|
|
"பொங்கரில் தேடினேன்! வெண்கடலில் தேடினேன்! கங்குல் வானில் தேடினேன்! தேங்கு பூங்காப் புனலில் தேடினேன்! ஓடினேன்! ஏங்குகிறேன் 'டேக்கியானே' நின்னைக் காணாமல்"
இது ஏதோ இலக்கிய மன்றத்தில் வாசிக்கப்பட்ட புதுக் கவிதையல்ல, காதலால் ஏங்கும் ஒருவரின் மனக் குமுறலும் அல்ல. இது ஒரு மாணவனின் அறிவியல் தேடல். ஆம், பி.ஐ.டி.எஸ், பிலானியில் (BITS, Pilani) படித்துக் கொண்டிருந்த மாணவர் பாலுவின் தேடல். விஞ்ஞானிகள், ஒளியைவிட அதிக வேகத்தில் பாயக் கூடிய டேக்கியான் (Tachyon) என்னும் துகளைத் தேடி அலைவதை வேடிக்கையாக அதே நேரத்தில் ஆராய்ச்சி நோக்குடன் இளைஞனாக இருக்கும்போதே கல்லூரி மலரில் 'டேக்கியானைத் தேடி' என்ற கட்டுரையில் இவ்வாறு எழுதினார் பேரா. கி. பாலசுப்ரமணியன்.
அறிவியல், சமயம், கலை, இலக்கியம் - இந்த நான்கு துறைகளுக்கும் நடுவில் ஒரு பொதுவான மைய இழை (common thread) ஓடுகிறதா? இல்லை, இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டனவா? மேடைகள் பலவற்றில் விவாதிக்கப்பட்ட ஒரு பொருள் இது. இத்துறைகளிலெல்லாம் ஒருவரே ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதினால் ஒரு தெளிவு ஏற்படாதா என்ற ஆதங்கம் நம்மில் பலருக்கு உண்டு. அத்தகைய பன்முக அறிவுசார் சாதனையாளரே பேராசிரியர் டாக்டர் கிருஷ்ணன் பாலசுப்ரமணியன். இவரது கணித-வேதியியல் (mathematical-chemistry) ஆய்வுகள் மற்றும் வெளியீடுகளை வைத்தே இவரைச் சாதனையாளர் எனச் சொல்லிவிடலாம். ஆனால் மேற்கூறிய அனைத்துத் துறைகளிலும் பரந்து விரிந்த இவரது ஈடுபாடு, இவரை ஒரு புதிய பரிமாணத்தில் அறிமுகப்படுத்துகின்றன. வாருங்கள், சந்திப்போம் பேரா. பாலசுப்ரமணியத்தை.
கேள்வி: உங்களுக்கு வேதியியலில் (chemistry) ஈர்ப்பு ஏற்பட்டது எப்படி?
பதில்: அதற்கு என் மூத்த சகோதரி பாக்யலக்ஷ்மி ஒரு முக்கியக் காரணம். வேதியலில் முதுகலை பயின்று கொண்டிருந்த அவரும், அவரது நண்பர்களும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வேதியியல் பொருட்காட்சியில் செய்து காட்டிய நிறமாற்றத்தைப் பார்த்தது முதல் 'வேதியொளிம எதிர்வினை' (chemiluminescence reaction) துறையில் நாட்டம் கொண்டேன். வீட்டில் அம்மா கரைக்கும் ஆரத்தியில், பளீர் மஞ்சள் ஆழ்ந்த சிவப்பாக மாறும் விந்தையைக் கண்டு வியந்திருக்கிறேன். இவையெல்லாம் உந்துதலாக அமைய மிகச் சிறு வயதிலேயே நிற மாற்றங்கள் பற்றி ஆய்ந்தறிய வீட்டிலேயே ஒரு பரிசோதனைக் கூடம் அமைத்தேன். மேலும், மஞ்சளில் சுண்ணாம்பு கலப்பதால் கட்டமைப்பு (structure) மாறிச் சிவப்பாக நிற மாற்றம் பெறுவதைப் பற்றிய என் திட்டப்பணிக்கு (project) தேசிய விஞ்ஞானத் திறன் குழுவின் (National Science Talent) பரிசு கிடைத்தது.
கே: மேலே படித்தது...?
ப: என் திறனைப் பார்த்துப் பிட்ஸ் (BITS), பிலானியிலிருந்து ·பெலோஷிப்பிற்கு அழைப்பு வந்தது, மகிழ்ச்சியுடன் ஏற்றேன். முதலிரண்டு வருடங்கள் பொதுவான பொறியியல் வகுப்புகளை முடித்துவிட்டு, மூன்றாம் வருடம் கணிதத்தில் சிறப்புப் பாடங்கள் எடுத்துக் கொண்டேன் - அப்பொழுது இத்தகைய தனித்தன்மை வாய்ந்த கல்லூரிகள் வேறெதுவும் இந்தியாவில் இல்லை. மேலும், பிட்ஸ் எம்.ஐ.டியின் (Massachusetts Institute of Technology) அங்கீகாரம் பெற்றிருந்தது.
ஐந்து வருட ஒருங்கிணைந்த முதுகலை நிரலை (Integrated MSc Honors Program) ஒன்பது மாதம் முன்னதாக முடித்தேன். மாணவனாக இருந்தபடியே அங்கு கற்பிக்க எனக்கு வாய்ப்புக் கிட்டியது. அறிவியலில் கொள்கைகள் (Concepts in Science) என்ற புத்தகத்தையும் எழுதினேன். பிட்ஸ் இணை இயக்குனரும், கணிதத் துறைப் பேராசிரியருமான கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் Combinatorial Enumeration of Chemical Isomers பற்றி ஆராய்ந்தேன். அணுக்களை நிறங்களுக்கும், அணுத்திரளைக் (molecule) கோலத்திற்கும் ஒப்பிட்டு சுவாரசியமாக நான் எழுதிய கட்டுரை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. எனது சேர்மானவியல் (combinatorics) மற்றும் வேதியியல் (chemistry) ஆய்வுகள் இரண்டு அகில உலகப் பதிப்புகளாக வெளியிடப் பெற்றன.
கே: அமெரிக்கா அழைத்தது எப்போது?
ப: பிலானியில் படிப்பை முடிக்கு முன்பே எனக்கு ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்திலிருந்து உதவித்தொகையுடன் முனைவர் (PhD) ஆய்வுக்கு அழைப்பு வந்தது. நான் பெருமைப்படுவது எதற்கென்றால், என் ஆராய்ச்சிப் படிப்பிற்கு ஆலோசகரைத் தேடிக்கொண்டிருந்த நேரத்தில் பி¡¢நிலை கணிதத்தின் வேதியல் பயன்பாடுகள் (Chemical Applications of Discrete Mathematics) என்னும் தலைப்பில் எட்டு கட்டுரைகள் வெளியிட்டேன். பேரா. வால்டர் கோஸ்கி, என் கட்டுரைகளைப் பற்றி அறிந்து, அவற்றைப் பரிசீலிக்க உலகப் பிரசித்தி பெற்ற வல்லுனர்கள் கொண்ட கோட்பாட்டுக் குழு ஒன்றை அமைத்தார். அக்குழுவின் பரிந்துரைப்படி, என் மேற்படிப்பு ஆராய்ச்சியை வழி நடத்தினார்.
கே: முனைவர் பட்டம் கிடைத்ததும் பணியில் சேர்ந்தீர்களா?
ப: இல்லை. ஜான் ஹாப்கின்ஸில் முனைவர் பட்டம் பெற்ற பின் பெர்க்லி பல்கலைக் கழகத்தில் 1980ல் சேர்ந்தேன். அங்கு அமெரிக்க அணுசக்திக் கழகத்தின் இயக்குனராகவும்; ஸ்டான்·போர்ட், ரைஸ் பல்கலைக்கழகங்களின் தலைவராகவும் இருந்த பேரா. கென்னத் பிட்ஸருடன் (Prof. Kenneth Pitzer) பணியாற்றும் பெரும்பேறு கிடைத்தது. வேதியியல் பெளதீகத்தில் (Chemical Physics) ஆராய்ச்சி மேற்படிப்பை (post doctoral) முடித்தேன். ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாட்டையும் (Theory of Relativity) துளிய எந்திரவியலையும் (quantum mechanics) வேதியியலுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டேன். அந்தக் காலகட்டத்தில்தான் கலை மற்றும் அறிவியல் பரிமாணங்கள் கொண்ட, சார்புத் துளிய வேதியியலில் (relativistic quantum chemistry) தேர்ச்சி பெற்றேன். அன்று முதல் இன்று வரை இத்துறை என்னை ஆட்கொண்டிருக்கிறது.
அதன் பிறகு அரிசோனா பல்கலைக் கழகத்தில் 18 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினேன். அங்கு மிகச் சிறிய வயதிலேயே (43) எமெரிடஸ் பேராசிரியராக (Professor Emeritus) அங்கீகரிக்கப்பட்ட பெருமை கிட்டியது. அதைத் தொடர்ந்து நான் நேசிக்கும் விரிகுடாப் பகுதிக்குத் திரும்பினேன். லாரன்ஸ் லிவர்மோர் பரிசோதனைக் கூடம், டேவிஸ் பல்கலைக் கழகம் (UC Davis) மற்றும் பெர்க்லியின் கிளென் ஸீபோர்க் மையம் இவற்றில் உயர் பதவி வகித்துக் கொண்டே என் ஆய்வைத் தொடர்கிறேன். ஆய்வு நிலை மாணவர் களுக்கு வழிகாட்டியாகவும் இயங்குகிறேன்.
கே: நீங்கள் செய்த ஆய்வுகள், பெற்ற அங்கீகாரங்கள் பற்றி...?
ப: இதுவரை சுமார் 475 கட்டுரைகளும், இரண்டு புத்தகங்களும் வேதியியலில் சார்புத் திறனின் விளைவு (Relativistic Effects in Chemistry) பற்றி எழுதியுள்ளேன். அக்டோபர் 2003ல், ஏதன்ஸிலுள்ள ஜியார்ஜியா பல்கலைக்கழகத்தில் ராபர்ட் மலிகன் சொற்பொழிவாற்றினேன் (Robert S Mulliken lecture). சார்புத் துளிய வேதியியலில் என் முன்னோடிப் பங்களிப்பை (pioneering contribution) அங்கீகரித்து அப்பல்கலைக்கழகம் விருது வழங்கியது. இது தவிர, ஸ்லோஆன் ·பெலோஷிப், ட்ரே·பஸ் டீச்சர்-ஸ்காலர் அவார்ட், ·புல்ப்ரைட் டிஸ்டிங்குவிஷ்ட் ப்ரொ·பஸர்ஷிப், மிக அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட வேதியியல் நிபுணர் (one of the most cited chemists), போலந்து அரசின் பரிசு போன்றவை குறிப்பிடத்தக்கவை. கணித வேதியியல் ஆய்விதழ் (Journal of Mathematical Chemistry) ஆசிரியர் குழுவில் பணியாற்றுகிறேன். கே: உங்கள் ஆராய்ச்சிகளின் விளைவு கள், தாக்கங்கள் பற்றிக் கூறுங்களேன்...
ப: வேதியியல், கணிணி, கணிதம், பெளதீகம் இவற்றை ஒருங்கிணைத்து உலகம் பயன்பெறப் பல கண்டுபிடிப்புகளை வெளிக்கொணரலாம். ஒரு உதாரணம்: தங்கத்தில் 79 ப்ரோட்டான்கள் (protons) இருக்கின்றன, ஆதலால், உட்கருவின் (nucleus) அருகில் இருக்கும் மின்னணு (electron) அதன் சக்தியால் ஈர்க்கப் படுகிறது. அதை எதிர்த்துச் சீராகச் செல்ல, அம்மின்னணு அதிவேகமாக (.6c - ஒளியின் வேகத்தில் 60%), நகர வேண்டியிருக்கிறது. இது போல், இன்று கண்டுபிடிக்கப்படும் புதுப் புது நிலைக்கூறுகளின் (elements) தன்மையை உணர ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாட்டையும் (relativity theory), துளிய விசையியலையும் (quantum mechanics) அறிந்திருத்தல் மிக அவசியம். கணிதப் படிமம் (mathematical modeling), வடிவியல் படிமம் (geometric modeling) இவற்றைக் கொண்டு காலவட்ட அட்டவணையில் (periodic table) 118ம் நிலைக்கூறு (element), அதற்கு மேலும் செல்லமுடியும் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறோம். இதனால் மருத்துவ உலகில் பல சாதனைகள் உருவாகலாம். அரிய நோய்களுக்குப் புதுப்புது மருந்துகளைக் கண்டுபிடிக்கும் சாத்தியக்கூறு அதிகரித்திருக்கிறது. முன்னேறி வரும் இத்துறையில் ஆழ்ந்த தேர்ச்சியுடையவர்கள் என்போன்று மிகச் சிலரே. நான் பெற்ற இந்த அரிய வாய்ப்பை இச் சமூகம் பயன்பெற மேன்மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளேன்.
என் கணிதப் படிமத்தை அப்ஜான் / ·பார்மசியா நிறுவனம் (Upjohn / Pharmacia) அவர்களின் எய்ட்ஸ் மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துகிறார்கள். மும்பையில் இருக்கும் ஆயுர்வேத நிலையம் ஒன்றுடன் ஆயுர்வேதத்தின் கணித, வேதியியல் அடிப்படையை ஆராயத் திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறேன். சுற்றுச் சூழல் பாதுகாப்புக் குழுவிற்கு ஆலோசகராகவும் இருக்கிறேன் - புதுத் தொழில் தொடங்கு வோரின் செயல்முறைகள், பொருட்களின் பக்க விளைவுகளை முன்கணிப்புப் படிமம் மூலம் (predictive modeling) மதிப்பீடு செய்ய வழிவகுக்கிறேன்.
கே: உங்களுக்கு உதாரண மனிதர்கள் (role model) இருக்கிறார்களா?
ப: கட்டாயமாக - நோபல் பரிசு பெற்ற டாக்டர் சந்திரசேகர் அவர்கள் படித்த இந்து உயர்நிலைப் பள்ளியில்தான் நானும் படித்தேன். அவரும், கணித மேதை ராமானுஜமும் என் நிஜவாழ்க்கைக் கதாநாயகர்கள். மேலும், பலவகையில் எனக்கு ஆதரவளித்து ஊக்குவித்த என் தந்தையும், சகோதரியும், பேராசிரியர்களும் எனக்கு முன் உதாரணமாக அமைந்தவர்கள்.
கே: நீங்கள் அறிவியல் துறைக்கு வெளியிலும் மிகுந்த ஊக்கத்தோடு ஈடுபட்டிருக்கீறீர்கள் - இயல், இசை இவற்றில் சிறப்பான ஆராய்ச்சிகளும், நாடக மேடையேற்றமும் செய்திருக்கிறீர்கள். அறிவியல் பேராசிரியராக உள்ளவர்களுக்கு மற்றவற்றில் ஈடுபாடு இருக்காது என்னும் கூற்றை உடைத்து, நீங்கள் பல்துறை ஆர்வமுள்ளவராகவும் இருக்கிறீர்கள். உங்கள் கலை, இலக்கிய முயற்சி பற்றிச் சிறிது அறியலாமா...?
ப: என்னுடைய கலையார்வக் கட்டுரை களெல்லாம் விஞ்ஞான அடிப்படையில் அமைந்தவையே. இம் முயற்சிகள் முதலில் மாணவர்களுக்குக் கற்பிக்கும் கருவியாகப் பயன்படுத்த ஆரம்பித்தவையே. ஐன்ஸ்டீனின் கூற்றுப் போல், சமயம் இல்லாத விஞ்ஞானம் முடமானது, விஞ்ஞானமில்லாத சமயமோ பார்வையற்றது (science without religion is lame, religion without science is blind). இங்கு சுவாரஸ்யமான ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன் - காலவட்ட அட்டவணையில் (periodic table) 114ம் நிலைக்கூறு (element) சம்ஸ்க்ருத 'ஏகம்' சேர்த்து, ஏகலெட் (one like lead - ஈயத்தைப் போன்றது) என்னும் பெயர் பெற்றிருக்கிறது.
ஆகஸ்ட் 2003ல் மினஸோடாவில் இந்திய-அமெரிக்கக் கணித வேதியியல் (அகில உலக) மாநாட்டில் இந்தியக் கலாசாரம் மற்றும் சமயங்களில் ஒருமித்த, மாறுபட்ட, இருதடக் கோட்பாடுகளின் நிலை (The Role of Symmetry, Asymmetry and Duality in Indian Culture and Religion) பற்றி சொற் பொழிவாற்றினேன். தமிழ்நாட்டின் மூலைமுடுக்களிலெல்லாம் உள்ள கோவில் களுக்குச் சென்று ஆராய்ச்சி செய்திருக் கிறேன். இதில், விஜயராஜ சோழரின் காலகட்டத்தைச் சார்ந்த விஜயராஜ சோழீஸ்வரம் (அ) விசாலூரில் ஆரம்பித்து, ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலம் வரையிலான கோவில் கோபுரங்கள், சிற்பங்கள் மற்றும் பாண்டிய, ஒரிய கோவில்களையும் உதாரணங்களாகப் பயன்படுத்தினேன். விசாலூர் கோவிலைப் பின்பற்றியே சோழர்கால மற்ற கோவில்கள் வடிவமைக்கப் பெற்றன.
கோவிலின் நான்கு முகங்களும் ஒருமித்திருக்கும் (symmetrical) - 90 டிகிரி சுழற்சி (rotate) செய்தால், ஒரே வடி வமைப்பைக் காணலாம். முழுமை நிலையில் ஒருமித்தும் (global symmetry), குறும்பரப்பில் மாறுபட்டும் (local asymmetry) இருந்து; உள்ளே ஒரு பக்கம் அரக்கன், மறுபக்கம் தேவதை; மற்றும் சிவன், சக்தி என்றமைத்து, இருதடக் கோட்பாட்டின் ஒருங்கிணைந்த தன்மையை (duality coming together in an integrated manner) மிக அழகாகவும், ஆழமாகவும் சித்தரித்திருப்பார்கள். இதுபோல், நாம் சாதாரணமாக வீடுகளில் போடும் அறுமுகக் கோலம் (hexagonal) சிவ-சக்தியின் ஒருங்கிணைந்த தன்மையைக் குறீயீடு மூலம் உருவகப்படுத்துகிறது. இவற்றையும், நம் நாட்டியம், சிற்பம் போன்றவற்றிலும் உள்ள ஒருங்கிணைந்த தன்மையைப் பற்றியும் விரிவாக விளக்கினேன். மதங்கள் எல்லாவற்றிலும் உள்ள பொதுக்கோட்பாடான முடிவிலாத் தன்மையையும் (infinity), அவை எல்லாம் விழைவது 'ஓம் சாந்தி'யே என்பதையும் விவரித்தேன். இவற்றைப் பற்றித் தொடர்ந்து ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறேன்.
தமிழ்நாட்டுக் கோவில்களின் சிறப்பைப் பற்றி எழுதும் திட்டம் உள்ளது. பல அரிய கோவில்களுக்குச் சென்று அவற்றைப் பற்றிய சிறப்பான செய்திகளைச் சேகரித்தும் புகைப்படங்கள் எடுத்தும் வைத்திருக்கிறேன். |
|
கே: இசையில் எப்படி இவ்வளவு ஈடுபாடு வந்தது? இத்துறையில் உங்கள் எதிர் காலத் திட்டங்கள் என்ன?
ப: இசை என் ரத்தத்தில் ஊறியது. என் தந்தை இசையைச் சுயமாகக் கற்றறிந்தவர். என் சகோதரியும், சகோதரரும் வயலின் வாசிப்பார்கள். ஐந்து வயதிலிருந்தே ராகங்களைக் கண்டுபிடிக்கும் திறமை பெற்றிருந்தேன். பிலானி என் இசை ஆர்வத்தை வளர்க்கச் சிறப்புப் பாடங்கள் எடுக்கவும் வகை செய்தது.
முழுமையும் ஒத்த பண்பும் கொண்ட 72 மேளகர்த்தா ராகங்களின் கணித அடிப்படையை ஆராய்ந்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன். ஒருமுகத் தன்மையற்ற (nonsymmetrical) பாஷாங்க ராகங்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்துள்ளேன். 2002ல், இந்திய இசையில் ராகங்களின் சேர் மானவியல் - முழுஎண் வரிசை அளவீடு [Combinatorial Enumeration of Ragas (Sacles of Integer Sequences) of Indian Music] என்ற என் கட்டுரை முழுஎண் வரிசை ஆய்விதழில் (Journal of Integer Sequences) பதிப்பிக்கப் பெற்றுப் பெரும் வரவேற்பைப் பெற்றது. கர்னாடக ராகங்களைக் கணக்கிட்டு 262,144 (வக்கிர ராகங்கள் அல்லாத, 5 அதற்கு மேல் குறீயீடுள்ள (notes) சேர்மான ராகங்கள் (combination raagas) இருப்பதைக் கூறியிருக்கிறேன். ஸ்டான்·போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ராகங்களை வைத்துத் தகவல்தளம் (database on carnatic ragas) அமைக்க ஆர்வம் காட்டியுள்ளனர். மேலும் விரிகுடா வாழ் இந்திய, அமெரிக்க ஆர்வலர்கள் இசை குறித்த ஆராய்ச்சிகள் நடத்த என்னைத் தொடர்பு கொண்டுள்ளனர். நெய்வேலி சந்தான கோபாலனைத் தென்றலுக்காகச் சந்தித்துக் கட்டுரை எழுதியுள்ளேன். விரிகுடாப் பகுதி தென்னிந்திய நுண்கலைக் கழகத்தின் (South India Fine Arts Association) துணைத் தலைவராகப் பணியாற்றி யுள்ளேன்.
என் பெண்கள் இங்கு பிறந்திருப்பினும், என்னைப் போலவே இசையார்வமுள்ளவர்கள். மூத்தவள் நிலா கர்னாடக சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறாள், அடுத்த வருடம் கச்சேரிகள் செய்யப் போகின்றாள்; இளையவள் சங்கீதா, பியானோ வாசிப்பில் கெட்டிக்காரி. கே: இவ்வளவு மும்முரமான வாழ்க்கை யில் எவ்வாறு ஓய்வெடுக்கிறீர்கள்? வீட்டிற்கு நேரம் ஒதுக்க முடிகிறதா?
ப: 'வேலை மட்டுமே; விளையாடுதல் இல்லை' என்னும் ரகத்தைச் சார்ந்தவனல்ல நான். என் பெண்களுக்கு வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். நாங்கள் இணைந்து, வீட்டிலேயே NSB புரொடக் ஷன்ஸ் என்னும் பெயரில் வேடிக்கை நாடகங்கள், பாடல்கள் இயற்றி மகிழ்வோம். மேலும், பாடல்களின் அடிப்படை ராகங்களைக் கண்டுபிடிப்பதில் சுவாரசியமாக ஈடுபடுவோம். முதல்வனில் வரும் 'அழகான ராக்ஷஸியே' பாடல் ரீதிகெளளயில் அமைந்தது என்பதைக் கண்டு பிடிப்பது சுவாரசியம்தானே!
'அரிசோனாவில் அமர்க்களம்' - நான் எழுதி, இயக்கி, நடித்த நாடகம். அரிசோனாவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பெண்கள் இருவரும் கல்லூரிக்குச் சென்ற பிறகு, இங்கும் நாடகத்துறையில் ஈடுபடும் ஆர்வம் உள்ளது. அதுவரைக்கும் அதைத் தள்ளி வைத்துள்ளேன், நிறைய நேரம் எடுக்குமே! தினமும் யோகப் பயிற்சி செய்வேன். கர்நாடக சங்கீதம் கேட்பேன். தமிழ், இந்தித் திரைப் படங்களை ஆர்வத்தோடு பார்ப்பேன்.
கே: நீங்கள் இந்த உயரிய நிலையை எவ்வாறு அடைந்தீர்கள்? வேலையிலும், வீட்டிலும் செய்ய வேண்டியிருந்த தியாகங்கள், விட்டுக் கொடுத்தல்கள், தாங்க வேண்டியிருந்த பாரங்கள் என்னென்ன?
ப: கடின உழைப்பும், தணியாத ஆர்வமும், மனக்குவிவும் இல்லாமல் இந்த நிலையை நான் அடைந்திருக்க முடியாது. பல இரவுத் தூக்கங்கள், வார இறுதிகள், விடுமுறைகளைத் தியாகம் செய்திருக்கிறேன். இண்டெலில் பணிபுரியும் என் மனைவி கோமதி, மற்றும் என் பெண்களின் ஆதரவும், ஊக்குவிப்பும், பொறுப்புணர்வும் என் சாதனைகளுக்குப் பின்னால் இருக்கின்றன. அறிவியலையும், ஆராய்ச்சியையும் நான் பாரமாகக் கருதவில்லை; அவையே என் பலமும், பக்தியும். இந்த என் உந்துதல் மேன்மேலும் செழித்து, இளைஞர்களை ஊக்குவிக்கும் கிரியா சக்தியாக நான் என் வாழ்நாள் முழுதும் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
அவரிடமிருந்து விடைபெறும் போது நோபல் அல்லது அதற்குச் சற்றும் குறைவில்லாத பன்னாட்டு விருதைப் பெறும் நாள் வரலாம். அந்த நாள் தமிழருக்கு மட்டுமல்லாமல் இந்தியருக்கே ஒரு மகத்தான நாளாக இருக்கும் என்ற ஓரெண்ணம் தோன்றாமல் இல்லை.
நேர்காணல்: உமா வேங்கடராமன் தமிழாக்கம்: உமா, வேங்கடராமன் |
|
|
|
|
|
|
|
|