண்டிருந்தாள். அவள் அசைவம் உண்ணாதவள். அவளது கணவன் விரூபாட்சன் நரமாமிசம் விரும்புகிறவனாக இருந்தான். ஒருமுறை, அந்தணச் சிறுவன் ஒருவன் தந்தைக்கு சிராத்தம் செய்யப் போய்க்கொண்டிருந்தான். அவனை உண்ண விரும்பினான் விரூபாட்சன். ஜல்லிகை எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ஆனால் அவனை விழுங்கியவுடனே விரூபாட்சன் உயிரிழந்தான். வில்வ மரங்களின் நடுவே குடிகொண்டிருந்த பிறவி மருந்தீஸ்வரரை வழிபட்டு, "பெருமானே, என் கணவன் நல்லவன் அல்லதான். ஆயினும் அவனின்றி என்னால் வாழ இயலாது. அவரை மீட்டுத் தருவதோடு நல்லவராக்கவும் வேண்டும்" எனப் பிரார்த்தனை செய்தாள் ஜல்லிகை. அந்த உத்தமியின் வேண்டுதலை ஏற்று விரூபாட்சனை உயிர்ப்பித்ததோடு, தன் தந்தைக்கு சிராத்த கருமம் செய்யப் போய்க்கொண்டிருந்த அந்தணச் சிறுவனுக்கும் புத்துயிர் கொடுத்தார் பரமேஸ்வரன். உத்தமமான அந்தப் பிள்ளையின் தந்தைக்கும் மறுபிறவி இல்லாமற் செய்தார் பிறவி மருந்தீஸ்வரர்.
சிறப்பு திருமணம், குழந்தை வரம் மற்றும் படிப்பில் சிக்கல் போன்ற பிரச்சனைகள் இங்கு வந்து வழிபட்டால் நீங்குவது கண்கூடு. அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு பிரத்தியேகமான ஆலயம் இது.
திருவிழா சித்திரைத் திருவிழா இவ்வாலயத்தில் மிக விசேஷமாக நடக்கிறது. திருவாதிரைத் திருவிழாவும் சிறப்பானது.
சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடி தாமரையோனே - திருமூலர் |
|
சீதாதுரைராஜ், சான் ஹோஸே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|