|
|
|
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பதை உணர்த்தும் அருமையான தலபுராண மகிமையைக் கொண்டது பண்டரிபுரம். திண்டிரவனம், புண்டரீகபுரம் என்ற பெயர்களும் இதற்கு உண்டு. புண்டரீகன் என்னும் பக்தனுக்குக் காட்சி கொடுக்கப் பாண்டுரங்கனே அவனது வீட்டு வாசலுக்குச் சென்று அழைத்ததாலும் பண்டரிபுரம் என்று அழைக்கப்படுகிறது. பாண்டுரங்கன் கோவிலுக்கு இரண்டு ஃபர்லாங் தூரத்தில் சந்திரபாகா நதி உள்ளது. ஊரைச் சுற்றிப் பல கோவில்களும் தீர்த்தங்களும் அமைந்துள்ளன.
பாண்டுரங்கன் கோவிலுக்குள் காசி விஸ்வநாதர், விசாலாட்சி உட்பட மொத்தம் 26 சந்நிதிகள் உள்ளன. மூலவர் பாண்டுரங்க விட்டலர். தாயார் ருக்மா பாய் (ருக்மணி). மூலஸ்தானத்தில் பாண்டுரங்கனின் திருவடியைத் தொட்டு வணங்கலாம். நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடந்த வண்ணமே உள்ளது. பக்தர்களின் பரவச கோஷம் 'பாண்டு ரங்கா, பண்டரிநாதா' என முழங்கிக்கொண்டே இருக்கிறது. சக்குபாய், துக்காராம், நாமதேவர் என பக்தர்களுக்கு காட்சி கொடுத்திருக்கிறான் பாண்டுரங்கன். நாமதேவருக்கு ஆலயத்தின் நுழைவாயிலில் சமாதி உண்டு. பாண்டுரங்கனே, 'உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்று அவரிடம் கேட்டதற்கு, 'உன் கோயிலுக்கு வருவோரின் திருவடி என் மேல் பட வேண்டும்' என்றார் அவர். 'பண்டரித்ஸவாசா' எனும் அவர் இயற்றிய அபங் பாடல் சந்நிதியில் பொறிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரத்தில் உள்ள ஸாதுக்கள் மட்டுமின்றி கன்னட, தெலுங்குக் கவிகளும் பண்டரிபுரத்தின் சிறப்பையும், விட்டலனின் மகிமையையும் விவரித்துப் பாடி, பக்திக் கதவைத் திறந்து ஆண்டவனைத் தரிசிக்க வழி வகுத்துள்ளனர்.
பண்டரிபுரம் மஹாராஷ்டிர மாநிலத்தில் குருத்வாடி ஜங்ஷனிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. மும்பை, பூனே, ஷிர்டி ஆகிய இடங்களிலிருந்து ரயில், சாலை வழியேயும் பயணம் செய்யலாம்.
| உலகத்தவர் பாவங்களை ஏற்பதால் ஒவ்வொரு நாளும் அந்தப் பாவத்தின் பலனாக விகார உருவத்தை அடைகிறோம். நாள்தோறும் இரவில் இங்கு வந்து ஆசிரம சேவை செய்வதால் மீண்டும் புனிதம் அடைகிறோம். | |
ஜானுதேவர், சாத்தகி தேவி இருவருக்கும் நெடுநாள் பிள்ளை இல்லாமலிருந்து பாண்டுரங்கன் அருளால் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. புண்டரீகன் எனப் பெயரிட்டுச் செல்லமாக வளர்த்தனர். அளவுக்கு மீறிச் செல்லம் கொடுத்ததால் புண்டரீகன் தடம் மாறுகிறான். கல்யாணம் முடிந்தால் சரியாகும் எனப் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். மனைவி வந்ததும் பெற்றோரை விரட்டி விடுகிறான்.
மனைவியோடு சுற்றுலாப் புறப்பட்ட புண்டரீகன், காசியாத்திரைக் குழுவில் பெற்றோரைக் கண்டும் காணாமல் போய்விடுகிறான். யாத்திரையில் வழிதவறிக் காட்டுக்குள் குக்குட முனிவர் ஆசிரமத்தில் தங்குகிறான். நள்ளிரவு நேரத்தில் மூன்று கோர வடிவுள்ள பெண்கள் ஆசிரமத்துக்கு வந்து, அதைச் சுத்தம் செய்துவிட்டு, பொழுது விடிந்ததும் அழகிய உருவத்துடன் திரும்புகின்றனர். அதைப் பார்த்து வியந்த புண்டரீகன் அவர்களிடம் காரணம் கேட்கிறான். அதற்கு அவர்கள் 'நாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி என்னும் புண்ணிய நதிகள். உலகத்தவர் பாவங்களை ஏற்பதால் ஒவ்வொரு நாளும் அந்தப் பாவத்தின் பலனாக விகார உருவத்தை அடைகிறோம். நாள்தோறும் இரவில் இங்கு வந்து ஆசிரம சேவை செய்வதால் மீண்டும் புனிதம் அடைகிறோம்' என்று கூறிச் செல்கின்றனர். |
|
குக்குட முனிவரின் இத்தனை சக்திக்கும் காரணம், அவர் தன் பெற்றோரை உயிராகக் கருதிப் போற்றுவதால்தான் என அறிகிறான் புண்டரீகன். மனம் திருந்தி, தனது பெற்றோரைத் தேடிக் கண்டடைந்து அவர்களில் காலில் விழுந்து வணங்குகிறான். அவர்களுக்கு மனமுவந்து சேவை செய்கிறான்.
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பதை உலகுக்கு உணர்த்தப் பாண்டுரங்கனே வீட்டு வாசலுக்கு வந்து பக்தன் புண்டரீகனை அழைக்கிறார். 'பெற்றோருக்குச் சேவை செய்து கொண்டிருக்கிறேன். இந்தச் செங்கல்மேல் சற்று நில்லுங்கள்' எனக் கூறுகிறான் புண்டரீகன். வெளியே வந்த பெற்றோர் கடவுளே தங்கள் வீட்டு வாசலில் நிற்பதைக் கண்டு மனம் பதறுகின்றனர். அவர்களை அமைதிப்படுத்தி புண்டரீகனை வாழ்விக்கவே இந்தத் திருவிளையாடலை நிகழ்த்தினோம் எனக் கூறி அனைவருக்கும் அருள் புரிகிறார் விட்டோபா.
மராட்டிய மொழியில் 'விட்' என்றால் செங்கல் 'உபா' என்றால் நிற்றல். செங்கல்மேல் பகவான் நின்றதால் 'விடோபா' என்று அழைக்கப்படுகிறார். மஹாராஷ்டிர மாநிலம் முழுவதற்கும் பாண்டுரங்கனே குலதெய்வம். பண்டரிபுரத்தை ஒட்டிய கோபாலபுரியில் சக்குபாய் கடைந்த தயிர்ப் பாத்திரம், மாவரைத்த திரிகை, கண்ணன் குழந்தையாக ஆடிய தொட்டில் ஆகியவற்றைக் கண்டு பரவசம் அடையலாம். பண்டரிபுரத்தைச் சுற்றி நிறையக் கோவில்களும் தீர்த்தங்களும் உள்ளன. கேட்டவருக்கு கேட்ட வரத்தை உடனே கொடுக்கும் கருணாமூர்த்தி பண்டரிநாதனை நினைந்து போற்றுவோம்.
சீதா துரைராஜ், சான் ஹோசே |
|
|
|
|
|
|
|