|
தில்லைவிளாகம் ஸ்ரீ வீரகோதண்ட ராமசுவாமி ஆலயம் |
|
- சீதா துரைராஜ்|ஜனவரி 2018| |
|
|
|
|
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தலம் தில்லைவிளாகம். மன்னார்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூரிலிருந்து பேருந்துகள் உள்ளன. மூலவரே பஞ்சலோக சிலையாக இருக்கும் சிறப்புப் பெற்றது இந்தத்தலம்.
ஸ்ரீராமர், ராவணனைப் போரில் வென்று சீதையை மீட்டபின் அயோத்திக்குத் திரும்பச் செல்லும்போது இங்கு சற்று அமர்ந்ததாக ராமாயணம் கூறுகிறது. 14 ஆண்டுகள் வனவாசம் பூர்த்தியாகி அயோத்திக்குத் திரும்பும்போது, பரத்வாஜ முனிவர் வாழ்ந்த இடமான இங்கு முனிவரின் ஆசிரமத்தில் ராமர் தங்கிச் சென்றதாக வரலாறு. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருச்சித்ரகூடமாக இதனையே உ.வே. சாமிநாதையர் அவர்கள் கருதினார்.
கோயில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது. நுழைந்தவுடன் கொடிமரம், கருடாழ்வார் சன்னிதி. சுற்றிலும் பரந்தவெளி உள்ளது. இறைவன் நாமம் : வீரகோதண்ட ராமர், சீதாப் பிராட்டியார், லட்சுமணனுடன் காட்சி தருகிறார். சன்னிதி வாயிலின் இருபுறமும் சங்கநிதி, பதுமநிதி சிலைகள் உள்ளன. சங்கநிதியின் கையில் சங்கும், பதுமநிதியின் கையில் தாமரைப்பூவும் உள்ளன. தலவிருட்சம் தில்லை மரம். தீர்த்தம்: ஸ்ரீராமர் தீர்த்தம். இது ஆலயத்தின் பின்புறம் உள்ளது. தென்புறத்தில் சீதா தீர்த்தமும், வடபுறத்தில் அனுமார் தீர்த்தமும் உள்ளன.
1862ம் ஆண்டு ஸ்ரீராமர் மடம் ஒன்று கட்ட நினைத்து, பூமியைத் தோண்டியபோது செங்கல் கட்டிடம் ஒன்று காணப்பட்டது. மேலும் ஆராய்ந்ததில் பத்து அழகான பஞ்சலோகச் சிலைகள் கிடைத்தன. அவை 5 அடி உயர ராமர், 4 1/2 அடி உயர லட்சுமணன், 4 அடி உயர சீதை, அனுமன், ஸ்ரீசெல்வர், சக்கரத்தாழ்வார், ருக்மணி, சத்யபாமா சமேத கண்ணன், சந்தான கிருஷ்ணன் சிலைகளாகும். பின்னர் 1913ம் ஆண்டு ராமர், லட்சுமணன், சீதை, ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகிய உலோகத் திருமேனிகளும், சற்றுக் குறைந்த உயரத்தில் உலோகத் திருமேனிகளும் செய்து வைக்கப்பட்டன. உயரமான திருமேனிகளை மூல விக்ரகங்களாகவும், உயரம் குறைந்த திருமேனிகளை உற்சவ மூர்த்திகளாகவும் வழிபட ஆரம்பித்தனர். கருவறையில் கற்சிலைகள் இல்லை. உலோக விக்ரகங்களே மூலவர்களாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. |
|
கோயிலின் வடக்குப்புறம் மதிற்சுவரை ஒட்டினாற்போல் ஸ்ரீநடராஜர் ஆலயம் அமைந்துள்ளது. சிதம்பரத்தில் நடராஜர் சன்னிதி, பெருமாள் சன்னிதிகள் அமைந்துள்ளது போல் இங்கும் ராமர், நடராஜர் ஆலயங்கள் அமைந்துள்ளன. ஸ்ரீராமர் வலதுகையில் அம்புடனும், இடதுகையில் கோதண்டத்துடனும் வெகு கம்பீரமாக இருப்பதால் ‘வீரகோதண்ட ராமர்’ என்ற திருநாமம். இத்தலத்தில் மட்டுமே ராமரின் வலக்கையில் உள்ள அம்பில் ‘ஸ்ரீராமசரம்’ எனத் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராமருடைய மார்பில் இலக்குமி அமைந்திருப்பது, ஸ்ரீராமரின் கை விரல்கள், கெண்டைக் கால்கள் ஆகியவற்றில் ரேகைகள் தத்ரூபமாகத் தெரிவது விசேஷம்.
கோவிலின் வடபுறத்தில் சிவன்கோவில் உள்ளது. இதில் நடராஜர் சன்னிதியும் உண்டு. ஆகவே இந்தத் தலம் ஆதிதில்லை என்றும் அழைக்கப்படுகிறது.
ஆஞ்சநேயர் கையில் கதாயுதம் ஏந்தி, வாய்பொத்தி ஸ்ரீராமர் முன் நிற்பதை இங்குக் காணமுடியும். இவர் ஸ்ரீ தாஸத்துவ ஆஞ்சநேயர் என அழைக்கப்படுகிறார். இவரிடம் பிரார்த்தித்துக் கொண்டு, புதுத்துண்டில் தயிர்சாதம் கட்டி வழிபட்டால் காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் வீடுஇயல் வழியது ஆக்கும் வேரியம் கமலை நோக்கும் நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய வாகை சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவார்க்கே.
சீதா துரைராஜ், கூப்பர்டினோ, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|