|
|
யானை, புலி, கரடி... பள்ளியில் படிக்கும்போது அறிவியல் புத்தகத்தில் பார்த்துப் பரவசமடைந்தது ஞாபகம் வருகிறதா உங்களுக்கு? சுற்றுலா செல்லும்போது, வனவிலங்குப் பூங்காவில் சுதந்திரமாய் சுற்றிவந்த அந்த விலங்கு களை நேரில் பார்த்த அனுபவம்.. மனசெல்லாம் அந்த வியப்போடு மாதங்களை ஓட்டிய பரவசம்! இதே மனநிலையில் மகிழ்ந்திருந்த ஒரு சிறுமிக்கு பனிக் கரடிகளை அதுவும் துருவக் கரடிகளைப் (polar bear) பாடத்தில் பார்த்ததும், நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை! தமிழ்நாட்டின் சுட்டெரிக் கும் வெய்யிலிலும், கொட்டும் மழையிலும் அந்த நினைவு எரியவுமில்லை, நனைந்து நசியவுமில்லை! ஆறாவது படிக்கையில் ஆறியது இன்று! இருபது வருடம் கடந்து நிறைவேறியது என்ன இமாலய சாதனையா என்று தோன்றலாம் உங்களுக்கு... நடந்து போன, சறுக்கிச் சென்ற பாதையைக் கேட்டால், நிமிர்ந்து நிற்கச் சொல்லும் நம்மை!
படித்து முடித்தேன். பட்டம் வாங்கி னேன்! பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் திரைகடலோடி திரவியம் தேட வந்தேன். திருமணம் ஆயிற்று.. ஐந்து வயதில் அழகான மகனுமுண்டு.. ஆனாலும் ஆறாவது படிக்கையில் பார்க்க ஆசைப்பட்ட அந்த பனிக்கரடிகளின் வெள்ளை நிறம் தினம் தினம் பசுமையாய் நினைவுகளில்... |
|
இப்படி எண்ணங்களை வாழ்க்கைப் பயணத்தில் வழிகாட்டியாய் கொண்டு வந்த இந்தத் தமிழ்ப் பெண்மணி, இப்போது அந்தப் பள்ளி நினைவுகளை நேரில் பகிர்ந்து கொண்டார்! பனிச் சறுக்கிலே பாதையமைத்து, தென் துருவத்தை (South Pole) தொட்ட முதல் இந்தியப் பெண்மணி என்ற புகழோடு, பாரதத்திற்குப் புகழ் தேடித் தந்திருக்கிறார் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் வசித்துவரும் இந்தக் கலை மகள்! சரஸ்வதி காமேஸ்வரன் எனும் வீரத்திருமகள்!
"வெள்ளிப் பனிமலை மீதுலாவுவோம்" என்று பாடிய பாரதிக்கு, பனிமலை யென்ன, பனித்துருவமே பஞ்சு மெத்தை தான்... வட துருவம், தென் துருவம் தொட்டுவந்த தமிழ்மகள் நான்! உற்சாகம் ஊட்ட உயிர் நண்பிகள் சித்ரா, ஸ்ரீதேவி மற்றும் கவிதா, முயற்சிக்கு அச்சாரமாய் என் கணவர் ரகு, வழிநடத்திச் சென்ற குரு அன்னீ (Annie)! என்று பெருமையாய் சொல்லி சாதனைப் பட்டியலுக்கு பிள்ளையார் சுழி போட்ட இவரைப் பற்றி மேலும் விவரமாய் அடுத்த இதழில் பார்ப்போமா?
கோபால் குமரப்பன் |
|
|
|
|
|
|
|