|
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயம் |
|
- சீதா துரைராஜ்|ஜூன் 2017| |
|
|
|
|
திருக்கழுக்குன்றம் சென்னையிலிருந்து 78 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பேருந்து, கார் மூலம் அடையலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையும், பெருமையும் உடையது. சமயக் குரவர் நால்வராலும் பாடப்பெற்ற தொண்டை நாட்டின் 32 தலங்களில் முதன்மையானது. வேதங்கள் நான்கும் மலையுருக் கொண்டிருப்பதால் 'வேதகிரி' என்ற பெயரும் உண்டு. இவ்வாலயம், ஏழாம் நூற்றாண்டில் கி.பி. 610-640ல் மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்டது. இத்தலத்திற்கு ருத்திரகோடி, நந்திபுரி, இந்திரபுரி, நாராயணபுரி, பிரம்மபுரி, தினகரபுரி, முனிகணபுரி, பட்சி தீர்த்தம் என்று பல பெயர்கள் உண்டு. இத்தலத்து இறைவனைப் பட்டினத்தார், அருணகிரிநாதர், திருப்போருர் சிதம்பர சுவாமிகள், அந்தகக்கவி வீரராகவ முதலியார், இராமலிங்க அடிகளார், இராமநாதபுரம் சோமசுந்தரம் பிள்ளை, காஞ்சிபுரம் மகாவித்வான் சபாபதி முதலியார் ஆகியோர் புகழ்ந்து பாடியுள்ளனர்.
அருள்மிகு வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி இத்தலத்தின் முக்கியக் கடவுளர் ஆவர். தல விருக்ஷம் வாழைமரம்; தீர்த்தம் இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம், ருத்ர தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம், மெய்ஞான தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், கௌசிக தீர்த்தம், நந்தி தீர்த்தம், வருண தீர்த்தம், அகரிகா தீர்த்தம், பட்சி தீர்த்தம் எனப் பன்னிரண்டாகும்.
சிவபெருமானைப் நோக்கி பூஷா, விருதா என்னும் இரு முனிவர்களும் கடுந்தவம் புரிந்தனர். தவத்தை மெச்சிய இறைவன் அவர்களுக்குச் சாரூப பதவியைத் தந்து ஸாயுஜ்ய பதவியைப் பின்னர் அருளுவதாகக் கூறினார். அவ்வருளை ஏற்றுக்கொள்ள மறுத்த முனிவர்கள்மீது, சிவபெருமான் சினந்து கழுகு வடிவமாக மாறுமாறு சாபம் கொடுத்தார். தங்கள் தவறை உணர்ந்த அவர்கள் இறைவனிடம் மன்னிக்குமாறு வேண்ட, இறைவன், "காச்யப முனிவரிடத்தில் இரு கழுகுகளாகப் பிறந்து திருக்கழுக்குன்றம் மலைமீது எழுந்தருளியுள்ள வேதகிரீஸ்வரரை தினமும் வழிபட்டால் கலியுக முடிவில் சுய உருவம் பெற்று முக்தி அடைவீர்கள்" என்று அருளினார்.
அவ்வாறே தினமும் இரு கழுகுகள் உச்சிகால பூஜை நேரத்தில் இங்கு வந்து இறைவனின் கோபுரத்தை வலம்வந்து தரிசித்து, அர்ச்சகர் அளிக்கும் பிரசாதத்தை உண்டுவிட்டுச் செல்வது இத்தலத்தின் விசேஷம். இரு கழுகுகளும் ராமேஸ்வரத்தில் காலை ஸ்நானம் செய்து, மதியம் கழுகாசலரைத் தரிசித்துவிட்டு, பின் காசி சென்று தங்குவதாகப் புராணம் கூறுகிறது. (தற்போது கழுகுகள் இங்கே வருவதில்லை).
மலையுச்சியில் வேதகிரீஸ்வரர் சுயம்பு மூர்த்தமாய் எழுந்தருளியுள்ளார். அடிவாரத்தில், தாழக்கோயில் என வழங்கப்பெறும் தலத்தில் எழுந்தருளியுள்ளாள் அன்னை திரிபுரசுந்தரி. அன்னைக்கு ஆடிமாத உத்திரம், புரட்டாசி நவமி, பங்குனி உத்திரம் என ஆண்டில் மூன்றுமுறை மட்டுமே அபிஷேகம் நடக்கிறது. மற்ற தினங்களில் அம்மனின் திருப்பாதத்திற்கு மட்டுமே அபிஷேகம்.
பரத்வாஜ முனிவர் சிவபெருமானிடம் வேதங்களைக் கற்பதற்கு தீர்க்காயுள் வேண்டித் தொழுதார். சிவன், அவர்முன் தோன்றி ரிக், யஜுர், சாம வேதங்களைக் கற்று மூன்று மலைகளை ஸ்தாபிக்க அருளி, "நீ கற்ற வேதங்கள் ஒரு கைமண் அளவுதான். கற்பதற்கு முடிவே இல்லை. சத்கதி அடைய பக்தியும், கடவுளின் சிருஷ்டிகளிடம் அன்பு செலுத்துவதும்தான்" என்று கூறியருளினார். வேதங்களையே இங்கு மலைகளாகச் சிவபெருமான் அமைத்திருப்பதால் அவர் வேதபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். 565 படிகள் ஏறிச்சென்று இறைவனை வழிபட வேண்டும். சரகுரு மன்னன் இறைவனை வழிபட்டு சாமீப்யப் பதவி பெற்றான். திருமால், பிரம்மா வழிபட்ட பெருமை உடையது இத்தலம். |
|
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு, கன்னி ராசியில் பிரவேசிக்கும்போது புஷ்கர மேளா, லட்சதீபப் பெருவிழா இங்குள்ள திருக்குளத்தில் நடைபெறுகிறது. மார்க்கண்டேயர் தவம் செய்த சங்கு தீர்த்தத்தில் பன்னிரண்டு ஆண்டுக்கொருமுறை அவருக்காகத் தோன்றிய சங்கு இன்றளவும் தவறாமல் தோன்றி வருகிறது. இந்திரன், இடியாக மலைமேல் இருக்கும் வேதகிரீஸ்வரை பூஜிக்கிறான். மறுநாள் காலை ஆலயச் சன்னதியைத் திறக்கும்போது தாங்க முடியாத வெப்பத்தின் மூலம் இடி பூஜித்ததை உணரமுடியும். விஞ்ஞானிகளும், 1930ம் ஆண்டில், இந்நிகழ்வை ஆராய்ந்து நிரூபித்துள்ளனர்.
இம்மலையில் சஞ்சீவிக் காற்று வீசுவதால் இம்மலையைத் தொடர்ந்து 45 நாட்கள் வலம்வந்தால் தீராதநோய் தீரும். மனநோய், ஆஸ்துமா, ரத்த அழுத்தம், இருதயநோய் இன்னபிற கொடுநோய் உள்ளவர்கள் இங்குள்ள மூலிகைக் காற்றைச் சுவாசிக்க நிவாரணம் கிடைக்கிறது. மனநோய் உள்ளவர்கள் இங்கே 48 நாட்கள் தங்கி, சங்கு தீர்த்தத்தில் நீராடி, வேதகிரீஸ்வரரைத் தொழுது பலன் பெறுகின்றனர். திருமணம், புத்திரப்பேறும் இத்தல இறைவனை வழிபடக் கைகூடுகிறது. பௌர்ணமி அன்று லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் வருகின்றனர்.
சித்திரைத் திருநாள், ஆடிப்பூரத் திருநாள், அமாவாசை, பிரதோஷம், தீபாவளி, பொங்கல் போன்ற நாட்கள் இங்கே விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.
சுந்தர மூர்த்தி சுவாமிகள், இத்தல இறைவனை,
கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே நின்ற பாவ வினைகள் தாம்பல நீங்கவே சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம் கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே
என்று போற்றிப் பாடியிருக்கிறார்!
சீதா துரைராஜ், சான் ஹோசே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|
|