|
ராகு கேது தோஷ பரிகார ஆலயங்கள்: திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம் |
|
- சீதா துரைராஜ்|ஆகஸ்டு 2014| |
|
|
|
|
|
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி ஆலயம். இது ராகுதோஷ நிவர்த்தித் தலமாகும். நாகை மாவட்டம் கீழ்ப்பெரும்பள்ளம் ஸ்ரீ நாகநாதர் கோவில், மயிலாடுதுறையில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இது கேதுதோஷ நிவர்த்தித் தலமாகும். ராகு, கேது இருவரும் சாயா (நிழல்) கிரகங்கள். இவர்கள் தாங்கள் இருக்கும் ராசிக்கேற்ப சேர்ந்துள்ள கிரகங்களின் தன்மைக்கேற்ப பலனைத் தருவர்.
திருநாகேஸ்வரம் தல வரலாறு: சுசீல முனிவரின் மகன் சுகர்மன் வனத்தின் வழியே போய்க்கொண்டிருந்த போது நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு அவனைத் தீண்டியது. தன் மகனைத் தீண்டிய தக்ககனை மானிடனாகப் பிறக்கும்படி முனிவர் சபித்தார். சாப விமோசனம் பெற தக்ககன் பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்தான். சிவன் அவனுக்குக் காட்சிதந்து சாப விமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் நாகநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார். நாக அரசனுக்கு அருளியதால் நாகநாதர் எனப் பெயர் பெற்றார். இக்கோவில் அம்பாள் கிரிகுஜாம்பிகை. இக்கோவிலில் மட்டுமே ராகு பகவான் நாகவல்லி, நாக கன்னி, துணைவியர்களுடன் மங்கள ராகுவாக தனிச்சன்னிதியில் உள்ளார். விநாயகரும் யோக ராகுவும் ஒரு சன்னதியில் உள்ளனர். இவர்களை வணங்கினால் ராகு-கேது தோஷம் நிவர்த்தியாகும்.
காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் ராகுவுக்கு பாலபிஷேகம் செய்து பிரார்த்திக்கின்றனர். ராகு பகவான் ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடைகிறார். ராகுப் பெயர்ச்சியன்று நாக கன்னி, நாகவல்லி உடனாய ராகு பகவான் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். ராகு பகவான் அன்றைய தினம் வீதி உலா செல்கிறார். நவகிரகங்களில் ஒருவர் வீதி உலா செல்வது மிகவும் விசேஷமாகும்.
கீழ்ப்பெரும்பள்ளம் தலவரலாறு தேவரும், அசுரரும் அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். மோகினி உருவில் வந்த திருமால் அமிர்தத்தை தேவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தார். அதைத் தானும் உண்ண விரும்பிய கேது, பிறப்பினால் அசுரன் என்பதால் தேவ வடிவெடுத்து சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் சென்று அமர்ந்து அமிர்தத்தை வாங்கி உண்டான். இதைச் சூரியனும், சந்திரனும் மோகினியிடம் சொல்ல, மோகினி தன் கையில் இருந்த கரண்டியால் அசுரன் தலையில் ஓங்கி அடிக்க, அசுரனின் தலை வேறாகவும், உடல் வேறாகவும் ஆயிற்று. தலை பாம்பு உடலைக் கொண்ட கருநீல ராகுவாகவும், உடல் ஐந்து நாகத் தலைகள் கொண்ட செந்நிறக் கேதுவாகவும் ஆயிற்று. பின்னர் தவம் செய்து இராகுவும், கேதுவும் கிரக பதவி பெற்றனர். அதற்கு முன்பு இருந்த ஏழு கிரகங்களுடன் இவர்களையும் சேர்த்து நவகிரகங்களாக மக்கள் வழிபடலாயினர். |
|
|
தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைய மந்திரமலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் பயன்படுத்தினர். வலி பொறுக்காத வாசுகி நஞ்சைக் கக்கியது. அதைக் கண்ட அசுரரும், தேவரும் நடுங்கி, சிவபெருமானை வேண்ட, அவர் அந்த நஞ்சை உண்டார். பார்வதி நஞ்சு உள்ளே செல்லாதவாறு தடுக்க, அது சிவனின் கண்டத்தில் தங்கியது. சிவன் அதனால் ‘நீலகண்டன்’ ஆனார். அமுதம் கிடைக்காத கோபத்தில் அசுரர், வாசுகியைச் சுருட்டி எறிந்தனர். அது கடற்கரையில் மூங்கில் காட்டில் விழுந்தது. இருப்பினும் உயிர் தலைக்கேற வாசுகி பிழைத்துக் கொண்டது. வாசுகி, ஈசனிடத்தில் மன்னிப்புக் கேட்டுத் தவமிருக்க, ஈசனும் மனமிரங்கிக் காட்சி தந்தார்.
வாசுகி தன் பாவத்தைப் பொருத்தருளும்படியும், மூங்கில் காட்டில் ஈசன் எழுந்தருளி அங்கு வந்து வழிபடுவோரின் கேது கிரகத் தொல்லைகளை நிவர்த்தி செய்ய வேண்டியும் சிவனைத் துதித்தது. ஈசன் நாகநாதர் என்னும் பெயருடன் அம்மை சௌந்தரநாயகியுடன் இங்கு எழுந்தருளினார். வாசுகியின் வேண்டுகோளுக்கிணங்க கேதுகிரக தோஷங்களை நிவர்த்தி செய்து வருகிறார்.
தலவிருட்சம் மூங்கில். தீர்த்தம் நாக தீர்த்தம். கேது பகவான் கைகூப்பிய நிலையில் மேற்கு நோக்கி எழுத்தருளியுள்ளார். இவர் சிவப்பு நிறமென்பதால் செந்நிற மலர்களாலும், செவ்வாடையாலும் வழிபடுகின்றனர். கேதுவின் அருள்பெற விநாயகரை வழிபட வேண்டும். கேது வழிபாட்டின் மூலம் சுவர்ண லாபம் கிட்டும் என்கிறது வேதம்.
சீதா துரைராஜ், சென்னை |
|
|
|
|
|
|
|