செல்வன் ஷ்யாம் ரவிதத்
|
|
கீர்த்தின் கார்த்திகேயன் |
|
- மதுரபாரதி|ஆகஸ்டு 2019| |
|
|
|
|
மிசிசிப்பி மாநிலத்தின் பல்கலைக்கழக நகரமான ஆக்ஸ்ஃபோர்டில் (Oxford, MS) உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு மாணவர் கீர்த்தின் கார்த்திகேயன். அவர் நியூயார்க் நகரின் சுனி ஒஸ்வேகோவில் (SUNY Oswego) ஜூன் 19 ம் தேதி நடைபெற்ற ஜீனியஸ் ஒலிம்பியாட் சர்வதேசப் போட்டியில் (Genius Olympiad International Project competition), மிசிசிப்பியின் ஒரே பங்கேற்பாளர். அங்கே அவருடைய கண்டுபிடிப்பான ஸ்டைரோ-கார்பன் (Styro-Carbon) அவருக்கு வெள்ளிப்பதக்கம் பெற்றுத் தந்தது. ஸ்டைரோஃபோம் (Styrofoam) எனப்படும் தெர்மோகோல் சூழலை மாசுபடுத்தும் பொருளாகும். அதனை மறு உபயோகம் செய்வதற்கான இவரது செயல்முறை மெச்சத்தக்கது.
79 நாடுகளிலிருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இந்தப் போட்டி சுற்றுச்சூழல் பிரச்சனைகளைக் குறிவைப்பது. கீர்த்தின், தனது செயல் திட்டத்தை ஐந்து சுற்றுகளாக, விஞ்ஞானிகளிடம் விவரித்து இந்த விருதை வென்றார். இவரது கண்டுபிடிப்பை ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட, சர்வதேச உயர்நிலைப் பள்ளி ஆராய்ச்சிப் பத்திரிகை அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்டைரோஃபோம் எளிதில் அழியாது (Non-degradable). இது இயற்கையில் சிதைவடைய 500 முதல் 1,000 ஆண்டுகள் ஆகலாம். உலகெங்கிலும் தினமும் 1,369 டன் ஸ்டைரோஃபோம் குப்பையில் வீசப்படுகிறது. இது பூமியின் நிலப்பரப்பில் 25 - 30 சதவிகிதத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அமெரிக்கா மட்டுமே ஓர் ஆண்டில் 25 பில்லியன் ஸ்டைரோஃபோம் கோப்பைகளை வீசுகிறது. மாசுபடுதலைத் தவிர்க்க, ஸ்டைரோஃபோமை கேசொலீன், அசிடோன் போன்றவற்றில் கரைப்பது ஒரு வழி. அப்படிக் கரைப்பதால் கிடைப்பதைப் பல வழிகளில் பயன்படுத்தலாம். அவற்றால் சூழலுக்குச் சேதமில்லை.
மரத்திலிருந்து எரித்துக் கரி உண்டாக்கலாம். ஆக்ஸிஜன் குறைந்த நிலையில் பகுதி எரிதலின் (Partial burning) காரணமாக 'கரிதல்' (Charring) ஏற்படும். ஸ்டைரோஃபோமில் 92 சதவிகிதம் கரிமம் (கார்பன்) உள்ளது. மரத்தைப் போலவே, ஸ்டைரோஃபோமையும் கரியாக்க முடியும். இதைப் புரிந்துகொண்ட கீர்த்தின், ஸ்டைரோஃபோமைக் கரியாக்கும் புது முறையை உருவாக்கினார். 2018 மார்ச் தொடங்கி, மூன்று மாத ஆராய்ச்சி, பகுப்பாய்வு, சிறிய மற்றும் பெரிய அளவிலான சோதனைகளுக்குப் பிறகு உருவானதே 'ஸ்டைரோ-கார்பன்' என்ற கீர்த்தினின் இந்தக் கண்டுபிடிப்பு. |
|
ஸ்டைரோஃபோமை ஒரு சில கிராம் கார்பனாக கருக்கி, அதனை, பற்களை வெண்மையாக்குதல், மருந்துப்பொருள் தயாரிப்பு, ரசாயன சுத்திகரிப்பு, நீர் வடிகட்டுதல், கழிவுநீர் சுத்திகரிப்பு எனப் பல துறைகளில் பயன்படுத்தலாம். நீதிபதிகள் சிலர் இந்த முறையை வெளியிடுவதற்கு முன்பு காப்புரிமை பெறுமாறு பரிந்துரைத்தனர். அப்போது, முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினால், இந்த முறையைத் தொழில்ரீதியாகச் செயல்படுத்தி, உலக அளவில் ஸ்டைரோஃபோம் மாசுறுதலைத் தடுக்க முடியும்.
ஸ்டைரோ-கார்பன் திட்டம், கடந்த ஏப்ரல் மாதம் மிசிசிப்பியின் மாநில அறிவியல் போட்டியில் (State science fair) முதலிடத்தை வென்றது. இதில் நாசா எர்த் சிஸ்டம் சயன்ஸ் விருது மற்றும் பெஸ்ட் ஆஃப் ஃபேர் ஆகியவை அடங்கும். மார்ச் மாதம் நடைபெற்ற பிராந்திய அறிவியல் போட்டியில் Ricoh sustainable development award 2019, 2019 Broadcom Masters award, Lemelson's Early inventor prize, Regional junior Water prize award from SIWI Stockholm, Exception Genius award from Genius Olympiad உட்பட ஏழு விருதுகளைக் கீர்த்தின் வென்றார். இந்த ஜீனியஸ் விருது சுனி ஒஸ்வேகோவில் நடைபெற்ற தேசியப் போட்டிக்கான அழைப்பை அவருக்கு வழங்கியது.
கீர்த்தின் அறிவியல் ஆய்வு மட்டுமல்ல, பல்திறன் கொண்டவர். சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த இவர் 'American Flag Retirement Drop box' என்பதை உருவாக்கினார். பெருமைக்குரிய முறையில் அமெரிக்கக் கொடிகளுக்கு ஓய்வுதர இப்பெட்டி பயன்படுகிறது. இது ஆக்ஸ்ஃபோர்டில் முதன்முதலில் நிறுவப்பட்டது. வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பிரசித்தி பெற்றது. 90க்கும் மேற்பட்ட தகுதிப் பதக்கங்கள் பெற்றுள்ள கீர்த்தின் 2000க்கும் மேற்பட்ட பாய் ஸ்கௌட் கேம்ப் கார்டுகள் விற்பனை செய்து, $10000க்கு மேல் நிதி திரட்டிச் சாதனை படைத்துள்ளார். கீர்த்தின் மாவட்ட அளவில் உச்சரிப்புத் தேனீ சேம்பியன் (County Spelling bee Champion). இதில் மாநில அளவில் ஐந்தாவது இடத்தை வென்றவர். டிரம்ஸ் மற்றும் மரிம்பா (Marimba) வாசிக்கும் இவர் பல மேற்கத்திய மற்றும் இந்திய இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
தாய் பிரேமலதா பாலச்சந்திரன் மிசிசிப்பி பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆஃப் பார்மசியில் மூத்த விஞ்ஞானி; தந்தை கார்த்திகேயன் ஒரு கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர், தலைவர். 3ம் வகுப்பு படிக்கும் சகன் இவரது தம்பி. கீர்த்தின் கார்த்திகேயன் மேலும் வெற்றிகள் பெறத் 'தென்றல்' வாழ்த்துகிறது.
மதுரபாரதி |
|
|
More
செல்வன் ஷ்யாம் ரவிதத்
|
|
|
|
|
|
|