|
திருக்கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் ஆலயம் |
|
- சீதா துரைராஜ்|ஜூன் 2014| |
|
|
|
|
|
தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள தலம் திருக்கண்டியூர். இது தஞ்சை-திருவையாறு வழித்தடத்தில் அமைந்துள்ளது. முன்னொரு சமயம் சிவபெருமானுக்கு இணையாக பிரம்மாவும் ஐந்து திருமுகங்கள் பெற்றிருந்தார். சிருஷ்டி கர்த்தாவாகவும் விளங்கியதால் அவர் செருக்குற்றுத் திரிந்தார். அதனால் ஈசன் பைரவரைப் படைத்து, "பிரம்மாவின் தலையைக் கொய்து, அவரது படைப்புத் தொழிலையும் பறித்து வா" என்று அனுப்பினார். அவ்வாறே பைரவரும் தன் இடக்கை நகநுனியால் பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்தார். ஆனால் அந்தத் தலை கையோடு ஒட்டிக்கொண்டு, அவரை பிரம்ம ஹத்தி தோஷம் பிடித்தது.
பைரவர் சிவனிடத்தில் வேண்டினார். சிவன் பைரவரை தோஷம் விலக ஊரூராய்ச் சென்று பிச்சை ஏற்கச் சொன்னார். பைரவர் பல தலங்களுக்கும் சென்று பிச்சை ஏற்றுப் பின் திருக்கண்டியூர் தலத்துக்கு வந்தபோது அந்தத் தலை அவரது கையை விட்டகன்றது. பிரம்மஹத்தி தோஷமும் விலகியது. நான்முகன் ஆணவம் நீங்கி, கலைமகளுடன் இத்தலத்தின் ஈசனைத் தொழுது மீண்டும் படைக்கும் தொழிலைப் பெற்றார்.
இத்தலம் 127 காவிரிக்கரைத் தலங்களுள் பன்னிரண்டாவது. சப்த ஸ்தானங்களில் ஐந்தாவது. அட்ட வீரட்டானத் தலங்களுள் முதலாவது. முத்தொழில் புரியும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் தனித்தனிக் கோயில்கள் உள்ளதால் இத்தலம் திருமூர்த்தித் தலம் எனவும் அழைக்கப்படுகிறது.
இறைவன் நாமம் பிரம்மன் சிரத்தைக் கொய்தவர் என்பதால் பிரம்ம சிரகண்டீஸ்வரர். அர்த்தமண்டபத்தில் முருகப்பெருமானே துவார பாலகர்களுக்குப் பதிலாக எழுந்தருளியுள்ளது விசேஷம். தந்தைக்கு மகனே காவலாக இருப்பதாக ஐதீகம். இறைவன் கருவறையில் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். அன்னை மங்களாம்பிகை. தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி நின்று அருள் பாலிக்கிறாள். ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. ராஜகோபுரம் தாண்டி மண்டபத்துடன் கூடிய தனிக்கோயிலில் தண்டபாணி சன்னதி உள்ளது. பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் தாண்டி வலப்புறத்தில் தலவிருட்சமான வில்வத்தையும், அதனடியில் ராஜகணபதியையும் தரிசிக்கலாம். இறைவன் சன்னதிக்கு அருகில் வடக்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கி பிரம்மனின் திருவுருவமும் வலப்புறத்தில் சரஸ்வதி தேவியின் சிறிய திருவுருவமும் உள்ளன. பிரம்மாவின் நான்கு கைகளில் ஒன்றில் தாமரையும் மற்றொன்றில் ருத்திராட்ச மாலையும் உள்ளன. திருமணம் ஆகாமல் தடைப்படும் ஆண், பெண் இருபாலரும் இங்கு வந்து பரிகாரம் செய்து பிரம்மாவை வழிபட திருமணம் கைகூடும். கல்வியில் சிறக்கவும், வாழ்க்கை சரியில்லை என்றெண்ணி வருந்துவோரும் இத்தலம் வந்து தம்பதி சமேதராக எழுந்தருளியுள்ள பிரம்மன்-வாணியை வழிபட்டு, கலைவாணியிடம் வேண்டினால் நினைப்பது நிறைவேறும் என்பது நம்பிக்கை. |
|
விஷ்ணு துர்க்கை சன்னதி, பைரவர் சன்னதி, சுப்ரமணியர் சன்னதி ஆகியவை எழிலுற அமைந்துள்ளன. இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் மிகுந்த கலையழகுடன் விளங்குகிறது. ரிஷபத்தின்மேல் ஒரு கையை ஊன்றி அமர்ந்த திருக்கோலத்தில் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவத்தில் ஆண்பாதி, காலைத் தொங்கவிட்டுக் கொண்டு ஒரு கரத்தில் மழு ஏந்தியிருக்க, பெண்பாதி புடவை அணிந்து காலைக் குத்திட்டு அமர்ந்து அதன்மீது மலரேந்திய கரத்தை ஊன்றித் தலையைச் சற்றே சாய்த்து காட்சியளிப்பது சிறப்பு. நவக்கிரக சன்னதியில் உஷா, ப்ரத்யுஷாவுடன் சூரியன் காட்சி அளிக்க, பிற கிரகங்கள் அவர்களை நோக்கிய வண்ணம் அமைந்துள்ளன. இதுவும் ஒரு விசேஷமாகும்.
சதாதப மகரிஷி சிறந்த சிவபக்தர். பல தலங்கள் சென்று வணங்கினாலும், ப்ரதோஷ காலத்தில் திருக்காளத்தி சென்று வழிபடும் பழக்கம் கொண்டவர். அவர் திருக்கண்டியூர் வந்த சமயம், பிரதோஷ காலத்திற்கு திருக்காளத்தி செல்ல முடியாததால் மனம் வருந்தி அக்னி வளர்த்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். அப்போது இறைவன், உமையுடன் இத்தலத்தின் வில்வ மரத்தில் தோன்றி, தலம் எதுவாக இருந்தாலும் தாம் எங்கும் நீக்கமற இருப்பதாக உணர்த்தி அருள்புரிந்தார். இத்தல இறைவனை வழிபட அறியாமை, பிரம்மஹத்தி தோஷங்கள், புத்திர தோஷம், களத்திர தோஷம் யாவும் நிவர்த்தியாகி நிம்மதி கிட்டும் என்பது நிச்சயம்.
சீதா துரைராஜ், சென்னை |
|
|
|
|
|
|
|