Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
நீடாமங்கலம் ஸ்ரீ சந்தான ராமசாமி ஆலயம்
- சீதா துரைராஜ்|மே 2014|
Share:
பிறக்க முக்தி தரும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நீடாமங்கலம். யமுனாம்பாள்புரம் என்ற பெயரும் உண்டு. பேருந்து மற்றும் இரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் ஸ்ரீ ராமர் அர்ச்சாவதார திருக்கோலத்தில் சீதா, லட்சுமணன், அனுமன் சகிதம் காட்சி தருகிறார். பக்தர்களுக்கு சந்தானப் பிராப்தியை அளிப்பதால் இவர் சந்தானராமன். தீர்த்தம், சாகேத புஷ்கரணி ஆலயத்தின் எதிரிலேயே உள்ளது. தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் தன் மனைவி யமுனாம்பாளுடன் திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாளை அணுகி ராமநாம தீட்சை பெற்றார். அவர்கள் இருவரும் சதாசர்வ காலமும் ராம நாமத்தை ஜபித்து வந்தனர். யமுனாம்பாள் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது இவ்வூரில் அவர்களுக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்த மாமரத்தில் இரண்டறக் கலந்துவிட்டார்.

அவர்கள் வழியில் வந்த பிற்கால மன்னர்கள் அம்மரத்தையே இறைவனாகத் தம் வம்சங்களின் புத்திர தோஷம் நீங்க வழிபட்டனர். அதனாலேயே இத்தலத்திற்கு யமுனாம்பாள்புரம் என்ற பெயர் வந்தது. ராணி யமுனாம்பாள் தினமும் கோவில் குளத்தில் நீராடிப் புத்திரப் பிராப்தி அடைந்ததால் நீராடும்மங்கலம் என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே பின்னர் நீடாமங்கலம் ஆனது. யமுனாம்பாள் மறைந்த மாமரத்தின் முன் ஆலயம் அமைத்து வழிபட்டுப் பின் பல ஆண்டுகள் கழித்து ஆலயத் திருப்பணி நடைபெற்று, கடந்த பிப்ரவரி 6 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்களின் அபிமானத் தலம் இது. ஸ்ரீராம, லட்சுமண, சீதா விக்கிரகங்கள் பேரழகுடன் விளங்குகின்றன. அந்த அழகை வார்த்தையால் விவரிக்க இயலாது. திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார், ஸ்ரீ நிகமாந்த தேசிகன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் மிகுந்த சக்தி மிக்கவர். புத்திர பாக்கியம் பெற இங்கு 'புத்திர சந்தான கோபால ஹோமம்' செய்து வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி மாத பிரம்மோற்சவம் சிறப்பு. கருட சேவை, வெண்ணெய் தாழியுடன் சேவை சாதித்தல், குதிரை வாகனத்தில் ஸ்ரீராமபிரான் வருவதைக் காணக் கண் ஆயிரம் வேண்டும். ஸ்ரீராம நவமி உற்சவம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தேர், விடயாற்றி உற்சவம், அக்ஷய திருதியை, நவராத்ரி, ஹனுமத் ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி போன்றவையும் இத்தலத்தின் முக்கியமான உற்சவங்கள்.
இத்தலத்தில் மிகப் புராதனமான சிவன் கோயில் உள்ளது. சிவபெருமான் திருநாமம் ஸ்ரீகோக முகேஸ்வரர். இந்திரன் சிவபெருமானை சக்ரவாகப் பட்சி வடிவில் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற தலம். காசி விஸ்வநாதர்-விசாலாக்ஷி கோவில், மாரியம்மன் கோவில், ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் ஆகியவை உள்ளன.

மும்மூர்த்திகளின் ஒருவரான ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர், ஹிந்தோள வசந்த ராகத்தில் “சந்தான ராமஸ்வாமினம் ஸத்குண நிர்குண பஜரே” எனப் பாடி ஸ்ரீராமனை வழிபட்டுள்ளார். நீடாமங்கலத்திற்கு புகழ் சேர்த்து மறைந்த தவில் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தவில் ஷண்முக வடிவேல் ஆகியோர் பெருமாள் வீதிவலம் வரும்போது நாகஸ்வரம், தவில் வாசித்துப் பெருமை சேர்த்தவர்கள். ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்களை பிரபலப்படுத்தியவர் நீடாமங்கலம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர். இத்தலத்தில் பிறக்கும் முதல் பெண்குழந்தைக்கு 'சீதாதேவி' என்றும் ஆண் குழந்தைக்கு 'சந்தான ராமன்' என்றும் பெயர் வைப்பது தொன்றுதொட்ட வழக்கம்.

தெய்வீகப் பெருமையும் பழமையும், அழகும் வாய்ந்த நீடாமங்கலம் வாழ்வில் ஒருமுறையாவது ஒவ்வொருவரும் சென்று தரிசிக்க வேண்டிய திருத்தலம்.

சீதா துரைராஜ்,
சென்னை
Share: 




© Copyright 2020 Tamilonline