|
|
|
|
தஞ்சை மாவட்டம் திருவையாறில் அமைந்துள்ள திருத்தலம் திங்களூர். சந்திர கிரக பரிகாரத் தலம். இறைவனின் நாமம் கைலாசநாதர். இறைவியின் நாமம் பெரியநாயகி. தலத்தின் சிறப்புத் தீர்த்தமான சந்திர புஷ்கரணி கோயிலுக்கு முன்னால் அமைந்துள்ளது. இங்கு பாம்பு கடித்தால் விஷம் ஏறாது என்பது தலத்தின் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அப்பூதி அடிகளின் மகன் நாகம் தீண்டி இறக்க, அவர் இத்தல இறைவனை வேண்ட, நச்சு நீங்கியதாக வரலாறு.
பாற்கடலில் அமிர்தம் கடைந்தபோது வெளிப்பட்ட விஷத்தின் தீவிரத்தால் தேவர்கள் மயங்க, சிவபெருமான் அதனை உட்கொண்டு 'நீலகண்டர்' ஆனார். தொடர்ந்து கடலில் வெளிப்பட்ட சந்திரனின் அமிர்தகலைகள் மூலம் தேவர்களது மயக்கம் நீங்கியது.
தட்சன் அசுவினி முதல் ரேவதி ஈறான தனது 27 பெண்களைச் சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். சந்திரன் ரோஹிணி, கார்த்திகை இருவர்மீது மட்டுமே அதிக அன்போடு நடந்து கொண்டான். அதனால் வாட்டமுற்ற மற்றப் பெண்கள் தடசனிடம் முறையிட, சினமுற்ற தட்சன், சந்திரனின் கலைகள் தினந்தோறும் தேயட்டும் என்றும், அவன் க்ஷயரோகத்தால் பீடிக்கப்படட்டும் என்றும் சாபமிட்டான். சாபத்தால் வாட்டமுற்ற சந்திரன் திங்களூருக்கு வந்து சிவபூஜை செய்தான். மனமகிழ்ந்த ஈசன், அமர பட்சத்தில் கலைகள் தேயவும், சுக்கில பட்சத்தில் கலைகள் வளரவும் ஆசிர்வதித்தார். அதுமுதல் சந்திரன் பூரண கலைகளுடன் ஒளிவீசத் துவங்கினான். ஒவ்வொரு பங்குனி மாதப் பௌர்ணமி இரவிலும் நிலவொளி இறைவனின் திருமேனியைத் தழுவி நிற்பது கண்கொள்ளாக் காட்சி.
சந்திரனைப் பற்றி மூன்றுவிதமான வரலாறுகள் கூறப்படுகின்றன. சந்திரன், திருமாலின் மார்பில் தோன்றியவன் என்று புருஷசூக்தம் கூறுகிறது. மற்றொரு வரலாறு பிரம்மாவின் மைந்தனான அத்ரியின் மகன் சந்திரன் என்கிறது. ஆத்ரேய கோத்ராத்மனாய நம என சந்திரனைப் பற்றிய அஷ்டோத்திரம் கூறுகிறது. பாற்கடலைக் கடையும்போது குளுமையான கிரணங்களுடன் உதித்தவன் என்கிறது மற்றொரு வரலாறு.
இத்தகைய சிறப்புக்கள் பொருந்திய சந்திரன் உறையும் திங்களூர் ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சந்திரத்தலம் என்றாலும் சூரியனும் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய வாயிலை அடுத்து இடதுபுறத்தில் சந்திரன், தனிச்சன்னிதியில் வெண்ணிற ஆடை அணிந்து, முறுவல் முகத்துடன் அருள்பாலிக்கிறார்.
நாவுக்கரசரைப் பார்க்காமலேயே அவர்மீது பக்தி கொண்டவர் அப்பூதி அடிகள். இவர் திங்களூரில் சிவத்தொண்டும் வாசகசாலை, தண்ணீர்ப் பந்தல், இலவச உணவு போன்றன யாவும் நாவரசர் பெயரால் அமைத்தும் சமூகத் தொண்டுகளும் செய்து வந்தார். |
|
அவ்வூருக்கு வந்த நாவுக்கரசர் எல்லா இடத்திலும் தன் பெயர் இருப்பதைப் பார்த்து வியப்புற்று அதற்குக் காரணமானவர் யார் என்று விசாரித்தார். அப்பூதி அடிகள்தான் இதனைச் செய்கிறவர் என்பதறிந்து அவரது வீட்டை அடைந்தார். நாவுக்கரசர்தான் வந்திருப்பவர் என்பதை விசாரித்தறிந்த அப்பூதி அடிகள் மகிழ்ச்சிப் பெருக்குடன் தனது குருவைத் தொழுதார். உணவு உண்ணுமாறு வேண்டினார். ஆலயதரிசனம் செய்துவிட்டு வருகிறேன் என்று நாவுக்கரசர் செல்ல, அப்பூதி அடிகள் தேவையானவற்றைச் சமைத்து, உணவு படைக்க வாழை இலையைக் கொய்து வருமாறு மகனை அனுப்பினார். அவனை நாகம் தீண்டியது. அவன் விஷயத்தைத் தன் தந்தையிடம் சொல்லி, இலையைக் கொடுத்துவிட்டு உயிர் துறந்தான்.
மகன் இறந்துபட்ட செய்தியை நாவுக்கரசர் அறிந்தால் அது சிவனடியார் தொண்டில் குறையாகுமே என்று மனம் வருந்தினார் அப்பூதி அடிகள். மகனது உடலைப் பாயினில் சுருட்டி மறைத்து வைத்தார்.
உணவருந்த வந்த நாவுக்கரசர் பிரசாதம் அளிக்க அனைவரையும் அழைக்க, மகன் வராதது கண்டு விசாரிக்க, மகன் மரித்த விஷயத்தைச் சொல்லி அவனை மீட்டுத்தர வேண்டினார் அப்பூதி அடிகள். இறந்த உடலைக் கோயில் மண்டபத்தில் வைத்து "ஒன்றுகொலாம்" என்ற பாடலைப் பாடி, விஷத்தினை நீங்கச்செய்து சிறுவனின் உயிரை மீட்டார் நாவுக்கரசர் என்று பெரியபுராணம் பேசுகிறது. அத்தகைய சிறப்புப் பெற்ற திருத்தலம் திங்களூர்.
சந்திர தோஷம், மாத்ரு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து அவற்றுக்கான பரிகாரங்களைச் செய்து சந்திரனை வழிபட அவை விலகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
சீதா துரைராஜ் |
|
|
|
|
|
|
|