Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சமயம்
திருப்பதி அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில்
- சீதா துரைராஜ்|ஆகஸ்டு 2019|
Share:
ஆந்திர மாநிலத்தின் சித்தூர் ஜில்லாவில், திருமலையில் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. கீழ்த் திருப்பதியில் தங்குவதற்கு காட்டேஜ் வசதிகள் உள்ளன. மலை ஏற முடிந்தால், நடந்து சென்றும் பெருமாளைத் தரிசிக்கலாம்

இத்தலம் அஷ்ட விஷ்ணு சுயம்புத் தலங்களில் ஒன்றாகும். குலசேகர ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. 108 வைணவ திவ்யதேசங்களில் இத்தலம் 106வது தலம். மூலவர் திருநாமம் வெங்கடாசலபதி. பெருமாள், சீனிவாசன், பாலாஜி, கோவிந்தன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார் தாயார் திருநாமம் பத்மாவதி, அலர்மேல்மங்கை. உற்சவர் மலையப்ப சுவாமி, கல்யாண வெங்கடேசர். கோவில் ஏழு மலைகள் மேல் அமைந்துள்ளதால் இவர் ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார். விருஷபாத்ரி, வெங்கடாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, நீலாத்ரி, கருடாசலம், சேஷாசலம் என ஏழு மலைகள் இவ்வாலயத்தைச் சுற்றி அமைந்துள்ளன. வெங்கடாசல மஹாத்மியம் பற்றி வராக புராணம், பவிஷ்ய புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலியுகத்தில் விஷ்ணு, வெங்கடேச அவதாரம் எடுத்ததால் கலியுக வைகுண்டம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. தீர்த்தம் சுவாமி புஷ்கரணி. கருடபகவான் இந்தக் குளத்தைப் பெருமாளுக்காக அமைத்துள்ளார். ஆதிவராக சுவாமி கோவில் புஷ்கரணி குளக்கரையில் உள்ளது.

வைணவ ஆச்சாரியர் ஸ்ரீமத் ராமானுஜரால் பெருமாளை வழிபடும் முறை வகுக்கப்பட்டு, பூஜைக்கு நந்தவனங்கள் வளர்க்கப்பட்டன. கோயிலுக்கு சங்கு சக்கரம் பெருமாளுக்காக அளித்தார் ராமானுஜர். ராமானுஜர் சன்னதி 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பெருமாள் பெயரில் தாளப்பாக்கம் அன்னமாச்சார்யா 32000 பாடல்கள் இயற்றியுள்ளார். இன்றும் அவை கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன. புரந்தரதாஸர், முத்துசாமி தீக்ஷிதர் ஆகியோர் பெருமாள்மேல் பாடல்கள் இயற்றி உள்ளனர். பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் அவர்களால் வெங்கடேச சுப்ரபாதம் இயற்றப்பட்டு விடியற்காலையில் தினமும் கோயிலில் பெருமாளுக்கு இசைக்கப்படுகிறது.

ஒருமுறை லட்சுமிதேவி பெருமாள்மீது கோபம் கொண்டு அவரை விட்டுப் பிரிந்து பூலோகத்தில் நாராயண வனத்தில் தங்கினார். அப்போது ஆகாசராஜன் என்ற அரசர் இப்பகுதியை ஆண்டு வந்தார். அவர் மனைவி தரணிதேவி குழந்தைவரம் கேட்டு யாகம் செய்வதற்காக பூமியைப் பொற்கலப்பையால் உழுதபோது, ஏதோ பொருள் தட்டியது. அங்கு தோண்டிப் பார்க்க, உள்ளே பெட்டியில் தாமரையின் நடுவில் பெண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு பத்மாவதி எனப் பெயரிட்டு இருவரும் அன்புடன் வளர்த்தனர். பத்மாவதி வேதாசல மலையில் தோழிகளோடு சுற்றி வரும்போது வேட்டைக்கு வந்த சீனிவாசன் எனும் வேடன், பத்மாவதியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். முதலில் மறுத்த பத்மாவதி, வந்தது ஸ்ரீமந் நாராயணனே எனத் தெரிந்ததும் திருமணத்திற்குச் சம்மதித்தாள். சீனிவாசனிடம் பணம் இல்லை. லட்சுமிதேவி பிரிந்து சென்றுவிட்டதால், மனதில் தவிக்கும்போது, நாரதர் ஒரு யோசனை கூறினார். அதன்படி, பெருமாள் குபேரனை அழைத்து ஒரு லட்சத்து 14 ஆயிரம் பொன் கடன் வாங்கிக்கொண்டு பத்திரம் எழுதிக் கொடுத்தார். தன்னை வழிபட வரும் பக்தர்கள் கொடுக்கும் பணத்தைக் கலியுகத்தில் வட்டியாகச் செலுத்திவிட்டு, கலியுகம் முடிந்ததும் அசலைத் திருப்பித் தருவதாக குபேரனிடம் தெரிவித்தார். திருமணம் சிறப்புடன் நடந்து முடிந்தது.

பெருமாள் திருமலையில் இருந்து அருள் பாலிக்கிறார். ஆகாசராஜனின் தம்பியான தொண்டைமான் என்பவர் இக்கோவிலைக் கட்டினார். பக்தர்கள் கொடுக்கும் பணத்தைக் குபேரனிடம் சேர்க்கும் பொறுப்பைத் தன் தம்பி கோவிந்தராஜனிடம் ஒப்படைத்தார் பெருமாள். கீழ்த்திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள் மரக்கால் மூலம் காணிக்கையை அளந்து குபேரனிடம் கொடுத்து வருகிறார்

கோவில் ராஜகோபுரம் நாற்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலக் கட்டிடக்கலை வடிவில் 13ம் நூற்றாண்டில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 50 அடி உயரம், ஏழு கலசங்கள் கொண்ட ஐந்தடுக்கு கோபுரம். ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. கோயிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. மூன்றாவது நுழைவாயிலைக் கடந்து கர்ப்பக்கிரகம் செல்லலாம்.
கர்ப்பக்கிரகத்தில் பெருமாள் நின்றதிருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். கருவறையில் ராமானுஜர் சாத்திய சங்கு, சக்கரம் மற்றும் நெற்றியில் மிகப்பெரிய திருநாமப் பட்டையுடன் காட்சி அளிக்கிறார். லட்சுமித் தாயார் வலது மார்பிலும் பத்மாவதித் தாயார் இடது மார்பிலும் வீற்றிருக்கின்றனர். ஆனந்த விமான நிலையத்தின் கீழ், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் பெருமாள். கோயிலின் உள்ளே வரதராஜ சுவாமி, யோக நரசிம்மர், கருடாழ்வார், வகுளமாதா, குபேரர், விஷ்வக்சேனர் ஆகியோரை தரிசிக்கலாம். கோயில் கட்டும் திருப்பணியில் பல்லவர், சோழர், விஜயநகர மன்னர்கள் ஈடுபட்டுள்ளனர். விலை உயர்ந்த ஆபரணங்களுடன், நிலங்களும் கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளன. கோவில் நிர்வாகம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்டது. திருப்பதி சன்னிதித் தெருவில் ஸ்ரீபேடி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது சிறப்பாகும். வெங்கடேசப் பெருமாளின் துணைவியார் பத்மாவதித் தாயார் கோவில், திருப்பதியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் திருச்சானூரில் அமைந்துள்ளது.

தனது தெய்வீகக் குரலால் "கௌசல்யா சுப்ரஜா.." எனத் தொடங்கும் வெங்கடேச சுப்ரபாதத்தைப் பாடிய 'பாரதரத்னா' எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களைக் கௌரவிக்கும் வகையில், திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து கோவில் செல்லும் வழியில் அவரது உருவச்சிலையை அமைத்துள்ளனர்.

கோவில் அதிகாலை மூன்றரை மணிமுதல் இரவு மூன்று மணிவரை திறந்திருக்கும். விடியற்காலை சுப்ரபாதம், தோமாலை சேவையைத் தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகின்றன. பெயரளவுக்கு மட்டுமே அரைமணி நேரம் நடை சாத்தப்படுகிறது. பெருமாளைத் தரிசனம் செய்வது, முடி காணிக்கை, லட்டு விற்பனைகள் மூலம் வருட வருமானம் 750 கோடி ரூபாய்வரை கிடைக்கிறது. பக்தர்கள் கோயிலில் துலாபாரப் பிரார்த்தனை காணிக்கை செலுத்தியும், பெருமாள், தாயாருக்குக் கல்யாணப் பிரார்த்தனை செய்துகொண்டும் வழிபடுகின்றனர். கல்யாண உத்சவத்திற்கு இரண்டு பேர் அனுமதிக்கப்படுவர். ஊஞ்சல் சேவையில் மலையப்ப சுவாமி பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சியளிக்கும் டோலோத்சவம் சிறப்பானது. உற்சவப் பெருமாள் ஆடு மேய்க்கும் காட்சியைக் காணலாம். மாலை நான்கு மணிக்கு ஆரம்பித்து வேத பாராயணம் மங்கள வாத்யத்துடன் ஐந்து மணிக்கு நிறைவடைகிறது. திருப்பதி லட்டுப் பிரசாதம் மிகப்பெரிய அளவில் தயாரிக்கப்படுகிறது. கோவிலுக்கு தினமும் 75000 பேருக்கு மேல் வருகின்றனர். திருமலையில் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. பெருமாளுக்குத் திருமஞ்சனப் பிரார்த்தனை செய்ய மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும். குங்குமப்பூ, கஸ்தூரி, புனுகு யாவும் ஸ்பெயின், நேபாளம், பாரிஸ், சைனா ஆகிய தேசங்களிலிருந்து வருகின்றன. ஆம்ஸ்டர்டாமில் இருந்து ரோஜாப்பூக்கள் விமானத்தில் வருகின்றன. உண்டியல் அல்லாத நன்கொடை வருமானம் நூறு கோடி. ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை நன்கொடை தருபவர்களுக்கு ஐந்து பேர் முதல் வி.ஐ.பி. காட்டேஜில் இலவசமாகத் தங்கிச் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். லட்டு, வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோவிலில் கியூவில் நிற்க, கூட்டங்களைத் தவிர்க்க பக்தர்களுக்காக இரண்டு கியூ மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.

அறநிறுவனங்கள்
கோவில் தேவஸ்தானத்துக்கு மிகுந்த பணவரவு உள்ளதென்பதைப் பேசும் பெரும்பாலோனோர், இது பல கல்வி மற்றும் சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறது என்பதைக் கவனிக்கத் தவறுகின்றனர். Balaji Institute of Surgery, Research and Rehabilitation for the Disabled, Sri Venkateswara Poor Home, Sri Venkateswara Bala Mandir, Sri Venkateswara Institute of Medical Sciences, Sri Venkateswara School for the Deaf, Sri Venkateswara Training Centre for the Handicapped, Haritha Project - Conservation of Water and Forests ஆகியவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.

திருவிழாக்கள்
பிரம்மோற்சவம் அக்டோபரில் ஒன்பது நாள் நடைபெறுகிறது. அச்சமயம் லட்சக்கணக்கில் மக்கள் வருகின்றனர். விழாவின்போது ஒன்பது நாளும் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி-பூதேவியுடன் நான்கு மாடவீதிகளில் விதவிதமான வாகனங்களில் உலா வருகின்றார். ஐந்தாம் நாள் கருடசேவையன்று மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம். அப்போது பெயரளவுக்கு மட்டும் ஐந்து நிமிடங்கள் நடை அடைக்கப்படுகிறது ஐந்து லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வந்து சேவிக்கின்றனர். வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி, ஸ்ரீராமநவமி, ஜன்மாஷ்டமி, யுகாதி, தெப்போற்சவம், ஸ்ரீபத்மாவதி பரிணயோத்சவம், வசந்தோத்சவம், புஷ்பயாகம், புஷ்பப்பல்லக்கு என விழாக்கள் யாவும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

- குலசேகராழ்வார்

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline