Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | சமயம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சமயம்
நம்மாழ்வார் போற்றும் நாராயணன்
சுந்தர ஹனுமான்
- சாந்தா கிருஷ்ணமூர்த்தி|ஜனவரி 2003|
Share:
இராமாயணம் நமக்குச் சொல்லி கொடுக்கும் தர்மங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றில் சிலவற்றையாவது பின்பற்றினால் நம் வாழ்க்கை இன்பகரமாக அமையும். இராமாயணத்தில் கவிநயம் இருக்கும் நீதிகளும் நிறைய இருக்கும். அதில் உள்ள ஸ்லோகங்களைக் கூர்ந்து படித்தால் ஒவ்வொரு ஸ்லோகத்திலும் வாழ்க்கைக்கு வேண்டிய நீதிகள் பொதிந்து கிடப்பது தெரிய வரும். ராமாயணத்தில் விதியின் விளையாட்டை நிறைய பார்க்கிறோம். ஆனால் இவை அனைத்தும், கடைசியில் ஒற்றுமையில் முடிவதைப் பார்க்கிறோம். ஆகவே நம் வாழ்க்கை யிலும் விதி என்னதான் ஆட்டி வைத்தாலும் அதற்கு உட்பட்டு எல்லாம் ஒற்றுமையால் முடியும் என்கிற நம்பிக்கையுடன் வாழ வேண்டும்.

இராமாயணம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையோடு கலந்து விட்டதோ அதேபோல, இராமாயண பாத்திரமான ஆஞ்சநேயரும் நம் வாழ்வோடு கலந்து விட்டவர். இவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அவற்றில் சிலவற்றை கூர்ந்து பார்ப்போமேயானால் அவர் எவ்வாறு இவ்வளவு பெரிய உன்னத ஸ்தானத்தை அடைந்தார் என்பது தெரிய வரும்.

பகவானை நினைக்கும்போது, பொதுவாக அம்பிகையையும் சேர்த்துதான் நினைக்கிறோம். ஆனால் ராமாவதாரத்தில் அவதரித்த ராமனை மட்டும் ஸீதா ஸமேதராக மட்டும் அல்லாது, வாயு குமாரனாகிய ஆஞ்சனேயரையும் சேர்த்துதான் வணங்குகிறோம். இந்த ஆஞ்சனேயர் தாசனாகவும் இருக்கிறார். தானே தெய்வமாகவும் இருக்கிறார். ராமனோடு இருக்கும்போது தாசன். தனியாக இருக்கும்போது நாம் வணங்கும் தெய்வம்.

ஸ்ரீராமனை எப்பொழுதும் வேறு சிந்தனை எதுவுமின்றி எந்நேரமும் பூஜித்து சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே பிரம்மசாரியாக இருந்துவிட்டவர். சிரவண பக்தியை இன்றும் செய்து கொண்டிருப்பவர். எங்கு ராமாயணம் நடந்தாலும் அங்கு இரு கைகளையும் சிரஸின் மேல் குவித்து அஞ்சலி செய்த வண்ணம் கேட்டுக் கொண்டிருப்பார். ராமனையும் இலக்குவணனையும் தனது தோளில் தாங்கும் பாக்யத்தைப் பெற்றவர்.

தியாகத்தின் மொத்த உருவம் ஆஞ்சனேயர். சீதையை அன்னையாக துதித்து காப்பாற்ற முன் வந்தவர். பல அரிய குணங்களைப் பெற்றிருந்த இவர் 'பணிவு' என்கிற சிறப்பான குணத்தை ஒருங்கே பெற்றிருந்ததால் ஒரு அவதார புருஷராகவே திகழ்ந்தார்.

இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டம் பக்தியைப் பற்றி கூறுகிறது. ராம பக்தரான ஹனுமார், இந்த காண்டத்தில்தான் முதலாவதாகத் தோன்றுகிறார். ராமனிடம் பக்தியையும், ராமநாமத்தின் மகிமையையும் இவர் எங்கிருந்து கற்றுக் கொண்டார்? சிறகை இழந்த ஜடாயுவின் சகோதரன் ஸம்பாதி சீதையைத் தேடிக் கொண்டு தன்னைப் பார்க்க ராம தூதர்களாக வந்த வானரங்களை ராம நாமத்தைச் சொல்ல வேண்டுகிறார். அவர்கள் அவ்வாறே ராம நாமத்தைச் சொல்ல சொல்ல சூரிய வெப்பத்தினால் கருகிய சிறகுகள் வானளவில் முளைக்கின்றன. அவர் பழைய உருவை அடைகிறார். அதைப் பார்த்து பரவசமடைந்த அனுமார் ராமனிடத்தில் பக்தியும் ராமநாமத்தின் மகிமையையும் அறிகிறார்.

கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதுல் கூறுவதை யே ஒரு வரமாக வைத்துக் கொண்டிருந்தவர் ஹனுமார். முதன்முதலாக கிஷ்கிந்தா காண்டத்தில் தோன்றும்போதே இக்காரியத்தைச் செய்துக் காட்டினார். அண்ணன் வாலியினால் அடித்துத் துரத்தப்பட்ட சுக்ரீவன், கடைசியில் ரிஷிமுக பர்வதத்தில் வந்து தங்குகிறான். ஒரு சாபத்தின் காரணமாக வாலியினால் அங்கு வர முடியாது. அப்பொழுது அனுமார் 'கவலைப் படாதே! உனக்கு சீக்கிரமே நல்ல காலம் வரப்போகிறது' என்று மனம் நொந்து கிடக்கும் சுக்ரீவனுக்கு ஆறுதல் கூறுகிறார். அப்பொழுது ராமனும் லட்சுமணனும் அங்கு வருகிறார்கள். மனைவியை இழந்த ராமருக்கு சுக்ரீவன் தயவு வேண்டும். அப்பொழுதுதான் சுக்ரீவனுடைய படைபலம் இவருக்குக் கிடைக்கும். சுக்ரீவனுக்கும், ராமனுடைய தயவு வேண்டும். ஏனெனில் சுக்ரீவன், இழந்த அரசையும், மனைவி உமையையும் களவாடிய வாலியைக் கொன்று அவைகளை மீட்டுத் தர ராமன் ஒருவனால்தான் முடியும். இருவர் சினேகம் பண்ணிக் கொள்ள வேண்டுமானால் இருவருக்கும் சமமான துக்கம், அல்லது இருவருக்கும் சமமான குறைகள் இருக்க வேண்டும். அதனால்தான் மனைவியையும் அரசையும் இழந்த ராமரும், சுக்ரீவனும் நண்பராகிறார்கள். ஒரு காரிய வெற்றிக்கு முயற்சி மட்டும் போதாது. முயற்சி, தவம் இரண்டும் தேவை. தவம் என்றால் நம் முன்னோர்கள் செய்த புண்ணியம் நாம் செய்த புண்ணியம் இரண்டும் கலந்தது. ராமரும் சுக்ரீவனும் நண்பர்களாக இணைந்ததைக் கம்பன் ''முன்னர் ஈட்டிய தவமும், பின்னர் முயற்சியும் இணைத்தது ஒத்தார்'' என்று வர்ணிக்கிறார். சுக்ரீவனுக்கு ராமரின் நட்பு கிடைத்ததற்கு ஹனுமார்தான் காரணம். அவர்கள் இருவரையும் தன் சொல் வன்மையால் சேர்த்து வைக்கிறார். அதனால் அன்றோ கம்பன் சொல்லின் செல்வன் என்று அனுமாரை அழைக்கிறார்.

''நூறு யோசனை தூரம் உள்ளக் கடலை, யார் தாண்டி இலங்கையை அடைவது'' என்கிற பிரச்சினை எழுகிறது. அப்பொழுது ஒன்றும் பேசாமல் இருந்த ஹனுமாரைப் பார்த்து ஜாம்பவான் அவன் பிறப்பை ஞாபகப்படுத்தி ''உமக்குள்ள பலத்தை நீர் அறிய மாட்டீர். நீர் சிறு குழந்தையாக இருந்தபோதே, சிவப்பாக இருந்த உதய சூரியனை நோக்கி பாய்ந்தவர்'' என்று ஞாபகப்படுத்துகிறார். உடனே ஹனுமாருக்கு கடலைத் தன்னால் தாண்ட முடியும் என்ற சுயநம்பிக்கை வருகிறது. உடனேயே வானளாவ உயர்ந்து, கடலைத் தாண்ட தயாராகிறார். நமக்கும், நாம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்போம் என்கிற சுய நம்பிக்கை வந்தால், எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும்.

இராமாயணத்தில் 'சுந்தர காண்டம்' தான் மிகச் சிறந்தது என்று போற்றப்படுகிறது. மற்ற காண்டங் களை கதாநாயகன் என ராமனைப் பற்றித்தான் அதிகம் பேசுகிறது. ஆனால் 'சுந்தர காண்டம்' ஒன்றுதான் பிராட்டி சீதையைப் பற்றியும் பக்தன் ஆஞ்சனேயரைப் பற்றியும் கூறுகிறது. ஸ்ரீவைஷ்ணவத் தில், பகவானை விட பிராட்டிக்குத் தான் ஏற்றம் அதிகம். பகவானுடைய அடிகளை நாம் அத்தனை போற்றுகிறோமே அதற்கு பிராட்டிதான் காரணம். பாற்கடலில் அவன் தூங்கும்போது அவன் பாதங்களை பிராட்டி வருடி விடுவதின் காரணமாக அவன் பாதங்கள் தனி சக்தியை பெறுகின்றன. ஆக அந்தப் பிராட்டியைப் பற்றியும், பக்தன் ஆஞ்சனேயரைப் பற்றியும் முழுவதும் பேசுவதால் 'சுந்தர காண்டம்' முக்கியத்துவம் பெறுகிறது.

ஹனுமாரின் சாகச செயல்களை விவரிக்கும் இந்த காண்டத்திற்கு வால்மீகி முதலில் 'ஹனுமத் காண்டம்' என்று பெயரிட்டார். உடனே ஹனுமார் அவர் முன் தோன்றி தன் பெயரில் ஒரு காண்டமும் இருக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். உடனே வால்மீகிக்கு ஆஞ்சனேயர் குழந்தையாக இருந்த காட்சி கண் முன் வர, அவருடைய தாயார் அஞ்சனா தேவி குழந்தை ஹனுமனை ''சுந்தரா'' என்று வாஞ்சையுடன் அழைத்தது தெரிந்தது. ஆகவே அக்காண்டத்திற்கு 'சுந்தர காண்டம்' என்று பெயரிட்டார். பாவம் ஹனுமார்! ராமர் அழகானவர் ஆனதால் அவர் பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது என்று சந்தோஷமடைந்தார். இது ஏன் சுந்தர காண்டம் என்றால் பகவானுடைய திவ்ய மங்கள உருவம் மிக அழகாக வர்ணிக்கப்படுகிறது. ராமனுடைய அழகை ஹனுமார் சீதைக்கு மிக அழகாக வர்ணிக்கிறார். உபமானங்கள் சிறந்து விளங்குவது இந்த காண்டத்தில்தான். இலங்கையில் ஹனுமான் சந்திரோதயத்தை வர்ணிப்பதை இன்றெல்லாம் படித்து மகிழலாம்.

சீதையைத் தேடிச் சென்ற ஹனுமார், தன் காரியத்தில் வெற்றி பெற்றார். காரியத்தை தொடங்கும் முன் சூரியனை வணங்கினார். அவர் ஹனுமாரின் குரு. பிறகு குழந்தை ஹனுமாரை தன் ஜராயுதத்தால் அடிக்கப் போகத்தான், பல வரங்கள் கிடைக்கின்றன. ஆதலால் இந்திரனை வணங்கி னார். பிறகு பிரம்மாவை வணங்கினார். பிரம்மாதானே அவரை மூர்ச்சை தெளிவித்து சிரஞ்சீவியாக இரு என்று ஆசிர்வாதம் செய்தவர். பிறகு தகப்பனார் வாயுதேவனை வணங்கினார். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது எந்தக் காரியத்தையும் தொடங்கும் முன்னர் பெரியவர்களை வணங்கி அவர்கள் ஆசியை பெற வேண்டும் என்பது.

கடலைக் கடந்த ஹனுமான் ஒரே தாவலில் கடக்கவில்லை. வழியில் மூன்று தடைகளைக் கடந்து சென்றதாக வால்மீகி கூறுகிறார். முதலில் நட்பு முறையில் மைநாகம் என்ற பர்வதமும், சுரசை என்கிற ஒரு கோர அரக்கியும், பின் விரோத மனப்பான்மை கொண்ட ஸிம்ஷிகா என்ற அரக்கியும் தடை செய்கிறார்கள். ஹனுமாரோ வாயில் ராமனுடைய மோதிரத்துடன் ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டு இத்தடைகளை கடந்து இலங்கையை அடைகிறார்.

கடலைத் தாண்ட கிளம்பும் ஹனுமார் சற்று மார்தட்டி பேசுகிறார். ''திரும்பினால் சீதையுடன் திரும்புவேன். இல்லாவிடில், இராவணனோடு கூட இலங்கையைப் பெயர்த்துக் கொண்டு வருவேன்' என்று சொல்லுகிறார். ஆனால் சீதையை இலங்கையில் பல இடங்களில் தேடியும் காணவில்லை. அதனால் மனம் உடைந்து போகிறார்.

சீதையை இராவணனின் அந்தப்புரத்தில் தேடு கிறார். திடீரென்று அவருக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. ''இப்படி பரஸ்திரீகளை பல அலங்கோல நிலைகளில் பார்த்தேனே, அதன் காரணமாக என் தர்மத்திற்கு ஏதாவது கெடுதல் ஏற்பட்டால் என்ன ஆவது என்று நடுங்குகிறார். பிறகு அவர் தம்மைத் தாமே தேற்றிக் கொள்கிறார். அந்தப் பெண்ணை நான் பார்க்கத்தான் செய்தேன். ஆனால் அதன் காரணமாக என் மனதில் ஒரு விகாரமும் ஏற்படவில்லை. என் மனதோ துளியும் சஞ்சலப் படவில்லை'' என்று தேற்றிக் கொள்கிறார். ஹனுமார் தன் மனதை சோதித்துக் கொண்ட மாதிரி, நாமும் நம்மனதை அடிக்கடி சோதித்துக் கொள்ள வேண்டும்.

எங்கு தேடியும் சீதை கிடைக்காமல் போகவே, எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டவர், ராமனை மனதார வேண்டிக் கொள்ளவில்லையோ என்கிற அச்சம் அவருக்கு ஏற்படுகிறது. உடனே ராமனைக் குறித்து 'நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய' என்று தொடங்கும் ஸ்லோகத்தால் ராமனை துதிக்க இன்னும் அசோக வனத்தில் தேடவில்லையே என்கிற எண்ணம் தோன்றுகிறது. அசோக வனத்தில் தேடுகிறார். சீதை அகப்படுகிறாள்.

ஹனுமாரைக் கண்டதும் சீதையின் முகம் மலர்கிறது. பத்து மாத காலமாக காணாத கணவரின் மோதிரத்தைக் கண்டவுடன் அவள் அடைந்த மகிழ்ச்சி சொல்லி முடியாது. உடனே ஹனுமாரை 'இன்றென இருத்தி' அதாவது இன்று போல் என்றும் சிரஞ்சீவி யாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினாள். ''இன்று நீ எனக்கு உதவியதைப் போலவே எல்லோருக்கும் உதவ வேண்டும்'' என்று பொருள் கொள்ளலாம்.

சீதையைக் கண்டுபிடித்து அவளிடமிருந்து சூடாமணியைப் பெற்றுக் கொண்டு இலங்கையி லிருந்து திரும்பிய ஹனுமாரை பாராட்டும் ராமர் அவரை 'உத்தமசேவகன்' என்று குறிப்பிடுகிறார். உத்தமசேவகன் எஜமானன் கொடுத்த கஷ்டமான காரியத்தை சரிவர நிறைவேற்றுவதோடு அதற்கு அனுசரணையாக உள்ள பல காரியங்களையும் நிறைவேற்றிவிட்டுத்தான் திரும்புவான். ஹனுமாரும் அவ்வாறே செல்கிறார். சீதையைக் கண்டுபிடித்த தோடு அவள் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதையும் தடுக்கிறார். ராமர் வந்துவிடுவார் என்று உற்சாகப்படுத்துகிறார். அத்துடன் நின்றாரா! ராவணனின் பலாபலத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்றே அசோகவனத்தை அழித்துத் தம்மை யார் எதிர்க்கிறார்கள் என்று கவனிக்கிறார். பிறகு ராவணனை சந்திப்பதற்காக வேண்டுமென்றே இந்திரஜித்திடம் அகப்பட்டுக் கொண்டு ராவணனைச் சந்திக்கிறார். யுத்தத்தை தவிர்ப்பதற்காக அவனுக்கும் பல நீதிகள் எடுத்துரைக்கிறார். இவை ராவணனின் இருபது காதுகளில் விழவில்லை. அவன் கேட்காமல் போகவே, அவனை பலவீனப்படுத்த இலங்கையை எரிக்கிறார்.

சூரிய கிரணங்கள் பட்டதுமே தண்ணீரில் உள்ள தாமரை மலர்கிறது. ஆனால் அதே தாமரை தரையில் கிடந்தால் சூரியனால் அதை மலரச் செய்ய முடியுமா? அதற்கு பதிலாக அதை உலர்த்தத்தானே செய்யும். அதே மாதிரி ஆசாரிய சம்பந்தம் இருந்தால்தான் பகவானால் உத்தாரணம் பண்ண முடியும். இல்லையேல் பகவானால் கூட ஒன்றும் செய்ய முடியாது. பகவானை ஒரு கையாலும், ஆசாரியனை இன்னொரு கையாலும் கூட பற்றுவது தவறு. ஆசாரியனைத்தான் இரண்டு கைகளாலும் பற்ற வேண்டும்.

இந்த ஆசாரிய காரியத்தை ஒரு உதாரணம் மூலமாக விளங்க வைக்கலாம். ஒரு சமயம் ஒரு வணிகன் வியாபார நிமித்தம் பூர்ணகர்ப்பவதியாக இருந்த மனைவியை விட்டு வெளியூர் செல்கிறான். இருபது வருடங்கள் ஆகியும் அவன் திரும்பவில்லை. இதற்குள் அவர்களுக்குப் பிறந்த மகனுக்கு இருபது வயதாகிறது. அவனும் வியாபார நிமித்தம் வெளியூர் செல்கிறான். அங்கு தந்தையைச் சந்திக்கிறான். ஆனால் அவர்களுக்கு ஒருவரையொருவர் தெரியாது. இருவருக்குமிடையே வியாபார விஷயமாக தகராறு எழ, ஒருவரையொருவர் வாளால் வெட்டிக் கொள்ளப் போகிறார்கள். அப்பொழுது இருவரையும் தெரிந்த ஒருவர் குறுக்கிட்டு 'நீங்கள் இருவரும் அப்பா, பிள்ளை'' என்று உணர்த்திய பிறகு இருவரும் ஒன்று சேர்ந்தார்கள். அத்தகைய காரியத்தைத்தான் ஆசாரியன் செய்கிறான். ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் ஒன்று சேர்க்கிறார்.

ஆசாரியனுடைய பெருமையைப் பற்றி பேசும்போது, ''ஒரு கண்ணைக் கொண்டோ, அல்லது இரண்டு கண்களைக் கொண்டோ அல்லது ஆயிரம் கண்களைக் கொண்டோ அல்லது எட்டு கண்களைக் கொண்டோ அல்லது ஆயிரம் கண்களைக் கொண்டோ செய்ய முடியாது என்கிறார் தேசிகன். இங்கு ஒரு கதை. அசுரர்களின் குலகுருவான சுக்கிராச்சாரியாரையும் இரண்டு கண்கள் என்று தேவர்களின் குலகுருவான பிரஹஷ்பதியையும் குறிப்பிடுகிறார். மூன்று கண்கள், முக்கண்ணனாகிய பரமசிவனையும், எட்டுக் கண்கள் என்று நான்முகன் பிரம்மாவையும், ஆயிரம் கண்கள் என்று பல்லாயிரம் கண்களை உடைய பரந்தாமனையும் தான் குறிப்பிடுகிறார்.
ஹனுமாருக்கு ஆசாரியனுக்கு இருக்க வேண்டிய ஞானம், பக்தி, வைராக்கியம், வாக்கு வன்மை முதலியவை இருந்தது. ஜீவாத்மா சீதையைத் தேடி, பரமாத்மா ராமன் மிதிலை சென்று, அந்த ஜீவாத்மாவை தம்மோடு சேர்த்துக் கொள்கிறது. எதுவும் வலுவில் நம்மைத் தேடி கொண்டு வருவதால் அதற்கு நாம் அதிக மதிப்பு கொடுக்க மாட்டோம். அதே மாதிரி, இந்த ஜீவாத்மாவும் தன்னைத் தேடி வந்த பரமாத்மாவிற்கு அதிகம் மதிப்பு வைக்காமல் தன் ஞானேந்திரியங்களையும், கர்மேந்திரியங் களையும் கட்டுப்படுத்தாமல், ஒரு மாயமான் மீது மோகம் கொள்கிறது. அதன் காரணமாக பரமாத்மா விடமிருந்து பிரிகிறது. தன் பத்து இந்திரியங்களையும் கட்டுப்படுத்த முடியாத தசமுகனால் களவாடிச் செல்லப்படுகிறது. பரமாத்மாவைப் பிரிந்து ஜீவாத்மா துடிக்கிறது. ஒரு நல்ல ஜீவாத்மாவை விட்டு பிரிந்து விட்டோமே என்று இங்கு பரமாத்மாவும் துடிக்கிறது. இப்பொழுது இந்த பரமாத்மாவையும் ஜீவாத்மாவை யும் ஒன்று சேர்த்து வைக்க வருகிறார் ஆசாரிய ரூபத்தில் ஹனுமார். இருவரையும் ஒன்று சேர்க் கிறார்.

பல விதங்களிலும் உதவி செய்த ஹனுமாருக்கு என்ன பிரதி உபகாரம் செய்வது என்று தவிக்கிறார் ராமர். ''நீ சீதையை கண்டுபிடித்தால், என் ரகுவம்ச குலத்தையே காப்பாற்றினாய். வீர இலட்சுமணனைக் காப்பாற்றினாய். உனக்கு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை. உனக்கு நான் என்னையே கொடுப்பேன் என்று சொல்லி ஹனுமாரை இறுகத் தழுவிக் கொள்கிறார்.

இராமாயணம் மகாபாரதம் இந்த இரண்டு இதிகாசங்களிலும் எத்தனையோ உயர்ந்த கதா பாத்திரங்கள் வருகிறார்கள். ஆனால் இவர்கள் யாவருக்கும் கோவில் கிடையாது. ஆனால் ஹனுமாருக்கு மட்டும் கோவில் கட்டி வணங்கு கிறோம். போதாக்குறைக்கு அவருக்கு வடை மாலை வேறு சாத்தி மகிழ்கிறோம் ஏன்? இதற்கு காரணம் அவர் ஞானி. பராக்கிரசாலி. மிகச் சிறந்த பக்தர்.

ஹனுமான் மிகச் சிறந்த ஞானி. ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். சூரிய பகவானிடமிருந்து ஞானத்தைப் பெற்றவர். ஆனால் பீஷ்மரை விட சிறந்த ஞானியா? அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டே பீஷ்மர் எத்தனை தர்மங்களை எடுத்துரைக்கிறார். அவர் சொல்லாத தர்மங்களே இல்லை. ஆனால் அவருக்கு கோவில் இல்லை. ஹனுமாருக்குத்தான் கோவில்.

பராக்கிரமத்தை எடுத்துக் கொண்டால் ஹனுமார் பராக்கிரமசாலிதான். அவர் ராவணனை வெல்ல ராமருக்கு எத்தனையோ வழிகளில் உதவினார். ஆனால் பீஷ்மரோ மகாபாரதப் போரின் எட்டாம் நாள் இரவு துரியோதனன், தம்மை சற்றுக் குறைவாக பேசினான் என்பதற்காக ஒன்பதாம் நாள் ஒரு கடும்போர் புரிகிறாரே, அதைப் போன்ற பராக்கிர மத்தை நாம் பார்க்க முடியுமா? ஆயுதம் எடுக்க மாட்டேன் என்று சொன்ன கர்ணனையே ஆயுதம் எடுக்க வைத்து விட்டாரே அந்தக் கடும் போரினால்! ஆனால் அவருக்கு கோவில் இல்லை.

ஹனுமார் சிறந்த பக்தர்தான். சந்தேகமில்லை. ராமர் வைகுண்டம் சென்றபோது ஹனுமானைத் தன்னுடன் வரும்படி அழைக்கிறார். ''வைகுண்டத்தில் ராமாயணமும் இல்லை. ராம நாமமும் இல்லை'' என்பதற்காக அவருடன் போக மறுத்துவிடுகிறார் ஹனுமார். ஆனாலும் ஐந்து வயது பிரஹலாதனைவிட இவரை சிறந்த பக்தன் என்று சொல்ல முடியுமா? ஆனால் பிரஹலாதனுக்கு கோவில் இல்லை. ஹனுமாருக்கு கோவில்.

ஏன்? இதற்கு இரண்டு கோணங்கள் உள்ளன. ஒரு பக்தர் பகவானை பார்த்து, ''ஹே பிரபோ! எங்களுக்கு ஏதாவது கஷ்டம் என்றால் நாங்கள் உன்னிடம் ஓடி வருகிறோம். உனக்கு கஷ்டம் என்றால் நீ எங்குப் போவாய் என்று உருகுகிறார். ஆனால் ஹனுமாரோ கஷ்டத்தில் இருந்த பகவானுக்கே உதவி செய்தார். இதைவிட சிறந்த காரணம் லோக மாதா சீதையின் பரிபூரண அருள் கிடைத்ததால்தான் அவருக்கு நாடெங்கும் கோவில்கள்.

வைகுண்டத்திற்கு ராமனுடன் போக மறுத்த அனுமன் ராமநாமத்தைக் கேட்டுக் கொண்டு பூலோகத்தி லேயே தங்கிவிடுகிறார் பாவம்! அனுமனைவிட்டு பிரிந்த பரந்தாமன் வைகுண்டத்தில் மிகவும் அவதிப்படுகிறார். அவருக்கு முன் யார் யாரோ இருக்கிறார்கள். அவருக்குப் பிடித்த அனுமனைக் காணோம். இதைக் கண்டு மகாலட்சுமியும், பக்தனை பிரிந்து இப்படி அவதிப்படுகிறாரே என்று தவித்தாள். கடைசியில் நாராயணன் ஒரு முடிவிற்கு வருகிறார். தில்லையில் கோவிந்த ராஜபெருமாள் கோவிலில் மாருதியோடு அமர்வது என்று தீர்மானிக்கிறார். அதைத்தான் குலசேகர ஆழ்வார் ''தில்லை நகர், திரு சித்ர கூடந்தன்னுள் திறல் விளக்கு மாருதியோடு அமர்ந்தான்'' என்கிறார்.

ஒருமுறை அனுமன் சீதையிடம் அவள் நெற்றியில் காணப்பட்ட ஸிந்தூரத்தின் அழகை ரசித்து வாத்ஸல்யத்துடன் அதை நெற்றியில் வைத்திருக்கும் காரணத்தை அறிய, ஆவலுடன் கேட்கிறார். ''ராமனுக்கு மிகவும் பிடித்தமான இந்த செந்தூரத் தை நெற்றியில் வைத்திருப்பதால் அவருடைய அன்புக்கும், ஆசைக்கும் பாத்திரமானவளாக இருக்கிறேன்'' என்று சீதை கூறுகிறாள். மறுநாள் ராமனிடம் சென்ற அனுமனைப் பார்த்து ராமன் சிரித்தபடியே ''என்ன இது. உடம்பு முழுவதும் செந்தூரம்'' என்று அன்பொழுக கேட்டபோது, ஹனுமன் ''உங்களுக்கு பிடித்த இந்த செந்தூரத்தி னால் உங்கள் அன்புக்கும், ஆசைக்கும் என்றென்றும் நான் உங்கள் அடிமையாக இருக்க வேண்டும்'' என வேண்டிக் கொள்கிறான். இப்பொழுதும் எல்லா ஆஞ்சநேயர் கோவில்களிலும், அவர் விக்கிரகம் முழுவதும் செந்தூரத்தாலேயே அலங்கரிக்கப் பட்டிருக்கும்.

ஹனுமனின் அவதார நாள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப் படுகிறது. தமிழகத்தில் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தன்று ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இராமனுடைய நாமத்தைச் சொல்லும்போது ராமனுடைய குணங்கள் நமக்கு வர, நாம் ராமனாக மாறிவிடுவோம். ராம பக்தனுக்கு ராமனுடைய குணங்கள் வந்துவிடும் என்பதற்கு ஹனுமாரே உதாரணம். பட்டாபிஷேகத்தின்போது ராமர் ஒரு முத்துமாலையை சீதையிடம் கொடுத்து உனக்கு யார் இஷ்டமோ அவருக்குக் கொடு என்கிறார். சீதை மாலையை ராமனிடம் காணப்பட்ட அத்தனை நற்குணங்களையும் கொண்ட ஹனுமாருக்குக் கொடுக்கிறாள்.

திருமாள் கிருஷ்ணாவதாரத்தில் விஸ்வரூபம் எடுத்துக் காட்டிய பெருமையை ராமாவதாரத்தில் ராமனாக அவதரித்தபோது எடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால் ஹனுமாரோ பல சந்தர்ப்பங்களில் விஸ்வரூபமெடுத்து தன் பெருமையை உலகிற்கு உணர்த்தி இருக்கிறார். தனது உருவத்தை சிறிதாக்கிக் கொள்ளவும், பெரிதாக்கிக் கொள்ளவும் வரம் பெற்றவர் பல கோவில்களில் இன்றும் சிறிய ஹனுமார் சிலைகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருவதாக கருதுகிறார்கள்.

இக்கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான தீமை களை விரட்டும் ஹனுமாரை, சதா ராமநாமத்தை ஸ்மரிக்கும் ஆஞ்சனேயரை சீதாராம லட்சுமண பரத சத்ருகன ஸமேதராக விளங்கும் சுந்தர ஹனுமானை வணங்குவோம்.

சாந்தா கிருஷ்ணமூர்த்தி
More

நம்மாழ்வார் போற்றும் நாராயணன்
Share: 




© Copyright 2020 Tamilonline